நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது இறை அதிகாரமாகும்

ஒரு மனிதனை நல்லவர், இறை நேசர், மறுமை வெற்றிக்குத் தகுதியானவர், அல்லது கெட்டவர், நரகத்துக் குறியவர் என்று தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்குறியதே.

பொதுவாகவே அல்லாஹ்வை ஏற்றிருக்கும் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்களே. ஆனால் இன்று குறிப்பிட்ட சிலர் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்கள் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கொள்ளும் செயலாகும்.

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(63) அவர்கள் எத்தகையோர் என்றால், ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 10:62)

நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்... (அல்குர்ஆன் 41:30)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ்  (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். (அல்குர்ஆன் 5:56)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதிப்பதித்து விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (18) அவர்கள் சொல்லை-நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (அல்குர்ஆன் 39:17)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். (புகாரி: 6502)

எனவே இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் தெளிவாகவே இறைநேசர்கள் யார் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனாலும் இன்றைக்கு முஸ்லிம்களில் ஒருவர் மரணித்துவிட்டல் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நட்செய்தி கூறப்படுவதைக் காணலாம். இப்படி கூறுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கொள்ளும் செயலாகும். ஏனெனில் நபிகளாரே அல்லாஹ்வின் கட்டளைப்படியே சுவனவாசிகளை அடையாளப்படுத்தினார்கள். மேலும் தனி மனிதர்களுக்கு அப்படி தீர்ப்பு வழங்குவதையும் கண்டித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்: (வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன் ரளியல்லாஹு அன்ஹு   எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறினேன். உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்..?’ என கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை. ” (புகாரி: 1243)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்: ஒரு சிறு பிள்ளை மரணித்தது, அப்போது நான்; அதற்கு நன்மாராயம் உண்டாகட்டும், சுவனத்து சிட்டுக் குருவிகளில் ஒரு குருவி’ என்றேன். அப்போது நபியவர்கள்; ‘அல்லாஹ் சுவனத்தைப் படைத்து அதற்குறியவர்களையும் படைத்தான், நரகத்தைப் படைத்து அதற்குறியவர்களையும் படைத்தான் என்பது உமக்குத் தெறியாதா.?’ என்று கேட்டார்கள். (முஸ்லிம்) இதிலிருந்து சிறு பிள்ளையாக இருந்தாலும் சுவனத்தைக் கொண்டு தீர்ப்பு அளிக்க முடியாது என்பது தெளிவாகின்றது.

அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், ‘இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள். (புகாரி: 2662, முஸ்லிம்)

நல்லடியார் தீர்மானிக்கும் இந்த அடிப்படை விடையத்தை சரியாக விளங்காததன் விளைவே இன்றைக்கு குறிப்பிட்ட சிலறை நல்லடியார் ஆக்கி, அவரை அல்லாஹ்வுக்கு நிகறாக வைத்திருப்பதைக் காணமுடிகின்றது. எனவே இறை அதிகாரத்தோடு சார்ந்திருக்கும் இந்த விடையத்தை அவனுக்கே சொந்தமாக்கி, அல்லாஹ்வை சரியாக ஓர்மைப்படுத்தி மூஃமினாக வாழ்ந்து மரணிக்க முயள்வோம்.

இதையும் பார்க்க:-
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget