இஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்

தலையனை மற்றும் கால்மிதிகள் போன்ற பொருட்களிலுள்ள உருவங்கள் பதிக்கப்படாத நிலையிலிருந்தால் அவற்றைப் பாவிப்பது குற்றம் இல்லையென சகோதரர் பீ.ஜே. அவர்கள் தமது தீர்ப்பை வெளியிட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம்.

இதற்கு ஆதாரமாக 'இமாம் அஹமதிற்குரிய முஸ்னத்' என்ற கிரந்தத்தில் இடபெற்றுள்ள 'அன்னை ஆயிஷா (ரழி)' அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். அதனுடன் 'அபூ ஹுறைறா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய 'இமாம் அபூதாவுத்துக்குரிய சுனன்' என்ற கிரந்தத்தில் இடம்பெறும் மற்றுமொரு ஹதீதையும் முன்வைக்கின்றார். ஆனால் எமது நிலைப்பாட்டின்படி இவ்விரு ஹதீஸ்களிலும் அவர்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்ட பகுதி பலஹீனமான, ஆதாரமற்ற செய்தியாகும். அதன் விபரம் பின்வருமாறு 

முதலாவது ஹதீஸ் :

'ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், எனது வீட்டில் உருவமுள்ள திரைச்சீலையை வாங்கி மறைத்திருந்த வேளையில் பிரயாணத்திலிருந்து றஸுலுள்ளாஹ் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டில் நுழைந்த போது எனது திரைச் சீலையை வெறுத்த நிலையில் ' ஆயிஷாவே ! (இந்த உருவமுள்ள திரைச்சீலையைக் கொண்டு) சுவர்களையா மறைக்கிறீர்?' எனக் கேட்டார்கள். ஆக நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே நபி (ஸல்) சாய்திருந்ததை நான் பார்த்தேன்' (முஸ்னத் அஹமத்) 
 
இந்த ஹதீஸில் 'உருவப்படம் இருக்கின்ற தலையணையில் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்திருக்கிறார்கள்.' என்று வந்துள்ள செய்தியே மேற்சொன்ன அவரின் கருத்துக்குரிய முக்கிய ஆதாரமாகும். ஆனால்,  உருவப்படம் அதில் இருந்தது' என்கின்ற அந்தச் செய்தி ஓர் பலஹீனமான, லயீபான செய்தியாகும். அந்தச் செய்தி கூறப்படுகின்ற அறிவிப்பாளர் வரிசையில் முக்கிய இரண்டு குறைபாடுகள் உள்ளது.
அஸ்மா பினத் அப்திர் ரஹ்மான்
 
இவரே ஆயிஷா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிப்பவர். எந்தத் தகவலும் இல்லாத அறிவிப்பாளர்களை 'உறுதியானவர்கள்' என்று கூறும் வழக்கம் கொண்ட 'இமாம் இப்னு ஹிப்பான்' அவர்களைத் தவிர வேறு எவரும் இவரை உறுதிப்படுத்தவில்ல   'இமாம் இப்னு ஹிப்பான்' மட்டும் இவ்வாறு உறுதிப்படுத்துவோரை நம்பவமானவர்களாக ஏற்றுக் கொள்ளக் கூடாது: என்பதை ஹதீஸ்கலையை சற்றேனும் அறிந்தவர்கள் தெரிந்த ஒன்றே.   இதனாலேயே 'இமாம் இப்னு ஹஜர்' (ரஹ்) அவர்களும் இவரைப்பற்றிக் குறிப்பிடும் போது: 'இவருக்கு சான்றாக மற்றொரு அறிவிப்பாளரும் அறிவித்தாலே ஏற்றுக்கொள்ளப்படுவார்' என்ற விளக்கத்திற்குரிய வார்த்தையை உபயோகித்தள்ளார்.  

இந்த ஹதீஸைப் பொருத்தவரை மேற்சொன்ன செய்தியை இவரைத்தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை. இதனால் இது ஆதாரமற்றதாகும். இதில் இடம்பெரும் இன்னொரு அறிவிப்பாளர் 'உஸாமா பின் சைத் அல் லைதீ' : இவரை அதிகமான ஹதீஸ்களை அறிஞர்கள் உறுதியற்ற பலஹீனமான அறிவிப்பாளராக குறிப்பிட்டுள்ளார்கள். 

மேலும் 'இமாம் அஹமத்' குறிப்பிடும் போது : 'நீ அவரின் ஹதீஸை ஆய்வு செய்தால் அவரின் அறிவிப்பில் (நம்பகமானவர்கள் அறிவிக்காத மேலதிகமான) ஏற்கத்தகாத செய்திகளை காண்பாய்' என்று கூறியுள்ளார்.  இங்கு 'இமாம் அஹமத்' கூறியதைப் போன்று நம்பகமானவர்கள் அறிவித்த அறிவிப்புக்கு மாற்றமாகவே இந்த 'உஸாமா'வின் அறிவிப்பில் மேலதிகமாக 'அத்தலையணையில் உருவம் இருந்தது' என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த செய்தி மிகவும் தெளிவான பலஹீனமான அறிவிப்பாகும். 
 
புஹாரியில் இடம்பெறும் ஆதாரமான அறிவிப்பு பின்வருமாறு:  
'ஆயிஷா (ரழி) அவர்கள், வீட்டிலே உருவமுள்ள திரைச் சீலையொன்றை எடுத்துக் கொண்டார்கள். (நபியவர்கள் வீட்டுக்கு வந்த போது அதைக் கண்டதும் அதைக் கிழித்து அகற்றினார்கள்) ஆயிஷா (ரழி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சாய்ந்து உட்கார்ந்து கொள்வதற்காக அதிலிருந்து இரண்டு தலையணைகளை எடுத்துக் கொண்டார்கள்'
 
இந்தச் செய்தியை ஆயிஷா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிப்பவர் மிகவும் உறுதியான அவரின் சகோதரரின் மகன் 'காசீம்' ஆகும். இவர் ஆயிஷா (ரழி)யின் ஹதீஸை மிகவும் அறிந்தவர் என்று போற்றப்பட்ட மிகப்பெரும் அறிவாளியும், நம்பகமானவரும் ஆவார். இவருடைய எந்த ஆதாரமான அறிவிப்பிலும் 'அதில் உருவம் இருந்தது' என்ற செய்தி இடம் பெறவில்லை. எனவே உறுதியான அறிவிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு மாற்றமாக வந்த மேற்சொன்ன 'அதில் உருவம் இருந்தது' என்ற வசனம் மிகவும் பலஹீனமானது என்பது மற்றுமொரு படிமேல் உறுதியாகிவிட்டது.

இதனடிப்படையில் பலஹீனமான அந்த அறிவிப்பை ஆதாரமாகக் கொண்டு 'மதிக்கப்படாத நிலையில் உருவங்கள் உள்ள தலையணைகளை , கால்மிதிகளை உபயோகிக்கலாம்' என முடிவெடுப்பது தவறான ஓர் ஆய்வாகும். மாறாக எந்த உருவத்தைக் கண்டு பிரயோசனமான ஒரு திரைச்சீலையைக் கிழித்து, அல்லாஹ்வின் தண்டனையைக் கொண்டு எச்சரித்தார்களோ, அவ்வுருவம் தலையணையைச் செய்கின்ற போது சிதைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதுவதே இந்த ஹதீஸின் வெளிப்படையாகும். இவற்றுக்கப்பால் அவர்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த பலஹீனமான செய்தி, புஹாரிக் கிரந்தத்தில் இடம்பெறக் கூடிய மற்றுமொரு ஆதாரமான ஹதீஸிற்கு முற்றிலும் மாற்றமானதாகும். 
 
'ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் , உருவங்கள் உள்ள தலையணையை வாங்கினேன். அதை நபிகளார் கண்ட போது வீட்டில் நுழையாமல் கதவடியில் நின்று கொண்டார்கள். அப்போது நான் அவரின் முகத்திலே வெறுப்புணர்ச்சியைக் கண்டேன். 'அல்லாஹ்வின் தூதரே நான் என்ன பாவம் செய்தேன்?' என்று அப்போது கேட்டேன். 'இந்த தலையணையின் செய்தி என்ன ?' என்று கேட்டார்கள். 'நீங்கள் அதன் மீது உட்கார்ந்து சாய்ந்து கொள்வதற்காக உங்களுக்காக அதை வாங்கினேன்.' என்று கூறினேன். அப்போது ரசூல்லுள்ளாஹ் (ஸல்) பின்வருமாறு சொன்னார்கள். 
 
'இந்த உருவத்தை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும். மேலும் உருவங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழையமாட்டார்கள்.'

இந்த ஹதீஸில் பின்வரும் விடயங்கள் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உருவத்தை தலையணையில் ஏற்படுத்திக் கொள்வதும் அல்லாஹ்வின் தண்டனைக்குரிய காரியமாகும். கண்ணியப்படுத்தப்பட்ட பொருள், கண்ணியப்படுத்தப்படாத பொருள் என வேறுபடுத்தி கண்ணியப்படுத்தப்படாத பொருட்கள் பட்டியலில் தலையணையை பல அறிஞர்கள் சேர்த்து, அதில் உருவத்தை அனுமதித்ததைப் போன்று நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என தெளிவாகப் புலப்படுகிறது. 

ஒரு வாதத்திற்கு 'மதிக்கப்படாத பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கமாட்டார்கள்' என்று கூறினால் தலையணை என்பது இங்கு மதிக்கப்படும் பொருளாகவே கருதப்படும். மக்களும் அதற்கு ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் கொடுப்பதால் அதில் உருவங்களை வரைகிறார்கள். அதனால் நமது படுக்கையறையில் உபயோகிக்கப்படும் விரிப்புகளாக இருந்தாலும் அல்லது கால்மிதிகளாக இருந்தாலும் அதில் சிதைவாக்கப்படாத உருவம் இருக்கும் போது எல்லாவற்றையும் இந்த ஹதீஸின் எச்சரிக்கை உள்ளடக்கிக் கொள்ளும் என்பது தெளிவான விடயமாகும். 
 
குறிப்பு : இவ்வாறான ஆதாரமான ஹதீஸ்களில் 'தலையணை போன்றவற்றில் உள்ள உருவங்கள் தடைசெய்யப்பட்டு வந்துள்ளமை' ஆரம்பத்தில் சொன்ன பலஹீனமான அறிவிப்பு உண்மையில் பலஹீனமானதுதான் என்பதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. 
 
இரண்டாவது ஹதீஸ் :
உருவம் உள்ள தலையணையைப் பாவிப்பதற்கு நபிகளார் அங்கீகாரம் வழங்கவில்லை என புஹாரி, முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெற்றுள்ள மேற்சொன்ன ஹதீஸிற்கு மாற்றமாக உருவம் உள்ள தலையணைகளை பாவிக்கலாம் என்று வரக்கூடிய மற்றுமொரு ஹதீஸை மாற்றுக் கருத்தினர் முன்வைக்கின்றனர்.  அதில் அவர்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்ட பகுதி பலயீனமானதே. அதையும் பி.ஜே அவர்கள் தமது வாதத்திற்கு ஆதாரமாக முன்வைக்கிறார். 
 
அதன் விபரம் வருமாறு :
'ரசூலுள்ளாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜரத் அபூஹுறைரா (றழி) அறிவிக்கிறார்கள், ஜிப்ரீல் (அலை) என்னிடத்தில் வந்து கூறினார் 'இரவு உங்களிடத்தில் நான் வந்திருந்தும், நீங்கள் இருந்த வீட்டில் என்னை நுழையவிடாமல் தடுத்தது என்னவென்றால் வீட்டிலே ஒரு மனிதனுடைய உருவம் இருந்ததும், உருவங்கள் உள்ள திரைச்சீலை ஒன்று இருந்ததும், நாய் ஒன்று இருந்ததுமாகும்.  எனவே மரத்தைப் போன்று மாறக்கூடிய விதத்தில் உருவச் சிலையை மாற்றுமாரும், (மிதிபடக்கூடிய இரண்டு தலையணையாக) திரைச் சீலையைத் துண்டித்து ஏற்படுத்துமாறும், நாயை வெளியெற்றுமாறும் கட்டளையிடுங்கள்' 
 
இந்த ஹதீஸில் இருவகையான குறைபாடுகள் உள்ளது.
1. அறிவிப்பாளர் ரீதியானது.
2. கருத்து ரீதியானது. 
 
1. அறிவிப்பாளர் ரீதியானது:
இந்த ஹதீஸில் அபூஹுரைரா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கும் இமாம் முஜாஹிதிடம் இருந்து கேட்டவர்கள் இருவர். முதலாமவர். : 'யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்' இவரில் பல குறைபாடுகள் உள்ளது. இவர் வாயிலாகவே மேற்சொன்ன செய்தி பதியப்பட்டுள்ளது. 
  
இவரில் சொல்லப்பட்ட குறைபாடுகள் :
இமாம் அஹமத் கூறுகையில் :  உறுதியான அறிவிப்பாளர்களின் ஹதீஸ்களை விட மேலதிகமான செய்திகள் இவரின் ஹதீஸில் இருக்கும்.' அதனால் இவருடைய அவ்வாறான ஹதீஸ்களையும், இவர் இவரின் தகப்பனூடாக அறிவிக்கும் அறிவிப்பையும் 'ளயீப்' (பலவீனம்) எனக் கூறியுள்ளார். இன்னொரு சந்தர்ப்பத்தில் 'இவரின் ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 
 
இமாம் அபூஹாதிம் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது :  இவர் உண்மை பேசுபவர், உண்மையாளர் என்றாலும் இவர் அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு ஆதாரமாகக் கொள்ளமுடியாது' என்கிறார். இமாம் யஹ்யா இப்னு ஸயீத் இவரைப் பற்றியக் குறிப்பிடும் போது :   இவரில் மறந்து போகும் தன்மை உள்ளது' என்று கூறிகிறார்.   இமாம் அஹமத்' இவரைப்பற்றி கூறியதைப் போன்றுதான் இந்த ஹதீஸிலும் இவரின் நிலை இருப்பதைக் காணலாம். 
 
'இமாம் முஜாஹித்' இடமிருந்து இந்த ஹதீஸை செவியுற்ற இரண்டாம் நபர் இவரின் தகப்பனார் 'அபூ இஸ்ஹாக்' ஆவார். இவர் மகனைவிட மிக உறுதியானவர். இவர் ஹதீஸை அறிவிக்கின்ற போது அவருக்கு மாற்றமாக பின்வருமாறு அறிவிக்கின்றார். 
 
' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடத்தில் வந்து ஸலாம் சொன்ன போது உள்ளே வாருங்கள் என்று நான் சொன்னேன். அப்போது அவர்கள் சொன்னார்கள்: வீட்டிலே உருவங்கள் உள்ள திரை இருக்கின்றது. அவற்றின் தலைகளைத் துண்டித்து, விரிப்பாக அல்லது சாய்ந்திருக்கும் தலையணையாக ஆக்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் 'நாங்கள் உருவங்கள் உள்ள வீட்டில் நுழைய மாட்டோம்'

இந்த உறுதியான அறிவிப்பாளரான 'அபூ இஸ்ஹாக்' என்பவரின் அறிவிப்பில் சொல்லப்பட்ட செய்தியை விட மேலதிகமாக மற்ற அறிவிப்பாளரான 'யூனூஸ்' என்பவரால் பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இவரின் நம்பகத்தன்மையில் குறைபாடு உள்ளதால், மேலதிகமான செய்திகள் பலவீனமானதாகும். அவைகளை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் 'இமாம் அஹமத்' அவரைப்பற்றிக் கூறியதைப் போன்று இங்கே உறுதியானவர்கள் சொன்னதை விட மேலதிகமாக பல விடயங்களை சொல்லியுள்ளார். 
 
எனவே இவரின் அறிவிப்பைக் கொண்டு சட்டங்களை நிறுவ முடியாது.
குறிப்பு : வித்ருத் தொழுகையில் குனூத் ஓத வேண்டும். என்ற பலவீனமான செய்தியை அறிவித்த அறிவிப்பாளரும் இவர்தான் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
  
1. கருத்து ரீதியானது:
'இந்த திரைச் சீலையிலுள்ள உருவங்களை தலைகளால் துண்டியுங்கள்' என்ற அறிவுரையை ஜிப்ரீல் (அலை) கூறியதிலிருந்து அந்த உருவம் சிதைக்கப்பட்டதாக மாற்றப்படுகின்றது. எனவே, அதை (சிதைவடைந்த உருவம் உள்ள திரைச்சீலையைக்) கொண்டுதான் தலையணை, விரிப்பு செய்யும் அறிவுரையை கூறினார்கள்.

இன்னும் 'உருவங்கள் உள்ள வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம்' என்று ஜிப்ரீல் (அலை) காரணம் கூறியதிலிருந்து அவைகளின் தலைகளை துண்டிக்கச் சொன்னதே அந்த உருவங்களைச் சிதைவடையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திரைச் சீலையில் உள்ள உருவத்தை தலைகளால் துண்டிக்க வேண்டும் என்று இந்த ஆதாரமான  அறிவிப்பில் தெளிவாக வந்துள்ளது. இதேவேளை மாற்றுக் கருத்துள்ளோர் ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்ட பலஹீனம் உள்ள 'யூனூஸின்' அறிவிப்பில் அந்தத் தரவு நேரடியாக வராததால் இந்த அறிவிப்பை நம்பி ஆய்வில் தவறிழைத்தவிட்டனர்.
 
மூன்றாவது ஹதீஸ் :
இதே வேளை மற்றுமொரு ஹதீஸையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 'உருவம் என்பது தலைதான் தலை துண்டிக்கப்பட்டால் உருவமே இல்லை' என்று ரசூல்லுள்ளாஹ் (ஸல்) சொன்னதாக இன்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் 'இமாம் இஸ்மாயில்' என்பவருக்குரிய அல் முஃஜம் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இந்த அடிப்படையாகக் கொண்டு 'உயிருள்ள ஒரு பொருளின் தலைமட்டும் இருந்தாலும் அதுவும் தடைசெய்யப்பட்ட உருவமாகவே கருதப்படும்' என சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் தலைமட்டும் வேறாக்கப்பட்டு, முழுமையாக இருந்தாலும் அதைத் தனியே துண்டித்து வேறாக்கும் போது அது உருவமாக கருதப்படமாட்டாது என்பதை மேற்சொன்ன ஜிப்ரீல் (அலை) அவர்களின் அறிவுரையில் இருந்து விளங்கிக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்விரண்டிற்கும் இடையில் முறன்பாடு உள்ள இவ்வேளையில், இந்த மூன்றாம் ஹதீஸ் அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதி இப்னு பழ்ள் என்பவர் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

குறிப்பு : இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது 'சில்சிலாஹ்' என்ற கிரந்தத்தில் 1921வது இலக்கமிடப்பட்ட ஹதீஸில் இதைப்பற்றி பேசுகின்ற போது இதற்கு ஆதாரமான ஓர் அறிவிப்பாளர் வரிசை இமாம் உகைலிக்கு குரிய 'ளுஅபா' என்ற கிரந்தத்தில் இருப்பதாக சில முஹத்திஸீன்களின் எழுத்திலே தான் பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அதன் அடிப்படையில் இது ஆதாரபூர்வமானதுதான் எனவும் எழுதியுள்ளார் அதனால் எமது கைவசம் உள்ள 'ளுஅபா' என்ற அந்தக் கிரந்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அந்த ஆதாரபூர்வமான அறிவிப்பினூடாக இதனை நாம் இதுவரை காணவில்லை. ஆனால் இந்த செய்தியும் ஆதாரத்திற்கு எடுக்க முடியாத பலவீனமான செய்தியாகும்.  நான்காவது ஹதீஸ் :

இதே வேளை திரைச் சீலை, தலையணை, ஆடை போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்கள் இருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக புஹாரியில் இடம்பெறக்கூடிய ஆபூதல்ஹா (ரழி)யை தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய ஒரு ஹதீஸை அக்கருத்தைக் கொண்டவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். என்றாலும், அந்த ஹதீஸிலிருந்து வைக்கப்படக் கூடிய வாதங்களை நாம் தவறாகவே காண்கிறோம்.
அந்த ஹதீஸ் பின்வருமாறு :
 
'அபூ தல்ஹா (ரழி) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறுகிறார்கள்: ' மலக்குமார்கள் உருவம் உள்ள வீட்டில் நுழையமாட்டார்கள்'(இந்த ஹதீஸை சைத் இப்னு காலித் என்ற நபித் தோழர் அபூதல்ஹா (ரழி) அவர்களிடம் இருந்து கேட்டதாக புஸ்ர் என்பவர் தெரிவிக்கிறார்). பின்னர் ஸைத் (ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது நோய் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவருடைய கதவில் உருவமுள்ள திரைச் சீலை இருந்தது. நான் (என்னுடன் வந்திருந்த) உபைதுல்லாஹ்விடம், முன்பொருநாள் உருவத்தைப் பற்றி 'ஸைத்' எங்களுக்கு அறிவித்திருந்தார் இல்லையா? எனக் கேட்டேன். அதற்கு உபைதுல்லாஹ் 'துணியில் கீறப்பட்டதைத் தவிர' என்று ஸைத் கூறியதை நீ செவியுறவில்லையா? எனக் கேட்டார். அதற்கு நான் 'இல்லை' என்று சொன்னேன்.அவர் 'ஆம்' என்று சொன்னார்.'
 
இந்த ஹதீஸிலிருந்து உயிருள்ளவற்றின் உருவங்கள் துணியில் இருக்கின்ற வேளை பாவிக்கலாம். என 'ஸைத் (ரழி)' விளங்கிச் செயற்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாக வந்துள்ளது.  அதனடிப்படையில் 'அணியும் ஆடைகளிலும் உருவங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்' என சிலர் விளக்கம் தருகின்றனர். அவர்களின் விளக்கத்திற்கு பதில் கூறுவதற்கு முன் மற்றுமொரு விடயத்தைஇங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
 
அதாவது 'துணியிலுள்ள வேலைப்பாட்டைத் தவிர' என்ற வார்த்தை உண்மையில் றஸுலுள்ளாஹ்வின் வார்த்தையா? அல்லது 'ஸைத்' (ரழி) அவர்களின் வார்த்தையா? என்ற கேள்விக்கு விடை காணவேண்டியுள்ளது. இந்த வார்த்தை 'ஸைத்' (ரழி) சொல்லியிருந்தாலும் அதை ரசூலுள்ளாஹ் (ஸல்) அவர்களிடம் இருந்து அவர்கள் செவியுற்றதாக ஆதாரபூர்வமான அறிவிப்பு எதிலும் தெளிவான வார்த்தைகளினூடாக வரவில்லை.  எனவே, 'இவ்வாறு விதிவிலக்காகக் கூறப்பட்டது' அந்த ஸஹாபியின் சொந்தக் கருத்தாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
 
இதே நேரம் ஓர் அறிவிப்பில் 'அந்தப்பகுதியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஸஹாபி செவியுற்றார்' என்று வருகிறது. ஆனால் அதில் 'அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ர்' என்று சொல்லக்கூடிய பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.  இதனால் இதை ஏற்க முடியாது. இதற்கு சான்றாக அபூ ஹுறைறா (ரழி) , ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்புக்களையும் எடுத்துக் கொள்ளலாம்.  அவர்களின் அறிவிப்புக்களில் எதுவித விதிவிலக்குமில்லாமல் 'உருவமுள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழையமாட்டார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவே வந்துள்ளது.
 
'உருவமுள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழையமாட்டார்கள்' என்று றஸுலுள்ளாஹ்வின் செய்தியை 'ஸைத்' (ரழி) கூறிய போது அவரிடம் இந்த செய்தியைக் கேட்ட இருவரில் ஒருவர் 'விதிவிலக்காகச் சொன்னதை நான் செவியேற்கவில்லை' எனக் கூறுகிறார். மற்றவர் 'தான் செவியேற்றேன்' எனக் கூறுகிறார்.  என்றாலும் அதை நபிகளாரின் செய்தியுடன் சேர்த்ததாக ஒரே வசனத்தில் 'ரசூலுள்ளாஹ் சொன்னார்கள்' என்று அவரோ அல்லது 'ஸைத்' (ரழி)யோ இங்கு குறிப்பிடவில்லை.  ஆக இதன் காரணத்தாலும், மற்றும் ஆயிஷா (ரழி), ஆபூஹுறைறா (ரழி) அவர்களின் அறிவிப்பில் இவ்வாறான விதிவிலக்கு வார்த்தை வராத காரணத்தாலும் இதனை ஸைத் (ரழி) யின் கூற்றாக கருத இடம்பாடு உள்ளது.  சற்று ஆழமாக சிந்தித்தால் இதனை விளங்கிக் கொள்ள முடியும்.
 
அதிகமான இமாம்கள் கருதுவதைப் போன்று ஒரு வாதத்திற்கு நபிகளாரின் கூற்றாகவே இதை வைத்துக் கொண்டாலும் நபிகளாரின் ஏனைய ஹதீஸிற்கு மாற்றமில்லாத முறையில் இதை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.  மேற்சொன்ன ஹதீஸில் இடம்பெற்றுள்ள ஸைத் (ரழி) யின் செயல் நபி (ஸல்) அவர்களுடைய நேரடி செயலுக்கும், அவர் விடுத்த தடைக்கும் முற்றிலும் மாற்றமானதாகும்.  ஏனெனில் மேலே கொண்டு வந்த ஆதாரமான ஆயிஷh (ரழி) அவர்களின் ஹதீஸில் 'உயிர் உள்ளவற்றின் உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையை தலையணையாக எடுத்துக் கொண்ட போது நபிகளார் கண்டித்தார்கள்' என்பதை நாம் பார்த்தோம்.
 
அந்த நபிகளாரின் வெளிப்படையான செயலுக்கு இந்த 'சைத்' (ரழி)யின் செயல் நேர் முரணாக வருகிறது.
எனவே இந்த நபித்தோழரின் செயலை நபிகளாரின் செயலை தள்ளிவிட்டு ஆதாரமாக எடுக்க முடியாது. மாறாக அதை தவறாக அவர் விளங்கிக் கொண்டார் என்றே கருதவேண்டியுள்ளது.  அந்த நபித் தோழருக்கு நபிகளார் திரைச் சீலையிலும், தலையணையிலும் இருந்த உருவத்தை தடைசெய்த விடயம் தெரியாமல் இருந்திருக்கலாம்.  ஏனெனில் அது ஆயிஷh (ரழி) அவர்களின் வீட்டில் நடந்த விடயம். நபிகளாரின் எல்லா விடயங்களையும் எல்லா சஹாபியும் அறிந்திருக்கவில்லை என்பது ஒரு வெளிப்படையான விடயமாகும். அதனால் அந்த சஹாபியின் தனிப்பட்ட அச் செயலை அவரின் சொந்த விளக்கமாக கருதுவதே பொருத்தம்.
 
இதனால் 'துணியில் உள்ள வேலைப்பாட்டைத் தவிர' என்ற வார்த்தையிலிருந்து அவராக 'திரைச் சீலையில் உருவத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்' என்று விளங்கிக் கொண்டது அவரின் சொந்த விளக்கமாகவே கருதவேண்டியுள்ளது. எனவே, இங்கு விதிவிலக்காகக் கூறப்பட்டது உருவத்தின் வடிவம் சிதைக்கப்பட்ட ஆடையிலுள்ள அலங்கார வேலைகளையே சுட்டிக்காட்டுகின்றது என்று விளங்க வேண்டியுள்ளது. ஏனெனில் துணியில் தலையணை மற்றும் திரைச் சீலை போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்கள் இருந்ததைத்தான் நபி (ஸல்) தடை செய்திருந்தார்கள்.

அதே வேளை அத்துணி துண்டிக்கப்பட்டு அதிலுள்ள உருவம் சிதைக்கப்பட்ட நிலையில் அத்துணியிலிருப்பதை அங்கீகரித்துமுள்ளார்கள் என்பதை மேலே கொண்டு வந்த ஹதீஸில் பார்த்தோம். இதனால் உயிருள்ளவற்றின் உருவங்கள் ஆடைகளில் சிதைக்கப்பட்டு இருந்தாலோ அல்லது ஆடைகளை ஆலங்காரப்படுத்துவதற்காக உயிரற்றவைகளின் உருவங்களை ஏற்படுத்திக் கொண்டாலோ அவற்றுக்கு அனுமதி வழங்க முடியும் என புலனாகிறது.
 
இவ்வாறான அனுமதியைச் சுட்டிக்காட்டும் முகமாகவே 'ஆடையில் உள்ள வேலைப்பாட்டைத் தவிர' என்று ஆபூ தல்ஹா (ரழி) அவர்களின் ஹதீதில் கூறப்பட்டுள்ளது என விளங்கிக் கொண்டால் இந்த அனைத்து ஹதீஸ்களுக்கும் இடையில் முரண்பாடுகளை நீக்கிக் கொள்ள முடியும்.
 
                                                                                                          -அல்லாஹ்வே மிக அறிந்தவன் -

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget