நூற்றி இருபது நாளைக்கு முன் கருவை கலைக்க முடியுமா..?

                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இன்று கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன் இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற அடிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு அப்பால் சொந்த சிந்தனையின் அடிப்படையில் உடனுக்கு உடன் சில கேள்விகளுக்கு பதில் சொல்வதால் பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வரிசையின் பட்டியலில் online மூலமாகக் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு உடனே சொல்லப்பட்ட தவறான பதில்தான்நூற்றி இருபது நாளைக்கு முன் உண்டான கருவை தாராளமாக களைக்களாம் என்ற பதிலாகும். இந்த பதில் சரி தானா? அல்லது அவசரத்தில் பிழையாக சொல்லப் பட்டதா? என்பதை கவனிப்போம்.
20 நளைக்கு முன் களைக்கலாம் என்று ஏன் சொல்லப் பட்டது என்றால் 120 நாளை பிறகு தான் அந்த சிசுவுக்கு ரூஹ் ஊதப் படுகிறது. எனவே ரூஹ் ஊதப்படும் முன் அந்த கருவை களைக்கலாம் என்று பதில் கொடுக்கப்பட்டது. அவர் சொன்னால் தப்பாகாது, இவர் சொன்னால் தப்பாகாது, என்பது மார்க்கத்தின் அளவுகோல் கிடையாது. எவர் சொன்னாலும் குர்ஆனுக்கும், ஹதீஸீக்கும் மாற்றமாக இருந்தால், சொன்னவர் தனது விருப்பத்திற்கு உரியவராக இருந்தாலும் சரியான விஷயத்திற்கே கட்டுப்பட வேண்டும்.
கரு வளர்ச்சிப் பற்றி குர்ஆன் சொல்வதை அவதானிப்போம்.
…பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் விந்து துளியாக ஆக்கினோம். பின்னர் விந்து துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையை சதைத் துண்டாக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கினோம். பின்னர் எலும்புக்கு இறைச்சியை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக ஆக்கினோம் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். ( அல்குர்ஆன் 23 : 13, 14 )
மேற் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்கள் தாயின் வயிற்றில் கரு வளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எடுத்துரைக்கிறது. அதே போல ஹதீஸ்களையும் கவனித்தால் இன்னும் தெளிவாகப் புரிந்து விடலாம். “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர் ஒருவரைப் பொருப்பாளராக நியமிக்கிறான். அம்மலக்கு இறைவா! இது விந்து, இது பற்றித் தொங்கும் கரு, இறைவா! இது சதை பிண்டம், என்று கூறிக்கொண்டிருப்பார். அல்லாஹ் அதைப் படைத்து உயிர் தந்திட நாடும் போது, இறைவா இது ஒரு ஆணா? பெண்ணா? நற்பேறு பெற்றதா? நற்பேறு அற்றதா? இதன் வாழ்வாதாரம் எவ்வளவு? இதன் ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். இது தாயின் வயிற்றில் இருக்கும் போதே பதியப்படுகிறது. ( புகாரி 3333, முஸ்லிம் 5149 )

மேலும் ஒவ்வொரு நாற்பதாவது நாளில் கட்டம், கட்டமாக மாறுகிறது என்பதையும், முதல் நாற்பதாவது நாளில் ஒரு மலக்கு நியமிக்கப்படுகிறார் என்பதையும், பின் வரும் ஹதீஸ் இலக்கங்களோடு கண்டு கொள்ளலாம். ( முஸ்லிம் 5146, 5148 )
அதே நேரம் முஸ்லிம் 5147 ம் இலக்க ஹதீஸில் 42 ம் நாளில் வானவர் நியமிக்கப்படுவதாக பதியப்பட்டுள்ளது. கருவின் ஆரம்பத்திலே மலக்கு நியமிக்கப்பட்டு அந்த கரு பாதுகாக்கப்படுகிறது என்றால் கரு வளர்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அழிக்கப்பட முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும். அடுத்தது “அஸல் பற்றிய ஹதீஸை கவனித்தால் கரு களைப்பு எவ்வளவு பெரிய பாவம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
“அஸல் என்றால் கணவன், மனைவி ஒன்று சேரும் போது ஆண் தனது இந்திரியத்தை மனைவியின் கருப்பையில் செலுத்தாமல் விந்தை வெளியேற்றுவதாகும். நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் அஸல் செய்யும் பழக்கம் இருந்தது. இது தனது அடிமைகளோடு சேரும் போது ஸஹாபாக்கள் செய்து வந்தனர். இது கூடாது என்று அல்லாஹ்வோ, நபியவர்களோ தடுக்கவில்லை. ஹதீஸ்களை சுருக்கமாக இலக்கத்தோடு தருகிறோம்.

அஸல் செய்ய விரும்பினோம். ( முஸ்லிம் 2834 )
குர்ஆன் அருளப்படும் போது அஸல் செய்தோம். ( முஸ்லிம் 2845,புகாரி 5208)
அஸல் செய்வது மறைமுகமான சிசுக்கொலையாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 2850 )

மேற்சுட்டிக் காட்டிய ஹதீஸ்களில் அஸல் செய்ய அனுமதி இருந்தாலும், இறைவன் நாடியது நடக்கும் என்பதை நினைவுப் படுத்துவதோடு, அதுவும் ஒரு வகையான கொலைதான் என்பதையும், எச்சரிக்கின்றன.
இந்திரியத்தை கருப்பையில் விடாமல் வெளியே விடுவதற்கே இந்த எச்சரிக்கை என்றால், சினைமுட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்ந்தப்பின் அதை களைப்பது என்பது எவ்வளவு பெரிய பாவமாகும் என்பதை நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்? 120 நாளைக்கு முன் என்பது சிசு உருவாகி விட்டது. அப்படியானால் சிசுவை அழிக்க முடிமா? அது மட்டுமல்ல இந்திரியத் துளியும், சினைமுட்டையும், கர்ப்ப பைக்குள் நீந்திக் கொண்டு தான் கரு கட்டுகிறது ! அப்படியானால் ஏதோ ஒரு விதத்தில் ஆரம்பத்திலிருந்தே அது வளர்வதற்கான உயிர் இருக்கிறது என்பதையும் அதன் வளர்ச்சி கட்டங்கள் மூலம் காணலாம். மேலும் உலக ரீதியில் கருகளைப்பை எடுத்துக் கொண்டால் எந்த வைத்தியர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
அரசாங்கத்துடைய பார்வையில் கருக்களைப்பு பாரிய குற்றமாகும். திருட்டுத்தனமாக சிலர் அதை தொழிலாக செய்தாலும் அது சட்ட விரோதமாகும். சம்பந்தப்பட்டவர்கள் சிக்கினால் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்படும். திருட்டுதனமாக செய்யும் இவர்கள் கூட கரு வளர்ச்சி அடைந்து விட்டால் கை வைக்க பயப்படுவார்கள். ஏன் என்றால் சட்ட விரோத கரு களைப்பாளர்களும் இந்திரியமும், சினைமுட்டையும் ஒன்று சேர்ந்த ஆரம்ப பருவத்தில் வேண்டுமானால் கை வைப்பார்கள் கட்டங்களை தாண்டி விட்டால், சில நேரம் தாயின் உயிருக்கே ஆபத்து வந்து விடும்.
மேலும் “உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைகளிடம் நீங்கள் எதற்காக புதைக்கப் பட்டீர்கள் என வினவப்படும்? ( 81 : 08 )
அன்றைய ஜாஹிலியாக்காலத்தில் பெண் குழந்தைகளை வறுமைக்கு பயந்து உயிருடன் புதைத்து வந்தனர். ஆனால் இன்று கருவுற்றவுடன் களைப்பதன் மூலம் கொலையை செய்கிறார்கள். எனவே குர்ஆன், மற்றும் ஹதீஸின் மூலமும் கருக்களைப்பு கூடாது, உலக நடைமுறையிலும் தடை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
                                                                                                         மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
இதையும் பார்க்க:-
                    * ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள்
                    * தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு 
                    * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்… 
                    * இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்
                   * பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.?
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget