பதவி ஓர் அமானிதம் பாகம்......1

                                            தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும், புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும், இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று  பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை. அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும்,  நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். 


இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. 
(அல் அஹ்ஜாப் -21)

நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை, மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும், ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம்  அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும், அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.

நம்மிடம் அல்லாஹ் அளித்ததை தவிர வேறு எந்த சொந்த ஞானமும் நமக்கில்லை என்பதையும் மறந்துவிட கூடாது. நமக்கு கிடைக்கும் பதவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மறுமையில் அதன் கூலி நிர்ணயிக்கப் படுகிறது. பதவியில் உள்ள  ஒரு முஸ்லிம் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற எப்படி  நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பதவியை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

பதவி ஏன் அமானிதம்?பெரும்பாலான மக்களால், பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும். அதிகாரம், புகழ், செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான மக்கள் பதவிக்காக ஆசைப் படுகிறார்கள். இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள். இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்க்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.

இஸ்லாம் பதவியை, மறுமையில் அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. அதிகாரம், புகழ், செல்வம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்த வழி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை உரிய முறையில் பயன்படுத்துவதால் உலகிலும் நற்பெயர் கிடைப்பதோடு மறுமையிலும் அதிக அந்தஸ்தை பெறலாம். ஆயினும் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை. கூட்டம் சேரும் வரை தவ்ஹீதில் இருந்துவிட்டு, கூட்டம் சேர்ந்த பின் புகழுக்காகவும் பணத்தாசைக்காகவும் தவ்ஹீத் வளர்ச்சி  எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறி பதவியை தேடி ஓடியவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் தான் அமானிதம், புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை  தாம் சுகங்களிலேயே பதவிப் பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்பதன் துன்பத்திலேயே பதவிப் பாலை நிறுத்துவது தான் மோசமானது.  
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 7148

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நூல்: அஹ்மத் 22030 

அதிகாரமும் தலைகனமும்நம்முடைய பதவியின் அந்தஸ்தை பொருத்து அதிகாரம் மாறுபடும்.பெரிய பதவியாக இருந்தால் அதிக அதிகாரமும் சிறிய பதவியாக இருந்தால் குறைந்த அதிகாரமும் இருக்கும். அதிகாரம் எப்போது அதிகரிக்கிறதோ, அதோடு ஷைத்தான், தலைகனத்தையும் பெருமையும் சேர்ந்தே அதிகரிக்கச் செய்கிறான்.இதனால்தான் பதவியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை கீழ்த்தரமாக நடத்துவது திட்டுவது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.நமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால்தான் இந்த தலைகனத்திலிருந்து விடுபட முடியும். அனைத்து அதிகாரத்திற்கும் நான் தான் உரியவன் என்று பல இடங்களில் அல்லாஹ் திருக் குர்ஆனில் கூரிகிறான்.

பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை;சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல் குர்ஆன் 6:57)

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல் குர்ஆன் 6:62)

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (அல் குர்ஆன் 12:40)

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 4:36)

மறுமை நிலைமறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும்.சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில்  ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'

அல்லாஹ்தன்னுடைய அரியணையின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாதமறுமை நாளில்தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்: 
  1. நீதிமிக்கஆட்சியாளர். 
  1. இறைவணக்கத்திலேயேவளர்ந்தஇளைஞன். 
  1. தனிமையில்அல்லாஹ்வைநினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்). 
  1. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர். 
  1. இறைவழியில் நட்புகொண்ட இருவர்
  1. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர். 
  1. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாதவகையில் இரகசி யமாகதர்மம்செய்தவர். 

அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்து பவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான். அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குரான் 30:7)


புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.(அல் குர்ஆன் 69:25-29)

பதவியில் உள்ளவர்களின் பண்புகள்
திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி (ஸல் ) அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள் .ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில்  இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை , மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை.

அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான  வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும். மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள். 
பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி  விடுகிறார் . ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல்  சாப்பிட இயலுமா?  இவர்களுக்கு நிலையான மறுமையில் எந்த பதவியும் கிடைக்காது.

மேலும் பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கும் புகழுக்கும் செல்வத்திற்கும் அடிமையாகி விட்டதால் நிரந்தர தலைவர் என்று அறிவித்து கொள்கிறார்கள் , அப்படியென்றால் இவர்களுக்குப் பின் இருக்கும் லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தருக்கும் தகுதியோ திறமையோ இல்லை என்றாகிறது இவ்வாறு நினைக்கும்  தலைவர்களின் பின் அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன் ?

மேலும் தமிழ்நாட்டில் ஊர் தலைவர்கள் எனும் முத்தவல்லிகள் அந்த ஊரில் உள்ள இமாம்களை அளவுக்கு மீறி தன்னிஷ்டப்படி ஆட்டி வைப்பதும் ஓரிறை கொள்கை கொண்டவர்களை ஊர் விளக்கி வைப்பதும் நடந்து வருவதை அறிவீர்கள் .ஊர் விளக்கும் அதிகாரம் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டவுடன் அவர்களுக்கு திருமணம் ,அல்லது ஜனாஸா அடக்கம் என்றால் அபராதம் விதித்து கொள்ளையடிப்பதும் ஊர்வோலை (திருமணத்திற்கு தடை  இல்லா  சான்றிதழ்)  தர மறுப்பதும் ,ஜனாஸா அடக்கம் செய்ய மறுப்பதும் நாம் அறியாததல்ல.ஊர்மக்கள் மது அருந்துவது , வரதட்சனை திருமணத்தை ஆதரிப்பது போன்ற செயல்களை என்றாவது தடுதிருப்பார்களா ?

பள்ளிவாசலில் தொழுபவர்கள் தொப்பி அணியாதது ,ஆமின் சொல்வது, விரலசைப்பது என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கும் தொழுபவர்க்கும் இடைப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றித்தான் தொழுபவர்கலாக இருந்தும் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுக்கப் படுகிறார்கள்.இவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதர்க்குதான் இவர்களுக்கு பதவியா? மறுமை நாளில் இவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டாமா ?

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(
அல்குரான் 2:114)  


இறையச்சம்

'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!' எனக் கூறுவீராக” (என்று இறைவன் கூறினான்.)(அல் குர்ஆன் 79:18,19)

ஒருவன் பதவி வகிப்பதற்கான முதல் தகுதி இறையச்சமாகும் .ஒருவனிடம் எவ்வளவுதான் திறமை ,வீரம் இருந்தும் இறையச்சம் இல்லையென்றால் அவன் நஷ்டவாளியாவதோடு அவனை சார்ந்தோரையும் அது பாதிக்கும்.இறையச்சம் இல்லாத காரணத்தினாலே திருட்டு , லஞ்சம் ,பொய் வாக்குறுதி , அடக்குமுறை போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். மேலும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களையும் தவறு செய்ய தூண்டும்.ஆகவே இஸ்லாம் இறையச்சத்தை  முதன்மையான தகுதியாக முன்வைக்கிறது.ஆனால் இன்றைய நம்முடைய நிலையோ தலைகீழாக மாறி இருக்கிறது.தமக்கு மாற்று மதத்தினர் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக வணக்கம் சொல்வதும் , அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று அவர்களுடைய தெய்வங்களை வழிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தான்  ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள். அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான். (அல் குர்ஆன் 79:25)
                    

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget