முத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

 தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

முஸ்லிம்களில் சிலரின் தவறான இந்த நடத்தையால் பெண் இனத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்தலாக் சட்டத்தையே மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பெண்ணினத்தின் மீதான கொடுமையாகப் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறுகின்றார். இத்தா காலத்திற்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் சேர்ந்த வாழலாம். தவணை முடிந்துவிட்டால் அவர்களிடையே கணவன்-மனைவி உறவு முறிந்து விடுகின்றது. அவர்கள் மீண்டும் மீதியுள்ள இரண்டு தலாக்கையும் கூறி முற்றாகப் பிரிய வேண்டும் என்பதற்கில்லை.

சில ‘காழி’கள் அவர்களை மீண்டும் மீண்டும் வரவழைத்து முத்தலாக்கையும் கூற வைத்து முழுமையாகப் பிரித்துவிடுகின்றனர். அவர்கள் விரும்பினால் மீண்டும் புதிய திருமணத்தின் மூலம் சேர்ந்து வாழ இருக்கும் வழியை அடைத்துவிடுகின்றனர். பெரும்பாலும் இந்தத் தவறு நடக்கின்றது. இதனால் முத்தலாக் கூறப்பட்ட பல தம்பதிகள் தவறான முறையில் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகின்றது. அப்படி இல்லாத போது தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு புதிதாக ஒரு திருமணத்தை செய்வித்து அந்தப் புதிய மாப்பிள்ளை அவளைத் தலாக்விட்டு அதன் பின் முன்னைய கணவனை மணக்கும் நடைமுறையும் சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. முன்னைய கணவருக்கு முத்தலாக் விடப்பட்ட மனைவியை ஹலால் ஆக்குவதற்காக போலியாக திருமணம் முடித்து தலாக் சொல்லும் இப்பழக்கத்தை இஸ்லாம் தடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.]

முத்தலாக் என்றால் என்ன..?

‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் அவர்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேணமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றார் களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.’ (அல்குர்ஆன் 2:229)

ஆரம்ப கால கட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை எத்தனை முறை வேண்டுமானாலும் விவாகரத்துச் செய்யலாம். அவள் கணவனுக்காகக் காத்திருக்கும் (இத்தா) காலகட்டத்திற்குள் மீண்டும் அவளை மீட்டிக் கொள்ளலாம் என்ற நிலைதான் இருந்தது. இதனால் பெண்ணினம் வஞ்சிக்கப்படும் நிலை நீடித்து வந்தது. மனைவியைப் பழிவாங்க நினைக்கும் வக்கிர புத்தி கொண்ட ஆண்களில் சிலர் இதை வைத்து அவளை வஞ்சித்து வந்தனர், மனைவியைத் தலாக் சொல்வர். இத்தலாக் காலம் முடியும் தருவாயில் அவளை மீட்டிக் கொள்வர். பின்னர் மீண்டும் தலாக் சொல்வர். இப்படி மனைவியை வாழாவெட்டியாக வாட்டி வதைத்தனர். ஒரு நபித்தோழர் மனைவியிடம், ‘உன்னை நான் தலாக் விட்டுப் பிரிந்து வாழவும் விடமாட்டேன் சேர்த்து உன்னுடன் சேர்ந்து வாழவும் மாட்டேன். உன்னை தலாக் சொல்வேன் பின்னர் மீட்டிக் கொள்வேன். பின்னர் தலாக் சொல்வேன்...

இப்படி காலம் பூராக உன்னை இல்லறத்தை விட்டும் ஒதுக்கி வைப்பேன் என்று கூறிய போது அப்பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது குறித்து முறையிட்டாள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. மீட்டிக்கொள்ளும் தலாக் என்பது இரண்டு முறைதான் என்று இந்த வசனம் கூறி இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டியது. மூன்றாவது முறை தலாக் சொன்னால் அந்தப் பெண்ணை மீட்டிக் கொள்ள முடியாது. மீண்டும் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் அந்தப் பெண் வேறு ஒருவரை மணமுடித்து அவர்கள் இயல்பாகப் பிரிந்து அதன் பின் புதிதாக திருமணம் செய்ய வேண்டும் என்று கடுமையான சட்டம் போடப்பட்டது. இதன் மூலம் விவாகரத்தின் பேரில் பெண்ணினம் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது.

தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது என்பது இந்த வசனத்தையும் அது அருளப்பட்ட காரணத்தையும் வைத்து நோக்கும் போது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. இப்படி இருக்க, ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் கூட உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும். முஸ்லிம்களில் சிலரின் தவறான இந்த நடத்தையால் பெண் இனத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்தலாக் சட்டத்தையே மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பெண்ணினத்தின் மீதான கொடுமையாகப் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.

எனவே, முதலில் தலாக், தலாக், தலாக் என்று ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினால் அது முத்தலாக் என்ற மார்க்க முரணான நிலைப்பாட்டிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும். அத்துடன் இந்தச் சட்டத்தில் உள்ள நியாயத்தை மாற்று மதத்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய கட்டாயமும் எமக்குண்டு. முதலாம், இரண்டாம் தலாக் கூறி இத்தா காலம் முடிந்துவிட்டால் அதன் பின் அவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்கலாகாது.

‘நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக்கூடிய) விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் இத்தா காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மண முடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக்கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்ளூ நீங்களோ அறியமாட்டீர்கள்.’ (அல்குர்ஆன் 2:232)

ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறிவிட்டார். அவளது இத்தா காலமும் முடிந்துவிட்டது. அதன் பின்னர் அந்தக் கணவன் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றார். அந்தப் பெண்ணும் இதற்கு சம்மதிக்கின்றாள். இந்த சந்தர்ப்பத்தில் குடும்பத்தினர் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது. இந்த வசனத்தின் மூலம் முத்தலாக் என ஒரேயடியாகத் தலாக் விடுவது பிழை என்பதைப் புரியலாம். இவ்வாறே ஒரு கணவன் தன் மனைவியைத் தலாக் கூறி விவாகரத்துச் செய்வதாக இருந்தால் கட்டாயம் மூன்று தவணைகளில் முத்தலாக்கையும் கூறி உறவை முழுமையாக முறித்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் புரியலாம்.

ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறுகின்றார். இத்தா காலத்திற்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் சேர்ந்த வாழலாம். தவணை முடிந்துவிட்டால் அவர்களிடையே கணவன்-மனைவி உறவு முறிந்து விடுகின்றது. அவர்கள் மீண்டும் மீதியுள்ள இரண்டு தலாக்கையும் கூறி முற்றாகப் பிரிய வேண்டும் என்பதற்கில்லை. சில ‘காழி’கள் அவர்களை மீண்டும் மீண்டும் வரவழைத்து முத்தலாக்கையும் கூற வைத்து முழுமையாகப் பிரித்துவிடுகின்றனர். அவர்கள் விரும்பினால் மீண்டும் புதிய திருமணத்தின் மூலம் சேர்ந்து வாழ இருக்கும் வழியை அடைத்துவிடுகின்றனர்.

பெரும்பாலும் இந்தத் தவறு நடக்கின்றது. இதனால் முத்தலாக் கூறப்பட்ட பல தம்பதிகள் தவறான முறையில் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகின்றது. அப்படி இல்லாத போது தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு புதிதாக ஒரு திருமணத்தை செய்வித்து அந்தப் புதிய மாப்பிள்ளை அவளைத் தலாக்விட்டு அதன் பின் முன்னைய கணவனை மணக்கும் நடைமுறையும் சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. முன்னைய கணவருக்கு முத்தலாக் விடப்பட்ட மனைவியை ஹலால் ஆக்குவதற்காக போலியாக திருமணம் முடித்து தலாக் சொல்லும் இப்பழக்கத்தை இஸ்லாம் தடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும். எனவே, தலாக் விடப்பட்டு தவணை முடிந்துவிட்டால் மீண்டும் அவர் மற்ற இரு தலாக்கையும் சொல்லாமலே பிரிந்து வாழ விட வேண்டும். விரும்பினால் அவர்கள் புதிய திருமணத்தின் மூலம் சேர்ந்துகொள்ள இது வழிவகுக்கும்.  
சிலர் இந்தக் குர்ஆன் வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு தலாக் விடப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது என்று இந்த வசனம் சொல்வதாக எண்ணி அர்த்தம் செய்துள்ளனர். பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்…’ என்று மொழியாக்கம் செய்துள்ளனர். இது தவறானதாகும். இந்த வசனம் அருளப் பட்டதற்கான காரணத்தை அறியும் போது இந்த மொழியாக்கம் தவறு என்பது தெளிவாகத் தெரியும்.

மிஃகல் இப்னு யஸார் என்ற நபித்தோழர் தனது சகோதரிக்கு ஒருவரை மண முடித்துக் கொடுத்தார். அவர் அப்பெண்ணை தலாக் கூறினார். இத்தா காலம் முடிந்துவிட்டது. பின்னர் அப்பெண்ணை மீண்டும் மணக்க விரும்பினார். அப்பெண்ணுக்கும் இதில் நாட்டம் இருந்தது. மிஃகல் என்ற இந்த நபித்தோழர் ரோசம் கொண்டவர். என் தங்கையை மீண்டும் உனக்கு மணமுடித்துத் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டார். இந்நிகழ்வையொட்டித்தான் இந்த வசனம் அருளப்பட்டது.’ (புகாரி: 4529, 5130, 5331)

மீட்டிக் கொள்ளத்தக்க தலாக் விடப்பட்ட கணவன்-மனைவி இருவரும் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழ முற்பட்டால் குடும்பத்தார் அதற்குத் தடையாக குறிப்பாக, பெண்களின் பொறுப்புதாரி அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதையே இந்த வசனம் கூறுகின்றது.

பாலூட்டும் காலம் :

‘பால் குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற கணவருக்காக தலாக் கூறப்பட்ட தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். ‘(பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமை யாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்படமாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப் படமாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால் குடியை நிறுத்திவிடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்துவிட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் இல்லை. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.’ (அல்குர்ஆன் 2:233)

இந்த வசனம் தாய்ப்பாலின் அவசியததை வலியுறுத்துகின்றது. கணவன்-மனைவி இருவரும் ஏதேனும் முரண்பாடுகள் காரணமாகப் பிரிய நேரிட்டாலும் குழந்தைகள் அதனால் பாதிக்கப்படக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட தனது குழந்தையின் தாய் தனது பிள்ளைக்கு பாலூட்ட வேண்டும் என கணவன் விரும்பினால் அந்தப் பிள்ளையின் தாய் பாலூட்ட வேண்டும் என்றும் தந்தை அதற்காக உபகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அளவுக்கு குழந்தையின் தாய்ப்பால் உரிமையை இஸ்லாம் மதிக்கின்றது. மரண தண்டனைக்குரிய ஒரு தாயின் தண்டனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்காக பிற்போட்டுள்ளார்கள். குழந்தை பால் குடி மறக்கும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்டனை வழங்காமல் இருந்துள்ளார்கள்.

எனவே, தாய்ப்பால் குழந்தையின் உரிமை என்பதை இந்த வசனம் உறுதியாகக் கூறுகின்றது. முழுமையாகப் பாலூட்டுவதாயின் இரண்டு வருடங்கள் பாலூட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இன்றுள்ள பல தாய்மார்கள் தமது மார்பழகு கெட்டுவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் குழந்தைக்கு தாய்ப் பால் ஊட்டுவதை தவிர்த்து வருகின்றார்கள். இது குழந்தைக்குச் செய்யும் அநீதியாகும். குழந்தைக்குத் தேவையான சகல சக்திகளும் நிறைந்த அற்புத பானமாகவே தாய் பால் உள்ளது. அத்துடன், தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கு ஏற்படும் மார்புப் புற்றுநோய் போன்ற ஆபத்துக்களிலிருந்து அவர்களை காக்கவல்லது என்பதையும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
எனவே, ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் தாய்ப்பாலுக்கு மிகுந்த பங்குள்ளது என்பதையும், தாய்-பிள்ளை பாசத்திலும் பரிவிலும் கூட இது மிகப் பெரும் தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

கணவன் மரணித்த பெண்ணின் இத்தா எவ்வாறு..?

‘உங்களில் எவரேனும் மனைவியர்களை விட்ட நிலையில் மரணித்து விட்டால், அவர்கள் தமக்காக நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (‘இத்தா’ வழிபாட்டில்) காத்திருக்க வேண்டும். அவர்கள் தமது காத்திருக்கும் காலக்கெடுவை நிறைவு செய்துவிட்டால் தமது விடயத்தில் தாமாக நல்ல முறையில் அவர்கள் நடந்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)

கணவன் மரணித்துவிட்டால் மனைவி நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இம்மாதங்கள் சந்திரக் கணக்கின் படி பார்க்கப்பட வேண்டும். கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெறும் வரை அவள் இத்தா இருக்க வேண்டும். இந்த இத்தா குறித்து பல தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த நம்பிக்கைகள் தற்போது தகர்ந்துவிட்டன. இத்தாவில் இருக்கும் பெண், ஒ நகைகளை அணிதல், மருதாணி இடுதல், மேலதிக வாசனைத் திரவியங்களைப் பாவித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஒ அவசியத் தேவைகள் இல்லாத பட்சத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒ இத்தாக் காலத்தில் திருமணப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடக் கூடாது. யாரேனும் கணவனை இழந்த இந்தப் பெண்ணை மணமுடிக்கும் எண்ணத்தில் இருந்தால் வெளிப்படையாகத் திருமணப் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது. மறை முகமாக இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வித்தில் பேசலாம் என அடுத்த வசனம் கூறுகின்றது.

‘(இத்தாவில் இருக்கும் பெண்களிடம்) நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை மறைமுகமாய் தெரிவிப்பதிலோ, அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். (திருமணம் பற்றி) நல்ல வார்த்தைகளை நீங்கள் கூறுவதைத் தவிர இரகசியமாக அவர்களிடம் வாக்குறுதி அளிக்காதீர்கள். இத்தாவுடைய காலக்கெடு, அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தைத் தீர்மானிக்காதீர்கள். நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகிப்புத் தன்மை மிக்கவனு மாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (அல்குர்ஆன்  2:235)

இத்தா இருக்கும் பெண் அந்நிய ஆண்களைக் காணக் கூடாது, அவர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றெல்லாம் எண்ணப்படுகின்றது. அது தவறாகும். முடிந்த வரை ஆண்கள் பகுதியை விட்டும் அவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். திருமணம் செய்தல், மேலதிக அலங்காரங்களைத் தவிர்த்தல் போன்ற அம்சங்கள் தவிர ஏனைய பெண்களின் சட்டமே அவர்களுக்குரிய சட்டமாகும்.

                                                                                                                          மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
 
இதையும் பார்க்க:-
                        * இஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும... 
                        * இஸ்லாமிய பார்வையில் துணைவியா.? துறவியா.?
                        * தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைக...
                        * இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள் 
                        * ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் 
                        * மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget