பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)


இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவது தான் என்பதை முன்னர் பார்த்தோம்.

ஆனால், '..... அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா.....' என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இவ்வாறு பெருநாட்களில் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். ஆகவே 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டும்தான் பெருநாளுக்கென நாம் கூறவேண்டிய தக்பீர் ஆகும். நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று) பெருநாளில் தக்பீர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்

பெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: புகாரி(986)

இந்த முறையை நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்தார்கள் என்பதால் நாமும் கடைப்பிடிப்பது சுன்னத்தாகும். ஆக, இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படவேண்டும்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?

நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்ணாமல்(தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.அறிவிப்பவர்: புரைதா(ரலி); நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதையும் புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்:புகாரி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாளில் தொழுதுவிட்டு வந்து சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுதுவிட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுதல்

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி);  நூல்: புகாரி (953)

புத்தாடை அணிதல்

தகுந்த ஆடை இல்லாத நிலையில் இருந்தால் இரவல் ஆடை வாங்கியாவது பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054

ஆண்களுக்கு பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அறிய முடிகின்றது. அதே சமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

பெருநாள் என்பதே சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால்தான் பெருநாள், இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை மக்களிடத்தில் பலமாக பதிந்துவிட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கியாவது புத்தாடை வாங்கவேண்டும் என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வாங்க வசதியற்றவர்கள் கடன்பட்டு அவஸ்தைக்கு ஆளாகாமல், தன்னிடம் இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது.

பெருநாளில் பொழுது போக்கு அம்சங்கள்

திரைப்படங்கள் போன்ற‌ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவற்றை பெருநாளன்று பொழுபோக்குகளாக அமைத்துக் கொள்ளக்கூடாது. வீர சாகச விளையாட்டுகள் போன்று விளையாடுவதை பெருநாளன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளை ஊர்தோறும் ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அபூபக்ர்(ரலி)அவர்கள், ஆயிஷா(ரலி)அவர்களிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர்(ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அந்தச் சிறுமியர்களை (பாடுவ‌தற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உத்வா; நூல்: நஸாயீ (1575)

இந்த ஹதீஸில் 'தஃப்' (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர்(ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைச் செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

நாமனைவரும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த‌ முறையில் பெருநாளைக் கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துக் கொள்வோமாக!

இதையும் பார்க்க >>
                      * மஹ்ஷரும் முஸ்லிம் இளைஞர்களும்
                      * இஸ்லாத்தில் வெள்ளை ஆடை அணிதல்.
                      * புது வருடக் கொண்டாட்டமும் இஸ்லாமும்......!
                      * இஃதிகாபின் நோக்கமும் நடைமுறையும்..!!
                      * “பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget