வாந்தி எடுத்தால் வுழு நீங்குமா..?

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் உள்ளன.வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் தமது கருத்துக்கு ஆதரவாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
 
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள். உளூச் செய்தார்கள்'' என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், "அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்கள்: திர்மிதி 80, அபூதாவூத் 2033, அஹ்மத் 26261

வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று முடிவு செய்வதற்கு, இது ஆதாரமாக ஆகாது.
 
வாந்தி எடுத்தால் உளூச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் அதிலிருந்து இவ்வாறு சட்டம் வகுக்கலாம். அப்படி எந்தக் கட்டளையும் இந்த ஹதீஸில் இல்லை. வாந்தி எடுத்தால் உளூச் செய்வது விரும்பத்தக்கது என்று தான் இதிலிருந்து சட்டம் வகுக்க முடியும்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறாமல் ஒரு சுவற்றின் அருகே சென்று தயம்மும் செய்து விட்டுப் பதில் கூறினார்கள் என்று புகாரி 337வது ஹதீஸ் கூறுகின்றது. இதிலிருந்து ஸலாமுக்குப் பதில் கூறுவதற்கு உளூவோ, தயம்முமோ அவசியம் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
 
"யாருக்காவது சிறிய அளவிலான வாந்தியோ, அதிகமான வாந்தியோ ஏற்பட்டால் அல்லது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டினால் அல்லது மதீ வெளியானால் தொழுகையை விட்டு விட்டு உளூச் செய்து விட்டுத் தொழுகையை விட்ட இடத்திலிருந்து தொடரட்டும். இடையில் யாரிடமும் பேச வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா 1121
 
இதை இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பார் இப்னு ஜுரைஜ் வழியாக அறிவிக்கின்றார். இவர் நம்பகமானவர் தான். இவர் செவியுறும் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வார்.
*ஹிஜாஸ் வாசிகள் வழியாகக் கிடைத்தவை.
*இராக் வாசிகள் வழியாகக் கிடைத்தவை.
*சிரியா வாசிகள் வழியாகக் கிடைத்தவை என்று தலைப்பிட்டு பதிவு செய்து கொள்வார்.
 
இதில் ஹிஜாஸ் வாசிகள் வழியாகக் கிடைத்த ஹதீஸ் ஏடு அவரிடமிருந்து தொலைந்து விட்டது. எனவே தனது நினைவாற்றல் மூலம் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். எனவே இவர் ஹிஜாஸ் வாசிகள் வழியாக அறிவித்தால் அந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் கூறியதாகத் தான் இவர் அறிவித்துள்ளார். இப்னு ஜுரைஜ் ஹிஜாஸ் வாசியாவார். எனவே பலவீனமான இந்த ஹதீஸின் அடிப்படையில் வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் என்று கூற முடியாது.
 
தாரகுத்னீயிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதைப் பதிவு செய்த தாரகுத்னீ அவர்கள், "அப்பாத் பின் கஸீர், அதா பின் அஜ்லான் ஆகிய இருவர் வழியாக இது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இருவருமே பலவீனமானவர்கள்'' என்று குறிப்பிடுகின்றார்கள். (நூல்: தாரகுத்னீ, பாகம்:1, பக்கம் 154)
 
இதை சுலைமான் பின் அர்கம் என்பாரும் அறிவித்துள்ளார். இவரும் ஏற்கத்தக்கவர் அல்லர் என்று அதே பக்கத்தில் தாரகுத்னீ குறிப்பிடுகின்றார்கள். வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இமாம் நவவீ கூறுகின்றார்.
 
                                                 ஆய்வு:- மௌலவி அன்சார் (தப்லீகி)
 
இதையும் பார்க்க:-
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget