மாதவிடாய் பெண்ணும், கணவனும்

                                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்களது கணவனோடு எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதனை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்துள்ளார்கள். அவற்றை இந்த கட்டுரையின் மூலம் கற்றுக் கொள்வோம்.

மாதவிடாய் பெண்ணும், கணவனும்
மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்
அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர். 
 
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர். முஸ்லிம் 507 
 
இஸ்லாம் மார்க்கத்தில் மாதவிடாய் பெண்களுடன் தாராளமாக ஒன்றாக இருந்து சாப்பிடலாம், தங்கலாம் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்” என ஹிஷாம் அறிவித்தார். புகாரி 296 
 
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 301 முஸ்லிம் 497, 499 
 
இந்த ஹதீஸ்கள் மூலம் மாதவிடாய்க் காலத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தெடர்ந்து வரும் ஹதீஸை கவனியுங்கள்  ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 297 முஸ்லிம் 506 
 
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 300  ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்துப் புசிப்பார்கள். முஸ்லிம் 505. 

 
கணவன் மனைவி சேர்ந்து குளித்தல் 
பொதுவாக கணவன் மனைவி தாராளமாக ஒன்றாக ஒரே நேரத்தில் சேர்ந்து குளிக்கலாம் . அதே நேரம் மாதவிடாய் காலங்களிலும் சேர்ந்து குளிப்பதற்கான ஆதாரத்தை அவதானியுங்கள்.
‘நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 299 
 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன். முஸ்லிம் 537 
 
மாதவிடாய் மனைவியுடன் சேர்ந்து உறங்குதல்
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்” என உம்முஸலமா(ரலி) அறிவித்தார். (புகாரி 298)

 
எனவே மேற் சொன்ன நபிகளாரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நமது மாதவிடாய் காலங்களை கழிப்போமாக. 
                                                                                        மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
 
இதையும் பார்க்க:-
 
                    * பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டத.
 
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget