தங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை

மனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள், கொள்கைள் யாவும் பொருளாதரம் பற்றிய சட்ட விதிகளை மட்டுமே வகுத்துள்ளன. ஆனால் இஸ்லாம் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் வகையில் பொருளாதரம் பற்றிய சட்டங்களைச் சொல்வதோடு பொருளாதரம் பற்றிய பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.

இஸ்லாம்  எத்துறையைப் பற்றிப் பேசும் போதும் முதலில் அது பற்றிய சுருக்கமான தெளிவான பார்வையை நமக்குத் தந்துவிடும். ஒரு திட்டத்தை வகுத்து அதை நடை முறைப்படுத்த விளையும் போது அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களை நம்மால் ஓரளவு கண்டு கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை வைத்து அத்திட்டத்தை உடனே மாற்றி விடுவோம். ஆனால் இப்போது போடப்படும் ஒரு திட்டத்தால் 50 வருடங்களுக்குப் பின் ஏற்படப் போகும் பாதிப்புக்களை நம்மால் அறிய முடியாது அல்லது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் ஒருவனாலேயே அவற்றைத் துல்லியமாய்ச் சொல்ல முடியும்.

இஸ்லாம்  இந்த அடிப்டையில் பல விடயங்களை தடை செய்துள்ளது. உதாரணமாக ‘கொம்யூனிஸத்தை’ குறிப்பிடலாம். இக்கொள்கை அறிமுகமானதுமே இதை ஏதிர்த்த இஸ்லாமிய அறிஞர்கள் ‘எங்கெல்லாம் இக்கொள்கை அறிமுகமானதோ அங்கெல்லாம் இன்னும் ஐந்து தசாப்பதங்களின் பின்பு ஆட்டங்கண்டு விடும்’ என்று சொன்னார்கள். பொருளாதரம் பற்றிய இஸ்வாத்தின் சட்ட திட்டங்களக்கு கொம்யூனிஸத் தத்துவம் முரண்படும் கோணங்கள் பற்றிய அறிவு இருந்ததே அவ்வறிஞர்கள் இவ்வாறு சொல்லக் காரணமாய் அமைந்தது. இஸ்லாம் வகுத்துள்ள பொருளாதாரத்திட்டங்கள் துரநோக்குடையது, அநியாயமற்றது, நீதமானது எனச் சுருங்கக் கூறலாம்.
 
உதாரணமாகச் சொல்வதாயின், என்னிடம் ஐம்பது கோடி ரூபாய் பணமுள்ளது. இதை வைத்து எனது சிந்தனைiயின் அடிப்படையில் நான் ஒரு வியாபாரத் திட்டத்தை வகுக்கப் போகின்றேன் என்றால், அதில் கிடைக்கும் முழு வருமானமும், இலாபமும் எனக்காக இருக்க வேண்டும் என்ற அடிப்டையில்தான் அத்திட்டத்தை நான் முன்னெடுப்பேன். அதாவது இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதில் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியனைத்தையும் சுருட்டப் பார்ப்பேன். பொதுவாக வியாபரத்தில் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. ஷீஆக்களிடமும் இம்முறை ஒரு கொள்கைiயாகப் பின்பற்றப்படுகின்றது.

 வர்த்தகர்கள் தமது இலாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் ஈரானில் நடைமுறையிலுள்ளது. ஈரானிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இதற்கும் பெரிய பங்கு உண்டு. இதை ‘ஹுமுஸ்’ என்பர். ஆனால் இஸ்லாம் இதைக் குறைத்து இரண்டரை வீதமாக ஆக்கியுள்ளது. மனிதனாக வரி விடயத்தில் ஒரு சட்டத்தை வகுப்பானென்றால் இவ்விகிதாசாரத்தைக் குறைவானதாகவே காண்பான். ஆனால் 100 ரூபாய் வைத்திருப்பவருக்கு இது பாரமாக இராது. கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவனுக்கே இதன் பாரம் சரியாக விளங்கும். எனவே இந்த விகிதாசாரம் பணமுள்ளவனுக்கே பொருந்துகின்றது. பணமில்லாதவனை ஒரு போதும் இது சுரண்டாது என்பது எளிதாய் தெரிகின்றது. ஆகவே இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் கவனத்திற் கொண்டு முறையாக, எளிதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
இந்த  அடிப்படையில்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. எல்ல சமூகத்திலும் வட்டிமுறை காணப்பட்டது போல் அரபிகளிடமும் வட்டி முறை காணப்பட்டது. வட்டி எனும் போது அதில் பல வகை காணப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு தொகையினைக் கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் அல்லது பொருளைக் கடனாக வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் ஆகிய முறைகளே பெரும்பாலும் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்றது. இதற்கே கடன் வட்டி என்கிறார்கள்.அரபியில் இதற்கு ربا النسية என்றழைப்பார்கள். அதாவது கொடுத்ததைத் திருப்பிப் பெறும் போது இருந்ததை விட அதிகமாகப் பெறுவதற்கே அந்நஸீஆ என்று கூறப்படுகின்றுது. அல்லாஹ் நிருணயித்த மாதங்களில் அதிகரிப்பை உண்டு பண்ணுதலை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
 
إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ      التوبة : 37
(போர் புரியத் தடுக்கப்பட்ட மாதங்களின் புனிதத்தை) முன் பின்னாக்குவதெல்லாம் இறை மறுப்பை அதிகப்படுத்துவதாகும்……..(தௌபா:37)
 
இந்த வசனத்தில் அந்நஸீஉ எனும் சொல் அதிகப்படுத்துவது எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடிப்படையில்தான் ரிபான்னஸீஆ என்பதும் அமைந்துள்ளது. இவ்வட்டி முறை காணப்பட்ட அன்றைய அரபு சமூகத்தில் ربا الفضل என்ற மற்றொரு  வட்டி முறையையும் நபியவர்கள் சுட்டிக்காட்டி அதையும் தடை செய்தார்கள். நபியவர்கள் சுட்டிக் காட்டிய இவ்வட்டி முறை பற்றி சில நபித் தோழர்களுக்குக் கூடத் தெரிந்திருக்க வில்லை. எழுந்தமானமாக சிந்திப்பதன் மூலம் இம்முறை எவ்வாறு பிழையாகின்றது என்பதை அறிய முடியாது. ஆனால் இஸ்லாம் இதை வட்டி என்று சொல்லியுள்ளது. இவ்வடிப்படையிலே நபியவர்கள்  இன்னும் பல விடயங்களை வட்டி என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
 
இன்று சமூகத்தில்  ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் ஒன்றுதான் எல்லாம் வரைவிலக்கணத்துக்குற்பட்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணுவதாகும். மெய்யியல் என்ற துறை வந்ததன் விளைவால் வியாபாரம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அதை வார்த்தகைளால் விளக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. எல்லாவற்றிலுமே இது மூக்கை நுழைத்து விட்டது. எனவே நாமும் ஏதோ ஒரு வகையில் இத்தாக்கத்துக்குள்ளாகி அனைத்தையும் தத்துவவியல் அடிப்படையிலேயே சிந்திக்க முயல்கின்றோம். இதனால் ‘வியாபரமும் வட்டியும் ஒன்றுதான்’ என்ற சிந்தனை வளர்ந்து விடாமலிருப்பதற்காய் வியாபாரத்தையும் வட்டியையும் வேறு வேறாய் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ் இதற்குப் பின்வருமாறு பதில் கூறியுள்ளான்.
 
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا البقرة : 275
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷெய்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழும்புவர். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குகக் காரணம்.
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல் பகரா : 275)
 
இங்கே அல்லாஹ் வட்டி என்றால் இதுதான் வியாபாரம் என்றால் இதுதான் என்றெல்லாம் வரைவிலக்கணமோ, விளக்கமோ சொல்லவில்லை. மாறாக அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். என்றே சொல்கின்றான். ஆகவே எல்லா விடயங்களையும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனாலும் அவை பற்றிய போதுமான விளக்கம் நடைமுறையில் காணப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சில விடயங்களைப் பார்க்கும் போது நடை முறை ரீதியாக அவை பிழையென்பதை புரிந்து கொள்ளலாம் ஆனால் அவற்றை வார்த்தையால் வரைவிலக்கணப்படுத்துவதற்கோ, கோட்பாட்டு ரீதியாக வரையரைப் படுத்துவதற்கோ முடியாமலிருக்கும் என்று கூறலாம்.

இந்த அடிப்படையை மிகத் தெளிவாக விளங்க வேண்டியுள்ளது. குடும்பம் என்றால் என்ன என்று கேட்டால் இதற்கு வரைவிலக்கணம் கூறுவது சிரமமாயிருக்கும். இதற்கு என்னதான் வரைவிலக்கணம் சொன்னாலும் தத்துவவியலடிப்படையில் அவற்றில் குறைகாணலாம். எனவேதான் நபியவர்கள் வட்டியை வகைப்படுத்தி வரைவிலக்கணப்படுத்திவிட்டுப் போகாமல் வட்டியோடு தொடர்பான ஏனைய சில அம்சங்களை நபியவர்கள் உணர்த்திக் காட்டினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறியுள்ள சில விடயங்களை அவதானிப்போம்.
 
அதற்குள் செல்ல முன்னர் இன்று நடை முறையிலுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். சில இடங்களில் ‘இங்கு தவனை முறைக் கட்டணத்தினடிப்படையிலும் பொருட்கொள்வனவு செய்யலாம்’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள். வேறு சில இடங்களில் இதையே மாற்றி ‘ கடனுக்கும் கேஷுக்கும் ஒரே விலை. உடனடியாகப் பணம் செலுத்தினால் அதற்கு விசேஷ விலைக் கழிவுண்டு’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்.

வார்த்தைகளில் இவை வித்தியாசப்பட்டாலும் விடயம் ஒன்றுதான் என்பதை இதில் அறியலாம். எனவே தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற வணிக முறைகளில் தூய்மையான எண்ணத்தோடு அவதானம் செலுத்தினால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். வட்டி இஸ்லாம் தடை செய்த பொருளீட்டல் முறை என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் வட்டியின் வடிவங்களைப் பார்க்கும் முன் வட்டி பற்றிய நபியவர்களின் ஒரு செய்தியை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.

صحيح مسلم 4177 عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
வட்டி சாப்பிட்டவன், வட்டி சாப்பிட வைத்தவன், அதை எழுதியவன், அதற்கு சாட்சியான இருவர் ஆகியோரை நபியவர்கள் சபித்தார்கள். அவர்களனைவரும் (பாவத்தில்) சமம் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4177
 
அது வட்டி பற்றி பொதுவாக வரும் ஹதீஸாகும். வட்டியின் விபரீதங்களைத் தெரிந்து கொள்வதற்கு இந்த ஒரு ஹதீஸே போதுமாகும். எனவே நபியவர்களின் சாபத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய வட்டி என்ற இப்பெரும் பாவம் என்னென்ன வழிகளில் வருகின்றது என்பதை நாம் நன்கு அறிய வேண்டியுள்ளது. வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம். வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம்.
 
صحيح مسلم 4147 عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلاً بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ ».
தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல்  உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி) ஆதாரம் : முஸ்லிம்4177
 
இதே ஹதீஸ் சிறிய மாற்றத்துடன் கீழுள்ளவாறு வருகின்றது.
صحيح مسلم 4148 عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلاً بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَقَدْ أَرْبَى الآخِذُ وَالْمُعْطِى فِيهِ سَوَاءٌ ».
 
தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். எவர் இதில் அதிகரிக்கின்றாரோ, அல்லது அதிகரிக்குமாறு கோருகின்றாரோ அவர் வட்டி எடுத்து விட்டார். இதில் எடுப்பவரும், கொடுப்பவரும் சமமே. அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4148
 
மற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4138 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ ».
 
சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். சரிசமமாக இருந்தாலே தவிர வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். அவற்றைக் கடனுக்கு விற்க வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138
 
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கான தேவையும், அவசியமும், முறையும் நபியவர்களின் காலத்தில் அவ்வளவாக இல்லையென்றாலும் இன்று இதன் அவசியம் உணரப்பட்டு விட்டது. அத்துடன் தங்கத்தின் விலையில் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை அறிந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களும் இன்று சைகவமாகிவிட்டன. ஆகவே இந்த ஹதீஸ்கள் சமகால வணிக முறைகளில் எவ்வளவு அவசியமாயுள்ளன என்பதை விளங்கலாம்.
 
இன்னொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم 4141 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلاَ الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ وَزْنًا بِوَزْنٍ مِثْلاً بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ
.
நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138
 
வேறொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4164 – كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « الطَّعَامُ بِالطَّعَامِ مِثْلاً بِمِثْلٍ
உணவுக்கு உணவை விற்பதாயின் சரிசமமாக இருக்க வேண்டும். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4164
 
மற்றுமொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4143 – فَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ ».

உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர கோதுமைக்குக் கோதுமையை விற்பது வட்டியாகும். உடனே  மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர பேரீத்தம் பழத்துக்குப் பேரீத்தம் பழத்தை விற்பது வட்டியாகும். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143
 
வட்டியின் கிளைகளை நடை முறை ரீதியாகவும் நபியவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள் . இந்த வரையரைகளை நபியவர்கள் செயல்படுத்திய விதங்களை கீழ்வரும் ஹதீஸ்கள் தெளிவாய் விளக்குகின்றன.
 
صحيح البخاري
2201،2202 – عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرَ فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالصَّاعَيْنِ بِالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَفْعَلْ بِعْ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! ‘இல்லை இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2201,2202
 
صحيح البخاري 2312 – عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَيْنَ هَذَا قَالَ بِلَالٌ كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ لِنُطْعِمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ أَوَّهْ أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعْ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِهِ

நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்!’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக!’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2312
 
பணப் புழக்கம் இல்லாத பண்டமாற்று முறை காணப்பட்ட காலங்களில் நடை பெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் காணப்படும் வட்டியின் வடிவங்களை நபியவர்கள் இதில் கூறுகிறார்கள். பணப் புழக்கம் வந்த பின்னரே வட்டியைப் பற்றி பலரும் பேசினார்கள். ஆனால் இதற்கு முன்னரான பண்டமாற்று வியாபார முறை காணப்பட்ட காலங்களில் அதில் காணப்படும் வட்டி முறை பற்றிக் கூறுவது சிரமமான ஒரு காரியமாகும். எனவே நபியவர்கள் அது பற்றியும் இந்த ஹதீஸில் விளக்கியிருப்பதானது குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்
صحيح مسلم – 4160 – عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلاَدَةً بِاثْنَىْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنِ اثْنَىْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ « لاَ تُبَاعُ حَتَّى تُفَصَّلَ ».
 
ஹைபர் தினத்தன்று பனிரெண்டு தீனார்களுக்கு ஓரு மாலையை வாங்கினேன். அதில் தங்கமும், முத்துமணிகளும் இருந்தன. அவற்றை வெவ்வேறாகப் பிரித்தேன். பனிரெண்டு தீனார்களுக்கு அதிகமான தங்கத்துண்டுகள் அதில் காணப்பட்டன. எனவே இதை நபியவர்களிடம் தெரிவித்தேன். ‘இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்படாமல் விற்கப்படக் கூடாது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: பலாலா பின் உபைத் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4160
 
பனிரெண்டு தீனார்களுக்கு சமமாக அந்த மலையில் தங்கம் இருந்தால் அதில் தவறேதுமில்லை.ஆனால் குறித்த தொகையை விடக் கூடுதலாக இருப்பதுவே இங்கே கவனிக்க வேண்டியது. குறைந்த தொகை கொடுத்து கூடுதல் பெறுமதிமிக்க ஒன்றை வாங்குவதாக அமைந்து, ஒருவருக்கு  கொல்லை இலாபத்தையும் மற்றவருக்கு அநியாயத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதைக் கவனித்து நபியவர்கள் இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்பட்ட பின்பே விற்கப்பட வேண்டும் அல்லது மாலையில் காணப்படும் தங்கத் துண்டுகளுக்கு சமமான தொகைக்கு விற்கப்பட வேண்டும் என்று கூறியியுள்ளார்கள் என விளங்கலாம்.
 
இந்த ஹதீஸ்களின் வரை முறை அடிப்படையில் இன்றைய தங்கம் மற்றும் பணமாற்று வியாபாரத்தின் நடைமுறைகளை அலசுவோம் அதற்கு முன்னர் கீழ்வரும் பலவீனமான ஹதீஸை வைத்து வட்டியோடு தொடர்புபடாமல் இக்காலத்தில் இருக்க முடியாது என்று சிலர் கூறுவர்.
 
سنن أبى داود-ن – 3333 – عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ ». قَالَ ابْنُ عِيسَى « أَصَابَهُ مِنْ غُبَارِهِ ».
ஒரு காலம் வரும் அக்காலத்தில் வட்டி சாப்பிடாத எவரும் இருக்கமாட்டார் அதை சாப்பிடா விட்டாலும் அதன் வாடையையாவது அவர் நுகருவார். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : அபூதாவூத் 3333
 
முதலில் இது ஒரு பலவீனமான செய்தியாகும். அடுத்து, இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமே இல்லாத ஒரு காலம் ஏற்படும் என்று கூட விளங்கலாம். வட்டியில்லாமல் அழகாக வாழ முடியும். எக்காலத்துக்கும் சாத்தியமான வழிகாட்டல்களையே இஸ்லாம் வகுத்துள்ளது. ஆகவே எவ்வகையிலும் இது ஏற்கத்தக்கதல்ல. ஆசை கூடக் கூட வட்டியும் கூடும். அது குறைந்து விட்டால் வட்டியும் குறைந்து விடும் என்பதுவே யதார்த்தம். ஆனால் நம்மை அறியாமல் வட்டியோடு தொடர்புறும் சந்தர்ப்பங்களுமுண்டு. இவை தவிர்க்க முடியாதவைகளாகும். இதில் நாம் குற்றவாளிகளாகமாட்டோம். இனி விடயத்திற்கு வருவோம்.
 
மேலுள்ள ஹதீஸ்களை நன்கு அவதானித்துக் கொண்டு இன்றுள்ள வர்த்தக நடவடிக்கைகளைக் கொஞ்சம் அலசுவோம். இன்று புழக்கத்தில் காணப்படும் பணமானதும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். நபியவர்கள் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட இஸ்லாமிய அரசு ஆண்ட காலங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளில் தங்கமே பணமாக உபயோகிக்கப்பட்டது. தற்போது நமது புழக்கத்திலுள்ள பணம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை இன்னும் விளங்கச் சொல்வதானால், 90 களில் பாவனையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை ஒருவர் வைத்திருக்கிறார், இன்னொருவர் 2011ல் பாவனைக்கு வந்த  ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருக்கிறார் என்றால்  90 களில் வெளியான நோட்டை விட 2011ல் பாவனையில் வந்த நோட்டு பெறுமதி மிக்கதாகிவிடப் போவதில்லை.

புதியதோ பழையதோ வருடங்கள் முந்திப்பிந்தி வந்தாலும் ஆயிரம் ரூபாய், என்றும் ஒரே பெறுமதியோடுதான் இருக்கின்றது. இதன் பெறுமதியைத் தீர்மானிப்பது மத்திய வங்கியே. மத்திய வங்கி நினைத்தால் இதே ஆயிரம் ரூபாயை செல்லாக் காசாகவும் ஆக்கலாம். ஆகவே நமது கைகளில் உள்ள நோட்டுக்களை சகல விதத்திலும் தீர்மானிப்பதாக மத்திய வங்கி காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் தங்க இருப்பை வைத்தே பணம் புழக்கத்தில் விடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் பின் தங்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் விளைந்ததே இந்த நாணயக் கொள்கையாகும். உண்மையில் இதில் பல குழறுபடிகள் காணப்படுகின்றன. ஒருவர் 80 களில் நம்மிடம் 500 ரூபாயைக் கடனாகப் பெற்று 2011ல் அதைத் திருப்பித் தருகின்றார் என்றால் அதைப் பெறுவதில் நமக்கு பலனேதுமில்லை. ஏனெனில் இதே தொகையை அன்றைக்கே அவர் திருப்பித் தந்திருந்தால் அதற்கு ஒரு சிறு காணித்துண்டையே வாங்கியிருக்கலாம். சர்வதேச அளவில்  பொதுவான நாணயக் கொள்கையொன்று பின்பற்றப்படுகின்றது.

அதிகப் புழக்கமிருந்தால் அதற்கேற்ப நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. புழக்கம் கூடியன நாணயங்களாகவும், புழக்கத்தில் குறைந்தன நோட்டுக்களாகவும் அச்சிடப்படுகின்றன. பணவீக்கத்தால் இன்று பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. அதனால்தான் இவ்வருடம் குறைந்த அளவாக இரண்டு இலட்சங்களுக்கு ஸகாத் கொடுத்தவர் அடுத்த வருடம் நான்கு இலட்சங்களுக்குத்தான் ஸகாத் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. ஸகாத்தை மதிப்பிடுவதற்கு நாளுக்கு நாள் நாணயப் பெறுமதியை அவதானிக்க வேண்டியுள்ளது. ஆனால் தங்கத்தின் பெறுமதியோ என்றைக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனவே தங்க விலையில் ஏற்படும் மாற்றத்தால் இத்தகு பாதிப்புக்கள் விளைகின்றதாயின் தங்கமே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கின்றது பணமல்ல என்பதை விளங்கலாம். ஸகாத் கொடுக்கும் போது வருடா வருடம் அத்தொகையில் ஏற்றம் ஏற்பட்டுக் கொண்டே போகிறதென்றால் தங்கத்தின் விலையில் ஏற்றம் வருவதாலேயே இவ்வாறு நிகழ்கின்றது. ஸகாத் கடமையாகும் தொகை 10. 2.5 பவ்ன் என்றால் பவ்னின் விலை வருடா வருடம் கூடிக் குறைவதால் ஸகாத் தொகையிலும் இதே மாற்றம் ஏற்படுகின்றது.

எனவே பணத்துக்கல்ல தங்கத்துக்கே நாம் ஸகாத் கொடுக்கின்றோம் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. நபியவர்கள் ஸகாத் கடமையை நிருணயித்ததும் அன்றைய காலத்தில் நாணயமாகவிருந்த தீனார், திர்ஹம் ஆகிய தங்கம், வெள்ளிக்குத்தான். ஆகவே இன்று உலகில் நாணயங்களும், நோட்டுக்களும் மக்கள் பாவனையில் பணமாகவிருந்தாலும் உண்மையில் இந்த நாணயங்களைத் தீர்மானிப்பது தங்கமும் வெள்ளியும்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
صحيح البخاري 2886 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ …….
பொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். புகாரி 2886
 
இந்த ஹதீஸில் பொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் என்று நபியவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் தங்கமும், வெள்ளியும்தான் எப்போதும் நாணயங்களாக இருக்கும் என்பதை மையமாக வைத்துத்தான். ஆகவே இன்றைக்கு பாவனையில் நாணயங்களும் நோட்டுக்களும் இருந்தாலும் இதுவும் ஒரு வகையில் தங்கம்தான் என்பதை மேலுள்ள தரவுகளை வைத்து அறியலாம்.
 
அப்படியாயின் நாம் இன்றைக்கு பணம் கொடுத்து நகையைக் கொள்வனவு செய்கின்றோம் என்றால் தங்கத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்குகிறோம் என்பதே அதன் அர்த்தம். எனவே இந்த சந்தர்பத்தில் நாம் கொடுக்கும் பணத்தின்(தங்கம்) அளவும் வாங்கப் போகும் நகையின் அளவும் பெறுமதியில் சமமாக இருக்க வேண்டும் என்பதே ‘நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம்’ என்று நபியவர்கள் கூறியிருப்பதன் விளக்கமாகும்.

 அப்படியென்றால் நகைக் கடைக்காரார்கள் தாம், பழைய நகையை வாங்கும் போது அவற்றில் அது, இது என பல குறைகளைக் கண்டு அதன் தரத்தைக் குறைத்து, பெறுமதியைக் குறைத்து வாங்குவதைப் போல தாம் விற்கும் புதிய நகைகளிலும் பழைய நகை வாங்கும் போது தாம் கடை பிடிக்கும் இம்முறைகளைக் கையாள வேண்டும் என்று விளங்கலாம். ஆனால் பெரும்பாலும் இது நடைபெறுவதில்லை. ஏதோ தாம் விற்கும் நகைகள்தாம் தரமானவை மற்றையவை அதாவது பழைய நகைகள் தரம் குறைந்தவை என்ற போக்கிலேயே இன்று நகை வியாபரம் நடை பெறுகின்து. இதில் தெளிவாகவே வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

ஆனால் வியாபாரிகளோ கொல்லை இலபாமீட்டுகின்றனர். பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்யப்படும் வழமை பொதுவாகக் காணப்பட்ட போதிலும் இவ்வாறு ஏமாற்றி வாங்கப்படும் பழைய நகைகள் புதிய நகைகளை விடத் தரமானவையாக இருப்பதால் அவை பட்டை தீட்டப்பட்டு புதிய நகைகள் எனும் பேரில் விற்கப்படும் சந்தர்ப்பங்களுமுள்ளன. ஆகமொத்தம் இதில் ஏமாற்றம் நடைபெறுகின்றுது என்பதே நிதர்சனமாகும்.
 
தங்க வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சமே தங்க வியாபாரிகள் முற்பணம் பெறுதலாகும். வாடிக்கையாளர்கள் தம்மை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு தாம் முற்பணம் பெறுவதாக இதற்கு நியாயம் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். ஆனால் இது நேரடியாக ஹதீஸுக்கு முரண்படுகின்றது என்பதுடன் தெளிவான வட்டியாகவும் காணப்படுகின்றது. கீழ்வரும் ஹதீஸ் இதையே உணர்த்துகின்றது. ‘உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும்.’ அகவே இவ்வாறு முற்பணம் பெறுவது தெளிவான வட்டியாகும் எனவே இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
 
பணத்துக்கேற்ப அளவில் சமமாகவிருந்து, முற்பணம் பெறாது, உடனடியாகப் பணம் கொடுத்து நகை வியாபரம் நடை பெறும் போது அதில் தவறில்லை என்பதையும் நாம் விளங்க வேண்டும். இம்முறைகளைப் பின்பற்றுவதால் நஷ்டமேதும் ஏற்படப் போவதுமில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் இஸ்லாம் சொல்லும் இம்முறைகளில் ஒருக்காலும் மாற்றம் செய்யவும் முடியாது.
 
வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சம்தான் ஒரு நாட்டு நாணயத்தைக் கொடுத்து அதற்கு வேறொரு நாட்டின் நாணயத்தை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் தவறுகள். தங்கத்துக்கு வெள்ளியை மாற்றுவதைப் போன்றுதான் இதையும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது நம் நாட்டுப் பணத்தைக் கொடுத்து இன்னொரு நாட்டுப் பணத்தை நாம் வாங்கும் போது நம் நாட்டுப் பணத்தைத் தங்கம் போல அல்லது வெள்ளியைப் போல, மற்ற நாட்டுப் பணத்தை தங்கம் போல அல்லது வெள்ளியைப் போலவே நாம் கருதவேண்டும். இவ்வாறான வியாபாரத்தில் நமக்கேற்றவாறு விலையைத் தீர்மானிக்க முடியும். அதில் தவறில்லை ஆனால் உடனுக்குடன் பணம் கொடுத்துத்தான் இவ்வியாபாரம் நடை பெறவேண்டும். அவ்வாறு உடனுக்குடன் பணம் பெறப்படவில்லையாயின் அது வட்டியாகும் கீழ்வரும் ஹதீஸ் இதையுணர்த்துகின்றது. உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். அறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143
 
பரவலாக இன்று வியாபாரத்தில் இடம் பெறும் இன்னொரு பாவம்தான் அவசரமாகப் பணம் தேவைப்படும் போது தன்னிடமுள்ள காசோலையைக் கொடுத்து பணம் பெறுவதாகும். ஒருவருக்கு அவசரமாகக் காசுதேவைப்படுகின்றது. ஆனால் கைவசம் காசு இல்லை. காசோலைதான் இருக்கிறது என்றால் அதை எடுத்துக் கொண்டு குற்றிப்பிட்ட ஒரு தொகையை  கூலியாக எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தைக் கொடுக்கும் வியாபாரம் இன்று பரவலாக நடைபெறுகின்றது. இது முற்றிலும் மார்த்துக்கு முரணான அம்சமாகும். காசோலையும் (அது கடன் வகை சார்ந்ததாய் இருந்தாலும்) ஒரு வகையில் தங்கம்தான். ஏனெனில் தங்கத்துக்கு மாற்றீடாகவே இது பயன்படுத்தப் படுகின்றது. எனவே காசோலையில் உள்ள பெறுமதிக்குக் குறையாமல்தான் பணம் கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தொகையைக் குறைக்கக் கூடாது அவ்வாறு செய்தால் அது வட்டி என்று இஸ்லாம் கூறுகின்றது.
 
மேலே நாம் பார்த்த முறைகளைக் கவனத்திற்கொண்டு  வியாபாரம் செய்வோமானால் அல்லாஹ் அதில் நமக்கு பரகத் செய்வான் எனும் நம்பிக்கை நம் மனதில் ஆழமாகப் பதியுமானால் நிச்சயம் அது நம்மில் பல மாற்றங்களையும், புதிய உத்வேகங்களையும் ஏற்படுத்தும் என்பதுடன் இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்கள் மனித குலத்துக்கு நன்மையானவையே தீங்கையும், இழப்பையும் ஏற்படுத்தும் சட்டங்களை இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை என்பதுவே உண்மையாகும்.

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget