குரங்கு விபச்சாரம் செய்ததா..?

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை முஸ்லிம்களால் ஆதாரப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டு வந்த பல சரியான நபிமொழிகளை தமிழகத்தில் ஒரு சாரார் தவறானக் காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றனர். சகோதரர் பீஜேவும் அவரைச் சார்ந்தவர்களே இந்தத் தவறை செய்து வருகின்றனர். 
இவர்கள் தங்களுடைய ஹதீஸ் மறுப்புக்கொள்கையை நிலைநாட்ட மிகப்பெரும் ஆயுதமாக புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தியை அதிகமாக குறிப்பிடுகின்றனர்.
حَدَّثنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُم.
நான் அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த ஒரு பெண் குரங்கைச் சுற்றி பலக் குரங்குகள் திரண்டதைக் கண்டேன். அதன்மீது அவர்கள் கல்லால் எரிந்தார்கள். அவர்களுடன் நானும் அதன்மீது கல்லெறிந்தேன். புகாரி (3849)
புகாரியில் பதிவாகியுள்ள இந்த செய்திக்கு எதிராக இவர்கள் பலக் கேள்விகளை அடுக்குகின்றனர். குரங்கு 
  1. குரங்குகளுக்கிடையே திருமணம் என்ற அம்சம் இல்லாத போது குரங்கு விபச்சாரம் செய்தது என்றும் விபச்சாரம் செய்த குரங்கிற்கு எதிராக பலக் குரங்குகள் திரண்டன என்றும் எப்படிக் கூற முடியும்?
  2. குற்றவியல் போன்ற சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களுக்கே அல்லாஹ் விதித்துள்ளான். அவ்வாறிருக்க, மிருக இனத்தைச் சார்ந்த குரங்கிற்கு கல்லெறியும் தண்டனை உண்டா?
  3. அந்தக் குரங்கு விபச்சாரம்தான் செய்தது என்பதை அறிவிப்பாளர் எப்படி அறிந்துகொண்டார்? இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய்யான செய்தி.
எனவே ஒரு செய்தியின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அது புகாரியில் பதிவாகி இருந்தாலும் அதன் கருத்து சரியாக இல்லாவிட்டால் அந்த செய்தியை ஏற்கக் கூடாது
என்று வாதிடுகின்றனர். இதன் மூலம் இவர்களின் ஹதீஸ் மறுப்புக்கொள்கைக்கு அடித்தளம் இடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர்.
பல ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் கருத்து சரியாக இருந்தும் இவர்களின் சிந்தனைக்கு ஒத்துவராத ஒரே காரணத்தால் அந்த நபிமொழிகளை மறுத்து வருகின்றனர். இச்செயலுக்கு வலுசேர்க்கவே குரங்கு விபச்சாரம் பற்றிய மேற்கண்ட செய்தியை இவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாக கருதுகின்றனர்.
நபிமொழிகளை மறுத்துவிட்டு அதை நியாயப்படுத்த இவர்கள் எவ்வளவு முயன்றாலும் நிச்சயம் இவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். இவர்களின் ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கைக்கும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த செய்திக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை.
இது  நபியின்  கூற்றல்ல
தற்போது நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பிரச்சனை நபியின் கூற்றாக வரும் சஹீஹான ஹதீஸ்களை மறுக்கக் கூடாது என்பதே ஆகும். நபி(ஸல்) அல்லாத மற்றவர்களின் கூற்றுக்களை மறுக்கக்கூடாது என நாம் கூறவில்லை. நபி(ஸல்) அவர்களைத் தவிர்த்து மற்றவர்களின் கூற்றுக்களில் ஏற்கத்தகுந்தவையும் உண்டு. மறுக்கத்தகுந்தவையும் உண்டு.
அம்ர் பின் மைமூன் என்பவரே இந்த சம்பவத்தை அறிவிக்கிறார். இவர் இறைத்துாதர் இல்லை. நபித்தோழரும் அல்ல. இத்தகைய நிலையில் உள்ளவர் ஒருக் கருத்தைத் தெரிவித்தால் அதை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என யாரும் கூறவில்லை. ஹதீஸ் கலையில் இது தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் அம்ர் பின் மைமூன் அவர்கள் பிற நம்பகமான வாரிடமைிருந்து தான் கேள்விபட்ட ஒரு ஹதீஸை அறிவிக்கவில்லை. மாறாக தான் ஒரு காட்சியை கண்ட போது தான் சுயமாக யூகித்து அறிந்து கொண்ட விசயத்தையே கூறியுள்ளார். சாதாரண அறிவுள்ளவர்கள் கூட இதை ஹதீஸ் என்று கூறமாட்டார்கள்.
இந்த அடிப்படையில் குரங்கு விபச்சாரம் பற்றி அம்ர் பின் மைமூன் தெரிவித்த இந்த செய்தியை ஏற்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இதை மறுப்பதால் ஈமானிற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. எனவே தான் இப்னு அப்தில் பர் இமாம் அல்பானீ போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலர் இச்செய்தியை மறுத்துள்ளனர்.
ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக வரும் சஹீஹான ஹதீஸ்களை கண்டிப்பாக ஏற்க வேண்டும். இவற்றை மறுப்பது வழிகேடு. அவ்வாறிருக்க நபிகளார் கூறியதாக வரும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதற்கு இவர்கள் இந்த சம்பவத்தை சான்றாகக் கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலையாகும்.
பலவீனமான செய்தி
சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக வரும் தகவல் சிலசமயம் தவறாக இருக்கும் என்பதற்காகவே இதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம் என இவர்கள் கூறுவார்களானால் அதுவும் மடமையாகும். ஏனெனில் இந்த செய்தி அறிவிப்பாளர் தொடா் ரீதியில் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் நுஐம் பின் ஹம்மாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நேர்மையானவர் என்றாலும் உறுதியான நினைவாற்றல் அற்றவர். இதன் காரணத்தால் இவரை பலர் கடுமையாக விமா்சனம் செய்துள்ளனர்.
و كان نعيم يحدث من حفظه و عنده مناكير كثيرة لا يتابع عليها ، قال : و سمعت يحيى بن معين سئل
عنه ، فقال : ليس فى الحديث بشىء ، و لكنه كان صاحب سنة .
و قال أبو عبيد الآجرى عن أبى داود : عند نعيم بن حماد نحو عشرين حديثا عن النبى صلى الله عليه وسلم ليس لها أصل .
و قال النسائى : نعيم بن حماد ضعيف .
و قال فى موضع آخر : ليس بثقة .
و قال أبو على النيسابورى الحافظ : سمعت أبا عبد الرحمن النسائى يذكر فضل نعيم ابن حماد و تقدمه فى العلم و المعرفة و السنن ، ثم قيل له فى قبول حديثه ،
فقال : قد كثر تفرده عن الأئمة المعروفين بأحاديث كثيرة فصار فى حد من لا يحتج به .
و ذكره ابن حبان فى كتاب ” الثقات ” ، و قال : ربما أخطأ و وهم .
و قال أبو أحمد بن عدى : قال لنا ابن حماد ـ يعنى أبا بشر محمد بن أحمد بن حماد الدولابى ـ : نعيم بن حماد يروى عن ابن المبارك ضعيف ، قاله أحمد بن شعيب . قال ابن حماد : و قال غيره : كان يضع الحديث فى تقوية السنة ، و حكايات عن العلماء فى ثلب أبى حنيفة كذب .
قال ابن عدى ، و ابن حماد : متهم فيما يقوله لصلابته فى أهل الرأى .
و زاد أبو سعيد : قال : حمل من مصر إلى العراق فى المحنة فامتنع أن يجيبهم فسجن فمات فى السجن ببغداد غداة يوم الأحد لثلاث عشرة خلت من جمادى الأولى ، و كان يفهم الحديث . روى أحاديث مناكير عن الثقات .
قال الحافظ في تهذيب التهذيب 10 / 462 :
و ممن ذكر وفاته سنة ثمان أبو محمد بن أبى حاتم عن أبيه ، و هو الصواب .
و قال مسلمة بن قاسم : كان صدوقا ، و هو كثير الخطأ ، و له أحاديث منكرة فى الملاحم انفرد بها ، و له مذهب سوء فى القرآن ، كان يجعل القرآن قرآنين ، فالذى فى اللوح المحفوظ كلام الله تعالى ، و الذى بأيدى الناس مخلوق . انتهى .
و قال أبو الفتح الأزدى : قالوا : كان يضع الحديث فى تقوية السنة ، و حكايات
مزورة فى ثلب أبى حنيفة ، كلها كذب . انتهى .
و أما نعيم فقد ثبتت عدالته و صدقه ، و لكن فى حديثه أوهام معروفة .
و قد قال فيه الدارقطنى : إمام فى السنة ، كثير الوهم .
و قال أبو أحمد الحاكم : ربما يخالف فى بعض حديثه .
இமாம் நஸாயீ அவர்கள் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். அபூ அலீ நைஸாபூரி அவர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் எதற்கும் தகுதியானவர் அல்ல என இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவர் பல நேரங்களில் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என இப்னுல் முபாரக் கூறியுள்ளார். இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என இப்னு அதி கூறியுள்ளார். இவர் இட்டுக்கட்டக்கூடியவர் என இப்னு ஹம்மாத் கூறியுள்ளார். பல தவறான செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என அபூசயீத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைத்தவர். பல தவறான செய்திகளை அறிவித்தவர் என மஸ்லமா பின் காசிம் விமர்சனம் செய்துள்ளார். இவர் நபிமொழிக்காக ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவராக இருந்தார் என அபுல் ஃபத்ஹ் அஸ்தீ என்பவர் விமர்சித்துள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
(நுால் தஹ்தீபுல் கமால் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 10 பக்கம் 462)
நுஐம் பின் ஹம்மாத் இட்டுக்கட்டக்கூடியவரா.? இல்லையா.? என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் இவர் அதிகம் தவறிழைப்பவர். சரியான நினைவாற்றல் அற்றவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
இமாம் புகாரி அவர்கள் தன் நுாலில் மொத்தம் ஐந்து இடங்களில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடங்களில் இமாம் புகாரி அவர்கள் இவருடைய அறிவிப்பை பிரதான அறிவிப்பாக கொண்டு வரவில்லை. மாறாக வேறு பலமான அறிவிப்புகளுடன் இணைத்து துணைச்சான்றாகவே கொண்டு வந்துள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இன்னொரு குறையும் உள்ளது. இத்தொடரில் குஸைம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையை அதிகம் செய்யக் கூடியவர் என இமாம் இப்னு ஹஜர் உட்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த விமர்சனத்திற்குரிய அறிவிப்பாளர் தான் நேரடியாக கேட்டதை தெளிவுபடுத்தினாலே அவரது அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் குஸைம் இந்த செய்தியை தன் ஆசிரியரிடமிருந்து தான் நேரடியாக கேட்டதாகக் கூறவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாகும்.
எனவேதான் இமாம் அல்பானீ இமா் இப்னு அப்தில் பர் மற்றும் பலர் இது பலவீனமானது எனக் கூறியுள்ளனர்.
(முக்தஸர் சஹீஹ் புகாரி பாகம் 2 பக்கம் 535)
ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களை இவர்கள் துணிந்து மறுத்து வருகின்றனர். இந்த வழிகேட்டை நியாயப்படுத்த இவர்களுக்கு இப்படிப்பட்ட பலவீனமான செய்திதான் கிடைத்ததா? நபிமொழி மறுப்பை நியாயப்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஆய்வுரீதியில் உள்ளவை அல்ல. அவசர கோலத்தில் உள்ளவை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்திவிட்டனர்.
புகாரியில் உள்ள அனைத்தும் சரியானதா..?
இமாம் புகாரி அவர்கள் தொகுத்த சஹீஹ் அல்புகாரி ஹதீஸ் தொகுப்பு நுாலின் மீது இஸ்லாமிய சமுதாயம் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளது. இந்த மதிப்பை சீர்குலைத்தால் தான் தன் இஷ்டத்திற்கு எத்தனை ஹதீஸ்களை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவர்கள் மறுக்க முடியும். இதற்காக இவர்கள் குரங்கு விபச்சாரம் தொடர்பான இந்த செய்தியை பரவாக மக்களிடம் கூறி புகாரியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை தகர்க்கும் முயற்சியை செய்கின்றனர்.
புகாரியில் உள்ள அனைத்து தகவல்களும் சரியானது என இமாம் புகாரி அவர்களே கூறவில்லை. எந்த இஸ்லாமிய ஆய்வாளர்களும் கூறவில்லை. தன் நிபந்தனைக்கு உட்படாத சில தகவல்களை இமாம் புகாரி அவர்கள் பல நோக்கத்திற்காக தன் புத்தகத்தில் கொண்டுவந்துள்ளார்கள்.
நபிகளார் கூறியதாக வரும் செய்திகளை ஆதாரப்பூர்வமாக பதிவதே இமாம் புகாரி அவர்களின் பிரதான நோக்கம். இவையே இமாம் புகாரி அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்களாகும். இவற்றுக்கு இமாம் புகாரி அவர்களின் அங்கீகாரம் உள்ளது. இவற்றில் ஏதாவது குறை இருந்தாலே அது இமாம் புகாரி அவர்கள் செய்த தவறாக அமையும்.
இவையல்லாமல் நபித்தோழர்களின் கூற்றுக்கள் அதற்குப் பின்வந்தவர்களின் கூற்றுக்கள் ஆகியவற்றை தன் நுாலில் சில நோக்கத்திற்காக இமாம் புகாரி அவர்கள் பதிந்தாலும் இவை இமாம் புகாரி அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட செய்திகள் அல்ல. இவற்றுக்கு இமாம் புாகரி அவர்களின் அங்கீகாரம் இல்லை. இவற்றைக் கொண்டு இமாம் புகாரி அவர்களையோ அவர்களது நுாலான சஹீஹ் புகாரியையோ யாராவது விமா்சனம் செய்தால் அவ்வாறு விமா்சனம் செய்பவர்கள் இமாம் புகாரியின் வழிமுறையை அறியாத அறிவிலிகளாவர். இது தொடர்பாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தன்னுடை ஃபத்குல் பாரீ என்ற நுாலில் தெளிவாக விவரிக்கிறார்கள்.
எனவே குரங்கு விபச்சாரம் பற்றிய மேற்கண்ட செய்தி புகாரியில் இருந்தாலும் இது தாபியீன் ஒருவரது கூற்று என்பதால் பொதுவாக இமாம் புகாரி அவர்கள் சரியான ஹதீஸிற்கு கடைபிடிக்கும் அளவு கோலுக்கு இச்செய்தியும் உட்பட்டது எனக் கூற முடியாது. இச்செய்தி இமாம் புகாரி அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல. இதற்கு இமாம் புகாரி அவர்களின் அங்கீகாரமும் இல்லை.
இதுபோன்ற செய்திகளை இமாம் புகாரி அவர்கள் தன் நுாலில் பதிவதற்கு காரணம் இப்படியொரு தகவல் வந்துள்ளது என சுட்டிக்காட்டுவது தான். இத்தகவல் 100 சதவீதம் நம்பப்பட வேண்டியது என்றோ இதை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றோ அவர்கள் கூறவில்லை.
இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இமாம் புகாரி அவர்கள் தகவலுக்காக கொண்டு வந்த செய்தியை இவர்கள் சுட்டிக்காட்டி இமாம் புகாரி அவர்கள் ஆதாரமாகக் கருதி சட்டமும் எடுத்த பல சரியான ஹதீஸ்களை இக்கூட்டம் நிராகரிக்கிறது. இப்படிப்பட்ட செய்தி புகாரியில் இருக்கிறது! பார்த்தீர்களா? இதையும் இமாம் புகாரி சரி எனக் கூறியுள்ளார்? என இவர்கள் பாமரத்தனமாக கேட்பது முட்டாள்தனமாகும். இந்த செய்தியை சுட்டிக்காட்டி இமாம் புகாரி அவர்களின் அங்கீகாரம் பெற்ற மற்ற ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதும் அவற்றில் சந்தேகத்தை ஏற்படுத்துவதும் அறிவீனர்களின் வழிமுறையாகும். உண்மையில் இவர்கள் சஹீஹ் புகாரியின் மதிப்பை குறைக்க நினைத்து தங்களின் மதிப்பையே கெடுத்துக்கொண்டனர்.
குா்ஆனுக்கு முரண் என்ற பொய்யானக் காரணத்தைக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் வழிமுறை ஹதீஸ் கலையில் இல்லை. இந்த அடிப்படையில் புகாரியில் பலவீனமான எந்த ஹதீசும் இல்லை.
புகாரியில் சில ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளன. இவை ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள விதியின் படி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் உள்ள பலவீனமான செய்திகளாகும். உதாரணமாக மேற்கண்ட குரங்கு விபச்சாரம் பற்றிய செய்தியைப் போன்று. விமர்சிப்பவர் இவற்றை தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.
இதைவிடுத்து யாரோ? எவரோ? எங்கோ? எப்போதோ? தவறு செய்து விட்டார்கள் என குருட்டுத்தனமாக சஹீஹான ஹதீஸ்களை விமர்சித்தால் அந்த விமர்சனம் குப்பையில் துாக்கி எரியப்படவேண்டியது. நபிமொழிகளின் நம்பிக்கையுள்ளவர்கள் இது போன்ற யூகங்களை நம்பி நபிமொழிகளை நிராகரிக்கமாட்டார்கள்.
கருத்துப் பிழையா...?
நான் அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த ஒரு பெண் குரங்கைச் சுற்றி பலக் குரங்குகள் திரண்டதைக் கண்டேன். அதன்மீது அவை கல்லெரிந்தன. அவர்களுடன் நானும் அதன்மீது கல்லெறிந்தேன்.
புகாரி (3849)
இச்செய்தியில் குரங்கு எனக் கூறப்படுவது மனிதர்களையே குறிக்கும் என நாம் முன்பு விளக்கம் அளித்திருக்கிறோம். அது விரிவாக விளக்க வேண்டிய விசயம். ஒரு பேச்சுக்கு இவர்கள் கூறுவது போல் இது குரங்கைப் பற்றித் தான் பேசுகிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் இச்செய்தியில் இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்கள் ஏதும் இல்லை. அதிகபட்சமாக இது நடப்பதற்கு சாத்தியமானதா..? என்ற கேள்வி மட்டுமே எழும்.
பொதுவாக குரங்கு இனம் முழுவதற்கும் விபச்சாரம் செய்யக் கூடாது என அல்லாஹ் சட்டமாக்கினான் என்று அம்ர் பின் மைமூன் கூறவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட குரங்கு கூட்டத்திடம் தான் கண்ட வினோதமான நிகழ்வையே கூறியுள்ளார்.
சில நேரங்களில் விலங்குகள் நாம் ஆச்சரியப்படுகின்ற வகையில் சில வினோதமான நிகழ்வுகளில் ஈடுபடுகின்றன. அவை சில விசயங்களில் மனிதனைப் போன்று செயல்படுவதையும் நாம் காண்கிறோம். பேஸ்புக் யூடியூப்களில் இந்நிகழ்வுகளை ஏராளமாக காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாக நடக்காவிட்டாலும் அரிதாக நடக்கிறது என்ற உண்மையை நம்மால் மறுக்க முடியாது.
உதாரணமாக ஒரு காகம் இறந்துவிட்ட மற்றொரு காகத்தை பூமியில் குழிதோண்டி புதைத்த நிகழ்வை அல்லாஹ் குா்ஆனில் குறிப்பிடுகிறான். பொதுவாக உலகில் உள்ள அனைத்து காகமும் இவ்வேளையை செய்வதில்லை. இறந்தவரை புதைக்க வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் மனிதர்களுக்கே விதித்துள்ளான். காகத்திற்கு விதிக்கவில்லை. அல்லாஹ் குா்ஆனில் இதைக் கூறியதால் இதை நம்புவது கட்டாயமாகிவிடுகிறது.
குரங்கு விபச்சாரம் பற்றி அம்ர் பின் மைமூன் தெரிவித்ததால் இதை அனைவரும் கட்டாயம் நம்ப வேண்டும் எனக் கூற முடியாது. ஆனால் இதையே அல்லாஹ்வோ அவனுடைய துாதரோ கூறியிருந்தால் அதை நாம் மறுக்க மாட்டோம். கண்டிப்பாக ஏற்றிருப்போம்.
நம் நம்பிக்கைக்குரியவர்கள் சில வினோதமான நிகழ்வுகளை தான் கண்டதாக கூறும் போது அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அதை நாம் நம்புகிறோம். குா்ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத இதுபோன்ற நிகழ்வுகளை நம்பகமானவர் கூறினால் அதை நம்புவது தவறல்ல. நாம் பல நிகழ்வுகளை இவ்வாறு நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.
விபச்சாரம் செய்தவருக்கு தண்டனை தர வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் மனிதர்களுக்கே வழங்கியுள்ளான். ஆனால் அறியாமைக்காலத்தில் சில குரங்குகளிடம் இதன்படி வாழக்கூடிய தன்மை இயல்பாகவே இருந்தது என்றே இச்செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் பகுத்தறிவற்ற சில குரங்குகளே இதன்படி வாழ்ந்திருக்கும் போது பகுத்தறிவுள்ள மனிதன் இதன் படி வாழ்வது மிக பொருந்தமானது என்ற நல் உணர்வே இதை நம்புவதால் ஏற்படுகிறது.
அம்ர் பின் மைமூன் தெரிவித்த தகவலில் நமக்கு சட்டமோ இன்று கடைபிடிக்கவேண்டிய போதனையோ எதுவும் இல்லை. மாறாக இது நடந்து முடிந்த நிகழ்வு குறித்துப் பேசுகிறது. இது நடப்பதற்கு சாத்தியமானது என நினைப்பவர்களுக்கு இந்த வரலாற்றுத் தகவலை நம்புவதால் எப்பிரச்சனையும் இல்லை.
                                                              ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISc
                                                   (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget