“சிறை செல்வோரெல்லாம் “இப்னு தைமியா” ஆக முடியுமா.?

பல்வேறு சமூகத்தவர்கள் வாழும்  ஒரு நாட்டில்   வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் எமக்கு எம் மார்க்கத்தை நாம் சுதந்திரமாக பின்பற்றும் உரிமையும்   இங்கே  வழங்கப் பட்டுள்ளது          அல்ஹம்துலில்லாஹ் .. என்றாலும் சில சந்தர்ப்பங்களில் எமது உரிமை முடக்கப்படும் போது அது தொடர்பாக எதிர்த்துக் கேட்கும் கருத்துச் சுதந்திரமும் எமக்கு தரப் பட்டுள்ளது .. ஆயினும் உரிமைகளை கேட்கும் விதம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவேகமே இங்கு முக்கியமாக  கவனிக்கப் பட  வேண்டும் .
சமுதாயப் பிரச்சினை ஒன்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது வேகத்துடன் விவேகம் இணையவில்லையெனில் அது குரல் கொடுக்கும் தனிநபரை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் .

விடயத்துக்கு வருகிறேன் ..

எதிர்ப்புகளைத் தாண்டிய கொள்கை உறுதியும் மார்க்கத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் உரிய முறையில்  நடைமுறைப் படுத்துவதற்கு நாம் முன்னெடுக்கும் சிரத்தையுமே நாம் முஸ்லிம்கள் என்ற இருப்பை எங்கு சென்றாலும் எமக்குத் தக்க வைக்கும் . உலகமே நமக்கெதிராக திரண்டாலும் நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதே நமது போராட்டத்தின் இறுதி வெற்றியாகும் ..

இது யாராலும் மறுக்க , மறைக்க முடியாத யதார்த்தம்  . அல்குரான் , சுன்னாஹ்வை தூய  வழியில் பின்பற்றும் ஒவ்வொரு முஸ்லிமினதும் உயிர் நாடி அல்லாஹ் பற்றிய நம்பிக்கை (அகீதா )  சீராக இருத்தல் ஆகும் ..  .

. “கொள்கையா .? உரிமையா .?” என்று கேட்டால் கொள்கையே நமக்கு முன்னிலை வகிக்கின்றது .
ஆக , கொள்கையில் வழிதவறிய  இயக்கவாதிகள்  நடத்தும் போராட்டத்தின் வெற்றி குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் வெற்றியே தவிர இஸ்லாத்தின் வெற்றியல்ல .
.
இங்கு உணர்த்தப் பட வேண்டிய நிதர்சன உண்மையாதெனில் ,

எந்த கொள்கையை  நிலைநாட்ட காலத்துக்குக்காலம் நபிமார்கள்  அனுப்பப் பட்டார்களோ , மேலும் எந்த கொள்கையில்  சஹாபாக்கள் , தாபியீன்கள் , தபஉத் தாபியின்கள்  போன்ற நம் முன்னோர்கள் நிலைத்து இருந்தார்களோ , எந்த கொள்கைக்காக  இமாம் அஹ்மத் , இமாம் இப்னு தைமியா , இமாம் அல்பானி (ரஹீமஹுமுல்லாஹ் ) போன்றோர் சிறைப்பிடிக்கப் பட்டார்களோ ,,  அந்த கொள்கையில்   தடம் புரண்டு    முழு சமூகத்தையும் முஷ்ரிக்குகளாக சித்தரிக்கும்  sltj எனும்இ யக்கவாதிகளின் தலைமையின் கீழ் இந்த போராட்டம் நிகழ்த்தப் படுகிறது.

...அவர்களைப் பொறுத்தவரை எவ்வாறு பௌத்தர்கள், இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள்  உட்பட ஏனைய மதத்தினரையும் கப்ர் வணங்கிகளையும் இணை வைப்பவர்களாக கருதுகிறார்களோ அவ்வாறே உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும்(அவர்களைத் தவிர )  "முஷ்ரிக்குகள், நரகவாதிகள் " என  பிரச்சாரம் செய்கின்றனர்  ..(நஉது பில்லாஹ் )

அப்படியெனில் , இலங்கையின் எந்த முஸ்லிம்களுக்காக இவர்கள்  குரல் கொடுக்கின்றனர் ..?
  ஆக , இவர்களின் போராட்டம் குறிக்கப்பட்ட இயக்கத்தின் போராட்டம் என அறிமுகப் படுத்தப்பட  வேண்டுமே தவிர இஸ்லாமியர்களுக்கான  உரிமைப் போராட்டம் என்றல்ல ..

எமக்கு உயிர் உடமைகளை விட கொள்கையே முக்கியம் .. கொள்கையை இழந்த உரிமைப் போராட்டம் எமக்கு எந்த நன்மையை பெற்றுத் தரும் ???  ஆர்ப்பாட்டக் களத்தில் எங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்தும் இவர்கள் முடிந்த  பின்னர் எங்களை முஷ்ரிக்குகள்  என்று கூறுவார்களே ..!, வழிகெட்ட தங்கள் கொள்கைதான் இஸ்லாமியக் கொள்கை என அங்கலாய்ப்பார்களே ..!

இந்த நேரத்தில் எங்கள் நிலமை என்ன ..?
உண்மையில் இந்த நாட்டில் எங்கள் உரிமையை கேட்பதற்கு எங்களுக்கு சுதந்திரம் உள்ளது அவ்வாறு கேட்க முடியாமல் போகும்  பட்சத்தில்  பொறுமையாக இறுதி மூச்சுவரை  எமது கொள்கையை இழக்காமல் நாம் வாழ்வது கடமையா ??

அல்லது ;  உரிமை பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக  விவேகமற்ற  பேச்சுடைய இவர்களுடன் இணைந்து எமது கொள்கையை இழப்பதா ???

எனவே , கொள்கையில் வழிகெட்ட எந்த இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தை சார்ந்த இயக்கப் போராளிகளை கொள்கைப் போராளிகள் என பிரகடனப் படுத்துவதும் அதில் உயிரிழப்பவர்களை ஷஹீத்கள்  என அடையாளப்படுத்துவதும் நியாயமானதல்ல .. !!!

இஹ்வானிகள்  சையித் குதுபை “ஓர் தியாகி , இஸ்லாத்திற்காக உயிரிழந்த ஷஹீத் “ என்றல்லவா இது வரை சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் ????  குரான் சுன்னாஹ்வை பற்றிப் பிடிக்கும் ஒருவரால் இந்தக் கூற்றை ஏற்க முடியுமா ???

சற்று சிந்தியுங்கள் ..!!!

இந்த அமைப்பினரின் போராட்டத்தில் ஒருவரின் நிதானமற்ற பேச்சினால் குறிக்கப் பட்ட நபர் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டது . இதனை   ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா சிறையிலடைக்கப் பட்டதற்கு ஒப்பாக்கி சிலர் பேசுவது அநியாயமாகும் .

சுப்ஹானல்லாஹ் ...!!!!

சிறை செல்பவர்கள் எல்லாம் சத்தியப் போராளிகள் என்றால் இஹ்வானிகள் கூறுவது போன்று  சையித் குத்துப்,  மௌதூதி போன்றோரையும் தற்போது வரை சிறையில் இருக்கும் முர்சி போன்றோரையும் “இஸ்லாமியத் தியாகிகள்; கொள்கைக்காகவே உள்ளே போனார்கள்  “ என்றல்லவா சொல்ல வேண்டி வரும் ??

ஆக நான் பணிவுடன் வேண்டிக் கொள்வது ,

வாழ்நாள் பூராக தூய கொள்கை (அகீதா )யை நிலைநாட்ட  தனது அறிவாலும் நடைமுறைகளாலும் வீரியமாக போராடிய ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியாவின் சிறைப்பயணத்தையும் அறிவைப் புறந்தள்ளி விட்டு  உணர்வுகளை மாத்திரம் தூண்ட வைக்கும் இயக்கப் போராளிகளின் சிறைப் பயணத்தையும் ஒன்றோடொன்று ஒப்பாக்க வேண்டாம் .

தன் இறுதி மூச்சை சிறையிலேயே விட்ட இப்னு தைமியா (ரஹ்) அவர்கள்  அகீதாவில் பிளவுபட்ட ஒவ்வொரு வழிகெட்ட அமைப்புகளோடும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களால் மோதினார் .
அவர் ஏழு தடவை சிறை செல்ல அதுவே முக்கிய காரணியாக இருந்தது .. குறிப்பாக சொல்லப் போனால் அவர் நீண்ட நாட்கள் சிறை வாசம் அனுபவித்தது இரு தடவைகள் ஆகும் ..

அதில் ஓன்று, எகிப்தின் தலைநகர் காஹிறாவில் சிறைப்பிடிக்கப்பட்டு  ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார் .. சிறை செல்லக் காரணம் அல்லாஹ்வின் பெயர் பண்புகளில் அஹ்லுஸ் சுன்னாக்களின் நம்பிக்கையை ஆழமாக எடுத்துரைத்து பகுத்தறிவுவாதிகளுக்கு மறுப்பளித்ததினால் ஆகும் .குறிப்பாக “அல்லாஹ் அர்சில் உள்ளான் இன்னும் அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்குகிறான் “ போன்ற நம்பிக்கையை குரான் சுன்னாஹ் ஒளியில் எடுத்துரைத்து வழிகேடர்களை வாய்மூட வைத்ததினால் ஆகும்  ..

இரண்டாவது, இறுதிக்காலத்தில் சிரியாவின் தலைநகர் திமிஷ்க் இல் வைத்து சிறைப் பிடிக்கப் பட்டார் . சூபி ஒருவரின் வழிகெட்ட  கொள்கைக்கு எதிராக பேசிய காரணத்தினால் சிறைப்பிடிக்கப் பட்ட  ஷைகுல் இஸ்லாம்  கிட்டத்தட்ட  இரண்டரை  வருடம் சிறைவாசம் அனுபவித்து  ஈற்றில் அங்கே வைத்துதான்  இறைவனடி சேர்ந்தார்.

நன்கு உற்று நோக்குங்கள் ..!!!

“அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகிறான் “ என்ற விடயத்தில் வழிகெட்ட ஜஹ்மியாக்களின் கொள்கையை போதிக்கும் tntj ,sltj இனரின் சிறைப்பயணமும் அந்த வழிகெட்ட கொள்கையோடு போரிட்டு உள்ளே சென்ற ஷெய்குல் இஸ்லாம் அவர்களின் சிறைப்பயணமும் சமனாகுமா??? இன்னும் சொல்லப் போனால் , சூனியத்துக்கு  தாக்கம் இருப்பதாக கூறும்  இப்னு தைமியா  (ரஹ்)  அவர்கள் இவர்களின் கொள்கையடிப்படையில் ஒரு “முஷ்ரிக்” ;

மேலும் ஆதாரமான ஹதீஸ்கள் குரானுக்கும் நேர்த்தியான சிந்தனைக்கும் முரண்படாது என கூறும் அவர் இவர்களது கொள்கையடிப்படையில் “ஒரு வழிகேடர் “   எனவே , இவ்வியக்கவாதிகளின்  கொள்கையை ஆதரித்து இவர்களில் ஒருவர்  சிறை சென்ற காரணத்தை நியாயப் படுத்துபவர்கள்  ஷைகுல் இஸ்லாத்தின் சிறைப்பயணத்தோடு இவர்களை எவ்வாறு ஒப்பிட முடியும்  ???

ஆக , எந்தக் கொள்கைக்கு  எதிராக இப்னு தைமியா (ரஹ்) பக்கம் பக்கமாக எழுதினாரோ அந்த கொள்கையை பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் இவ்வியக்கவாதிகளை அவரின் தியாகத்துடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை .. ***

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு பக்கமும் பேச வேண்டிய தேவை உள்ளது ..
அதாவது , இவ்வியக்கவாதிகளின் கொள்கை வழிகேடு , இவர்கள் ஆர்ப்பாட்டத்தை கையாண்ட முறை தவறானது “ என கூறுகிறோமே தவிர இவர்கள் எம்மை முஷ்ரிக்குகளாக ஆக்குவது போன்று இவர்களை நாம் முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் இருந்து விலக்கவில்லை . ஆனால் , இன்று இன்னும் சில வழிகெட்ட பிரிவினர் குறிக்கப்பட்ட இயக்கவாதியின் கைது நடவடிக்கையை புகழ்ந்து அது “முஸ்லிம்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் “ என பகிரங்கமாக பிரச்சாரம் செய்து தம் சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றனர்

.. ஒரு முஸ்லிமுக்கு ஏற்பட்ட துன்பத்தில் நீதத்தை கடைப்பிடிக்காமல் இவ்வாறு துரோக செயல்களில் ஈடுபடுவோர் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியர்கள் ஆவர் .

அல்லாஹ் கூறுகிறான் .. “ஒரு கூட்டத்தில் மீது நீங்கள் கொண்ட  பகைமையானது நீதமாக நடக்காமல் இருக்க உங்களை தூண்ட வேண்டாம் .. நீதமாக நடந்து கொள்ளுங்கள் ..!!அதுவே இறையச்சத்துக்கு மிக நெருக்கமானதாகும் ..(மாய்தா _௦2)
ஆக , அவர்களுக்கும் நமக்கும் உள்ள கொள்கை வேறுபாட்டை தெளிவு படுத்த வேண்டுமே தவிர இது போன்ற சந்தர்ப்பங்களில் பகைமையை அளவு கடந்து பிரயோகித்து  முனாபிக்குகள் போன்று ஒரு முஸ்லிமுக்கு ஏற்பட்ட துன்பத்தில் இன்பம் காணக் கூடாது ..

தனது சொல்லாலும் செயலாலும் நீதத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு முஸ்லிம் குறிக்கப்பட்ட இயக்கவாதியின் சிறைவிடுதலையை  விரும்புவதோடு  ஒரு படிமேலாக அவர்களுக்கு நேர்வழி கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் .. அதே போன்று , இவ்வியக்கவாதிகள் இந்த சந்தர்ப்பத்தை இயக்கவளர்ச்சிக்கான உத்தியாக எடுத்து தம் வழிகெட்ட கொள்கையை மக்கள் மத்தியில் மேம்படுத்த  வழிவகுக்கக் கூடாது ..

அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் இவர்களது கொள்கையை அடையாளப் படுத்தி மக்களை எச்சரிப்பதும் மிகத் தேவையான ஒன்றாகும் .. உண்மையில் எமது சமூகம் சீரான கொள்கைக்கு திரும்பி மனோயிச்சைகளை புறந்தள்ளிவிட்டு மார்க்கத்தை அக்கு வேறாக பின்பற்றி அதனளவில் தூய்மையாக அழைக்கும் போதுதான்  அல்லாஹ்வின் உதவி எமக்கு கிடைக்கும் .

..திருக்குரானின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நாம் முற்றிலும் அல்லாவிற்கு கட்டுப்பட்ட அடியார்களாக வாழும் போதுதான் ஓர் அந்நிய நாட்டிலும் சாத்வீகமாக நமது உரிமையை பெற்றுக் கொள்ள முடியும் ..

ஆக சுருங்கச் சொல்வதாயின் ,

_மத்ஹப்கள் ,  இயக்கங்கள் , பிரிவுகள் , அமைப்புகளின் கீழ் மட்டுப்படுத்தப் பட்ட பிரிவினைவாத சிந்தனை உள்ளவர்கள் குரான் சுன்னாஹ் போதிக்கும் நபிமார்கள் மற்றும்  எம்ச லபுகளான  சஹாபாக்களின்  கொள்கையை கற்க வேண்டும் . எமது சீர்திருத்த நடவடிக்கைகள் வீடு, குடும்பம் ,சமூகம் என மேம்படுத்தப்பட வேண்டும் .

_தனது சொல் ,செயல் நடவடிக்கையில் மார்க்கத்தில் சமரசம் செய்யாத சீரான அகீதாவை நிலைநாட்டும் கொள்கைவாதிகள் உருவாக வேண்டும் . சிறு விடயமாக இருந்தாலும் ஒரு சுன்னாஹ்வை நடைமுறைப் படுத்துவதின் கட்டாயத்தை இஸ்லாமிய பாடசாலைகள் ,மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்கள் போன்ற பலவற்றில் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கு உணர்த்த வேண்டும் ..

_மார்க்க கல்வியை பொக்கிசமாக நினைத்து ,கற்றுக் கொண்ட அறிவை நடைமுறைப் படுத்தி நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் வீரியமாக செயற்படும் சிறந்த ஆலிம்கள் உருவாக வேண்டும் .
இவ்வாறு நாம் மாறும் போது நிச்சயம் அல்லாஹ்வின் வெற்றி எமக்கு கிடைக்கும் . அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக ..!!!

                                                                                                 ஆக்கம் : உம்மு அஹ்மத் தைமியா ஷரஈயா
இதையும் பார்க்க:-
 
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget