வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.?

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தொழலாம். ஆனால், வித்ரை உடைக்க வேண்டும். அதாவது, வித்ர் தொழுத ஒருவர் உதாரணமாக, ஐந்து ரக்அத் வித்ர் தொழுதுள்ளார். அவர் மீண்டும் தொழ ஆசைப்பட்டால் முதலில் தனியாக ஒரு ரக்அத் தொழ வேண்டும். இதன் மூலம் ஏற்கனவே அவர் தொழுத ஐந்து ரக்அத்துக்களுடன் இந்த ரக்அத்தும் சேர்ந்து ஆறு ரக்அத்துக்களாகிவிடும். முன்னர் தொழுத வித்ர் நீங்கிய பின்னர் அவர் விரும்பிய அளவு தொழுதுவிட்டு மீண்டும் வித்ர் தொழுது தொழுகையை முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஷாபி மத்ஹபுடைய அறிஞர்களில் சிலரும் நபித்தோழர்களில் சிலரும் இந்தக் கருத்தில் உள்ளனர். இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ர் இருக்க வேண்டும் என்ற ஹதீஸை மையமாக வைத்தே இந்த முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். (பார்க்க: திர்மிதி- 470) பின்வரும் காரணங்களால் இந்த முடிவு வலுவிழந்து போகின்றது.
1. ஒரு இரவின் இரண்டு வித்ர் தொழுகைகள் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா- 1101, அபூதாவூத்: 1440, திர்மிதி: 470)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு இரவில் இரு வித்ர் தொழ முடியாது. இதை சரிபண்ணவே ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே வித்ர் தொழுதவர் தனியாக ஒரு ரக்அத் தொழுது தான் ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. அப்படி உடைத்துவிட்டு தனக்கு வேண்டிய அளவு தொழுதுவிட்டு பின்னர் வித்ர் தொழுதால் அவர் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கியவராகவும் ஒரு இரவில் இரண்டு வித்ர் தொழுதவராகவும் மாறிவிடுவார் என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.
ஆனால், கவனமாக அவதானித்தால் ஒரே இரவில் மூன்று வித்ர் தொழப்படும் நிலை இங்கே உருவாகின்றது. எனவே, இது தவறான நிலைப்பாடாகும். « வித்ர் அல்லாமல் தனியாக ஒரு ரக்அத் தொழக்கூடிய ஒரு தொழுகையை இஸ்லாம் அறிமுகப்படுத்தியதில்லை. இங்கு அது நடைபெறுகின்றது.
« முதலில் தொழுத வித்ர் முடிந்துவிட்டது. பின்னர் உறங்கிவிட்டு மீண்டும் எழுந்து ஒரு ரக்அத் தொழுவது அந்த வித்ரை முறித்து இரட்டையாக மாற்ற முடியாது. எனவே, இந்த நடைமுறை போதிய ஆதாரமற்ற நடைமுறையாகத் தென்படுகின்றது. இது குறித்து மாற்றுக் கருத்துக் கூறும் அறிஞர்களின் பின்வரும் முடிவு பொருத்தமாகப் படுகின்றது.
ஏற்கனவே வித்ர் தொழுதவர் மீண்டும் தொழ நினைத்தால் அவர் தொழுது கொள்ளலாம். ஆனால், அவர் மீண்டும் வித்ர் தொழக் கூடாது. உதாரணமாக, வித்ர் தொழுத ஒருவர் இரவில் விழிக்கின்றார். அவர் இரட்டைப்படையாக விரும்பிய அளவு தொழலாம். மீண்டும் வித்ர் தொழக் கூடாது. அப்படி வித்ர் தொழுதால் ஒரு இரவில் இரு வித்ர் தொழக் கூடாது என்ற ஹதீஸை மீற நேரிடும் என்பது இவர்களின் வாதமாகும்.
இந்த முடிவை எடுக்கும் போது உங்கள் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸ் மீறப்படுவதாகத் தென்படும். ஒருவர் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரைத்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரே நேரத்தில் இரவுத் தொழுகை தொழும் ஒருவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் நான்கு ரக்அத் தொழும் விதத்தில் தொழுவது கூடாது. இதே வேளை வித்ருக்குப் பின்னரும் தொழுவதற்கான சலுகை இருப்பதை நபியவர்கள் உணர்த்தியுள்ளார்கள். அந்த ஆதாரங்களை இக்கருத்துடைய உலமாக்கள் தமது நிலைப்பாட்டிற்குப் பலமான ஆதாரமாகக் கொள்கின்றனர்.
‘நபியவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். 8 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்துக்களை இருந்தவர்களாகத் தொழுவார்கள். ருகூஃ செய்ய விரும்பினால் எழுந்து ருகூஃ செய்வார்கள். அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்து தொழுவார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி ) நூல்: இப்னு குஸைமா:11102
நபியவர்கள் வித்ருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக இப்னு குஸைமா (1105), அபூ தாவூத்: 1340, 1351, இப்னுமாஜா: 1195, திர்மிதி: 471 என பல நூற்களிலும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன.
எனவே, வித்ர் தொழுதவர் மீண்டும் விழித்து தொழ நினைத்தால் இந்த சலுகையின் அடிப்படையில் மீண்டும் தொழலாம். அவர் அதன் பின்னர் வித்ர் தொழ வேண்டியதில்லை என்பதே வலுவான கருத்தாகத் திகழ்கின்றது.
                                                                                              (ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி)

இதையும் பார்க்க :- 
                         * மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்
                         * இஸ்லாம் சொல்லிற்கு அமைதி ,சாந்தி, சமாதானம்
                         * ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. ?
                         * வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)
                         * கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல... 

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget