எச்சரிக்கை கிறிஸ் மஸ்ஸும் புதின அல் குர்-ஆனும்

நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வியாபாரம் களைகட்டிவிடும். டிசம்பர் 25 நெருங்க நெருங்க மக்கள் நேரம் இல்லாமல் ஒரே சுறுசுறுப்பாக ஓடித்திரிவார்கள். அடிக்கடி காதில் விழும் செய்தி பரிசு பொருட்கள் (presents) வாங்கியாகிவிட்டதோ, என்ன பரிசு , அவை பக்குவமாக சுற்றப்பட்டு 24ம் திகதி வரை ஒழித்து வைக்கப் பட்டுள்ளதோ; இவை போன்றவைகளே. ஏனெனில் இன்று உலகில் கொண்டாடப்படும் சமய பெருநாட்களில் மிக அதிகமாக பரிசு பொருட்கள் கைமாறலுடன் கொண்டாடப்படும் பெருநாள் இந்த கிறிஸ்மஸ்தான் என்றால் அது மிகையாகாது. கிறிஸ்தவர் அல்லாதவர் கூட இத்தினத்தை கொண்டாடுவதால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
இச் சந்தர்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தினதும் அதனோடு தொடர்புடைய சில நடைமுறைகளையும் பற்றிய ஒரு சிறிய அலசல் வாசகர்களுக்கு பல புதிய விடயங்களை கொண்டுவரும் என்று நினைக்கின்றேன். கிறிஸ்தவத்தின் புனித நூலாக கருதப்படுவது விவிலியம் அல்லது பைபிள் (Bible)என்பது யாவரும் அறிந்ததே. இதில் ஏசு நாதரின் ( நபி ஈஸா-Jesus)அதிசயப் பிறப்பும், சிலுவை மரணமும்(Crucificton)(?) முக்கிய இடம் பெறுவது மாத்திரம் அல்லாமல் முழு மனித இனத்தின் விடிவுக்காகவே ஏசு உயிர் நீர்த்தார், அப்படி உயிர் நீர்ப்பதற்கே அவர் அதிசயமாக பிறந்தார் என்பது பைபிளின் அடிப்படைகளாக அமைந்துள்ளன.
 
 ஆகவே கிறிஸ்தவத்தின் இந்த இரண்டு அதி முக்கிய நிகழ்வுகளில் ஏசுவின் பிறப்பு கிறிஸ்மஸ் பண்டிகையாகவும், மரணத்தின் பின்னான மீள் எழுகை நடைபெற்ற நாளாக “உயிர்த்த ஞாயிறு”(Easter Sunday)ஆகவும் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஏசு நாதர் மார்கழி(December) 25ல் பிறந்தார் என்றும் எனவே கிறிஸ்மஸ் என்பது மார்கழி 25 என்ற திகதியை முக்கியப் படுத்தியும், உயிர்த்த ஞாயிறு “ஞாயிறு” என்ற நாளை முக்கியப்படுத்தியும் கொண்டாடப்படுகின்றது.
 
ஆப்பிரஹாமின்(நபி இப்ராஹிம்) ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் ஈடேற்றத்துக்காக இறைவனால் அளிக்கப்பட்ட யூத வேதம்(Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்ற சமயங்களும், உலகின் அடுத்த பெரிய சமயங்களான இந்து சமயம்(சைவம், வைணவம்), பெளத்தம் ஆகியன தத்தமது சமய நடவடிக்கைகள், கொண்டாட்டங்களுக்கான நாள் கணிப்பீட்டை சந்திர அசைவினை (lunar motion) அடியொட்டியே கணித்தனர் என அறியப்படுகின்றது.
இந்த அடிப்படையில் இரண்டு முதல்(தலை) பிறை (1st moon அல்லது crescent) களுக்கிடையே வரும் 29.53079 நாட்களை ஒரு சந்திர மாதமாகக் கணித்தனர்.
 
எனவே ஒரு சந்திர வருடம் (lunar year) 354.36706 நாட்களைக் கொண்டுதாக காணப்படுகின்றது. இதே நேரத்தில் பூமி தன்னை தானே சுற்ற 24 மணித்தியாலங்கள், 3 நிமிடம், 56.55 வினாடிகள் என அறிகின்றோம். இந்த அடிப்படையில் பூமி சூரியனை சுற்றிவர 365.242199 நாட்கள் எடுப்பதையும் நம்மில் மறுப்பதற்கு யாரும் இல்லை, இதை சூரிய வருடம் (solar year) என்கின்றோம். இந்த சந்திரன் பூமியுடன் சேர்ந்து சூரியனை சுற்றுவதால் பூமியை விட குறைவான காலத்துக்குள் சூரியனை சுற்றி முடிக்கின்றது. அதாவது ஏற்கனவே கூறியது போல் சந்திரனுக்கு தேவைப்படுவது 354.36706 நாட்களே. ஆகவே சூரிய வருடத்துக்கும், சந்திர வருடத்துக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 11 நாட்கள்.
 
இப்போது நமது கரிசனை சந்திர வருட கணக்கை சூரிய வருட கணக்கோடு ஒப்பிடும் போது ஏற்படும் பிரச்சனைகளே. அதாவது இந்த 11 நாள் வித்தியாசம் என்பதே. நாம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு போகமுன் சந்திர வருட கணக்குப் படி கொண்டாடப்படும் இஸ்லாமிய பெருநாட்களை சற்று நோக்குவது பொருத்தமாகும். உதாரணமாக 2010க்கான முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் செப்டம்பர் 10ல் கொண்டாடப்பட , அது 2009ல் செப்டம்பர் 21ம் திகதி கொண்டாடப்பட்டது. அதேபோல் 2011ல் ஓகஸ்ட் 30லும், 2012ல் அது ஓகஸ்ட் 19லும் கொண்டாப்படும். அதாவது இன்றைய சூரிய வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் 11நாட்கள் முன்னே சென்று கொண்டிருக்கும்.
 
ஆனால் சந்திர வருட கணிப்பை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய கிறிஸ்தவத்தின் இரண்டு பெருநாட்களில் கிறிஸ்மஸ் மார்கழி 25ல் நிலையாகவும், உயிர்த்த ஞாயிறு திகதி அடிப்படையில் அசைவையும், நாள் அடிப்படையில் “ஞாயிறு” என்று நிலையாகவும் அமைந்துள்ளதை அவதானிக்கலாம். கூடவே இஸ்லாமியரின் பெருநாள் போன்று சூரிய வருடங்களின் அனைத்து மாதங்களிலும் ஆகக் குறைந்தது இரண்டு முறைகளாவது வந்து போவது போலன்றி இந்த உயிர்த்த ஞாயிறு பண்டிகை பங்குனி(March) இறுதியில் இருந்து வைகாசி(May) முதல் கிழமைக்குள் மாறி மாறி அசைவதையும் காணலாம்.
 
உதாரணமாக 2010ன் உயிர்த்த ஞாயிறு சித்திரை(April)4லும், 2009 ல் அது சித்திரை 19ம் திகதிலும், 2011ல் இது சித்திரை 24லும், 2012ல் இது சித்திரை 15ம் திகதியிலும் வரும். இப்படியே 2005ல் இது பங்குனி 25ல் கொண்டாடப்பட்டது. இதில் இந்த 11 நாள் வித்தியாசம் காணப்படாமலும், அதே நேரம் இந்த “ஞாயிறு” என்ற நாளை நோக்கிய முன்னும் பின்னுமான அசைவாகவே, அதாவது பங்குனி- வைகாசி காலப் பகுதியில் நடந்தேறும் ஒரு நிகழ்வாகவே இருகின்றது. ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகை மாத்திரம் அது ஆரம்பிக்கப் பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25ல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. எமது தலைப்பு கிறிஸ்மஸ் என்பதால் இந்த உயிர்த்த ஞாயிறு பற்றிய அல்சல் இத்துடன் நிறுத்தப்படுகிறது.  
  
  பைபிளில் ஏசு நாதரின் அதிசய பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும் இன்று வரை ஏசு நாதர் எப்போது பிறந்தார் என்பதற்கு சந்தேகத்துக் கிடமின்றி நிரூபிக்கும் எந்த அத்தாட்சியும்( ஜெஹோவாவின் சாட்சிகளின் படி ஏசு சித்திரை- April- 14ல் பிறந்திருப்பதற்கான சாத்தியம் உண்டாம்) யாரிடமும் இல்லை. ஆனாலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஏசு நாதர் அதிசயமாக பிறந்தார் என்பதில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு மிடையே எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் இருப்பதே,( ஏசு என்பர் அதிசயமாக பிறப்பிக்கப்பட்டார், அவர் கடவுளின் ஒரு தூதர் என்ற விடயத்தை ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்பதும், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்பட்டார் என்பதை நம்புவது அவரை முஸ்லிம் என்ற நிலையில் இருந்து மாற்றிவிடும் என்பதும் இஸ்லாமிய கொள்கை).
 
அத்தோடு ஏசு நாதர் இந்த உலகத்தில் வாழ்ந்த சுமார் 29/30 வருட காலத்தில் ஒரு முறையாவது அவரின் பிறந்த நாள் அனுஸ்டிக்கப்பட்டதாகவோ, அல்லது தனது பிறந்த நாளை கொண்டாடும் படி தன் சீடர்களை அவர் வேண்டிக் கொண்டதாகவோ எங்கும் அத்தாட்சிகள் இல்லை. அத்துடன் அவர் பிறந்த யூத இனத்தில் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கமும் இருந்ததாக வரலாறு இல்லை. ஆகவே இயல்பாக நம்மில் எழும் கேள்வி கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பைபிளால் அனுமதிக்கப்படாத, ஏசு நாதரினால் அங்கிகரிக்கப் படாத ஒன்றா? அப்படியானால் அதை யார்? ஏன்? எப்போது? அறிமுகப் படுத்தினர் என்பதே. இதற்கு விடை காண முன் மீண்டும் சந்திர, சூரிய வருட கணிப்பீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.
 
இன்று நமது பாவனையிலுள்ள சூரிய அடிப்படையிலான காலக் கணிப்பை க்ரெகொரியன் நாட்காட்டி(Gregorian calender) என்போம். இந்த காலக் கணிப்பீட்டின் அடிப்படை ரோம ராஜ்யத்தின் அரசர் ர்டார்குயினிஸ் ரீகஸ் 5 (Traquinius Pricus V)இன் மூலத்தைக் கொண்டது. இது கி.மு. 616 – 579 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாவிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. க்ரெகொரியன் நாட்காட்டி பல அசெளகரியங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் கொண்டு காணப்பட்டதால் கி.மு. 46 அளவில் ஜூலிய சீஸர்(Julius Caesar) நாட் கணிப்பில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் படி இவரின் வானவியலாளர்கள்(astronomers) சூரிய ஆண்டு கணிப்பில் 365 1/4 நாட்களை நிலையாகக் கொள்ளும்படியும், சந்திர ஆண்டு கணிப்பை அடியோடு கைவிடும் படியும் பரிந்துரைத்தார். அத்துடன் இதுவரை நடந்த காலக் கணிப்பீட்டு தவறுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கி.மு 46 ஆண்டில் மேலதிகமாக 90 நாட்களை சேர்த்து கி.மு. 45து பங்குனி(March) நடுபகுதியில் அதை தை 1(January 1), அதாவது 01.01.45 என்று அறிவித்துவிட்டார். ஆகவே இது கி.மு. 45.01.01 என்ற
 
கணிப்பை பெற்றது. அத்துடன் ஒவ்வொரு 4ன்கு வருடத்திலும் மாசி(February)யில் ஒரு நாளைக் கூட்டி கணிக்கும் படியும் பணித்தார். இதுவே ஜூலியன் நாட்காட்டியின் ஆரம்பம். இது ஆரம்பித்து சுமார் 1590 வருடங்கள் வரை, அதாவது கி.பி 1545ம் ஆண்டுவரை பாவணையில் இருந்துள்ளது. ஆனாலும் இந்த ஜூலியன் முறையில் பின்பற்றப்படும் 365 1/4 நாட்களுக்கும் பழைய கணிப்பின் 365.242199 நாட் கணக்கிற்கும் இடையே ஏற்பட்ட காலக் கணிப்பு குழறுபடி ஒரு வருடத்தில் 11 நிமிடம் 14 வினாடிகள் வித்தியாசத்தை காட்டிக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்த சிறிய வித்தியாசம் சரியாக முழு 10 நாட்களாக மாறும் வரை அந்த காலக் கணிப்பை மாற்றமின்றி கைக் கொண்டனர். இதை நிவர்த்தி செய்ய பாப்பரசர் க்ரெகொரி 111 (Pope Gregory 111) ஒரு சமய ஆணை(edict)ஐ பிறப்பித்தார்.
 
 இதன்படி ஓக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் கழிக்கப்பட்டு மீண்டும் சூரிய ஆண்டின் நாட்கள் 365.2422க கொள்ளப்பட்டது. இப்போது ஜூலியன் கணக்கிற்கும் க்ரெகொரி கணக்கிற்கும் இடையே 0.0078 நாட்களை வருடமொன்றின் வித்தியாசமாகக் காட்டியது. இது ஒவ்வொரு 400 வருடத்திலும் 3.12 நாட்கள் வித்தியாசத்தைக்காட்டியது. இருப்பினும் இந்த 4ன்கு நூற்றாண்டுகளில் வரும் மூன்று நூற்றாண்டுகளை லீப்(leap year)வருடமாக கணிக்காது, அதாவது குறிப்பிட்ட ஆண்டுகளில் வரும் மாசி மாத்தில் 29 நாட்கள் கணிக்கப்படாமல் அவற்றில் 28 நாட்கள் என்று வரையறுத்து அவற்றை பொது நூற்றாண்டுகளாகக் கருதினர். மாறாக 400ல் சரியாக பிரிபடும் நூற்றாண்டை மாத்திரம் லீப் நூற்றாண்டாக வரையறுத்து அந்த ஆண்டில் வரும் மாசி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டது.
 
இதன் படி 1700,1800,1900 என்ற நூற்றாண்டுகள் லீப் வருடமாக இருந்தும் அவை அப்படி கணிக்கப்படாமல் 2000 ஆண்டு லீப் நூற்றாண்டாகக் கொள்ளப்பட்டது. அதே போல் 2100,2200,2300 ஆண்டுகள் லீப் வருடமாக கருத்தபடமாட்டாது. எனினும் 2400 லீப் ஆண்டாக காணப்படும். இருப்பினும் இந்த முறைக்கும் முன்னைய கால கணிப்பீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் வருடத்துக்கு 1/2 நிமிடத்துக்கும் குறைவாக இருப்பதால் தை 1ஐ வருடத்தின் ஆரம்ப நாளாக வரையறுத்தனர். ஆனாலும் இந்த கணிப்பீடும் உடனடியாக எல்லா உலக நாடுகளாளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரோமன் கத்தோலிக்க அரசுகள் 1587லும், பிரித்தானியாவும் அதன் காலனித்துவ நாடுகளும் 1750களிலும் ஏனைய கிறிஸ்தவ நாடுகள்(ரோமன் கத்தோலிக்கர் அல்லாதோர்) 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஜப்பான், சீனா, முன்னை நாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகள் மிகப் பிந்திய காலப்பகுதியிலுமே இதை ஏற்றுக் கொண்டன.
 
இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்த காலக்கணிப்பீட்டில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள், கூட்டல் கழித்தல்கள் எதையுமே பொறுட்படுத்தாமல் மார்கழி 25ல் கிறிஸ்மஸ் கொண்டாடுவதும், இது மறுக்க முடியாத நாளாக உலக வரலாற்றில் நிலைத்துவிட்டதுமான விடயுமுமே. இற்றைக்கு சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ காலக் கணிப்பீட்டாளர்கள்(chronographers) உலகம் உருவாக்கப்பட்ட அல்லது ஆரம்பமான நாளை இரவு-பகல் சம அளவிலுள்ள (equinox) வசந்த காலத்தின் (spring) பங்குனி(March) 25ம் திகதி என்று கணித்தனர். பிற்பாடு ஒரு பங்குனி 25 லேயே வானவர் தலைவர் கப்ரியெல்(ஜிப்ரீல்- Gabriael) ஏசுவின் தாயார் மரியா(மர்யம்-Mary)ளுக்கு அதிசயமாக கிடைக்கப் போகும் குழந்தை பற்றிய சுப செய்தி சொன்ன திகதியாகவும்(day of Annunciation) கொள்ளப்படுகிறது.
 
மேலும் ஏசுவின் சிலுவை மரணம் சம்பவித்ததும் ஒரு பங்குனி 25கவே கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த மூன்று சம்பவங்களின் இணைப்புக் கிடையில், அதாவது சுப செய்தி தினத்தில் இருந்து சரியாக 9 மாதங்கள் முடிய மார்கழி 25ல் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படுகின்றது. அதாவது உலகம் உண்டாக்கப்பட்டது பங்குனி 25, கன்னி மரியாள் கருத்தரித்தது பங்குனி 25, ஏசு பிற்பாடு சிலுவையில் அறையப்பட்டது பங்குனி 25. ஆகவே ஏசுவின் பிறப்பை வேறு நாளில் நிகழ்ந்தாகக் கொள்வதில் அர்த்தமில்லை ஏனெனில் மக்களின் பாவங்களை சுமக்க வந்தவர், அதற்காகவே சிலுவையில் ஏற்றப்பட்டவர், அப்படி ஏற்றப்படுவதற்காகவே பிறப்பிக்கப் பட்டவர் என்ற ஒரு காரண காரிய, நேர் கோட்டு சித்தாந்தத்தில், ஏசுவின் பிறப்பும் 25 என்ற நாளில் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இந்த மார்கழி 25 என்பது குளிர்கால இரவு நேரம் கூடிய, அதாவது மார்கழி 25 முதல் தை 6 வரையிலான அதி கூடிய இரவு நேரத்தின்(winter solstice) முதல் நாளாகும்.
 
இந்த அடிப்படையிலேயே உலகத்தின் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (ஏசு நாதரின் மறைவின் பின்) கி.பி 336ம் ஆண்டு ரோமில் கொண்டாடப்பட்டது. ஆகவே ஏசு நாதர் பிறந்து 335 வருடங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவில்லை என்பது இங்கு தெளிவாகின்றது. எனவே தான் ஏசுவின் மறைவிற்கும் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கும் இடையில் எழுதப்பட்டதாக கருதப்படும் அனைத்து சுபிசேஷத்திலும் , இன்றைய பைபிளையும் உள்ளடக்கி , ஏசு நாதரின் பிறந்த நாள் இடம் பெறவில்லை. மேலும் இந்த மார்கழி 25 என்பது அன்றைய ரோம இராஜ்யத்தின் இயற்கையை வழிபடும் (நம்பும்) (pagans) மக்களால் “சனி” கிரகத்துக்காக கொண்டாடப்படும் “சட்ரனெலிய”( Saturanalia) என்ற பெருநாளை அடியொட்டியதாகக் கொள்ளப்படுகின்றது.
 
அன்றைய ரோம அரசன் கொன்ஸ்டண்டைன்(Constantine) ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் தனது ராஜ்சியம் மெதுமெதுவாக ரோமன் கத்தோலிக்கத்தை உள்வாங்கி பிற்காலத்தில் அது ஒரு ஆதிக்க சக்தியாக மாறப் போகின்றது என்ற உண்மையையும் மறுக்கமுடியாமல், மெது மெதுவாக தமது மக்களின் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ நடைமுறைகளோடும் கலக்கவிட்டு மக்களின் அன்றாட வாழ்வோடு கலப்பதை அனுமதிப்பதுன் மூலம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டான். அவன் மரண படுக்கையிலேயே அவனின் அனுமதி இன்றி மதமாற்றம் செய்யப்பட்டான்( conversion and pabtism). இந்த “சனி” கிரக கொண்டாட்ட காலத்தில் தான் மக்கள் தங்களுக்கிடையே பரிசு பொருட்களை பரிமாறும் பழக்கமும் அறிமுகமாகியுள்ளது.
 
இதே போல் கிறிஸ்மஸ் மரம் வைப்பதும், அதை அலங்கரிப்பு செய்வதும் கிறிஸ்த்தவத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத விடயம். இந்த ஊசி இலை(Connifers/Christmas tree) மரத்தை விட ஒலிவ்(Olive) மரத்துக்கே ஏசுவுடன் அதிகக் கூடிய சம்பந்தம் உண்டு. இந்த கிறிஸ்மஸ் மர அலங்காரம் சுமார் 600 வருடங்களுக்கு முன் ஜேர்மனியின் டோர்ட்முண்ட்(Dortmond) நகரத்தில் ஒரு தொழிற்சாலை தொழிலாளியால்(Factory worker) அறிமுகப்படுத்தப்பட்டு அது பின்னர் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாக, அவர்கள் தமது காலனித்துவ நாடுகளிலெல்லாம் அறிமுகப் படுத்திவிட்டனர்.
 
இந்த கிறிஸ்மஸ்சுடன் தொடர்புடைய இன்னுமொரு விடயம் “நத்தார் பப்பா”(Santa Claus) இது முதன் முதலில் ஒல்லாந்தில்( Holland/ Netherlands) உருவாகியது. இதை டச்( Dutch) மொழியில் “சிண்டர் க்லாஸ்”(Sinter Klaas) என்பர். இது பரிசுத்த நிக்கலாஸ் குழந்தைகளுக்கான பரிசு பொருட்களுடன் வானலோகத்தில் இருந்து வந்திறங்கியதான ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபு வழி பழக்கத்தை ஒல்லாந்தர் தமது காலனித்துவ பகுதியான “நிவ் அம்ஸ்டர்டாம்” அதாவது இன்றைய “நிவ் யோர்க்”(New York) நகரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அது கிறிஸ்மஸுடன் ஒட்டிய அம்சமாக உருவெடுத்தது. ஆனாலும் ஐஸ்லாந்து(Iceland) நாடே இந்த நத்தார் பப்பாவின் ஆரம்ப இடம் என்ற கதையும் உண்டு.
 
இவை போக கிறிஸ்மஸ் காலங்களில் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கம் முதன் முதலில்1840லேயே பிரித்தானியாவில் அறிமுகமாகி 1870களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி இன்று உலகின் அனைத்து பாகங்களிலும் கைக் கொள்ளப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே ஏனைய சமயத்தினரும் தத்தமது பெருநாட்களில் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தை கைக் கொண்டனர். ஆக கிறிஸ்மஸ் என்பது பைபிளைவிட ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு எனலாம். அதையொட்டிய பழக்க வழக்கங்கள் யாவும் பைபிளுடன், அல்லது கிறிஸ்தவத்துடன் சம்பந்தமில்லாத வெறும் ஐரோப்பிய சிந்தனை என்பது இங்கு தெளிவாகின்றது.
 
மேலும் இந்த கிறிஸ்மஸ் என்ற வார்த்தை கிறிஸ்த்துவின் கடைசி இராப் போசனம் ( last super) அல்லது அந்த நிகழ்வை ஞாபகமூட்டும் நிகழ்வு (eucharist) என்பதில் இருந்து மருவி கிறிஸ்துவுக்கான பூஜை(Christ’s mass) என்றாகி, இப்போது கிறிஸ்துவின் பிறந்த நாளாகக்(birthday) கொண்டாடப்படுகிறது. இருந்தும் இன்றைய கால கட்டங்களில் நிலைமை இன்னும் மாறி கிறிஸ்மஸ் நாளுக்கு முன்பிருந்தே அனேகமாக கார்த்திகை (November) மாதத்தில் இருந்தே வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்மஸ் களை கட்ட தொடங்குகிறது.
 
வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மேலே நாட்டு கிறிஸ்மஸின் பொருளும் நோக்கமும் தலை கீழாக மாறிவிட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களையும்(Church), அதனோடு சார்ந்த அமைப்புகளையும் தவிர்ந்த மற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் ஓன்று கூடல்கள்(Christmas party), ஏசுவை ஒரு கணம் கூட நினைவு கூறாமல் தாராளமாக உண்டு குடித்து, ஆண் பெண் இரண்டரக் கலந்து ஒரு வகை கேளிக்கை அல்லது காதலர் தினம் போல கொண்டாடப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். வர்த்தக நிறுவனங்களும் கிறிஸ்மஸ் என்ற பெயரில் எதை எதை எல்லாம் விற்க முடியுமோ அவற்றை விற்று தமது பண நோக்கத்தை இனிதே நிறைவேற்றுவர். இந்த கிறிஸ்மஸ் சாப்பாடு, மற்றும் பரிசு பொருட்கள் கிறிஸ்மஸ் புடிங்க்(Christmas Pudding) கிறிஸ்மஸ் கேக், வைன் என்று ஆரம்பித்து, தங்கம், வைரம் கார் என்று முடிவடையதையும் அனேகம் பேர் பார்த்திருப்பீர்கள். இதில் என்னை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கிய விடயம் கிறிஸ்மசுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் “கிரிப்ஸ்மஸ்”(cripsmass) என்ற கிழங்கு பொரியல் பக்கட்டுகள்தான். எவ்வளவு தூரம் ஏசு நாதரின் பிறந்த நாள் மலிவுபடுத்தப்பட்டுள்ளது?
 
நிற்க, கிறிஸ்தவத்தின் புனித நூலான “பைபிள்” க்கு புறம்பாக எந்த சமய நூலும் கிறிஸ்தவம் பற்றியோ ஏசு வின் பிறப்பு பற்றியோ அல்லது அவரின் தாயார் மரியாள் பற்றியோ எங்கும் எப்போதும் இருந்ததில்லை என்று சொன்னால் அதை மறுக்க எந்த கிறிஸ்தவரும் முன்வரமாட்டார். ஆனால் அதே நேரத்தில் ஏசுவை பற்றியும், எசுவின் தாயார் கன்னி(vergin) மரியாள் பற்றியும் ஏன் கிறிஸ்மஸ் பற்றியும் பைபிளை விட அதிகம் பேசுவது “குர்- ஆன்” (Kur- ann)என்றால் ஆச்சரிய மேலீட்டால் மூக்கில் கைவைப்பவரும் அப்படியா என்று வாய்பிளப்பவரும் நம்மில் அதிகம் பேர் என்பது மறுக்கமுடியாத விடயமாகும்.
 
இந்த அடிப்படையில் உங்களை புனித குர்-ஆன் பக்கம் சற்று அழைத்துச் செல்கிறேன். புனித குர்- ஆனின் 19ம் அத்தியாயம் ( ஸூரா- chapter) “மரியம்”(மரியாளுக்கான அறபு பெயர்) (Mary) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்போது உங்களை அத்தியாயம் 19 வசனம் 28ன் பக்கம் அழைத்துச் செல்கிறேன். ஏசு பிறந்த பிற்பாடு மரியாள் பாலகன் ஏசுவை தன் இன சனத்திடம் கொண்டு செல்லும் காட்சி வர்ணிக்கப்படுகின்றது. ” கன்னித் தாயையும் அவர் கையில் பிள்ளையையும் கண்ட உறவினர்,” ஓ! ஹாருனின் சகோதரியே, உமது தகப்பன் எந்த கெட்ட செயல்களின் பக்கமும் தமது நாட்டத்தை செலுத்தாதவர், உமது தாயாரோ தகாத உறவு பற்றி மனதிலும் எண்ணாதவர். இப்படியிருக்க என்ன காரியத்தை செய்துள்ளிர். இது எமது மரபுக்கும் வழமைக்கும் மாறான செயல்லலவா?” என்று வினா தொடுத்தனர்.
 
இப்போது, அத்தியாயம் 19 வசனம் 29ன் படி, “அப்போது கன்னி மரியாள் தன் பாலகனை சுட்டுகிறார். இந்த பாலகனுடன் நாங்கள் எப்படி கதைக்க முடியும்? நீரே பதி சொல்லும் என்றார்கள் கூடியிருந்தோர். அப்போது பாலகன் ஏசு வாய் திறந்து பேசுகிறார்”, ” நான் இறைவனின் சேவகன், இறைவன் எனக்கு நல்லுபதேசம்(good news) தந்துள்ளார். என்னை அந்த இறைவன் ஒரு தூதராக(messanger) ஆக்கியுள்ளார். நான் இந்த உலகத்தில் வாழும்வரை இறைவணக்கம் செலுத்துவதில் உறுதியாக இருக்கும் படியும், ஏழைகளுக்கு அவர்களுக்குரியதை கொடுக்கும் படியும் கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளார். நான் போகும் இடங்களில் எல்லாம் ஆசிர்வாததிக்குட்படும் விதத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆகவே நான் பிறந்த நாளின் மீதும், நான் இறக்கும் நாளின் மீதும், நான் மீண்டும் எல்லாரும் போல் எழுப்பபடும் நாளிலும் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ” என்றார்.
 
ஆகவே இங்கு நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், ” நான் பிறந்த நாளில் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்ற ஏசுவின் கூற்றாகும். இப்போது சொல்லுங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட பைபிளை விட குர்-ஆன் ஒரு வகை அதிகாரம் அளிக்குமாற் போல் உள்ளது அல்லவா? ஆகவே அனேக முஸ்லீம்களின் மனதில் எழும் கேள்வி சாந்தியும் சமாதானமும் கொண்ட ஒரு நாளை கொண்டாடுவதில் என்ன தப்பு? என்பதே. ஆனால் இதில் உள்ள சிக்கல் மார்கழி 25 என்பதும், கிறிஸ்தவரின் நடவடிக்கைகளுமே.
 
சூரிய காலக்கணிப்பீட்டுக்கு முன் நடைமுறையில் இருந்த காலக்கணிப்பு சந்திர காலக்கணிப்பு என முன்னர் பார்த்தோம். எனவே அந்த முறைப்படி கணக்கிட்டு அதை சூரிய வருட நாட்களோடு ஒப்பிட்டு முதல் கிறிஸ்மஸ் 25.12. 336ல் கொண்டாடப் பட்டிருந்தால், 337ம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் 14.12.337லும் 338ல் அது 04.12.338லும் அது 339ல் கார்த்திகை(November) 22லும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வருடத்திலும் சுமார் 11 நாட்கள் முன்னோக்கி சென்று கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க இது 25.12 என்று நிலையாக நிற்கும் போது ஒரு வருடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்படாமலும், இன்னுமொரு காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்கும். ஆதாவது இந்த சாந்தியும், சமாதானமும் நிறைந்த நாளை விட்டுவிட்டு, சம்பந்தம் இல்லாத வேறு நாட்கள் சாந்தியும், சமாதானமும் உடைய நாளாக கொண்டாடப்பட்டிருக்கும் என்பதோடு இப்போதும் அப்படியே இது நடை பெற்றுகொண்டும் இருப்பதை அவதானிக்க முடிகிறதல்லவா?
 
கிறிஸ்தவ உலகம் சந்திர அடிப்படையில் இதை சரியாக கணித்து கிறிஸ்மஸ் கொண்டாட முயற்சிக்கும் போது, முஸ்லிம்களும் அதில் இணைந்து கொண்டு ஏசுவை நினவு கூற வாய்பிருப்பினும், அதாவது இறைவனின் தூதர்களுக்கிடையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை, எல்லாரும் சமமானவர்களே என்றும், ஏசுவை இறைதூதுவராக ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்று குர்-ஆன் திட்டவட்டமாக கூறுவதாலும், முஸ்லிம்கள் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாளை கொண்டாடுவதாலும், ஏசுவின் ஒர் இறைக் கொள்கையை மெருகூட்ட வந்த முஹமம்துவின் பிறந்த நாள் போல் ஏசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஏதும் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. இலங்கையில் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாள் தேசிய “மீலாத் விழா” வாக கொண்டாடப்படுகின்றது.
 
 இங்கு கிறிஸ்மஸ் போன்று கொண்டாடங்கள் நடைபெறாமல் முற்றும் முழுதாக சமய நிகழ்வுகளும், சமயம் சம்பந்தமான, அறிவு பூர்வமான, நடைமுறை உலகம் சம்பந்தமான மாணவர், வழர்ந்தோருக்கான போட்டி நிகழ்வுகளும் இடம் பெறும். இது கலாச்சார அமைச்சின் அனுசரனையுடன் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்ட ரீதியில் கொண்டாடப்படுகிறது. அதே போல் கிறிஸ்மஸும் கொண்டாடப்படுமானால் அது காத்திரமானதாக இருக்குமல்லவா?
 
எனது மேற் சொன்ன தர்கத்தை கேட்டு, சரி எல்லாரும் கிறிஸ்தவர் போல் கிறிஸ்மஸ் கொண்டாடுவேம் என்று பொருள் கொண்டால் அதிலும் ஒரு பாரிய சிக்கல் உள்ளதை நாம் முதலில் காணவேண்டும். அதாவது பிறந்த நாள் கொண்டாடும் போது எல்லா சந்தர்பங்களிலும் பிறந்த நாளைக் கொண்டாடுபவருக்கே பரிசு பொருட்கள் கொடுப்போம் அல்லது ஆகக் குறைந்தது அந்த பிறந்த நாள் காரருக்கு எல்லாம் நன்றாக அமைய கடவுளை பிரார்திப்போம். ஆனால் சந்தர்ப்பவசமாக கெளதம புத்தருக்கு நடந்தது போல், அதாவது என்னை பின்பற்றி நிர்வாண நிலையடையுங்கள் என்பதை பிழையாக அர்த்தப்படுத்தி அல்லது அதை இலகுவாக்கி அவரின் போதனைக்கு எதிராகவே அவரை ‘கடவுள்’ நிலைக்கு கொண்டு சென்று வணக்கம் செலுத்துவது போல, பிறந்த நாள்ளுக்குரியவரிடம் சென்று நமக்காக மன்றாடுவது என்பது இஸ்லாமிய இறையியல் கொள்கைக்கு எதிரானது எனவே கிறிஸ்தவர்கள் போல் முஸ்லிம்கள் ஏசுவிடம் ஒன்றும் கேற்க முடியாது, கேற்கற் கூடாது. ஏனெனில் அவரும் முஹம்மது போல் இறைவணால் படைக்கப்பட்டவர்.
 
வருடத்தில் ஒருமுறை ஏசுவிடம் எமது தேவைக்காக மன்றாடுவதற்குப் பதிலாக தினந்தோறும் அதுவும் ஐந்து வேளை முஸ்லிம்கள் ஏசுவுக்காகவும் மன்றாடுகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவணை தொழ வேண்டும் என்பது அனேகர் அறிந்த விடயம். இதில் இரண்டு தொழுகை அனுஸ்டாண முறை மற்றைய மூன்றைவிட வித்தியாசமானாலும், ஒவ்வொரு தொழுகையையும் முடிவுக்கு கொண்டுவர முன் செய்யும் நீண்ட ஜெபத்தில் ஆபிரகாமுக்கும், அவரின் கிளையாருக்கும், அதாவது அவரின் இரண்டு பிள்ளைகளான இஸ்மாயில்(Ismaeal), ஈசாக் (Ishaq)குக்கும் அவர்களின் கிளையாருக்கும், அதாவது ஏசுவும், முஹம்மதும் இந்த மேற்சொன்ன இருவரின் பரம்பரையில் பிறந்தவர்கள், இறைவணின் பாதுகாப்பையும், ஆசிர்வாத்தையும் வேண்டி பிரார்திப்பதால், கிறிஸ்மஸ் கொண்டாட காலத்தில் ஏசுவை நினைக்காமல் வெறும் களியாட்டத்தோடு நின்றுவிடுவர்களிலும், அல்லது பிறந்த நாள்காரரிடமே சென்று நமக்கு எல்லாம் நன்றாக அமைய கேற்பர்களில் இருந்தும் நாம் வேறுபட்டவர்கள்.
 
ந்த மாபெரும் உண்மையை மறைத்துவைத்து பைபிள் சொல்லாத ஒரு விடயத்தை, ஏசு அனுமதிகாத ஒரு விடயத்தை, ஏசு அறிந்தே இருக்காத ஒரு விடயத்தை இந்த பாதிரிகளும்,கன்னியாஸ்திரிகளும், அவர்களின் மேதகு தலைவர் பாப்பரசரும், அவரின் அதிகார பீடமான வத்திக்கானும் கோடான கோடி பக்தர்களை இருளுக்குள் வைத்து , உண்மையை அறிவதற்கான அவர்களின் உரிமையை மறுத்து ஏய்ப்பதைவிட, ஏசுவின் நாமத்தை கேற்கும் தோறும் அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக(peace be upon him)என்று மனதுக்குள் வாழ்த்தும் ஒரு சராசரி முஸ்லிம் ஏசுவுக்கும், அவரை படைத்த இறைபனுக்கும் மிக நெருங்கி இருக்க தகுதியுடையோன். கிறிஸ்மஸ் கொண்டாட ஒருவகையில் உரிமையுடையோன்.
 
இதையும் பார்க்க:-
 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget