இன்சூரன்ஸ்" - சுருக்கமாக ஓர் விளக்கம்!

இவ்வுலகில் நம்முடைய‌ தேவைகள் அதிகமாகும்போது அதற்கேற்றவாறு வணிகங்களையும், உற்பத்திகளையும் பெருக்குவதோடு வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்வது நமக்கு அவசியமாகி வருகின்றன. அதுபோன்ற அவசியத் தேவையாகிப்போன‌, வந்த பிறகு வருந்துவதைவிட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில் ஒன்றுதான் இன்றைய "இன்சூரன்ஸ்" முறையாகும்.

கப்பல் மூலமாக‌ வணிகம் செய்துவந்த வணிகர்கள், இயற்கை சீற்றங்களினால் பொருட்கள் சேதமடைந்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பதற்காக‌ யோசித்து உருவாக்கிய‌துதான் காப்பீட்டு முறைகளின் ஆரம்பம் என்பதாக சொல்லப்படுகிறது. 'அசம்பாவிதங்கள் இதிலும்கூட‌ நடக்கலாம்' என இன்றைக்கு நாம் நினைக்கும் பெரும்பாலான‌ விஷயங்களுக்கு இந்தக் காப்பீட்டு முறை ஏற்படுத்தப்பட்டு அது ஒரு பெரிய துறையாகவே விளங்குகிறது. இந்த முறையானது எதிர்காலத்தில் நாம் எதிர்பாராமல் நடக்கக்கூடிய விபத்துகள் மற்றும் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து மீட்பதின் மூலம் ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை ஈடுசெய்து பாதுகாப்பு தருவதாக உள்ளதால் இதை 'காப்பீடு' என்கிறார்கள். இவற்றில்,

ஆயுள் காப்பீடு (Life Insurance)
சுகாதாரக் காப்பீடு (Health Insurance) அல்லது
மருத்துவக் காப்பீடு (Medical Insurance)
வாகனக் காப்பீடு (Vehicle Insurance)
இல்லக் காப்பீடு (Home Insurance)
பயணக் காப்பீடு (Travel Insurance)
விபத்துக் காப்பீடு (Casualty Insurance)
சொத்துக் காப்பீடு (Property Insurance)
பொறுப்புக் காப்பீடு (Liability Insurance)
வரவுக் காப்பீடு (Credit Insurance)
தொழில் காப்பீடு (Business Insurance)
ஊடகக் காப்பீடு (Media coverage Insurance)
வளர்ப்பு பிராணிகள் காப்பீடு (Pet Insurance)
மங்கைய‌ர் காப்பீடு (Women Insurance)
பயிர்க் காப்பீடு (Agri-Insurance)

போன்ற‌வையும், இன்னும் பல வகைகளும் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இப்படியான காப்பீட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் பல தனியார் நிறுவனங்களாகவும் உள்ளன. இதில் எந்த வகையான காப்பீட்டு முறையாக இருந்தாலும் அவை எல்லாமே குறிப்பிட்ட சில ஒப்பந்தங்களின்படியே செயல்படுத்தப்படுகின்றன.

ஒருவர் காப்பீடு செய்யும் பொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌ தொகையையோ அல்லது பொருளின் சந்தை விலையையோ அல்லது இழப்பீட்டைச் சமாளிக்கும் வகையிலான ஒரு தொகையோ காப்பீட்டு நிறுவனம் கொடுப்பதாகவும், அதற்காக காப்பீடு செய்பவ‌ர் குறிப்பிட்ட ஒரு தொகையை ப்ரீமியமாக செலுத்தவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்திருப்பார்கள். ப்ரீமியம் என்பது, உதாரணமாக ஒரு பாலிசிதாரர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தையோ, வீட்டையோ இன்ஷூர் செய்வதற்கு ஒரு வருஷத்திற்கு கொடுக்கும் விலை சுமார் ரூ. 2,000 என்றால் அந்த தொகைதான் "ப்ரீமியம்" (Premium) எனப்படுகிறது.

இவ்வாறு நிர்ணையிக்கப்படும் அந்த ஒப்பந்த அடிப்படை(Policy)க்கு உட்பட்ட விபத்துகளினால் ஏற்படும் சேதமோ அல்லது அழிவோ இயற்கையானது அல்லது இழப்பீடு கொடுப்பதற்கு தகுதியானது என்று (ஒப்பந்த விதிகளை வைத்து) அந்த நிறுவனம் முடிவெடுக்கும் பட்ச‌த்தில், காப்பீடு செய்யப்பட்ட தொகையை அந்த நபருக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடாக கொடுத்துவிடுகிறது. பொருளுக்கு சேதமோ, இழப்போ ஏற்படாத மற்ற பாலிசிதாரர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பித் தரப்படாது. இதுதான் இன்சூரன்ஸின் பொதுவான நிலையாகும். சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு நபருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை/பாதிப்பை பல ந‌பர்களும் பகிர்ந்துக் கொள்ளவும், தனக்குரிய தற்காப்பு நடவடிக்கையாக அமைத்துக் கொள்ளவும் செய்யப்படும் ஒரு ஏற்பாட்டு முறைதான் "இன்சூரன்ஸ்" ஆகும்.

அதேசமயம் இந்த கான்செப்ட் "ஆயுள் காப்பீடு" என்று சொல்லப்படும் Life Insurance க்கும் பொருந்துமா? என்றால், ஒருசில பாலிசிகளைத் தவிர மற்ற அனைத்தும் முழுமையாக பொருந்தாது. ஏனெனில் பெரும்பாலான லைஃப் இன்சூரன்ஸ்களில் மணி பேக் (Money Back) இடம் பெற்றிருக்கும். அதுவும் பாலிசியின் முடிவில் "போனஸ்" என்ற பெயரில் வட்டித் தொகையும் கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அது எந்த விதத்தில் சரியானது? அதில் எந்த வகை பாலிசிகள் சரியானதல்ல? என்பதையெல்லாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நாம் வரக்கூடிய பதிவில் பார்க்கப் போகிறோம் (இன்ஷா அல்லாஹ்)!

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget