நிறம் மாறும் அபாயாக்கள் !! ஜம்மியத்துல் உலமாவின் உறுதியின்மையால்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதிகளின் தாக்குதல்களின் உண்மையான நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம்தான் அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காக அல்லது அத்தாக்குதல்களை முஸ்லிம்களுக்குச் சாதகமானதாக மாற்றுவதற்காக வியூகங்களை எம்மால் வகுக்க முடியும்.
இத்தாக்குதல்களின் தன்மையையும் – இத்தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்களையும் – இத்தாக்குதல்கள் தொடர்பில் அரசு உள்ளிட்ட பல தரப்புகளிடமிருந்து தெரிவிக்கப்படும் கருத்துகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கின்றபோது, யுத்த வெற்றியைக் காட்டிக்காட்டி அரசு எவ்வாறு பெரும்பான்மையான பௌத்த மக்களின் வாக்குகளைக் கடந்த காலங்களில் பெற்றதோ அதேபோல், முஸ்லிம்களுக்கு எதிரான போக்கின் ஊடாக அதே மக்களின் வாக்குகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இரண்டாவது காரணம், ஒரே கல்லில் இரு மாங்காய்களாக முஸ்லிம்களின் மார்க்க விடயங்களிலும் கை வைப்பதாகும். அதாவது, பௌத்த நாடான இலங்கையில் இஸ்லாத்தின் அடையாளம் வெளியில் தெரியக்கூடாது. பௌத்தர்கள் போலவே அனைவரும் உடை அணிய வேண்டும் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற தனித்துவமான அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு அனைவரும் பொதுவான அடையாளத்தில் இருக்க வேண்டும் என்பதே பேரினவாதிகளின் திட்டம்.
அடுத்து முஸ்லிம்களின் வர்த்தகத்தையும் அதனோடு  சேர்த்து நசுக்குதல். முஸ்லிம்களைப் பிறரிடம் கையேந்தும் நிலைக்குக் கொண்டுவருதல்.  ஆகவே முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ஊடாக அரசு அரசியல் இலாபத்தை அடைவதற்கும் பேரினவாதிகள் மத ரீதியான – பொருளாதார ரீதியான இலாபத்தை அடைவதற்கும் முயற்சிசெய்வதை எம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

இத்தாக்குதல்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் அல்லது அத்தாக்குதல்களை வெற்றியடையச் செய்வதும் முஸ்லிம்களாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது. “முதல் கோணல் முற்றிலும் கோணல்”எனும் பழமொழியை நாம் அறிவோம். இது முற்றிலும் உண்மை. இந்தப் பழமொழி முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் போராட்டத்துடன் நன்கு பொருந்திப் போவதைப் பார்க்கலாம்.
பேரினவாதிகள் எவற்றுக்கு எதிராகவெல்லாம் போர்க்கொடி தூக்குகிறார்களோ அவற்றையெல்லாம் நாம் விட்டுக்கொடுத்தால் நாம் பலமிழந்துவிடுவோம். பேரினவாதிகளின் முதல் போராட்டத்தின்போதே நாம் உறுதியாக நின்றால் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது. ஆனால், நாம் அவ்வாறு செய்யத் தவறியதன் காரணத்தால் அவர்களின் அடுத்தடுத்த போராட்டங்களுக்குச் சரணடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஹலால் எதிர்ப்புப் போராட்டத்தின்போது உலமா சபை எடுத்த பிழையான முடிவின் காரணமாகவே பொதுபலசேனா பலமடைந்தது. அதன் போராட்டம் நியாயமானது. அது கூறுவது சரி. அது முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்று 

பௌத்தர்கள் நினைக்கத் தொடங்கினர். பொதுபலசேனாவை ஹீரோவாக்கினர்.

உலமா சபை ஹலால் விடயத்தில் உறுதியாக நின்றிருந்தால் ஹலாலின் உண்மைத் தன்மையையும் அதனால் சிங்கள வர்த்தகர்கள் அடைகின்ற நன்மையையும் சிங்கள மக்களுக்கு விளக்கிக் கூறியிருந்தால் பொதுபலசேனாவை அப்போதே கவிழ்த்திருக்கலாம். அந்த அமைப்பு முஸ்லிம்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு இப்போது வளர்ந்திருக்காது.
ஆனால், நாம் அவ்வாறு செய்யாததால் – பொதுபலசேனாவுக்கு வளைந்து கொடுத்ததால் “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்ற பழமொழியை உண்மையாக்கிவிட்டோம்.  அந்த வகையில், இரண்டாவதாகவும் எமது இன்னொரு உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாராகிவிட்டோம். எமது பெண்கள் அணியும் அபாயாவின் நிறமாற்றமே அந்த விட்டுக்கொடுப்பு. எமது பெண்கள் ஒரே மாதிரியான நிறத்தில் அதாவது கறுப்பு நிறத்தில் அபாயா அணிவதால் அதைப் பார்க்கும் சிங்களவர்கள் மிரளுகிறார்களாம்.
பெண்கள் கூட்டமாக நிற்கும் போது சீருடை அணிந்து நிற்பதுபோல் தெரிகிறதாம். (சீருடை பயங்கரமான ஆயுதம் தானே) இதற்காக பெண்கள் கறுப்பு நிறத்தைத் தவிர்த்து வெவ்வேறு நிறங்களிலான அபாயாவை அணிய வேண்டுமாம். இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் சில சிவில் அமைப்புகள் இறங்கியுள்ளன.  இது என்ன முட்டாள்தனமான முடிவு...? பேரினவாதிகள் நிகாபையும் புர்காவையும் எதிர்த்தார்களே தவிர, அபாயாவை எதிர்க்கவில்லை.
அதிலும் கறுப்பு நிறம் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. அவர்கள் நிறத்தின் அடிப்படையில் இதை எதிர்க்கவில்லை. முகத்தை மூடுவதைத்தான் எதிர்த்தனர். அப்படி இருக்கும்போது, எமது சிவில் அமைப்புகள் எப்படிக் கண்டுபிடித்தன கறுப்பு நிற அபாயாவால் சிங்களவர்கள் மிரளுகிறார்கள் என்று?
பேரினவாதிகள் கறுப்பு நிறத்தை எதிர்த்தால்கூட நாம் விட்டுக்கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில்  இருக்கும்போது, அவர்கள் எதிர்க்காத ஒன்றை நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு ஏன் தடுக்கப்போகிறீர்கள்?
பேரினவாதிகள் நினைத்துப் பார்த்திராத ஒன்றை ஏன் இந்த சிவில் அமைப்புகள் நினைக்கின்றன? முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குப் புதிதாக எதுவும் விடயங்கள் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும்  பேரினவாதிகளுக்கு இதன் மூலம் இந்த  சிவில் அமைப்புகள் அல்லவா வழிகாட்டுகின்றன.  கறுப்பு நிறத்திலான அபாயாவை அணிவதால் நாம் மிரளுகின்றோம் என்றோ அந்த நிறத்தைத் தடைசெய்ய வேண்டுமென்றோ சிங்களவர்கள் கூறினார்களா? அப்படிக் கூறினால் கூட நாம் அதை ஏற்கமுடியுமா..?
ஒருவர் தாம் விரும்பிய நிறத்தில் ஆடை அணிவது அவரது விருப்பம். அந்த விருப்பத்துக்கு எம்மால் எப்படித் தடைபோட முடியும்..? முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடும் விதம் இதுதானா..? இது மகா கோழைத்தனம். நாமே ஒன்றைத் தேவையில்லாது கற்பனை செய்துகொண்டு நாமே எமது உரிமையைப் பேரினவாதிகளிடம் விட்டுக்கொடுக்கின்றோம்.
இந்த அபாயாவின் நிறம் தொடர்பில் இந்தச் சிவில் அமைப்புகள் இப்போது பேரினவாதிகளுக்கு அடியெடுத்துக் கொடுத்திருப்பதால் அதை அடிப்படையாகக்கொண்டு பேரினவாதிகள் எதிர்காலத்தில் களத்தில் குதித்தாலும் வியப்படைவதற்கில்லை. அவ்வாறு நடக்காது  என்றும் கூறமுடியாது.
கறுப்பு நிறத்தை மாற்றுவதற்கு மற்றுமொரு நியாயப்படுத்தல். கறுப்பு நிற அபாயாவை அணிந்து நிறையப் பெண்கள் ஒன்றாக நிற்கும்போது சீருடை அணிந்து நிற்பதுபோல் காட்சி தருகிறதாம். சீருடை என்றால் அது என்ன பயங்கரவாதிகளின் ஆடையா? சீருடை பிறரை அச்சமூட்டக்கூடிய ஆடையா..? இது என்ன புதுக்கற்பனை?
சீருடை என்பதே அனைவரும் சீராக-  நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக அணிவது தானே. பௌத்த துறவிகள் ஒரே நிறத்திலான ஆடைகளைத்தான் அணிகிறார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும்போது அந்த ஆடைகள் சீருடைகள்போல் காட்சியளித்து மக்களை மிரட்டுகின்றனவா?
மாணவர்கள் வெள்ளை நிற சீருடைகளை அணிகின்றனர். அவர்களும் ஒன்றாக நிற்கும்போது அந்த ஆடைகள் பார்ப்பவர்களை மிரட்டுகின்றனவா?   சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கின்றோம் என்று கூறி இவ்வாறான  முட்டாள்தனமான  பேரினவாதிகளின் போராட்டத்துக்கு அடியெடுத்துக்கொடுக்கின்ற  தமது உரிமைகளைத் தாமாகவே விட்டுக்கொடுக்கின்ற வேலைகளை இந்த சிவில் அமைப்புகள் செய்யக்கூடாது.
அபாயாவின் நிறத்தை மாற்றுவதற்கு இந்த சிவில் அமைப்புகள் முன்வைக்கும் மற்றுமொரு நியாயத்தைப் பாருங்கள். அபாயாவை அணிவதன் ஊடாக இலங்கை முஸ்லிம்கள் அரபு நாடுகளின் கலாசாரங்களைப் பின்பற்றுவதாக சிங்களவர்கள் கருதுகிறார்கள்.
அரபு நாடுகளின் கலாசாரத்தைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது? குறிப்பிட்ட கலாசாரம் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முற்றிலும் விரோதமாக இருந்தால் மாத்திரமே நாம் அதைப்  பின்பற்றக்கூடாது.  இஸ்லாத்துடன் உடன்படும்போது அதைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது..?
நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம்கூட அரபு நாட்டில் உதித்ததுதானே. அதை அரபு நாட்டு மார்க்கம் என்றுதான் பேரினவாதிகள் கூறுகிறார்கள். அதற்காக  அரபு நாட்டில் இருந்து வந்ததற்காக  பேரினவாதிகளுக்குப் பயந்து இஸ்லாத்தை விட்டுவிட முடியுமா..?
நாம் அணிகின்ற பெரும்பான்மையான ஆடைகள் மேற்கு நாடுகள் கண்டுபிடித்தவை. அவற்றுள் நாகரிகமாக உள்ள  மனித ஒழுக்கத்துக்குப் பாதிப்பு இல்லாத ஆடைகளை நாம் தெரிந்து அணிகிம். நல்லதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை.
ஆகவே, அரபு நாட்டில் தோன்றியவற்றை  நாம் பின்பற்றக்கூடாது என்றால் மேற்கு நாடுகளில் தோன்றிய நாகரிகத்தைக்கூட குறிப்பாக நாம் அணிகின்ற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும் அல்லவா..? அவ்வளவு ஏன், தாடி வைத்துள்ளவர்கள், ஜுப்பா அணிந்துள்ளவர்கள், தொப்பி அணிந்துள்ளவர்கள் போன்றோரைப் பார்த்து தீவிரவாதிகள் என்று பேரினவாதிகள் கூறுகின்றனர். சர்வதேசத்திலும் அவ்வாறுதான் கூறப்படுகின்றது.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து இவற்யெல்லாம் நீக்க முடியுமா..? ஆகவே, எந்தவொரு நியாயமும் இல்லாமல் எமது உரிமைகளைத் தாமாகவே விட்டுக்கொடுக்கும் செயற்பாட்டை நாம் உடன் நிறுத்தவேண்டும். சிவில் அமைப்புகள் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராட வேண்டுமே தவிர இவ்வாறு இருக்கின்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. ஆகவே, தேவையில்லாமல் அபாயாவுக்குப் பெய்ண்ட் அடிக்கும் முயற்சியை இந்த சிவில் அமைப்புகள் உடன் நிறுத்தவேண்டும்.

இதையும் பார்க்க:-


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget