பாவமன்னிப்பு கிடைக்காத காலம்..!

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சூரியன் மேற்குத் திசையில் உதிக்கும் வரைதான் பாவமன்னிப்பு
கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் மூன்று அடையாளங்கள் நிகழ்வதற்கு முன்னால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லையானால் அதன் பிறகு ஏற்பாரானால் அவரது ஈமான் ஏற்றுக் கொள்ளப்படாது என்று எச்சரித்தார்கள். அந்த மூன்றிலும் மிக முக்கியமான முதலாவது அடையாளம் சூரியன் மேற்குத் திசையில் உதிப்பது. அதாவது கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்குத் திசையில் உதித்த பிறகு ஒருவர் இறை மறுப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் தான் செய்கிற மற்ற சிறு பாவம் பெரும் பாவங்களிலிருந்தும் மன்னிப்புத் தேடி திருந்தினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.


மன்னிப்பின் வாசலை அடைத்துவிட்டுத்தான் அல்லாஹ் சூரியனை மாற்றிச் சுற்றவைக்கிறான். அதாவது உலகம் அழிவதற்கு இன்னும் நாட்கள் இருக்கலாம். ஆனால் சூரியன் மேற்குத் திசையில் உதிக்கும் அடையாளம் வந்துவிட்டால், நமது ஈமானை இறைவன் ஏற்கமாட்டான் என்பதுடன் நமது பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பதுடன் அப்போது நமது நிலை என்னவாக இருக்குமோ அதே நிலையில்தான் உலகம் அழியும்வரை இருப்போம். அதே பாவமான நிலையில்தான் மறுமை நாளில் எழுப்பப்படுவோம் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இப்போதே திருந்திவாழ முயற்சிக்க வேண்டும்.

சூரியன் மேற்குத் திசையில் உதிப்பதை இறைவன் எல்லையாக வைப்பதின் காரணத்தை ஆராய்ந்தால், அதுதான் அழிப்பதற்கான கடைசி காலகட்டம். எப்படி இந்த உலகம் அழியும் என்பதை குர்ஆன் மூலமாக பின்னால் நாம் பார்க்க இருக்கிறோம். வானம் பூமி தூள் தூளாக்கப்படும், மலைகளெல்லாம் பஞ்சாகப் பறக்கும் என்றெல்லாம் குர்ஆன் கூறுகிறது. இப்படியெல்லாம் நடக்க வேண்டுமெனில் அறிவியல் பூர்வமாகவே கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தால்தான் நடக்கும். எப்படியெனில், கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிப்பதற்கு என்ன நடக்க வேண்டும் என ஆராய்ந்தால் இதற்கான விடை கிடைத்துவிடுகிறது. தற்போது சுற்றிக் கொண்டிருக்கிற பூமி நேர் எதிர் திசையில் சுற்ற வேண்டும். அதாவது தற்போது சுற்றிக் கொண்டிருப்பதற்கு பின்புறமாகச் சுற்ற வேண்டும்.

சூரியன் கிழக்கிலிருந்து தெரிவதற்குக் காரணம் பூமி மேற்கிலிருந்து சுற்ற ஆரம்பப்பிப்பதால்தான். அதை பூமி மாற்றிக் கொண்டு கிழக்கிலிருந்து சூரியனைச் சுற்ற ஆரம்பத்தில் சூரியன் மேற்கிலிருந்து சுற்றுவதைப் போல் தெரியும். மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றிவருகிறது பூமி. அவ்வளவு வேகமாகச் சுற்றியும் அதன் மேல் இருக்கிற நாம் ஏன் விழாமல் இருக்கிறோம் எனில் பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பதினால்தான். அதனால் பூமியோடு நாமும் அதே வேகத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை. பூமி என்றால் இதில் இருக்கிற எல்லாம் சேர்ந்துதுதான். மனிதர்களாகிய நாமும் நம்முடைய எடையும் சேர்ந்ததுதான் பூமி.
இன்று உலகில் 800 கோடிப் பேர் இருக்கிறோம் எனில் அதற்குத் தகுந்தவாறு பூமியின் மண் குறைந்திருக்கிறது என்று பொருள். மண்தான் அரிசியாக மாறுகிறது, மண்தான் பருப்பாகிறது, மண்தான் பூவாக காயாக கனியாக எல்லாமாக மாறுகிறது. ஒரு விதையிலிருந்து செடி கொடிகளும் மரங்களும் முழைக்கிறது எனில் மண்ணிலுள்ள களிமண் சக்தியை எடுத்துக் கொண்டுதான் விளைகிறது. அதாவது பூமியிலிந்து உற்பத்தியாகிறது.

ஒரு மாங்கொட்டையை பூமியில் போட்டால், அது தண்ணீரையும் வாங்கிக் கொள்கிறது, மண்ணையும் சாப்பிடுகிறது, அந்த மண் தான் தண்டாகவும் விறகாகவும் மாறுகிறது, மண்தான் இலையாக வருகிறது, 1000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிற பூமியை நிறுத்தினால் என்னவாகும்? 1000 கிலோமீட்டர் வேகத்தைவிட, மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிற வாகனத்தை திடீர் என உடனே நிறுத்தினால், மண்டை பிளந்துவிடுவதை எத்தனையோ விபத்துக்களில் பார்த்திருக்கிறோம். 1000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிற பூமியை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தினால் நிச்சயம் மலைகள் பஞ்சாகத்தான் பறக்கும். சுக்கு நூறாக வெடித்துச் சிதறத்தான் செய்யும். அதனால் ஏற்படுகிற அதிர்வுகளில் மனிதர்கள் நிலைகுலைந்து செத்துவிடுவார்கள்.

எனவே எப்படி இந்த உலகம் அழியும் என்பதையும் அறிவியலுக்கும் மனித அறிவுக்கும் முரணில்லாத வகையில் இறைவன் விளக்கிச் சொல்கிறான் திருக்குர்ஆனில். இப்படி பூமியை நிறுத்தி பிறகு சுழற்றுகிறான் என்பதுதான் உலகத்தை அழிப்பதற்கான கடைசி செயல். அப்போது சுக்குநூறாக ஆக்கப்பட்டு முழுவதும் அழிக்கப்படுகிறபோது அதில் சிலர் உயிர் தப்பிப்பார்கள். அத்தகையவர்களுக்குத்தான் இந்த வசனம். அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவார்கள். திருந்துவார்கள், கெஞ்சுவார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களின் தவ்பாவையும் திருந்துதலையும் ஏற்றுக் கொள்ளவேமாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது.

இது சூரியனுக்காக மட்டும் சொன்னதல்ல. இந்தக் கருத்தும் வாசகமும். பிர்அவ்னின் வரலாற்றிலும் அல்லாஹ் கூறுகிறான். அதிசயமான முறையில் மூஸா நபி காப்பாற்றப்படுவதையும் அதே நேரத்தில் தான் மூழ்கடிக்கப்படுவதையும் நேருக்கு நேராக பிர்அவ்ன் பார்க்கிறான். அதை திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்குப் பாடமாகச் சொல்கிறான். இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும்போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்‘’ என்று கூறினான். இப்போதுதானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 90,91,92)

பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தின் சுறுக்கு அவனது கழுத்தில் மாட்டப்பட்டு மலக்குமார்கள் இழுக்கிறபோது உயிர் முடியும் தருவாயில் ஈமான் கொண்டதை இறைவன் ஏற்றுக் கொள்ளவே இல்லை. தீர்ப்புச் சொன்னதற்கு பிறகு இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான். இதைப்போன்றுதான் மூழ்கப் போகிற எல்லா மனிதர்களும் சொல்வார்கள். அதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று இறைவன் பொதுவாகவும் திருமறையில் அறிவிக்கிறான், பிரகடனப் படுத்துகிறான்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23:98,99,100)

இறப்பது முடிவாகிவிட்டது என்று மனிதனுக்குத் தெரிந்துவிடுமானால் எல்லாரும் நல்லடியாராக மாறிவிடுவார்கள். அழிவுடைய வேலையைத் துவக்கிய பிறகு ஈமான் கொள்வதையும் திருந்துவதையும் இறைவன் ஏற்கமாட்டான். அதாவது தஜ்ஜால் வருவது என்பதெல்லாம் அழிவு வருவதற்கு முன்னுள்ள வேலைகள்தான். ஆனால் சூரியன் மேற்குத் திசையில் உதிப்பது அழிவதற்கான காரணமாகும். அதுதான் தவ்பாவையும் ஈமானையும் தீர்மானிக்கிற வாசல். அந்த வாசல் இத்தோடு அடைக்கப்பட்டுவிடும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சொல்கிறான். (முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களை செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன்தராது. “நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்‘’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:158)

கியாமத் நாளின் அடையாளங்களில் சில வந்துவிட்டால் எந்த மனிதனின் ஈமானும், நல்லறங்களும் பயன் தராது என்று இறைவன் எச்சரிக்கிறான். இதற்கு விளக்கமாக நபியவர்கள் சொன்ன செய்திதான், சூரியன் மேற்கே உதிக்க ஆரம்பித்தால் எவரது பாவமன்னிப்பும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று செய்தி. இதுதான் உலக அழிவுக்கான கடைசி செயல் என்பதை நமக்குணர்த்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்). அறிவிப்பவர்: அபூமூசா(ரலி) நூல் : முஸ்லிம் 5324

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுக முடிவுக்கு)முன் யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிறாரோ அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 5236

 அதே போன்று மூன்று காரியங்கள் நிகழ்ந்துவிட்டால் பாவமன்னிப்பும், இறைநம்பிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் நபியவர்கள் சொன்னார்கள். அதுபோன்று தஜ்ஜால் வருகைக்குப் பிறகு ஒருவர் தனது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடினாலும், அல்லது ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் சொன்னார்கள். இந்தச் செய்தி ஸஹீஹ் முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான செய்திதான். அந்தச் செய்தி இதோ!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (அவை:) 1. மேற்கிலிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2. தஜ்ஜால் (தோன்றுதல்). 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயக்) கால்நடை. அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 249

தஜ்ஜால் வந்து அவனை ஈஸா நபி கொன்ற பிறகு, உலகிலுள்ள எல்லா மக்களும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்று புகாரி, முஸ்லிம் மற்றும் சில கிரந்தங்களில் இதற்கு மாற்றமான கருத்துப்பட ஹதீஸ்களும் வருகின்றன. இவ்விடத்தில் கேள்வி என்னவென்றால், தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்று சொன்ன பிறகு, நல்லவனாக எப்படி மாறுவது? என்பதுதான். தஜ்ஜாலுக்குப் பிறகு யாரும் மாறமுடியாது என்பதுவும் தஜ்ஜாலைக் கொன்ற பிறகு மக்கள் மாறுவார்கள் என்பதுவும் முரண்பாடாக இருக்கிறது. இந்த இரண்டு அறிவிப்புக்களையும் ஒன்றினைத்து சரியாகப் புரிய வேண்டுமாயின், தஜ்ஜால் பூமியில் இருக்கிற அந்தக் காலங்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலோ அல்லது பாவமன்னிப்புத் தேடினாலோ அப்போது ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அதன் பிறகு தஜ்ஜாலைக் கொன்ற பிறகு ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் சிறிது காலம் வாழ்வார்கள், அப்போது அதிகமானோர் இஸ்லாத்தையும் ஏற்பார்கள்,

பாவமன்னிப்பும் தேடுவார்கள், அவர்களது இஸ்லாமும் பாவமன்னிப்பும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் இந்தச் செய்தியைப் புரிய வேண்டியிருக்கிறது. ஏன் இதை இப்படிப் புரிய வேண்டும் என்கிறோம் எனில், ஈஸா நபி காலத்தில் ஒருவர் கூட கெட்ட அடியார் இருக்க மாட்டார் என்ற செய்திகளும் அதிகமாக இருப்பதினால் அவைகளையும் இணைத்து வைத்துத்தான் அவைகளுக்கு முரணில்லாத வகையில்தான் புரிய வேண்டும். அதே போன்று பூமியில் ஊர்ந்து வருகிற ஒரு அதிசயமான பிராணி வருவதற்குள் ஈமான் கொண்டாலோ பாவமன்னிப்புத் தேடினாலோ நல்ல காரியங்களை செய்தாலோ ஏற்றுக் கொள்ளப்படும். அது வந்ததற்குப் பின்னால் எந்த நன்மையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அதே (பார்க்க: முஸ்லிம் 249) செய்தியில்தான் வருகிறது.

இந்த மூன்று அடையாளங்களைத் தவிர மற்ற ஏனைய அடையாளங்களைப் பார்த்தால் தவ்பாச் செய்து திருந்தலாம், இஸ்லாத்தை மறுத்தவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்கே சூரியன் உதிப்பதையும், தஜ்ஜால் வருகையையும், அதிசய பிராணி வருவதையும் பார்க்கும் நேரத்தில் தவ்பாச் செய்து திருந்தவும் முடியாது, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நம்பவேண்டும்.

குறிப்பு: கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் எவை எவை? என்பதையும், பெரிய 10 அடையாளங்கள் என்னென்ன? என்பதையும் “கியாமத் நாளின் 10 அடையாளங்கள்’’ என்ற தலைப்பில் அனைத்திற்கும் ஆதாரங்களுடன் இக்கட்டுரையின் ஆசிரியர் எழுதிய புத்தகத்தில் பார்த்துக் கொள்ளவும். இன்ஷா அல்லாஹ், கியாமத் நாளை நம்புவதில் அவைகளுக்கு அடுத்தடுத்த செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

இதையும் பார்க்க >>


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget