மிஃராஜ் தினத்தில் இட்டுக்கட்டப்பட்ட நோன்பும், அமல்களும்

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

 மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).

عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري, ومسلم). 

காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நான்கு மாதங்கள் புனிதமானது என்றும், அவைகள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும். இம்மாதங்கள் புனிதமானவைகள் என்று கூறி அல்லாஹ்வும், ரஸுலும் காட்டித்தராத வணக்க வழிபாடுகளை அரங்கேற்றுவது கூடாது.

عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود, أحمد).

முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா.? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்.? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.

நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். 

இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்' (அபூதாவுத், அஹ்மத்).

இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பது விளங்குகிறது.

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:

إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது 'அல்இலலுல் முதனாஹியா' என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய 'ஸாஇததிப்னு அபிர்ரகாத்' என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்), மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை'

இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي.......)).

'ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).

فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار

'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.'

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).

رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر

'ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.' (தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).

من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار

'எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).

من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ......قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغيرحساب ولا عذاب

'ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா.? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).

((من صام من رجب وصلى فيه أربع ركعات .... لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له

'ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்'
இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).

إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة

'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26). 


அன்றைய காஃபிர்களிடம் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:


அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் 'ரஜப் முழர்' என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். 

காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.

இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர், அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அதீரது ரஜப் என்றால் என்ன..?
அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்:

'அபூ உபைதா குறிப்பிடும் போது, நிச்சயமாக 'அதீரத்' என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுக்கள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்.' (கரீபுல் ஹதீஸ் 1: 195, 196).


அபூதாவுத் குறிப்பிடும் போது: 'அதீரத்' என்பது ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்.

அல்கத்தாபி குறிப்பிடும் போது: 'அல் அதீதர்' என்பது, ஹதீஸிலிருந்து விளங்குவது அது ரஜப் மாதம் பலியிடப்படும் ஒரு ஆடாகும்.

இதில் சரியான கருத்து: 'அதீரத்' என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சைவைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.

அதீரத்தின் சட்டமென்ன..?

عَنِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ (البخاري, ومسلم).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பரஅ' என்பதும் 'அதீரத்' என்பதும் இல்லை. பரஅ என்றால் ஒட்டகத்திற்கு கிடைக்கும் முதல் குட்டியை தங்களது கடவுள்களுக்காக அறுத்துப் பலியிடுவதாகும். அதீரத் என்றால் ரஜப் மாதத்தில் (ஒரு ஆட்டை அறுத்து பலியிடுவதாகும்) நிறைவேற்றப்படும் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).


'அதீரத்' விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். இதில் சரியான கருத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்: அதீரத் என்பதை நிறைவேற்றுவதற்கு சில ஹதீஸ்களில் அனுமதி இருந்தாலும் நாம் மேற்குறிப்பிட் ஹதீஸின் மூலம் அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது தடுக்கப்பட்டு விட்டது. மேற்சொன்ன ஹதீஸின் மூலம் அது மாற்றப்பட்டு விட்டது என்பதற்குரிய காரணங்கள்: மேற்சொன்ன ஹதீஸை அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களாகும். அவர்கள் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு கைபர் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதீரத் என்ற இந்த வழக்கம் அறியாமைக் காலம் முதல் உள்ள ஒன்றாகும்.

பரஅ, அதீரத் என்பது மாற்றப்பட்டு விட்ட ஒன்று என்று பெரும் பாலான அறிஞர்களின் கருத்தென காலி இயாழ் குறிப்பிடுவதாக இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள். (அல்மஜ்மூஃ 8: 446).

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி (ரஹ்), மற்றும் இமாம் இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்களும் அதீரத் என்பது தடுக்கப்பட்ட ஒன்று, நிறைவேற்றக்கூடாத ஒன்று என குறிப்பிடுகின்றனர்.

ரஜப் மாதத்தை விஷேச நோன்பு, தொழுகை, உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்..!


ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை, மற்றும் அதிகமான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என்பதை நாம் ஆரம்பத்திலே சுற்றிக்காட்டினோம். எனவே இம்மாத்தில் விஷேச நோன்புக்கோ, தொழுகைக்கோ எந்த ஆதாரமுமில்லை.

இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது, 'ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள், மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.' (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).

அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன.? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா.? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்'  (அல்முஃனி 3: 167, அஷ்ஷரஹுல் கபீர் 2: 52, மஜ்மூஉல் பதாவா 25: 291).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: 'ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும், அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.' (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624, 625).

முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில், நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. 
மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290, 291).

ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா..?

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ *(البخاري).

உர்வதிப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்: 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை.' (புஹாரி).

'அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் உம்ரா செய்தார்கள் என்று கூறிய போது அதை ஆயிஷா (ரலி) அவர்கள் நிறாகரித்தார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மறுப்பேதும் தெரிவிக்காது அமைதியாக இருந்தார்கள்' (புஹாரி, முஸ்லிம்).

ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நாம் மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இதுவும் ஒரு பித்ஆவாகும்.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில், இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய வழிகாட்டல் இல்லாமல் எவருக்கும் சிறப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.

மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர், ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும்.

'நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்). 

அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரம் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த பெறுமதியுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.


இதையும் பார்க்க >>Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget