April 2013

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இத்தா என்றால் என்ன?
இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

இத்தாவுடைய காலம்.
கணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவியானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவள் கருவுற்றவளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும். அது ஒரு நாளாகவோ அல்லது பத்து மாதங்களாகவோ அல்லது ஒரு சில மணித்தியாலங்களாகவோ அமையக் கூடும்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)
கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65:4)
 
கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)
 
அவ்வாறு விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் நின்றிருப்பின் மூன்று மாதங்கள் இத்தாவுடைய காலமாகும்.
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.           (அல்குர்ஆன் 65:4)

பெண்கள் கணவனை விவாகரத்து செய்தால் (குல்உ) அப்பெண்களுடைய இத்தா ஒரு மாதவிடாய்க் காலம் ஆகும்.
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத் தர வேண்டியதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!” என்றார்கள். அவர் “சரி” என்றார். அப்பெண்மணியிடம் “ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.அறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி), நூல் : நஸயீ 3440
 
திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முன்னர் விவாகரத்தான பெண்களுக்கு இத்தா இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.       (அல்குர்ஆன் 33:49)

இத்தா எனும் காத்திருப்பு எதற்காக?
எவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.

கணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார்? என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.

இத்தாவின் போது தடைசெய்யப்பட்டவை.
# மறுமணம் செய்யக்கூடாது.
# திருமண ஒப்பந்தம் செய்யலாகாது.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றமில்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:235)

# மைதீட்டல், நறுமணம் பூசுதல், சாயம் பூசுதல், அலங்காரம் செய்தல் தவிர்க்க வேண்டும்.
இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை      வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த     பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை      வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ,     மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை      அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு      தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி      மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப்      பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப்    பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு     அதிய்யா (ரலி) அறிவித்தார்.(நூல் : புகாரி 313)

கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட      ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது   என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல்: அபூதாவூத் 1960
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் :       அபூதாவூத் 1960, அஹ்மத் 25369
முற்றிலும் வண்ண ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும் வண்ணமும் கலந்த ஆடையை அணியலாம்.

இத்தாவின் போது இருக்க வேண்டிய முறைகள்.
மேற்கூறிய தடைகள் தவிர மற்ற விடயங்களில் மார்க்கம் கூறியதற்கமைய எந்நாளும் இருப்பது போல் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எம் சமுதாயத்து மக்களிடம் இத்தா இருக்கும் போது தான், யார் அஜ்னபி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்), யார் மஹ்ரமி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதவர்கள்) என்பதை ஆராய்வார்கள். கணவனை இழந்தால் அல்லது கணவன் விவாகரத்து செய்தால் தான் மார்க்கத்தின் வரைறைகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்க வரையறைகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டியவை. அவற்றை கடைபிடிக்க கணவன் இறக்கும் வரை அல்லது விவாகரத்து செய்யும் வரை இருக்க வேண்டியதில்லை. மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)

முஹம்மதே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

எனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை மாத்திரம் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின் இத்தா காலத்தில் தொழிலுக்குக் கூட செல்ல அனுமதி உண்டு. ஆனால் மார்க்கத்தின் வரையறைகள் பேணப்பட வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள்! ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 2972) 

இத்தாவின் போது நடைமுறைப்படுத்தப்படும் நூதனங்கள்.
இத்தாவின் போது நம்முடைய சமுதாய மக்கள் மார்க்கத்தில் இல்லாத சட்டங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பெண்களை கஷ்டப்படுத்துவதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ எந்த ஒரு மதமும் காட்டித்தராத அளவுக்கு இந்த இத்தா மூலம் பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றது.

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்வரும் நூதனமான காரியங்களை பார்ப்போம்.
# வெள்ளை நிற ஆடையை மட்டும் இத்தா இருப்பவர் அணிதல்.
# திரைச்சீலை, கட்டில் விரிப்பு, தலையணை உறை போன்றவற்றுக்கு வெள்ளை நிறத்துணி உபயோகித்தல். முகம் பார்க்கும் கண்ணாடியைக்   கூட விட்டு வைக்காமல் வெள்ளை நிறத் துணியால் அதனை    மூடிவிடல்.
# கர்ப்பிணித் தாய்மாருக்கு இத்தா இருக்கும் பெண்ணை பார்க்கத் தடை.     காரணம் கருவில் இருப்பது ஆண் குழந்தையோ என்ற சந்தேகம்.
ஒரு அறையில் இத்தா இருப்பவரை பூட்டி வைத்தல். வீட்டிற்குள்ளேயே      உலாவுவதற்குக் கூட தடை.
நோய் ஏற்பட்டால் வைத்தியரிடம் அழைத்துச் செல்லாதிருத்தல்.
# தொலைக்காட்சி, புகைப்படம் (Photo) பார்க்க தடை.
# இத்தா இருக்கும் பெண்ணின் பேரப் பிள்ளைகள் மற்றும் மகளின்     கணவனை கூட பார்க்கத் தடை மற்றும் சிறு ஆண் பிள்ளைகளைக் கூட பார்க்கத் தடை.
இவ்வனைத்தும் எமது மார்க்கத்தில் இல்லாத அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத மார்க்கத்துக்கு முரணான காரியங்களாகும்.

மறுமணத்திற்கு அனுமதி அளிக்கும் மார்க்கம்.
எமது சமுதாயத்திலும் அந்நிய மதத்தவர்களைப் போல ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ இத்தாவுடைய காலம் முடிவடைந்த பின்னர் காலம் பூராகவும் அப்பெண் விதவையாகவே இருக்க வேண்டும் என்று மறுமணத்திற்கு தடை விதித்திருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். காரணம் எமது மார்க்கத்தில் தான் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடை செய்வதற்கு எமக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.

பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:234)

 இதையும் பார்க்க:-


                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்
பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (4:19)
மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

அலட்டிக்கொள்ளக் கூடாது:

பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!

மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)

தண்டிக்கும் அனுமதி:
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இது குறித்துக் குர்ஆன் கூறும் போது;
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான். (4:34)

‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.

மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.

எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.

ஷரீஆவின் வரையறைகள்:

அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:

(1) முகத்தில் அறையக் கூடாது:

முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)

(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:

சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.

(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:

மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.

(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:

தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.

(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (2:194)

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (16:126)

மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?

மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.

அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.

இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.

எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.

இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது;
‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:

இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.

தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்துமுள்ளார்கள்.

‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)

ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.

‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காரணங்களைக் கண்டறிவோம்:
கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.

மனைவி தரப்பில்:

மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.

(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.

தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும். சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.

(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:
பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.

(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.

கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:
பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.

(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:
மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.

(3) தவறான பிள்ளைப் பாசம்:
ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.

எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.

இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.

பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.

(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.

பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.

சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.
 

இதையும் பார்க்க:-
 
 
 

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

(குர்ஆனும் அறிவியலும்)
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.   இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.  

 உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)  

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)  
குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை  
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.  
 சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!  நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.  
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும்  வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?  
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை 
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை. 
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம். 
 இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்! 
உடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை  
மனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்  
உடலியல் ஆராய்ச்சி படிப்பு
விலங்கியல் ஆராய்ச்சி படிப்பு
 தாவரவியல் ஆராய்ச்சி படிப்பு
நவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு
 மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு  
சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா?  
தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?  

* தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை 
* சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம் 
* புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம் 
* தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம். 
* தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம். 
* தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம். 
* தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம். 
* இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம். 
* தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம். 
* முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம். 
* காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது. 
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே!  
தேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல  அல்ஹம்துலில்லாஹ்  
(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

 இதையும் பார்க்க:- 
                    * பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித கு...
                    *  சேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது
                    *  ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..
                    *  ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.
                    *  கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்
                    *  கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
 இறை விசுவாசிகளே!

நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.

தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?

அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர் ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!

ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!).

சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது
“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)

மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)

அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!

சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்
சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்
பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்

(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)
நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?

தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6-98)

நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!
அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3-6)

தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13-8)

வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!

”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)

நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)

நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)

மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!
சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!

கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே! மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே! மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!

இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்
‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (அல்-குர்ஆன் 17:36)

சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!

சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங் களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்!

ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக் கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே!

ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா? ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?

ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கா விட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோக மில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?

சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடை களுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்று மில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கி றான்!

உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75-37)
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)

(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)

சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!
அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால் பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?

உங்களுக்கு சிறு உதவி இதோ!
அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புரிய வில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!

நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்

இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186) அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய

 இதையும் பார்க்க:-
                   *  இஸ்லாமிய கூகுல் குழும நிர்வாகிகளுக்கு எச்சரிக்கைகள...
                        *  சேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது
                        *  அத்தியாயம் -- 02 ஸுரத்துல் பகரா(பசு மாடு)
                        *  சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
                        *  இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு...
                        *  முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget