2017

இன்று சமூக வலைத்தளங்களுக்கு சமூகத்தில் இருக்கும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மக்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் சமூகமயமாக்கப்பட்டமை பெரும் வியப்பான விஷயமே!
எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அலைந்து திரியும் எத்தனையோ மக்கள் அதன் மூலம் தமக்கு பிரயோசனம் என்ற விஷயத்தை விட வெறும் ‘டைம் பாஸிங்‘ என்ற விஷயத்தையே முதன்மைப்படுத்துகின்றனர். இதனூடாக பிரயோசனம் அடையக் கூடியவர்களை எடுத்துக் கொண்டால் தத்தமது ஆர்வங்களுக்கும், ஈடுபாடுகளுக்கும் ஏதுவான பல்வேறு விஷயங்களை தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.விளையாட்டு, சுகாதாரம், மருத்துவக் குறிப்புக்கள், சமயம், சமூகவியல் என பல்வேறு துறைகளில் நாளாந்தம் பலதரப்பட்ட செய்திகளையும் ஆக்கங்களையும் நம்மில் பலர் சமூக வலைத்தளங்களின் ஊடாக பெற்றுக் கொள்கின்றனர். 
குறிப்பாக சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தமது உடலில் இருக்கும் நோய்களுக்கு அல்லது தமது அன்புக் குரியவருக்கு இருக்கும் வியாதியை குணப்படுத்திக் கொள்ள “இயற்கை வைத்தியம், பக்கவிளைவுகள் அற்ற மூலிகை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம்” என பல்வேறு கோணங்களில் பெரும் பெரும் வியாதிகளுக்கான மருத்துவக் குறிப்புக்களை பறிமாரிக் கொள்கின்றனர். இவை அனைத்தும் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி இருந்தும் அதைப்பற்றி எந்தக் கவனமும் இல்லாமல் ‘வாட்ஸ் அப்பில் வந்தது’, ‘முக நூலில் வந்தது‘ என சொல்லிக் கொண்டு குறித்த மருத்துவக் குறிப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களினூடாக ‘டாக்டர் ஆகிவிட்டனர்’என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.
இதே ஆர்வக் கோளாறை மார்க்க சட்டங்களை பகிரும் விஷயத்திலும் நாம் பார்க்கின்றோம். இன்று சிலருக்கு புகாரி, முஸ்லிமில் பதியப்பட்ட செய்திகளுக்கு கொடுக்கும் அந்தஸ்தை ‘வாட்ஸ்; அப்’, ‘முகநூலில்‘ வரும் செய்திகளுக்கு கொடுப்பதை பார்க்கின்றோம். “மார்க்க அறிவில் முஸ்லிம் சமூகம் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது” என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் எதும் தேவையில்லை.
மார்க்க அறிவை பெற்றுக் கொள்ளும் மிகப் பெரிய நல்லறத்தை ‘மார்க்கத்தை கற்றவர்களிடம்’ இருந்து பெரும் நடைமுறை மலை ஏறி ‘சமூக வலைத்தளங்களில் அறிமுகமற்றவர்கள் பதிவிடும் செய்திகளை தலை மேல் கொண்டு செயற்படும் புதிய ஸ்டைல்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்நிலையானது நமது சமூகத்தை விட்டும் ‘அறிவு உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது‘ என்பதற்கு எடுத்துக் காட்டாகும். ‘மறுமை நெருங்கி விட்டது‘ என்பதனையும் பறைசாற்றுகின்றது.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் 1036 ஆம் இலக்கத்தில் பதியப்பட்டுள்ளதாவது…
“அறிவு உயர்த்தப்படும் வரை, பூமி அதிர்வுகள் அதிகமாகும் வரை, மறுமை நிகழாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றவர்களோடு பகிரவும், “நண்பர்களுக்கு தெரியப்படுத்தி சுவனத்தை அடைந்து கொள்ளவும்” அல்லது “நரக நெருப்பை விட்டும் காத்துக் கொள்ளவும்” என்று இறுதியில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை எந்த ஒரு கேள்வி பார்வையும் இன்றி சிலவேளை குறித்த செய்தியை ஒரு யூதனனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது ‘நம்மில் இருக்கும் ஒரு நயவஞ்சகன்‘ கூட பகிர்ந்திருக்கலாம் என்ற ஒரு ஜயப்பாடு ஏதும் இன்றி அப்படியே பகிர்வது கவலைக்கிடமான நிலையாகும்…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.” அல் ஹுஜ்ராத் 6
சாதாரன மக்கள் நடந்து இவ்வாறு செய்திகளை எந்த ஒரு ஆய்வும் இன்றி அனுப்பினால் பரவாயில்லை. உலமாக்களின் வாட்ஸ் அப் குழுமங்கள், அசிரியர்களின், பட்டதாரிகளின் குழுமங்களிலும் இந்த நிலை நீடிக்கின்றமை ‘எந்த அளவுக்கு மார்க்க அறிவில் நாம் பலகீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
குறித்த செய்திக்கு சொந்தக்காரன் யார்? அல்லது இந்த செய்தியின் மூலம் இவர்கள் எதிர்பார்பது என்ன? உண்மையில் ‘சமூகநலன் அல்லது அமல்களில் ஆர்வம் ஊட்டல்’ என்பன இங்கு நோக்கப்படுகின்றதா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்க முற்பட வேண்டும். 

இல்லாவிடில், இப்படிப்பட்ட செய்திகளைப் பகிர்வதனால் சமூக நலன், மார்க்க நலன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் சமூகத்தில் பெரும் குழப்பங்கள், சச்சரவுகளும் மேலிட்டு இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இஸ்லாத்தை விட்டும் தூரமான பல்வேறு பிரிவினரின் கொள்கை கோட்பாடுகள் மிக இலகுவில் நமது சமூகத்தில் தாக்கம் செலுத்தி நாளடைவில் எது சத்தியம்? எது அசத்தியம்? என பிரித்தரிய முடியாது போகும்.
தூய இஸ்லாமிய கொள்கையை பாதுகாத்திட!
குறிப்பாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ‘ஷூஃபியிசம், காதியானிசம் மற்றும் முஃதஸிலா, அஷ்அரிய்யாக் கொள்கைகள் சில குறிப்பிட்ட உலமாக்களை(?) தங்களது கையாட்களாக ஆக்கிக் கொண்டு, பாமர மக்களுக்கு மத்தியில் கட்சிதமாக பரப்பப்படுகின்றமையை காணமுடிகின்றது. கபுரு வணக்கம், இணை வைத்தல், இன்னோரன்ன நூதன அனுஷ்டானங்கள் (பித்அத்துகள்) இலகுவில் ஒலி, ஒளி வடிவில் பொது மக்களை சென்றடைய இந்த சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
மக்கள் வெறும் வெளித் தோற்றத்தை வைத்து, “இவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் தான்” என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு அவர் வாயில் இருந்து வரும் அனைத்தையும் நம்பி அவற்றுக்கு மார்க்க அங்கீகாரம் வழங்கி, தலைமேல் கொண்டு செயற்பட ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையில் இப்படிப்பட்ட மோசமான இயக்கங்களின் பங்காளிகள் அல்லது இவ்வியக்கங்களிடம் இருந்த பணம் மற்றும் இன்னோரன்ன இனிப்புக்களை (வெளிநாட்டு பயணம்) பெற்றுக் கொண்டு இந்த ஆலிம்ஷாக்கள் சில அரசியல் வியாபாரிகளை ஒத்த பெரும் தில்லுமுல்லுகளை செய்கின்றனர் என்ற உண்மை உணரப்படாத ஒன்றாகவே இன்னும் இருக்கின்றமை கவலைக்குரியது.
குறிப்பாக இந்த  கைங்கரியத்தை ஷியாக்கள் மிக கச்சிதமாக உலகின் எல்லாப் பாகங்களிலும் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது கொள்கைகளை பரப்புவதற்கு ‘தரீக்கா வாதிகளை’ மற்றும் ‘கபுரு வணக்கத்தை ஆதரிக்கும் மௌலவிமார்களை‘ பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
உலகின் சில அற்ப இன்பங்களுக்காக மக்களை வழிகடுக்க முற்படும் இப்படிப்பட்ட இயக்கங்களின் புரோகிதர்களை சமூகம் இனங்கான வேண்டியது காலத்தின் தேவையாகும். இதில் மிகப் பெரும் வேடிக்கை என்னவென்றால், ‘நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் தான் பின்பற்றுகின்றோம்‘ என சொல்லிக் கொண்டு கிலாபத் கோஷம் எழுப்பக் கூடிய இயக்கங்கள் கூட ஷியாக்கள் விஷயத்தில் ‘முன்னுக்கு பின் முரனான கருத்துக்களை‘ பதிவு செய்து கேவலப்பட்டுள்ளனர். 

உறுதியானதும் உண்மையானதுமான நிலைப்பாட்டை சமூகத்திற்கு சொல்ல மறுக்கும் மேற்படி இயக்கங்கள் ஷியாக்களின் கொள்கைகளில் ஒன்றாகிய ‘தக்கிய்யா‘ கோட்பாட்டை (உள்ளே ஒன்றை மறைத்து வெளியே ஒன்றை சொல்லுவது) ஷியாக்களின் விடயத்தில் எடுத்துக் கொண்டுள்ளமை மிகப் பாரதூரமான விடயமாகும். நமது சமூகத்தில் இன்னும் ஷியாயிஸம் ஆலவிருட்சமாக வளர்ந்திட இந்த வகை மெத்தனப் போக்கு பெரும் வழிவகுக்கும்  என்பது உள்ளங்கை நெல்லிக் கணியே…
சமூகம் எக்கேடு கெட்டாலும் ‘நமது இயக்கமும்’ இயக்கவாதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்‘ என்ற எண்ணம் இவர்களிடம் இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய தூய கொள்கையை ஆக்கிரமிக்கும் மேற்படி ஷியாயிஸம்காதியானிசம் என்பவற்றை பற்றி மக்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்வதை விட்டும் பராமுகமாக இருக்கின்றமையும் நோக்கத்தக்கது.

குடும்ப கட்டமைப்பு சீரழியும் அபயாம்…
குடும்ப அழகு இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை பரவலாக உணரமுடிகின்றது. ‘கணவன் – மனைவி’ ‘தாய் – பிள்ளை’, ‘தகப்பன் – பிள்ளைகள்’, ‘சகோதர – சகோதரிகள்‘ என்று குடும்பத்தின் பிரதான அங்கங்களுக்கிடையில் தூரத்தை ஏற்படுத்திய பெருமை ‘நவீன சமூக வலைத்தளங்களையே’ சேரும். மனதிற்கு கவலையான அல்லது துன்பமான ஒரு நிகழ்வு நடக்கும் போது அதைப் பற்றி நெருங்கிய குடும்ப உறவுகளிடம் பேசக் கூடிய நிலை இன்று குறைந்து விட்டது. எல்லோரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதனால் தங்களது உணர்வுகளையும் இந்த வலைத்தளங்களிலே பதிவிடுகின்றனர். 

வீட்டுக்குள்ளே இருந்து பேசித் தீர்க்க வேண்டியதை முழு உலக மக்களும் பார்க்கும் படி பகிர்கின்றனர். ‘நான் இன்றைய காலைப் பொழுதில் கவலையாக இருக்கின்றேன்‘ என்று பதிவிட்டு யாராவது மனம் ஆறுதல் அடையும் படியான வாசகங்களை பதியமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இலவு காத்த கிளியாக ஏங்கி நிற்கும் எத்துனை இளவல்களை நாளாந்தம் காண்கின்றோம். அதிலும் குறிப்பாக எதிர்பால் நபரின் ஆறுதல் வார்த்தை கிடைக்க பெற்றால் (சில வேலை போலி பெயரில் கூட இருக்கலாம்) நமக்கு ஆறுதல் சொல்லிவிட்டாளே! அல்லது சொல்லிடானே! என பூரிப்படைவோர் எத்தனை பேர்….

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அர் ரஅத் 28)
இவ்வாறான தெளிந்த வழிகாட்டல்கள் நம்மைப் படைத்தவனிடம் இருந்து வந்திருந்தும் அல்குர்ஆன் ஊடாகவோ அல்லது தொழுகையின் ஊடாகவோ மன நிம்மதியை தேடுவதை விட்டு விட்டு இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்களில் திருப்தியையும், மனநிம்மதியையும் தேடுவோர் ஏராளம்! ஏராளம்!
இதனால் கயவர்கள், காமுகர்கள் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வாலிப வயது பெண் ஒருவர் தனது மன உளைச்சலை முகநூலில் வெளியிடும் போது குறித்த பெண் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு அவளை துஷ்பிரயோகம் செய்யும் வரை அவள் அறிந்து கொள்வதில்லை!
இவ்வாறு சீரழிந்தவர்கள் நமது சமூகத்திலும் ஏராளமானவர்கள் உள்ளனர். இஸ்லாம் அனுமதிக்காத உறவை சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்திக் கொள்வோர் சில வேலைகளில் திருமணம் வரைக்கும் தங்களது உறவு நீடித்தாலும் திருமணத்தின் பின் பல்வேறு ஜோடிகள் இந்த சமூக வலைத்தளங்களிலே தமது தலாக்கை அல்லது பிரிவை பதிவு செய்வதை பார்க்கின்றோம்.
எதிர்பால் நட்பு வட்டம் சர்வசாதாரனமாக சமூக வலைத்தளங்களில் உருவாகின்றமை குடும்ப வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. மனைவிக்கு  கணவனை விட நெருங்கிய நண்பன் அல்லது நண்பர்கள் இருப்பது, கணவனுக்கு மனைவி அல்லாத நண்பிகள் இருப்பது என்பது கூட சாதாரன விஷயமாகிவிட்டது.
ஐரோப்பிய கலாசரத்திற்கு ஒப்பான இந்நிலையானது திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் இருக்கமான உறவை இல்லாமலாக்கி சந்தேகம், தீய எண்ணங்கள் வளர்ந்திட காரணமாகின்றது. ஷைத்தானுக்கு மிகவும் உவப்பான செயலாகிய கணவன் – மனைவிக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்துவதை சமூக வலைத்தளங்களை ஆயுதமாக பயன்படுத்தி சந்தேகம் மற்றும் புரளிகளை ஏற்படுத்தி கட்சிதமாக முடித்துக் கொண்டு இருக்கின்றான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்….
ஓய்வு நேரங்களை வலைத்தளங்களில் வீணாக கழித்துக் கொண்டிருப்போர், தனது ஓய்வு நேரம், தனது வயது, தான் சம்பாதித்தது போன்ற பல்வேறு கேள்விகளை இறைவன் மறுமையில் விலாவாரியாக விசாரிப்பான் என்பதை மறந்துவிடலாகாது. இறைவனின் சன்னிதானத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது…
நாம் உலகில் கழித்த ஒவ்வொறு வினாடியும் அங்கே பதியப்பட்டு அப்படியே எல்லோருக்கும்  முன்னால் நமக்கு காண்பிக்கப்படும். கௌரவப் பிரச்சினைக்காக தனிமையில் தவறு செய்வோரின் பார்வை அன்றைய தினம் நிலைகுத்தாகுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது போகும். உலகில் நாம் அனுபவித்த செல்வம், செழிப்பு மற்றும் இன்னோரன்ன பதவி, பட்டங்களின் மூலம் அன்றைய தினம் எந்த பிரயோசனமும் கிடையாது…

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்! இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்! அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான். (அல் மஆரிஜ் 44)
எனவே இந்த நாளை பயந்து நமது மனோஇச்சைக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவோமாக!
நாம் வாழும் காலப்பகுதி இறையச்சத்திற்கு மிகவும் சவாலான காலமாகும். நாம் ரமழானில் பெற்ற இறையச்சத்திற்கான பயிற்சிகளை பெருநாளோடு மறந்து விடாது தொடர்ந்து இறையச்சம் உடைய அடியார்களாக வாழ்ந்தால் மாத்திரமே ஈருலக வாழ்க்கையின் வெற்றியும் உறுதி செய்யப்படும்.
இறைவனை எல்லா நிலைகளிலும் அஞ்சி சமூகவலைத்தளங்களை அவனுக்கு விருப்பமான விதத்தில் மாத்திரம் பயன்படுத்திட உறுதிபூனுவோமாக!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.  
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.
அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

“அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?.
“அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).
ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.
அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக்கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புரம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறு புரம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மிலியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.
இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:
“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).
பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).
அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.
அல்லாஹ்வுக்கா நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).
இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவரான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது ” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4). என்று போற்றுகிறான் அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.
கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்து கொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.
இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

“அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” (9: 62).
                                                                           மௌலவி :- அஸ்ஹர் ஸீலானி

தற்காலத்தில் நடைமுறையில் உள்ள இழப்பீட்டை பெறுவதற்கான காப்புறுதி முறைகள் அனைத்தும் சூதின் ஓர் வகையாகும்.
ஓர் வாகனம் பாதிப்புக்குள்ளாகின்றது. மூன்று இலட்சம் நஸ்ட ஈடாக காப்புறுதியின் மூலம் பெற்றுக்கொள்கின்றார். ஆனால் இதுவரை அவர் காப்புறுதிப் பணமாக கட்டியது 25000 ரூபாய் மட்டுமே.
இங்கு அவருக்கு சொந்தமான அவர் கட்டிய பணம் 25000 ரூபாய்கள்.  ஆனால் அவர் இழப்பீடாக பெற்ற மூன்று இலட்சம் ரூபாயில் 275000 ரூபாய் அவருக்கு எந்த வகையில் உரிமையானது.
வியாபாரம் செய்து ஆதாயமாக பெற்றுக் கொண்டாரா ? அது இல்லை. வட்டிக்கு கொடுத்து வட்டியாக பெற்றாரா ? அது ஹராம்தான். என்றாலும் அதுவும் இல்லை. எனவே அது யாருடைய பணம் ?
உண்மையில் இவரைப் போன்று அங்கே பலர் காப்புறுதியின் பெயரால் பணம் செலுத்தி வருகின்றார்களே அவர்களின் பணம் தான் இங்கே இவருக்கு கிடைக்கிறது.
அவர்களுக்கு ஆபத்துகள் நடக்காததால் அந்தப் பணம் மீளவும் கிடைக்காது. கேட்டுப் பெறவும் முடியாது. இங்கு சூது விளையாடுகின்றவர்களின் செயலுக்கு ஒப்பான ஒரு விடயம் நடைபெறுவதை அவதானிக்கலாம்.
பலர் பணத்தை கட்டுவார்கள். ஒருவர் அல்லது சிலர் எல்லோரின் பணத்தையும் அவ்விளையாட்டில் வெற்றிபெற்றவன் என்ற பெயரில் எடுத்துக்கொள்வார்.
இதை நாம் சூது என்கின்றோம். அதன் வடிவங்கள் ஊருக்கூர்,இடத்துக்கிடம் வௌவேறாக இருந்தாலும் இறுதியாக பலரின் பணத்தை ஒருவர் உரிமையில்லாமல் சுருட்டிக்கொள்வதை சூதாகவே கருதப்படும்.
தான் காப்புறுதி செய்தி பொருளுக்கு ஆபத்து ஏற்பட்டவன் வெற்றிபெற்றவன் போன்றும் ஆபத்துகள் ஏற்படாதவர்கள் தோல்வியடைந்தவர்கள் போன்றதுமான ஓர் நிலையை இங்கே உணரமுடிகிறது.
பாதிக்கப்பட்டவர் இவர்களின் பணத்திலிருந்து பாதிப்பின் அளவிற்கு எடுத்துக்கொள்கின்ற இந்த நிலையில் இந்த காப்புறுதி நிலையத்தை நடத்துபவர் மிகுதி அனைத்துப் பணத்தையும் எவ்வித உரிமையும் இன்றி முழுமையாக விழுங்கிக்கொள்கின்றார்.
கடனாகத் தந்தேன் திருப்பித் தாருங்கள் என்று கேட்கவும் முடியாது. அல்லது வியாபாரத்திற்கு தந்தேன் . என் முதலீட்டின் அளவிற்கு ஆதாயத்தை தாருங்கள் என வியாபார உரிமையும் கோரவும் முடியாது.
இங்கு நடப்பது என்ன? பெரிய அளவிளான சூதுக் கம்பனி ஒன்று நடைபெறுகின்றது.அதன் மூலம் அதை நடத்துபவர்கள் நூதனமான முறையில் திட்டமிட்டு நமது பணத்தை அபகரித்துக் கொள்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு இங்கு ஓர் சிறிய கணக்கு போட்டுக்கொள்வோம்.
காப்புறுதியின் பெயரால் மாதாந்தம் பணத்தை கட்டுபவர்கள் 1000 பேர். ஆவர்கள் மாதாந்தம் கட்டிய தொகை ஒருவருக்கு 5000 ரூபாய் பிரகாரம் 5000000 (ஐம்பது இலட்சம்). ஒருமாதத்தில் விபத்துக்குள்ளானவர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த இழப்பீடு 2500000 ரூபாய் . மிகுதி 2500000 ரூபாய் இந்த கம்பனியை நடத்துபவர்கள் செலவுகளாகவும் ,மிகுதியை இலாபங்களாகவும் என எடுத்துக் கொள்வார்கள்.
அந்த 1000 பேரில் விபத்துகளை எதிர்நோக்குபவர்கள் பெரும்பாலும் சுமார் 50 பேருக்கு உட்பட்டவர்களாக இருப்பதையே சாதாரணமாக கண்கூடாக கண்டு வருகின்றோம்.
இதனாலேயே இவ்வாறான காப்புறுதி நிறுவனங்களை ஆரம்பித்து கொள்ளை இலாபம் பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதே வேளை எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய சுனாமி , புயல் , வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து சொத்துகளும் அழிய வேண்டி ஏற்பட்டால் அனைவருக்கும் நஸ்டயீடு கொடுக்க வேண்டிவரும்.
ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்படுவதால் இந்த நிறுவனங்கள் கைவிரிக்கின்ற நிலைகளில் ஆகுவதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதாவது காப்புறுதி மூலம் கட்டப்பட்ட மொத்தத் தொகை ஐந்து கோடியாக இருக்கின்ற வேளையில் காப்புறுதி செய்யப்பட்ட பொருள்களுக்கான மொத்த இழப்பீடு ஐம்பது காடியாக இருந்தால் எங்கிருந்து அந்த இழப்பீட்டை கொடுப்பார்கள்.
இது போன்ற நிலைகள் அனர்த்தங்கள் ஏற்பட்ட நாடுகளில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாளாந்த செய்திகளை படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
எனவே முஸ்லிம்களான நாம் இது போன்ற பிழையான வழிகளில் பணம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் பிழைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்காமல் அவ்வாறான வழிகளை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை இதற்கு முன் இதைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாத நிலையில் நாங்கள் இழப்பீடுகள் பெறும் நோக்கில் பணம் கட்டியிருந்தால் நாம் கட்டிய தொகையை மட்டுமே ஏதும் இழப்பு வந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கப்பால் நாம் வரம்பு மீறி பிறர் சொத்தை எடுத்துவிடக் கூடாது.
அல்லாஹ் கூறுகின்றான்
(விசுவாசம் கொண்டவர்களே உங்களின் பொருள்களை உங்களுக்கிடையில் பிழையான முறையில் உண்ணாதீர்கள்.)அல்பகரா-188 இதே வேளை இன்று இதை நியாயப்படுத்துவதற்காக அவற்றின் மூலம் இலாபம் அடையும் பலர் இதற்கு ஹலால் பத்வா தேடி அலைகிறார்கள்.
இதிலே தனிநபர்கள் உள்ளதைப் போன்று இஸ்லாத்தின் பெயரால் சில நிறுவனங்களும் இந்தக் காப்புறுதிற்கு ஹலால் பத்வா கொடுத்து வருவதாக கேள்விப்படுகின்றோம்.
சகோதரர்களே இலகுவாக வருமானத்தை ஈட்டுவதற்கு வழி கிடைக்காதா ? என குறுக்கு வழியை முஸ்லிம்களே இன்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் நமக்கு நியாயமாக படாவிட்டாலும் யாராவது சிலர் ஹலால் என தீர்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்தானே என மனதிற்கு சாந்தி சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
நமக்கு சார்பாக இருந்தாலும் நியாயமான முறையில் சிந்தித்தால் பிழையாகவே தென்படுகிறது என்றால் சுயலாபங்களை விட்டுவிட்டு அல்லாஹ் றஸுலின் வழியைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். தவறினால் வழிதவறி விடுவோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
                                                                                      மௌலவி அன்ஸார் தப்லீகி

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் ! என் ஈமானிய உறவுகளே! தட்டி எழுப்புங்கள் உங்கள் மனசாட்சியை ! நிலையற்ற இவ்வுலகத்தில் நிஜமான சில வரிகளை சொல்லபோகிறேன் !

ஆம் உண்மைதான் .
முஸ்லிம் என்ற போர்வையை குளிர்காய்வதற்காக போட்டிருக்கும் என் அன்பு முஸ்லிம்களை பற்றிதான் என் பேனாமை பேசப்போகின்றது . ஏகனை விசுவாசித்த எம் ஈமானிய உள்ளங்கள் இன்று கல்வி , விவசாயம் , வர்த்தகம் என்று எண்ணில் அடங்காத எத்தனயோ துறைகளில் துணிச்சலோடு வீர நடை போடுகின்றது .அதிலும் வியப்பு என்ன தெரியுமா ? எம் முஸ்லிம் சமுதயாம் கல்வியில் வானளவிற்கு வளர்ந்ததை கண்டு வாய்பிளந்து வயிற்றெரிச்சல் கொள்கின்றார்கள் மாற்று மத வாரிசுகள் .

"கல்வி" என்ற மூன்றெழுத்தில் உலகத்தை மட்டும் மட்டிட்டமைதான் இன்றைய கல்வியின் உண்மை நிலை என்றால் அதற்கு மாற்றுகருத்து கூறுவது யாரால் முடியும் ? சற்று சிந்திப்போம் .

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும் மறுக்கமுடியாத ஒரு வரம் தான் மரணம் . இந்த அற்பமான உலகில் தன் பெயருக்குபின்னால் பட்டங்களை அடுக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையை அர்பணிக்கும் மனிதனோ அப்பட்டங்கள் அனைத்தும் தன் மூச்சு சுவாசப்பையில் இருக்கும் வரைதான் என்ற உண்மையை மறந்ததுதான் கவலைகுரியது .... நாம் மண்ணறைக்கு சொந்தங்களாக மாறிவிட்டாலும் கூட எம் சொந்தங்களாக வரவிருக்கும் விடயங்கள் என்று மூன்று விடயங்களை நபி ஸல் அவர்கள் கூறிக்காட்டுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம் ...

"إذا مات بن ادم إنقطع عمله إلا من ثلاث : صدقة جارية و علم ينتفع به و ولد صالح يدعو له"
"ஆதமுடைய மகன் மரணித்தால் மூன்று விடயங்களை தவிர அவனுடைய அமல்கள் துண்டிக்கப்பட்டுவிடும் : நிலையான தர்மம் , பிரயோசனமளிக்கும் கல்வி , அவனுக்காக பிரார்த்திக்கும் சாலிஹான குழந்தை "  சற்று சிந்திப்போம் ! இந்த மூன்று விடயங்களில் விடை பெறும் எம் பிரியாவிடை பயணத்திக்கு நாம் சேர்த்தவைதான் எத்தனை?? பரந்து விரிந்த இந்த உலகத்தில் பதவியை தேடி செல்கிறோம் . ஒரு கணம் சிந்திப்பதை மறந்துவிட்டது எம் உள்ளம் .

மார்க்கத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு நாடு கடந்து செல்கின்ற எக்கல்வியாக இருந்தாலும் அவை அனைத்தும் படைப்பாளனிடத்தில் பயனற்றவைதான் என்பதை மறக்கக்கூடாது . நாம் கற்கும் கல்வி உலகத்தில் எம்மை உயர்த்தினாலும் மறுமையில் கைகொடுக்கவில்லை என்றால் அக் கல்வி ஒரு செல்லாக்காசுதான்.

நாம் கல்வியைகூட வணக்கமாக மாற்றலாம் . ஆம்! எமது கல்வி எப்போது மார்க்கத்தோடு இணைந்து செல்கின்றதோ அந்நொடிப்பொழுதில் அது கூட வணக்கம்தான் . கல்வி என்ற துறையில் கால் தடத்தை பதிக்கும் ஒவ்வொரு ஈமானிய உறவும் "கல்வி"எனும் விடயத்தை கீழ் வரும் துணுக்குகளைக்கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் .

1 - மார்க்கம் அனுமதிக்காத கல்வி
2- மார்க்கம் அனுமதித்த கல்வியை அடையக்கூடிய வழிமுறைகள்.
3 - இறைவனை மறந்த கல்வி 

இம்மூன்றிலும் எம் சமுதாயம் எதை தேர்ந்தடுக்கின்றது என எம் ஆழ்மனதில் கேட்டுபார்ப்போம் . அமைதியாக பதில் சொல்லும் எமக்கு மார்க்கம் அனுமதிக்காத கல்வி அல்லாஹ் தனித்தவன் என்று ஏகத்துவப்படுத்தும் எம் சமுதாய மக்கள் கல்வியென தாம் தேர்ந்தெடுத்துள்ளது என்னவென்று பரீசீலிக்க தவறியதும் ஏனோ ? அதிலும் விஷேடமாக, சிற்பிக்குள் இருக்க வேண்டிய முத்தை போன்ற பெண்கள் சீரழிந்து இருப்பதுதான் கவலைக்குரிய விடயம் ...

நாட்டியக்காரியின் நடனத்தையும் , இழிவாக்கப்பட்ட இசையையும் தனக்குரிய தகைமையென நபிகளாரை ஏற்றுக்கொண்ட பெண் சூட்டிக்கொள்கிறாள். இசைத்துறையில் பங்கு பற்றி முதலாம் இடத்தை தட்டி செல்கிறார் "இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் சிறுமி " எங்கே செல்கின்றது எம் ஈமானிய உள்ளங்கள் ? பாராட்டி கை அசைக்கும் பெற்றோர்கள் .

வெட்கப்படவேண்டாமா ?
ஆம் ! நாம் தேர்ந்தடுக்கும் கல்வியில் இறையச்சம் ஒரு அங்கமாக இல்லாவிட்டால் இறைவனின் வரையறைகளை மீறி அது எவரெஸ்ட் வரை சென்றாலும் அது படுகுழியில் தான் முடியும் என்பதை மறக்கக்கூடாது.
மார்க்கம் அனுமதித்த கல்வியை அடையக்கூடிய வழிமுறைகள்
எம் சமுதாய ஆண்கள் தகுதி இல்லாத அவர்களின் பதவியை தக்கவைத்துகொள்ள சமூகத்தில் அந்தஸ்து இல்லாத, தைரியம் இழந்த அப்பாவிகளின் பதவியை ஆட்பலத்தாலும் பணபலத்தாலும் தட்டி பறிக்கிறார்கள். இக்கைக்கூலியானது அகராதியில் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒரு" லஞ்சம்" என்பதை மறந்துவிட்டோம்.
அது மட்டும் அல்ல, அமல்களில் சிறந்த அமலான போருக்காக தன் பெயரை கொடுத்திருந்த சஹாபியை அதை விட்டு விட்டு ஹஜ்ஜுக்கு செல்லவிருந்த அவருடைய மனைவிக்கு துணையாக செல்லுமாறு கட்டளையிட்ட நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக !!!!!

அனுமதித்த கல்வியாக இருக்கின்ற வைத்திய துறை, மேலும் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுக்கின்ற எம் முஸ்லிம் பெண் பிள்ளைகள் சுமார் ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்கள் மஹ்ரம் இல்லாமல் தனிமையில் பிரயாணம் செய்து கல்வியை தொடர்கின்ற ஒரு அவல நிலையை காண்கின்றோம்.
இதோடு முடியவில்லை. மார்க்க கல்வியை தேர்ந்தெடுத்த எம் சகோதரிகள் இறுதி ஆண்டில் கிடைக்கும் புலமைப்பரிசிலில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு வழிகாட்டியாக இருக்ககூடிய மஹ்ரத்தை மறந்துவிடுகிறாள். மார்க்கத்தை படிப்பது அவள் நோக்கமாக இருந்தாலும் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என்று அவள் கல்வியை தேடும் ஊடகம் ஹராமாக இருப்பதுதான் கண்ணீர்சிந்த வேண்டிய விடயமாக இருக்கிறது.

இறைவனை மறந்த கல்வி
வானம் ,பூமி, கோள்கள் , நட்சத்திரங்கள் ,உடுத்தொகுதி என மாணவர்களை வியப்பிக்கும் அளவுக்கு கல்வியை போதிக்கும் ஆசான்கள் அதற்குரிய படைப்பாளன் "அல்லாஹ் " தான் என்பதை சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டார்கள். தலையை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு கட்டிடத்தை ஒரு பொறியியலாளர் கட்டினால் அவரை தலைக்கு மேல் வைக்கும் எம் சமுதாயம் அவருக்கு சிந்திக்கும் மூளையை கொடுத்தது இறைவன்தான் என்பதை சிந்திக்க தவறிவிட்டார்கள்.

இன்று கப்பலை கட்டி கடலில் விட்ட கண்டுபிடிப்பாளனை கண்டு கண்ணயர்ந்து போகின்றோம் . ஆனால் அக்கப்பலுக்கு கடலை வசப்படுத்தி கொடுத்தவனை கண்ணியப்படுத்த தவறிவிட்டோம். தற்காலத்தில் உள்ள பொறியியல் வித்தைகளை கண்டு மெச்சுகின்ற உலகம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் அது இருந்தது என்பதை அறியாமல் இருக்கின்றது.
பால்வெளி வரையுள்ள படைப்பினங்களை படித்து பதம் பார்த்து விட்டு, அவற்றுக்கு பின்னால் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் எனும் பகுப்பாய்வை பத்திரமாய் பதுக்கிவிட்டு பண்டிதப்படிப்பு என கூறப்படும் இந்நிலையானது ஏகஇறைவனை ஆழ்மனதால் கண்ணியப்படுத்தும் ஓர் இறை அடியானைப்பொறுத்தவரையில் அது பாமரப்படிப்பு தான்!

நாம் இவ்வுலகில் பல தரப்பட்ட கல்வித்துறைகளில் மேலோங்கிப்போனாலும், அது எமக்குள் ஈமானையும் உளத்தூய்மையையும் இறையச்சத்தையும் தான் அதிகரிக்க வேண்டும் என்பதற்கான சான்று எம்மவர்களில் இருந்து பின்வருமாறு!

சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதத்தைப் பற்றி அல்லாஹ் சூரா நம்ல் இல் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான் .
" சுலைமான் நபியவர்களின் மாளிகைக்கு நுழைந்த மகா ராணி தரையில் உள்ளது நீர்தடாகம் என்று எண்ணி அவரது ஆடைகளை கெண்டைகாலுக்கு மேல் உயர்த்தினார் . இதை கண்ட சுலைமான் நபியவர்கள் இது நிச்சயமாக பளிங்குகளினால் வடிவமைக்கப்பட்ட மாளிகை என்று கூறினார் ." ( சூரா அந் நம்ல் 44 )

இந்த 3d தொழில்நுட்ப முறையில் இன்று பல கட்டிடங்களை கட்டும் பொறியியலார்களுக்கு மத்தியில் அன்றே இறைவன் இந்த தொழில்நுட்ப முறையை கற்றுகொடுத்து விட்டான். சுப்ஹானல்லாஹ். இதே சூராவில் , தன் இறைவன் தனக்கு அளித்த அற்புதங்களுக்காக இறைவனை புகழ்ந்து தன்னை ஒரு அடியானாக அவர் கூறும் அழகான பிராத்தனை 19 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளது .

படைப்பாளனை மறந்து தம் கல்வியை கொண்டு பெருமையடித்தவர் இழிவை சந்திப்பார் என்பது எமக்கு " டைட்டானிக் " கப்பலை கட்டி "இந்த கப்பலை யாராலும் அழிக்க முடியாது" என்று இறைவனை மறந்து கூறிய வார்த்தையின் விபரீதத்தை நான் கூறத்தேவையில்லை . நீங்களே மீட்டி பாருங்கள் .

அது மாத்திரமில்லாமல் இறைவனால் கூறப்படுகின்ற மற்றுமொரு பொறியியலாளர்தான் "துல்கர்னைன் " என்று சொல்லப்படுகின்ற ஒரு சாலீஹான மனிதர். யஃஜூஜ் , மஃஜூஜ் என்ற கூட்டத்தின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் முறையிட்ட சமூதாயத்திற்காக ஒரு பிரமாண்டமான தடுப்புச்சுவரை கட்டிவிட்டு அவர் கூறிய அழகான வார்த்தை சூரா கஹப் 98 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளது. "இது எனது இரட்சகனின் அருளிலிருந்து உள்ளது .எனது இறைவனின் வாக்கு வந்துவிட்டால் இதை தூள் தூளாக ஆக்கிவிடுவான் " என்று அவரது பலத்தை இறைவனின் சக்திக்கு சிறியதாக மதிப்பிட்டு தான் ஒரு அடியான் என்பதை அழகான முறையில் கூறுகின்றார்.

எனவே தன்னுடைய அறிவால் எத்தனை சாதனைகள் படைத்தாலும் தான் இறைவனின் அடியான் என்பதை அந்த மனிதர்கள் மறக்கவில்லை .
இந்தக்கல்வி ஒருபுறமிருக்க நபியவர்கள் இன்னொரு கல்வியை முக்கியத்துவப்படுதினார்கள். 

" خيركم من تعلم القران و علمه "
'யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுகொடுக்கிறாரோ அவர்தான் உங்களில் மிகவும் சிறந்தவர்" இந்த நபியவர்களின் வார்த்தையை வாழ்கையின் வரைவிலக்கணமாக எடுத்துக்கொண்டார்கள் சஹாபாக்களும் அவர்களை தொடர்ந்து வந்த இமாம்களும் . ஒரு மணிநேர மார்க்க வகுப்பிற்கு சாட்டு போக்குச்சொல்லும் எம் சமுதாயத்திற்கு மத்தியில் பின்வரும் சம்பவத்தை சொல்வது என் கடமைதான்.

" ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்ற நபித்தோழர் ஒரேயொரு நபிமொழியை அறிவதற்காக தன் கைப்பணத்தில் ஒட்டகம் வாங்கி ஒரு மாதம் நடைப்பயணம் செய்யும் தூரத்திற்கு ஊர் விட்டு ஊர் சென்றார். "
சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் உடல் சக்தி இழந்து போய்விடும் . இந்த நபித்தோழர் ஒரு மாத காலம் ஓராயிரம் பொன்மொழியை கேட்பதற்காக அல்லாமல் ஒரே ஒரு நபிமொழியை அறிவதற்காக பிரயாணம் செய்தது அவரின் இறைகல்வியின் தாகத்தை எடுத்துக்காட்டுகிறது.

எதிர்காலத்தில் தன் பிள்ளை விமானியாகவேண்டும் , சிறந்த வைத்தியராக வேண்டும் என்று எண்ணுகின்ற பெற்றோர்களே !! சமூகத்தின் தேவை கருதி உங்களில் எத்தனை பேர் மார்க்க அறிஞராக வர வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ????

மார்க்ககல்வியை கற்க வேண்டும் என்று உலகக்கல்வியை விட்டுசெல்லும் எம்பிள்ளைகளை பார்த்து "பாடசாலை கல்வியில் சித்தியடையவில்லையா" என்று கேட்கின்ற சமுதாயமே சற்று சிந்தியுங்கள் ! இன்றைய மதரசாக்கள் பகுதி நேர வகுப்புகளை மிகவும் கீழ்த்தரமாக கணக்கெடுக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் இன்றைய மதரசாக்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்று பெண்களை பாதுகாக்கும் நிலையங்களாக மாறிவிட்டது . சிந்திக்கும் நேரம் இது ! சமுதாயத்தில் பெரிய புள்ளிகளாக திகழும் எம்மில் எத்தனை பேருக்கு அல்குர்ஆனை சரளமாக ஓத முடியும் ?" உலகக்கல்வியை முழுமையாக ஒதுக்கிவைத்துவிட சொல்வது எனது நோக்கமல்ல ! மாறாக மார்க்க அறிவல்லாமல் மட்டிடப்பட்ட உலகக்கல்வி பற்றி கூறுவதே என் நோக்கமாகும் . 

வைத்தியர்களாக வரக்கூடிய ஒவ்வொருவரும் அவர்களின் மருத்துவத்திற்கு மேல் இறைவனின் விதியை உண்மைப்படுத்த வேண்டும், உயர்ந்த மாடிகளை கட்டுவதற்க்கு வழிகாட்டும் பொறியிலாளர்கள் அவர்களின்' அறிவுக்கு மேல் இறைவனின் வல்லமையை உண்மைபடுத்த வேண்டும் , விஞ்ஞனியாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் விண்ணைபடைத்தவனை உண்மைபடுத்த வேண்டும் , படைப்பினங்களை பற்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் படைப்பாளனின் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும் . மாறிப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ?

என் இஸ்லாமிய உள்ளங்களே !! எம் இறுதிப்பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என தீர்மானிக்கும் நொடி இது என் ஈமானிய உள்ளங்களே !
எங்கள் இறுதிபயணம் வரும்முன்னரே அதற்கு பின் பயனளிக்கும் கட்டிச்சாதனத்தை தயார்படுத்திக்கொள்வோம். மாற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக !!! வாசித்தும் புறக்கணித்துவிட்டு செல்லும் உள்ளங்களை அல்லாஹ் விசாலப்படுத்துவனாக !!!  நின்று சிந்தியுங்கள் ...நியாமான வரிகள் இவை !!!!

                                                              
உம்மு காலீத் பின்த் ஷரயியா

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget