இரத்த உறவை துண்டிப்பவன் சுவனம் புகுவானா?

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம். அதில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும், அதற்கு மாற்றமாக வாழும் பட்சத்தில் எவ்வாறான தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற சட்ட வரையறை சகல அம்சங்களிலும் பொதிந்து காணப்படுவ தால்தான் இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம் என்பதை சகலரும் புரிந்து, ஏற்றுக் கொள்ளத்தக்க தாக அமைந்துள்ளது.  இந்த வகையில் சகோதரத்துவம் ஐக்கியம் பற்றிக்குறிப்பிடும் பொழுது, “நீங்கள் ஒவ்வொரு வரும் உடன் பிறப்புக்களே” உங்களுக் கிடையில் குரோரத்தை வளர்த்து ஒரு வருக்கு ஒருவர் பிரிந்து விடாதீர்கள். ஒற்றுமையின் கயிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.



அப்படிப் பிரிந்தீர்களேயானால் நீங்கள் பலம் குன்றியவர்களாக ஆகிவிடுவீர்கள்” என்பதோடு நிறுத்திவிடாது, “மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து இன்னொரு சகோதரருடன் பேசாது எவர் வாழ்கின்றாரோ அவர் காபிராகி விடுவார்” என்று கண்டிப்பான எச்சரிக்கையையும் விடுத்திருப்பது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சமாகும். இதில், இரத்த சம்பந்த உறவென்பது உயிரோடும், உடலோடும் சங்கமமான ஒரு உன்னத வெளிப்பாடாகும்.

உடலின் ஒரு சிறு பகுதி தாக்கத்திற்குள்ளானாலும் முழு உடலும் தாக்குட்பட்ட உணர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைவது தான் இரத்த சம்பந்தப்பட்ட உறவென்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இந்த இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களைப் பற்றி அல்லாஹ்வின் அருள் மறையில் குறிப்பிடும் பொழுது,

“நீங்கள் அல்லாஹ் வின் வேதத்திற்குக் கீழ் படிவதை விட்டும் புறக்கணித்து விடுவீர்களாயின் பூமியில் இரத்தத்தை ஓட்டி விஸமம் செய்வதையும், இரத்த பந்தத்தில் உள்ள உங்களது சுற்றத்தாரையும் துண்டித்து விடவும் முனைகிர்களா? அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களை செவிடர்களாக ஆக்கி, அவர்களுடைய பார்வை களையும் போக்கி குருடாக்கி விட்டான். (அல்குர்ஆன் 47:22, 23)

மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகின்றார்களோ அவர்களும், இன்னும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட இரத்த சொந்தத்தை துண்டித்து பூமியில் குழப்பம் செய்கிறார்களோ அவர்களுக்கும் சாபமும், நரகமுமான மிகக்கெட்ட வீடும் உண்டு. (அல்குர் அன் 13:25)

இதனை, மேலும் உறுதிப்படுத்து முகமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கி றார்கள், “உறவினர்களைத் துண்டித்து நடப்பவன் சுவர்க்கம் நுழையமாட்டான்” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

வேறொரு அறிவிப்பில், “நிச்சயமாக உறவினர்களைச் சேர்ந்து வாழ்வது றஹ்மானுடைய றஹ்மத்தின் ஒரு கிளை யாகும். எவர் உறவைத் துண்டித்து வாழ்வாரோ அவர் மீது அல்லாஹு தஆலா சுவர்க்கத்தை ஹறாமாக்கி விடுவான்” என நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக ஹஸ்ரத் ஸயீத் இப்னு யkத் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்”
(நூல்கள்: முஸ்னத் அஹமத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்).

எந்தவொரு மனிதரும் நரக வேதனையின் பயங்கரத்தை அறிந்த பின்னரும் அங்கு நுழைய விரும்புவாரா? விரும்ப வேமாட்டார். சுவர்க்கத்தின் மேலான சுகானுபவங்களை சுகித்து அதில் கிடைக்கும் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்.

அதனை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் அமல்கள் மூலம் தொடர்ச்சியாகச் செய்துவந்தாலும் இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் ஹறாமாக்கப்பட்டுள்ளது என்ற இச்செய்தி எவ்வளவு பயங்கர மானதும், ஆழ்ந்து சிந்திக்கக்கூடியதும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம் மனக்கண் முன் நிறுத்திப்பார்ப்பது அவசியமாகும். மேலும், ஓரிடத்தில் இது சம்பந்தமாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய அறிவுரை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிய வருகிறது.

அதாவது, “தனது ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும், தனது தேவைகள் அதிகமாகக் கிடைக்கவேண்டும் என எவர் விரும்புகிறாரோ அவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து தன் சொந்த பந்தங்களின் உறவுமுறையைப் பாதுகாக்கவும்” என்று றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத், அஹ்மத்)

ஆயுள் அதிகரிக்கப்படவும் தேவைகள் நிறைவேற்றப்படவும் சொந்த பந்தங்களைச் சேர்ந்து நடப்பதன் ஊடாகவே என்ற அறிவுரையோடு மட்டும் நிறுத்தி விடாது.இன்னும் எவனைக் கொண்டு தமக்குரிய உரிமைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிaர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்தக் கலப்புச் சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள்” என அருள்மறையாம் திருமறை எச்சரிக்கையும் விடுக்கிறது.
(அல்குர்ஆன் 4:11) 

இன்னுமோரிடத்தில் மேலும் அவர்கள் எத்தகையோரென்றால் எதைச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த இரத்த சொந்தத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். (அல்குர்ஆன் 13:21)

மேலும் தம் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் புரிந்திருக்கிறோம் (குர்ஆன் 29:8) என்ற இறைவசனங்கள் புத்தியுள்ளவர்களுக்கு நல்ல படிப்பினையாக அமைகிறது.

உலகைத் திருத்தவந்த உத்தமதூதர் றசூலேகரீம் (ஸல்) அவர்கள் கூறியதாக, ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், இரத்த உறவு அர்ஸிலே தொங்கிக் கொண்டிருக்கும், அது, யார்? என்னைச் சேர்ந்து நடந்தாரோ, அவரை அல்லாஹ்வும் சேர்த்துக் கொள்வானாக! யார்? என்னைத் துண்டித்து வாழ்ந்தாரோ அல்லாஹுதஆலாவும் அவனைத் துண்டித்து விடுவானாக என்று கூறிக் கொண்டிருக்கும். (நூல் புகாரி, முஸ்லிம்)

மற்றுமோர் அறிவிப்பில் ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் யாறசூலுல்லாஹ் எனக்கு உறவினர்கள் சிலர் இருக்கின்றனர்.அவர்களுடன் ஒற்றுமையாக நான் வாழவிரும்புகிறேன். ஆனால், அவர்கள் என்னுடைய உள்ள உறவைத் துண்டிக்கின்றனர். நான் அவர்களுடன் அழகிய முறையில் பழகுகிறேன். அவர்கள் என்னுடைய தீய முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் என்னுடைய வரம்பு மீறுவதை நான் பொறுத்துக் கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கின்றனர் என்று முறையிட்டார்.

“நீர் செய்வது போன்றே நிலைமை இருக்குமானால் நீர் அவர்களுடைய வாயில் சூடான சாம்பலைத் திணிக்கிaர். எதுவரை நீர் இந்தக் காரியத்தில் நீடித்து, நிலைத்து இருப்பீரோ அதுவரை, எல்லா நேரமும் அல்லாஹுதஆலாவின் புறத்தில் இருந்து ஓர் உதவியாளர் உம்முடன் இருந்து கொண்டிருப்பார்” என்று நபி மணி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஸா (ரலி) அன்ஹா அறிவிக்கிறார்கள் (நூல்: முஸ்லிம்)

ரசூல் (ஸல்) அவர்கள் பிறிதோரிடத்தில் கூறும் பொழுது “உறவு முறிவதை தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படும் மீpனிlழி ஒப்பிட்டுள்ளார்கள். அந்தச் சூடு இணைந்து நடத்தல் என்ற தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது” ஒற்றுமைப்பாலத்திற்கு வித்திட்ட உம்மி நபி (ஸல்) அவர்களின் உதாரணமாக ஐக்கியப்படுவதன் அவசியத்தைத் தெட்டத்தெளிவாக உணர்த்தி இது சிந்தித்துணர்பவர்களுக்கு சிறந்த பாடமாக அமைகிறது.

இன்னுமோர் அறிவிப்பில் றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸல்மான் இப்னு ஆமில் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், “நீங்கள் நோன்பு திறப்பதானால் பேரீத்தம் பழத்தால் நோன்பு திறவுங்கள் ஏனெனில் அது ‘பறக்கத்’ ஆகும். அப்படிப் பேரீத்தம் பழம் இல்லையென்றால் தண்ணீரால் நோன்பு திறவுங்கள்.

ஏனெனில் அது சுத்தம் செய்யக்கூடியதாகும். மேலும், ஒரு ஏழைக்குச் சதகாச் செய்தால் அது ஒரு சதகாதான். ஆனால் அது உறவினருக்குக் கிடைத்தால் அது இருவகை ஆகிவிடுகிறது. ஒன்று சதகா, மற்றது உறவு முறையைச் சேர்ந்து நடப்பது என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி)

இன்றைய நம் சமூக அமைப்பானது எவ்வாறான கீழ்த்தரமான நிலைக்குப் பின்தள்ளப்பட்டு, அந்நிய சமூகத்தினராலும் எள்ளி நகையாடுமளவிற்கு மாற்றம் பெற்றுள்ளதென்பதை அவதானிக்கும் பொழுது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது.

பொருளாதார நப்பாசையால் உடன் பிறப்புகளுக்கிடையில் முறுகல், சீதனம், மற்றும் சீரழிந்த செயற்பாடுகளினால் வயது வந்த பெற்றோர் வாழ வழியின்றியும், வசிக்க இடமின்றியும் நடுத்தெருவில் அலைமோதும் அவலம், குடும்பங்களுக்கிடையே சிற்சிறு பிரச்சினைகளையும் பூதாகரமாக உருமாற்றி எந்த நன்மை, தீமைகளிலும் பங்கேற்காது, கோடு, இணக்க சபை என்ற வட்டத்திற்குள் நின்று வலம் வருகின்ற அசிங்கமான நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருப்பதை வேதனையுடன் அவதானிக்க முடிகிறது.

ஒன்றுபட்ட ஐக்கிய வாழ்வுக்குப் பதிலாக இரண்டும் கெட்டான் நிலையில் மார்க்க முரண்பாடுகளால் முற்றிய விதண்டாவாதம், கொலை, இரத்தவெறியால் தன் இனத்தைத் தானே அழிக்கின்ற தான்தோன்றிச் செய்கைகள் தாண்டவமாடுவது துரதிர்ஷ்ட வசமானதே.

இந்த நிலைமைகளில் இருந்து சமூகம் மாறுபட வேண்டுமானால் கட்டுக்கோப்பான ஒரு சமூக அமைப்பு இஸ்லாமிய இலட்சிய ரீதியில் உருவாதல் காலத்தின் அவசியத் தேவையாகும். உயிரும் உடலுமாக வாழவேண்டிய இரத்த உறவுகள் நாயும், கறிச்சட்டியுமாக மாறி எந்தவிதத் தொடர்புகளிலும் பங்கேற்காமலும், மரணம் வரை பிரிவுத்திரைக்குள் சங்கமமாவதை நிஜமான நிகழ்வுகளாக அரங்கேற்றம் பெறும் அன்றாடம் காண்கின்ற அவலங்களாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் ஹறாமாக்கப்பட்டுள்ளது என்ற இறைமறை, அண்ணல் நபி (ஸல்)யின் அமுதவாக்கைப் புறம் தள்ளிவிட்டு சைத்தானிய வலைக்குள் சிக்குண்ட சிறு குரட்டைகளாய் அலைமோதுவோமானால் ஆண்டுக் கணக்காய் தொழுது, ஹஜ், தானதர்மம் செய்தாலும் இதனால் என்ன பிரயோசனம் ஏற்படப்போகிற  தென்பதை ஈமானியக் கண்ணோட்டத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோமாக!

கறைபடிந்துள்ள இரத்த உறவை ஆத்மீகப் பன்னீரால் கழுவி சுத்திகரித்து, அனைவரையும் அணைத்து வாழும் ஐக்கியப்பட்ட குடும்பங்களாக மாற்றியமைக்க அல்லாஹ் நம்மனைவருக்கும் தெளபீக் செய்தருள்வானாக!
ஆமீன்  ஆமீன் ..............


இதையும் பார்க்க >>
                      * தயம்மும், ஆடை, நிய்யத், தக்பீர் தஹ்ரீமா..
                     * கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்
                     * நபி ஸுலைமான் (அலை) இடம் பேசிய எறும்பு..!
                     * கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?
                     * மன அமைதிக்கு மனைவி அவசியம்


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget