தலைப்பிறை ஓர் பார்வை

தூயவழி இணையதளம் :- இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் சந்திரன் தோன்றுவதை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும். ஏனைய மாதங்களைப் போன்று இஸ்லாத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட நாட்கள் இல்லை. இதனால் தான் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை பார்க்க வேண்டிய தேவைப்பாடு முஸ்லிம்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது
 
இவ்வாறாக தலைப்பிறையிலும் மாதநாட்களை கணக்கிடுவதிலும் நபியவர்களின் மரணத்திற்குப்பின்னர் இன்றுவரை அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் தொண்டுதொட்டு நிலவி வருகின்றது.


இக்கருத்து வேறுபாடுகள் மக்களைக் குழப்புவதற்காக சில தனிநபர்களால் சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என சிலர் கருதி மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து வருவதை அறிவோம். இது அவர்களின் தவறான எண்ணமாகும். 
 
குறிப்பாக றமழான் மாதத்தின் தலைப்பிறையிலும் பெருநாள் தினங்களை இனங்காண்பதிலும் இக்கருத்து வேறுபாடுகள் மக்களுக்கு மத்தியில் விஷ்வரூபமெடுத்து பரவலாக அழுத்திப் பேசப்படுகின்றது. எனவே றமழான் மாதத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் தலைப்பிறையில் தோன்றிய கருத்து வேறுபாடுகளையும் அவற்றுள் இஸ்லாமிய ஷரீயாவிற்குட்பட்ட சரியான நிலைப்பாட்டையும் ஆதாரங்களுடன் இவ்வாக்கத்தில் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.


தலைப்பிறையில் உள்ள கருத்து வேறுபாடுகள் 
சர்வதேசப்பிறை : உலகில் எங்கோ ஒரு மூலையில் தலைப்பிறை தென்பட்டதாக செய்தி எங்களுக்கு கிடைக்கப்பெற்றால் ஷஃபான் 29ஐ முடித்தவர்கள் றமழான் மாதம் ஆரம்பித்து விட்டது எனக்கருதி அடுத்தநாள் நோன்பு நோற்றல்.
 
தேசியப்பிறை : அவரவர் வசிக்கும் நாட்டின் எல்லைக்கோட்டிற்குட்பட்ட பிரதேசங்களில் தலைப்பிறை தென்பட்டதாக செய்தி எங்களுக்கு கிடைக்கப்பெற்றால் ஷஃபான் 29ஐ முடித்தவர்கள் றமழான் மாதம் ஆரம்பித்து விட்டது எனக்கருதி அடுத்தநாள் நோன்பு நோற்றல் நாட்டின் எல்லைக்கு அப்பால் மிகக்குறுகிய தூரத்தில் உள்ள இடத்தில் தலைப்பிறை தென்பட்டாலும் அதை ஏற்பது நபிவழிக்கு மாற்றமானதாகும். 
 
பிராந்தியப்பிறை : அவரவரின் பிரதேசத்தில் அல்லது ஊரில் தலைப்பிறை தென்பட்டதாக செய்தி கிடைக்கப்பெற்றால் அடுத்தநாள் நோன்கு நோற்றல்.
 
மாதக்கணிப்பீட்டில் நபி (ஸல்) அவர்களின் கட்டளை : மாதத்தின் 29 நாளில் தலைப்பிறை தென்பட்டுவிட்டதா என அவதானித்து தென்பட்டுவிட்டால் நடப்புமாதம் முடிந்து, அடுத்தமாதம் ஆரம்பித்துவிட்டது எனக்கருதி அடுத்தநாள் நோன்பு வைக்க வேண்டும் என்பதுவே நபிகளார் உம்மத்துக்கு இட்ட கட்டளையாகும்.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்  பிறையைக் கண்டால் நோன்பு வையுங்கள், பிறையைக் கண்டால் நேன்பை விடுங்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை பூர்த்தி செய்யுங்கள். மேலும் மாதம் என்பது 29 இரவுகளாகும். எனவே பிறையை காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். உங்கள் மீது மறைக்கப்பட்டால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்.

 
ஒவ்வொருவரும் பிறை பார்ப்பது அவசியமா? 
பிறை பார்ப்பதென்பது நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை கணக்கிடும் அளவீடே தவிர ஒரு வணக்கவழிபாடு அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு ஒவ்வொரு தனிநபரும் தன் கண்களால் பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என நபிகளார் கட்டளையிடவில்லை. ஆயினும் சாட்சியாளர்களின் சாட்சியை ஏற்றுக்கொண்டார்கள் என பின்வரும் நபிமொழி சுட்டிக்காட்டுகின்றது.
 
இப்னு உமர் றழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''மக்கள் பிறையை தேடிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளை நான் பிறையைப் பார்த்தேன் என நான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடத்தில் அறிவித்தேன். அப்போது அவரும் நோன்பு நோற்று மக்களும் நோன்பு வைக்குமாறு ஏவினார்கள்'' (அபூதாவுது)
இஸ்லாத்தில் சாட்சியாளர்களின் சாட்சியை வைத்து பல மார்க்கச்சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைப் போன்று தலைப்பிறை விடயத்தில் முஸ்லிம்களில் யாராவது ஒரு நம்பகமானவர் தலைப்பிறையை பார்த்ததாக அறிவிப்பு செய்தால் அதை ஏனைய முஸ்லிம்கள் ஏற்று நோன்பு நோற்க வேண்டும்.
 
தலைப்பிறை செல்லுபடியாகும் எல்லைக்கோடு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறைக்கு தேசிய ரீதியாகவோ பிராந்திய ரீதியாகவோ எந்தவொரு நில அளவீட்டையும் இடவில்லை. மாறாக மாதநாட்களின் ஆகக் குறைந்த எண்ணிக்கை 29 நாட்கள் என்றும் 29 நாட்களை முடித்தவர்கள் பிறை கண்டால் நோன்பு நோற்பதும் இல்லையேல் 30 நாட்களாக பூர்த்தி செய்வதும் தான் நிபிகளார் வகுத்த அளவீடாகும்.  இதே வேளை உலகம் உருண்டை வடிவம் என்பதால் முழு உலகின் அனைத்த பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் 29 நாட்களை முடிப்பதும் சாத்தியமற்ற விடயமாகும். இந்த அசாத்தியமான நிலைமைக்கேற்ப தலைப்பிறையில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வரும் சம்பவம் உணர்த்துகின்றது.
அன்ஸாரிகளிலிருந்து என் சாச்சாமார்கள் தனக்கு அறிவித்ததாக அபூ உமைர் அறிவிக்கின்றார்கள்.
''எங்களுக்கு ஸவ்வாலின் தலைப்பிறை (றமழான் பிறை 29யில்) மறைக்கப்பட்டது எனவே நாங்கள் நோன்பாளிகளாக காலையடைந்தோம் (அந்த நாள்) பகலின் இறுதி நேரத்தில் ஒரு பிரயாணக்கூட்டம் வந்து, அவர்கள் நேற்று தலைப்பிறையை கண்டதாக சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபியவர்கள் மக்களுக்கு நோன்பை விடுமாறும் நாளை தொழும்திடலுக்கு வருமாறும் கட்டளையிட்டார்கள். (முஸன்னப்)
 
இந்த சம்பவத்தில் இந்தப்பிரயாணக்கூட்டம் பிறைபார்த்த இடத்திலிருந்த சுமார் 22 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து மதீனாவை அடைந்திருக்கின்றார்கள். என்றாலும் நபியவர்கள் அந்தப் பிரயாணக்கூட்டத்தின் நாட்டையோ அல்லது ஊரையோ பற்றி அவர்களிடத்தில் விசாரிக்கவில்லை. பிறை தென்பட்டதாக அவர்கள் சாட்சி பகர்ந்தபோது அதை ஏற்று நடைமுறைப்படுத்தினார்கள்.  ஆக உலகில் எங்கோ ஒரு மூலையில் பிறை பார்த்ததாக செய்தி 29 நாட்களை முடித்துவிட்டவர்களை எட்டினால் அடுத்தநாள் பெருநாள் கொண்டாடுவது தான் இஸ்லாம் வகுத்த வறையறையாகும்.
எனவே நாட்டின் எல்லைக் கோட்டை அல்லது பிரதேச எல்லைக் கோட்டையோ பிறைக்கு எல்லைக்கோடாக ஆக்கி 29 நாட்களை முடித்திருந்தாலும் நாங்கள் எங்களின் நாட்டின் எல்லைக்கு அப்பால் பிறை தென்பட்டதால் நாங்கள் எடுக்கமாட்டோம் என்று வாதிடுவது அறிவுபூர்வமற்ற வாதமாகும்.
 
ஏனெனில் முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரையில் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு நாடும் ஒரு ஜனாதிபதியுமாகும். நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்வந்த ஆட்சியாளர்களும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவர்களாக (ஜனாதிபதிகளாக) இருந்தார்கள். இன்று அன்னியர்களின் ஆதிக்கத்தினால் முஸ்லிம்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு ஆங்காங்கே பல நாட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
 
தவறான முடிவுகள் மன்னாரிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்தியாவின் ராமேஸ்புரத்தில் தென்பட்ட பிறையை மன்னாரில் வாழக்கூடியவர்கள் எடுக்கமுடியாது என்றும் அதே மன்னாரில் பார்த்த தலைப்பிறையை மன்னாரிலிருந்த சுமார் 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அக்கரைப்பற்றில் உள்ளவர்கள் எடுக்கலாம் என்றும் தேசியப்பிறைவாதிகள் வாதம் முன்வைப்பது வியப்புக்குரியதாகும். சிலவேளை ஒரு நாட்டிற்குள் 2 நாட்கள் பெருநாள் கொண்டாட வேண்டிய நிலையும் உலக அமைப்பின் படி ஏற்படலாம்.
 
உதாரணமாக ரஷ்யாவின் யீஸ்ட்கேப் என்ற நகரத்தில் மாலை 6.30 க்கு பிறை தென்படுமாயின் அப்போது ரஷ்யாவின் மறு எல்லையில் உள்ள பிஸ்கோவ் நகரத்தில் காலை 5.30 ஆக இருந்துகொண்டிருக்கும். இங்கு யீஸ்ட்கேப் நகரத்தில் உள்ளவர்கள் பிறை 29 ஐ பூர்த்திசெய்திருக்கும் அதேவேளை மற்ற நகரத்திற்குரியவர்கள் அப்போதுதான் 29ஆம் நோன்பை நோற்றுக் கொண்டு அதிகாலையை அடைந்திருப்பார்கள். இவர்களின் வாதப்படி நாட்டின் எல்லைக்குள் பிறை தென்பட்டால் அந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் அப்பிறையை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் இங்கே ஒரு நகரத்திற்குரியவர்கள் நோன்பு 29 தோடு பெருநாளையும் மற்ற நகரத்திற்குரியவர்கள் நோன்பு 28 முடிந்த கையோடு பெருநாளையும் கொண்டாட வேண்டிய துரதிஸ்ட நிலை ஏற்படும்.
 
ஆக தலைப்பிறை பார்த்த அதே மாத்திரத்தில் உலகின் அனைத்து மூல முடுக்குகளிலும் உள்ளவர்கள் அறியமுடிகின்ற நவீன தொழிநுட்ப வசதி இருக்கும் இக்காலகட்டத்தில் யாரெல்லாம் நோன்பு 29 யை பூர்த்தி செய்கின்றார்களோ அல்லது யாரெல்லாம் 29 ஆம் நோன்பை பூர்த்தி செய்யும் தருவாயில் இருக்கின்றார்களோ அவர்களை தலைப்பிறை பார்த்த செய்தி எட்டினால் அவர்கள் அடுத்த நாள் பெருநாள் கொண்டாட வேண்டும். இதேவேளை றமழான் மாத தலைப்பிறை கண்ட செய்தியை அறியாததினால் ஒருவர் நோன்பு நோற்காமல் காலையடைகின்றார் எனில் அவர் அந்த செய்தி அடைந்த நேரத்திலிருந்து நோன்பை தொடர்வார். இதனை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
ஸலமத் இப்னு அக்வஃ றழி அறிவிக்கின்றார்கள் : ''நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு (பின்வருமாறு) அறிவிப்புச் செய்யுமாறு ஒரு மனிதரை ஏவினார்கள். யார் சாப்பிட்டவராக இருக்கின்றாரோ அவர் அவரின் எஞ்சிய நாளின் எஞ்சிய நேரத்தில் நோன்பு நோற்கட்டும் யார் சாப்பிடவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் (தொடரட்டும்) அந்த நாள் ஆஷூரா தினமாக இருந்தது.'' (ஸஹீஹூல் புகாரி)
இந்த நபி மொழியில் நோன்பின் தினத்தன்று நோன்பின் செய்தியைப் பெற்றுக் கொள்பவர் அடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கையை நபி (ஸல்) தெளிவுபடுத்தினார்கள். அதாவது அந்நாளில் உணவு உட்கொண்டவர் எஞ்சிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நோன்பு நோற்பதும், உணவு உட்கொள்ளாதவர்கள் தொடர்ச்சியாக அந்நிலையை (சாப்பிடாமல் இருப்பது) தொடர்வதுமாகும்.
 
குரைப் றழியின் ஹதீஸில் ஏற்பட்ட குழப்பமும் தெளிவும்
குரைப் றழி அவரகள் கூறியதாவது : உம்முல் பள்ல் பின்த் அல்ஹாரித் அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை சிரியா நாட்டிலிருந்த முஆவியா றழி அவர்களிடம் அனுப்பினார்கள். நான் சிரியா சென்று அவருடைய தேவையை நிறைவேற்றினேன். நான் சிரியாவில் இருந்த போது ரமழான் பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் பிறையை கண்டேன். பின்னர் அந்த றமழான் மாதத்தின் இருதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழி அவர்கள் என்னை (பற்றி) விசாரித்தார்கள். பின்னர் பிறையை நினைவு கூர்ந்தார்கள். நான் வெள்ளிக்கிழமை இரவு கண்டோம் என்றேன். அப்போது நீர் அதைக் கண்டாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம், மக்களும் அதைக் கண்டு நோன்பு நோற்றார்கள். இன்னும் முஆவியா றழி அவர்களும் நோன்பு நோற்றார்கள் என்றேன். (அதற்கு) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் என்றாலும் நாங்கள் சனிக்கிழமை இரவு பிறையை கண்டோம். எனவே நாங்கள் (பிறையை) 30 ஆக பூர்த்தியாக்கும் வரை அல்லது நாங்கள் பிறையை (29ஆம் நாளில்) காணும் வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம் என்றார்கள். அப்போது நான் முஆவியா றழி (தலைப்) பிறை கண்டு நோன்பு நோற்றதை நீங்கள் போதுமாக்கிக் கொள்ளமாட்டீர்களா? எனக் கேட்டேன். அவர்க இல்லை இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ஏவினார்கள் என்றார். இதில் பல விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 
முதலாவது சட்டமெடுப்பதில் உள்ள முக்கிய விதி
ஒரு ஸஹாபியின் கூற்று நபிகளாரின் விளக்கத்திற்கு முரண்பட்டால் அக்கருத்து ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது.  இந்த நபிமொழியில் ''எனவே நாங்கள் (பிறையை) 30 ஆக பூர்த்தியாக்கும் வரை அல்லது நாங்கள் பிறையை காணும் வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்.'' என்ற இப்னு அப்பாஸ் றழி கூறியது அவரின் சொந்த விளக்கமாகும். அதனை பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள் அது உங்களுக்கு மறைந்திருந்தால் 30 ஆக முழுமைப்படுத்துங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸிலிருந்து அவர்கள் நாம் நம் பகுதியில் இருந்து பார்க்க வேண்டும் என விளங்கிக் கொண்டார்கள். அதனால்தான் இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏவினார்கள்'' என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பிரயாணக் கூட்டத்தார் பிறைபார்த்த செய்தியில் நபி (ஸல்) அவரகள் தன் பிரதேசத்திற்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் கண்ட பிறையை எடுப்பதைப் பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கூற்று இருப்பதால் அவர் கருத்து ஏற்கப்படமாட்டாது. அவர் நபிகளாரின் ஏவலை நபிகளார் விளங்கப்படுத்தியதற்கு மாற்றமாக தவறாகப் புரிந்து கொண்டார் என்றே கருதப்படும்.
 
இரண்டாவது : 
இந்த ஹதீஸ் ஒர முக்கிய ஆதாரமாக தேசியப்பிறைவாதிகளின் தரப்பிலிருந்து உள்ளூர் பிறைவாதிகளின் தரப்பிலிருந்த முன்வைக்கப்படுகின்றது. இங்கு ஒருநாள் முன்னர் முஆவியா றழி (அன்றைய ஜனாதிபதி) தலைப்பிறை கண்டுவிட்டார்கள் என்ற செய்தி இப்னு அப்பாஸ் றழி அவர்களுக்கு தெரிய வந்தபோதிலும் அதை இப்னு அப்பாஸ் றழி அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக நாங்கள் ஸவ்வால் மாதத்தின் தலைப்பிறையை எங்களின் 29ஆம் நோன்பில் (இவ்வேளை முஆவியா றழிக்கு 30ஆம் நாளாக இருக்கும்) பார்க்கும் வரை அல்லது நாங்கள் றமழான் மாதத்தை 30 நோன்புகளாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு நோற்போம், சிரியாவில் பார்க்கப்பட்ட பிறையை நாங்கள் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்ற சாயலில் இப்னு அப்பாஸ் றழி அவர்கள் பேசுகின்றார்.
 
இந்த இவரின் நடைமுறையை வெளிநாடுகளில் பார்க்கப்படும் பிறையை எடுக்கக்கூடாது என்பதற்கு சான்றாக தேசியப்பிறைவாதிகள் முன்வைக்கின்றனர். உண்மையிலலேயே இதில் நாட்டுக்கோர் பிறைக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் குரைப் றழியும் இப்னு அப்பாஸ் றழியும் முஆவியா றழியின் (ஜனாதிபதி) ஆட்சியின் கீழ் இருந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எல்லோரும் ஒரு நாட்டுக்குரியவர்களாகும். அன்று மதீனாவிற்கு ஒரு ஜனாதிபதியும் சிரியாவிற்கு ஒரு ஜனாதிபதியும் இருக்கவில்லை. எனவே இவர்களின் வாதப்படி முஆவியா (ஜனாதிபதி) றழியின் பிறையை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழி எடுத்திருக்க வேண்டும். ஆனாலும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அதை நிராகரிக்கின்றார் எனவே இந்த ஹதீஸை தேசியப்பிறை வாதிகள் ஆதாரமாக ஒரு போதும் கொள்ள முடியாது.
மூன்றாவது :
இவ்வாறே இந்தக்கூற்றை உள்ளூர் பிறைவாதிகள் (பிராந்தியப் பிறை வாதிகள்) தங்களின் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.  அதுவும் நான் மேலே குறிப்பிட்ட மாதிரி தவறான விளக்கமாகும். அதாவது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் பிறையை பார்த்து நோன்பு பிடியுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள் அது உங்களுக்கு மறைந்திருந்தால் 30 ஆக முழுமைப்படுத்துங்கள் என்ற மேலே குறிப்பிடப்பட்ட நபிமொழியிலிருந்து அவர்கள் விளங்கிக் கொண்டதாகும்.
அதனால் நபிகளாரின் விளக்கத்திற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் (றழி) விளங்கிக் கொண்டதை ஆதாரமாக கொள்ளப்படமாட்டாது. இதை சட்டக்கலை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒரு வாதத்திற்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்களின் விளக்கத்தை எடுப்பதாக இருந்தால் பின்வருமாறு பிரயாணக் கூட்ட ஹதீஸிற்கும் முரண்படாமல் விளங்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.  ஒரு இடத்தில் தலைப்பிறையை பார்த்த செய்தியை கண்ட மாத்திரத்திலோ அல்லது அதை அடுத்த நாளிலோ அனைத்து இடங்களுக்கும் பறிமாறக்கூடிய தொழிநுட்ப வசதி இல்லாத காலமாக அவர்காலம் இருந்தது.
மதீனாவிலிருந்து ஆயிரம் கிலோமீற்றரிற்கு அப்பால் உள்ள சிரியாவில் பார்த்த பிறையை மதீனா மக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டுமானால் பல நாள் பிரயாணம் செய்து சிரியாவிலிருந்து மதீனா வர வேண்டும். மஃரிபுடைய நேரத்தில் பார்த்த பிறையை அதே நாளையிலோ அல்லது அடுத்த நாள் காலை அல்லது மாலையோ அறிவித்து அதனடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியுமான தூரத்தில் மதீனா மக்களும் இருக்கவில்லை. அது எப்படியும் சாத்தியமற்றதாகும். எனவே சக்திக்கு அப்பால் அவர்கள் சிரமப்படுத்தப்படவும் மாட்டார்கள். அதற்கேற்ப அவர்களின் பிறையை சக்திக்குட்பட்ட அளவில் அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள்.
 
இதே நிலையிலே ஒரு காலத்தில் அனைத்து தொழிநுட்ப வசதிகளும் அழிந்து தொடர்பாடல் வசதிகள் துண்டிக்கப்பட்டால் நாங்களும் இப்னு அப்பாஸ் றழி கருத்தையே எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாங்கள் அவரவர் பிரதேசத்தில் பிறை பார்த்து, நோன்பு நோற்று பெருநாள் கொண்டாட வேண்டி வரலாம். அதாவது ஒரு இலங்கைக்குள்ளேயே மூன்று நாள் நோன்பின் ஆரம்பமாகவும் பெருநாளாகவும் அமைத்து விடலாம்.
 
இதே வேளை தற்காலத்தைப் போன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் பிறைகண்ட செய்தியை அறியமுடியுமாக இருந்தால் அதை ஏற்று நடைமுறைப்படுத்தியதாக வேண்டும். இந்த நடைமுறையைத்தான் நபி ஸல் அவர்கள் பிரயாணக் கூட்ட ஹதீஸில் கையாண்டிருக்கின்றார்கள். நபியவர்களின் 29 ஆம் நோன்பை நோற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தலைப்பிறை பார்த்த செய்தி கிடைத்த போது நோன்பை விட்டார்கள். பெருநாள் தொழுகை நேரம் கடந்து விட்டதால் அடுத்த நாள் தொழுமாறு ஏவினார்கள்.
 
ஆக எங்களுக்கு பிறைச்செய்தி கிடைக்கும் சாத்தியக்கூற்றை வைத்து நாங்கள் எங்களின் பிரதான நபிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே ஒரு இடத்தில் தலைப்பிறை தென்பட்டால் அத்தலைப்பிறையை மையமாக முழு உலகத்தில் 29 நாட்களை முடித்துவிட்டவர்களாக உள்ளவர்கள் தாங்கள் மாதத்தை அப்போதிருந்தே ஆரம்பித்துக் கொள்வார்கள். 29ம் நாளில் உள்ளவர்கள் நபி வழியில் மாதத்தின் அடிப்படை 29 ஆக உள்ளதால் 29 ஐ முடித்து விட்டு அடுத்த மாதத்தை தொடங்குவார்கள். ஏனெனில் பூமி உருண்டை வடிவில் அமையப் பெற்றதால் காலை மாலை நேரத்தை எல்லோரும் ஒரே நேரத்தில் அடையமாட்டார்கள். இது உலகில் அல்லாஹ்வின் நியதியாக உள்ளதால் நபி வழிக்கும் முரண்படாமலும் மனோ இச்சையை மார்க்கமாக்காமலும் மாதத்தை தொடங்கிக் கொள்வார்கள்.
அல்லாஹ் உண்மையை விளங்கி நடக்க எங்கள் அனைவருக்கும் அருள்புரிவாயாக.
                                                                                                        - மௌலவியா ஹனீனா (ஸரயிய்யா)

 இதையும் பார்க்க:-
                   * ஒரே சமுதாயம் – ஒரே பிறை
                   * சர்வதேசப்பிறை ஓர் அறிமுகப்பார்வை
                   * சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்...                   

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget