பெண்களுக்கு ஸகாத் கடமையா?

ஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை!!

திருக் குர் ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:
[33:33] (நபியின் மனைவிகளே!) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.
ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு!! ஆண்கள் அல்ல!!

ஸகாத் கொடுக்குமளவுக்கு பெண்களுக்கென்ன சொத்துகள் இருக்கப் போகிறது என்று தோன்றும். தாமே சம்பாதித்தவைகள், நகைகள், பெற்றோர் வழி வந்த சொத்துகள், கணவர் பரிசளித்த வீடு/நிலம், மகன் வாங்கிக் கொடுத்தது என்று ஏதேனும் ஒன்றாவது பெண்களுக்கு இருக்கும்.

இங்கே பெண்களுக்கு ஸகாத் கடமை உண்டு என்று சொல்லும்போது, கணவனுள்ள பெண்களை மட்டும் குறிக்கவில்லை. விவாகரத்தானவர்கள், விதவைகள், திருமணமாகாதவர்கள், ஆதரவற்றவர்கள் என்று யாரானாலும், ஸகாத்திற்குரிய அளவை அடைந்த செல்வத்தை உடைய எல்லோருக்கும் - மனநலம் பாதிக்கப்பட்டவரானாலும்கூட - ஸகாத் கடமையாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

காத்திற்கான விதிகளும்கூட எல்லாருக்கும் பொதுவானவையே. முதலாவது, ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பது பெண்களின் விஷயத்தில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
[57:7] நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்;
ஏனெனில், இஸ்லாமைப் பொறுத்த வரை ஒருவர் தம் மனைவிக்கு, அல்லது தாய்க்கு வீடு-தோட்டம்-நகை என்று எவற்றையாவது வாங்கிக் கொடுத்தால், அது அவர்களுக்கான அன்பளிப்பாகக் கருதப்படும். அதன்மீதான முழு உரிமையும், அச்சொத்தின்மூலம் வரக்கூடிய வருமானம், செலவினங்களுக்கும் இறப்பு வரை அப்பெண்களே முழு பொறுப்பாளர் ஆவர்.

ஆனால், இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில், வரிவிலக்கு அல்லது நிலஉச்சவரம்பு போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக, ஒருவர் தாம் வாங்கும் சொத்தை தன் பெயரில் வாங்காமல், தன் மனைவி-மக்கள்-உறவினர் மீது வாங்குகின்றனர். இந்நிலைகளில், ஆவணப்படி உரிமையாளர் ஒருவராக இருந்தாலும், அதன் முழு பயனாளர் அதை வாங்கியவரே ஆவார். இம்மாதிரியான சூழ்நிலைகளில் வாங்கியவரே அதன் ஸகாத்திற்குப் பொறுப்பாளராகிறார்.
ஏன், இன்னும் நிறைய குடும்பங்களில் நகைகள் வாங்கப்படுவதன் காரணமே, “முதலீடு” என்பதுதான். பணமாக இருப்பதைவிட நகையாக இருந்தால், மதிப்பும் கூடும்; அவசரத் தேவைக்குப் பணமாக மாற்றிக் கொள்ளுவதும் எளிது. ஆகவே, பெண்கள் தங்களிடமிருக்கும் நகைகள் தங்களுக்கான அன்பளிப்பாக வாங்கித் தரப்பட்டனவா, அல்லது “அணிந்துகொள்ளலாம்; அதே சமயம் அவசரத்திற்குத் தேவைப்பட்டால் அடமானம் வைக்கவோ விற்கவோ வாங்கித் தந்தவருக்கே உரிமை” என்ற நிலைப்பாடு உடையதா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டால், ஸகாத் யாருடைய பொறுப்பு என்பது தெரியும்.

அதாவது, தனது பெயரில் இருக்கும் சொத்திற்கு அதிகாரம் பெறாதவர்கள் மீது ஸகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமை பெற்றவர்கள் மீதே ஸகாத் கடமையாகும்.

ரண்டாவது நிபந்தனை, அளவு:
[2:219] (நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக!
எந்தப் பொருளுமே, வீடு, நிலம், சேமிப்புப் பணம் போன்றவற்றில், நமது அடிப்படைத் தேவைகளுக்குப் போக மிஞ்சியவற்றிற்குத்தான் ஸகாத். ஆனால், ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தால், பெண்களுக்கு எந்தவிதமான பொருளாதார நிர்ப்பந்தமுமில்லை. அவர்களின்மீது யாருக்குமான பராமரிப்பும் கடமை கிடையாது. ஆகவே அவர்களிடம் இருக்கும் எல்லா சொத்துக்களுமே, அநேகமாக அவர்களின் சேமிப்பாகத்தான் ஆகும்.

அதே சமயம், கணவனால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், மனைவியிடம் ஒரு வீடு இருந்து, அதில் வசித்து வருகிறார்கள் என்றால், மனைவி அதற்கு ஸகாத் கொடுக்கத் தேவையில்லை. அதுபோலவே சேமிப்புப் பணத்திற்கும், பிற சொத்துக்களுக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, ஸகாத்தைத் தீர்மானிக்கவும்.

பெண்களின் நகைகள் என்று வரும்போது, வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதாவது, பெண்களுக்கு நகைகள் அவசியத்தின் அடிப்படையிலானவை என்பதால் நகைகளுக்கு ஸகாத்தே கொடுக்கத் தேவையில்லை என்பது ஒரு கருத்து. அடுத்த கருத்து, அவர்கள் அன்றாடம் அணியும் நகைகள் தவிர்த்து மற்றவை எல்லாம் ஸகாத்திற்கு உட்பட்டவை என்பது.

எனினும், நகைகளுக்கு ஸகாத் கண்டிப்பாகக் கொடுத்தேயாக வேண்டும் என்பது கீழ்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாகிறது:
கெட்டியான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்குப் பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி
 
தங்கநகைகளுக்கு இறைவன் விதித்துள்ள அளவு (நிஸாப்), 88 கிராம் - அதாவது 11 பவுன்கள். இந்த அளவில், அல்லது அதைவிட அதிகமாகத் தங்கம் நம்மிடம் இருந்தால், அதற்கு (11 பவுனையும் சேர்த்து) 2.5% சதவிகிதம் தங்கமாகவோ, அல்லது அதற்கீடான பணமாகவோ தகுதி வாய்ந்தவர்களுக்கு தர்மமாகக் கொடுக்கவேண்டும்.

பெண்களிடம் புழங்கப்பட்டு வரும் வெள்ளி நகைகளுக்கும், அதன் நிஸாப் அளவான 600 கிராமை அடைந்தால், 2.5% ஸகாத் உண்டு.

மேலும், வைரம், நவரத்தினங்கள், ப்ளாட்டினம் போன்றவற்றிற்கும் ஸகாத் கொடுப்பது குறித்தும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள், அதன் மதிப்பில் 20% கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

மூன்றாவது நிபந்தனை: கால அளவு:

அதாவது, ஸகாத்திற்கான நிஸாப் அளவை அடைந்த பொருள், நம்மை அடைந்து ஓராண்டு காலம் நிறைந்திருக்க வேண்டும். அதுவரை அதற்கு ஸகாத் கடமையாகாது. உதாரணமாக, ஒருவரிடம் 88 கிராம் தங்கம் சேர்ந்து ஒரு வருடம் நிறையப் போகும் சமயத்தில், அதில் கொஞ்சம் செலவழிந்துவிட்டால், அந்த வருடம் தங்கத்திற்கு ஸகாத் கிடையாது. மறுபடி அது 88 கிராம் எடையை அடைந்து, அதன்பின் ஒரு வருடம் நிறைந்தபின்பே ஸகாத் கடமையாகும்.

பெண்கள் ஸகாத் கொடுப்பதில், முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படுவது, வருமானமின்மை. அதாவது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவதில்லை என்பதால், அவர்களுக்கென்று தனி வருமானமில்லாத பட்சத்தில், ஸகாத்தை எப்படிக் கொடுக்கமுடியும்? ஆகவே, அவர்களுக்காக கணவனே ஸகாத் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டுமா என்பது பலரின் சந்தேகம். ஏற்கனவே நாம் பார்த்தபடி, ஸகாத் ஒவ்வொருவரின் தனிக்கடமை. என்னதான், கணவன் -மனைவி உறவு என்பது மிகவும் நெருக்கமான உறவு என்றாலும், ஒருவரின் மார்க்கக் கடமைகளுக்கு அடுத்தவர் பொறுப்பாக மாட்டார்.

அதன்படி, கணவனுக்கு மனைவியின் ஸகாத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. எனினும், மனைவியின் சம்மதத்தோடு அவர் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

வருமானமில்லை என்பதைக் காரணமாகச் சொல்லும் அதே சமயம், அப்பெண்கள் நிஸாபை எட்டிய அளவு செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். செல்வம் அதிகமாக இருப்பதால்தானே, ஸகாத் கொடுக்கும் நிலையை எட்டுகிறார்கள்? ஆக, வருமானமில்லை என்பதைச் சொல்லித் தப்பிக்க முடியாது. வருமானமில்லை என்பதால் நமது சொத்துக்களுக்கு உரிய சொத்து வரி இத்யாதிகளை அரசாங்கத்திற்குச் செலுத்தாமல் இருக்கிறோமா?

எனில், எப்படிக் கொடுப்பது? உங்களிடம் சேமிப்புப் பணம் இருந்தால் அதிலிருந்து கொடுக்கலாம். உங்களின் கைச்செலவுக்கெனக் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்து, அதிலிருந்தும் கொடுக்கலாம். அல்லது, ஸகாத்தை தங்கமாகவேக்கூடக் கொடுக்கலாம். போலவே, மற்ற சொத்துக்களுக்கும் அதன் ஸகாத்தைக் கணக்கிட்டு, அதற்கு ஈடான தங்கம் அல்லது வெள்ளியை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.

உதாரணமாக, 50 பவுன் நகையும், 20 இலட்சம் பெறுமானமுள்ள ஒரு நிலமும் உங்களுக்கு இருக்கிறதென்றால், நகைக்கு 10 கிராம். நிலத்திற்கான ஸகாத் 50,000 ரூபாய் அல்லது அதற்கீடான சுமார் 16 கிராம் நகை. ஆக மொத்தம் 26 கிராம் நகையை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.

யாருக்குக் கொடுப்பது:

ஸகாத் கொடுப்பதற்கு இறைவன் குர் ஆனில் எட்டு வகையினரை அடையாளம் காட்டித் தந்திருக்கிறான். அதன்படி கொடுக்கலாம். மேலும், உதவி செய்யப்படுவதற்கு நம் உறவினர்களே அதிகத் தகுதியுடைவர்கள் என்பதும் ஹதீஸ்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். புஹாரி: பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1427-1428
சரி, நெருங்கிய உறவினர் என்றால்..... சித்தி, மாமா, ஒண்ணுவிட்ட தம்பி... என்றெல்லாம் சொல்லலாம். இதைவிட நெருங்கிய உறவுகளுக்குக் கூட ஸகாத் கொடுக்கலாம் - தகுதி இருந்தால்!! கீழே வரும் ஹதீஸைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது தர்மமாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். புஹாரி பாகம் 2, அத்தியாயம் 24, 1466.

ம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு” எனக் கூறினார்கள். பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1467
 
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இன்னொரு விஷயமும் தெளிவாகின்றது. அதாவது சில பெண்கள் கணவனின் வருமானம், செல்வத்தை வைத்தே தம் குடும்பத்தின் ஸகாத்தைத் தீர்மானிப்பார்கள். அவ்வாறல்ல. வருமானக் குறைவு அல்லது கடன்கள் காரணமாக கணவன் ஸகாத் கொடுக்கும் நிலையில் இல்லை என்றாலும், நிஸாபை எட்டிய மனைவிக்கு ஸகாத் கடமையே.

ஸ்லாம், பொருளாதாரப் பொறுப்புகள் உள்ள ஆணின் மீதும் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளது; பொருளாதார நிர்ப்பந்தம் ஏதுமில்லாத பெண்களின் மீதும் கடமையாக்கியுள்ளது. இதன்மூலம் தெரியவருவதென்ன?

பெண்ணின் உடமைகள் அவளுக்கு மட்டுமே உரிமையுடையதே தவிர, கணவனுக்கோ, குடும்பத்தினருக்கோ அவற்றில் (அவள் வாழ்நாளில்) உரிமையில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும். இன்றைய குடும்பங்களில், மனைவி-மருமகளின் நகை,சொத்தில் அவளைவிட கணவனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும்தான் அதிகப் பாத்தியதை இருப்பதைப் போல நடந்துகொள்கிறார்கள். குடும்பத்தில் ஒரு சின்ன பணத் தேவை வந்தாலும், உடனே மனைவியின் நகைகள்தான் அடமானத்திற்குப் போகும்!! எத்தனை பெண்களின் நகைகள் இப்படியே அடமானத்தில் முழுகிப் போயிருக்கின்றன? ஒருவேளை தனியே வாழும் அவசியம் அப்பெண்களுக்கு ஏற்பட்டால் ஒன்றுமில்லாமல் பரிதவிக்கும் நிலையிலாகிறார்கள்!!
எத்தனை குடும்பங்களில் மாமியார்கள், வீட்டுக்கு வந்த மருமகளின் நகைகளைப் போட்டு தன் மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்? அவளின் பெற்றோருக்குக் கஷ்டம் வந்தால்கூட, அவளுக்கு தன் உடமைகளைக் கொண்டு உதவிட உரிமையில்லாத நிலை உள்ளதே!

கேட்டால், ”என் மனைவியே எனக்குச் சொந்தம் எனும்போது அவளின் நகைகளும் என்னுடையதாகாதா?” என்று கேள்வி எழுப்புவார்கள் சில ‘பொறுப்பான’ ஆண்கள்!! ஸகாத்தைத் தனிநபர் கடமையாக்கியிருப்பதன் மூலம் இந்தக் கேள்விக்கு ”இல்லை” என்று தெளிவாக, உறுதியாக இறைவன் பதில் கூறுகிறான். பெண்களின் நகைகள், அவர்களின் சொத்துகள், அவற்றின்மூலம் வரும் வருமானங்கள், அவளது சம்பாத்தியங்கள், சேமிப்புகள் - எல்லாம் அவளுடையதே, எதிலும் மற்றவர்களுக்கு உரிமையில்லை. அவளாக விரும்பிக் கொடுத்தாலன்றி அவளை நிர்பந்திக்க முடியாது என்பதையும் அறியத் தருகிறான்...By:faris fana

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget