பெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைத்தால் அதை வாங்கலாமா.?

பெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைத்தால் அதை வாங்கலாமா.?
 
சிந்தித்து பாருங்கள்.! மனச்சாட்சி பதில் சொல்லும்... பெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக வந்தால் “அனுமதி” எனும் ஓர் ஆபத்தான செய்தியை என் காதுகளை அடைய செய்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்...
   
ஒரு பெண் விரும்பும் மகர்தொகை அது தங்கப்பாளமாக இருந்தாலும் அதை கொடுத்த பின்பே அவளை தொடலாம் என்பதை உணர்த்திய எத்தனை சீதன ஒழிப்பு மாநாடுகள்.!! தான் பெண்ணின் நிர்வாகி என்பதையே மறந்து திருமணத்திற்கு தயாரான இளைஞர்களிற்கு தன் மனைவிக்குரிய வசிப்பிடத்தை தானே அமைக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்திய எத்தனையோ உரைகள் .! சீதனம் என்பது சமூக கொடுமை! பகல் கொள்ளை! மற்றவர்களின் சொத்தை உரிமை இன்றி அனுபவிக்கும் மனிதாபிமானமற்ற செயல்! மொத்தத்தில் எம்மை நரகிற்கு இட்டு செல்லும் ஒரு கொடிய பாவம்.!
 
இவை எல்லாம் சமூகத்தில் உரத்துச் சொல்லி உணர்த்தபட்ட உண்மைகள்!. ஆனால், தற்போது அதை அன்பளிப்பு என்ற வார்த்தைக்குள் அடக்கி அது “அனுமதி” என பத்வா கொடுக்கும் உலமாக்களிற்கு என் எழுத்தாக்கம் சமர்ப்பணம்......
.
“அன்பளிப்பு “ அல்ல இன்னும் ஆயிரம் பெயர்கள் வைத்தாலும் தடுக்க வேண்டியதை தடுத்தே ஆக வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸே போதுமான ஆதாரமாகும்.
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதி (ரழி அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் “அஸ்த்” எனும் குலத்தை சேர்ந்த மனிதரை சகாத் வசூலிப்பவராக நியமித்தார். அவர் “இப்னுல் லுத்பிய்யா” என அழைக்கபட்டு வந்தார். அவர் சகாத் வசூலித்து கொண்டு வந்த போது “இது உங்களுக்கு உரிய(சகாத் நிதியம் ); இது எனக்கு அன்பளிப்பாக வழங்கபட்டது.” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தன் தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா என்று பார்க்கட்டுமே.

என் உயிர் யாரின் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களில் யரேனும் ஒன்றை (முறைகேடாக) பெற்றிருந்தால் அதை அவர் தமது பிடரியில் சுமந்து கொண்டு மறுமை நாளன்று வருவார்.... அது ஒட்டமாக இருந்தால் கனைத்து கொண்டு இருக்கும் பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்தி கொண்டு இருக்கும். என்று கூறினார்கள் . பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் அக்குளின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவிற்கு தம் கைகளை உயர்த்தி “இறைவா! (உன் செய்தியை) எடுத்துரைத்து விட்டேன் .அல்லவா? நான் எடுத்து உரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள் (புகாரி _2597)
 
இந்த ஹதீதை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் “தகுந்த காரணத்திற்காக அன்பளிப்பை ஏற்காமல் இருப்பது” என்ற தலைப்பின் கீழ் கொண்டு வருகிறார். இந்த மனிதர் “இது எனக்கு கிடைத்த அன்பளிப்பு” என்று சொன்னவுடனே அல்லாஹ்வின் தூதர் “அன்பளிப்பு” தானே என்று அனுமதி வழங்கவும் இல்லை.. இன்று சிலர் சொல்வதை போன்று “மார்க்க தீர்ப்பின் படி சரி; இதை யாராவது (missuse) தவறாக பயன்படுத்தினால் அந்த பாவம் அவரை சேரும் என்று சொல்லவுமில்லை. ..மாறாக, அவருக்கு கேட்காமல் கிடைத்த அன்பளிப்பை பின்னால் வரும் பல பிரச்சினைகளை கருத்திற் கொண்டு காரசாரமான வார்த்தைகள் மூலம் தடுக்கிறார்.
 
அது மட்டும் அன்றி இந்த இடத்தில் இந்த மனிதர் இந்த பொருளை என்னிடம் கையளியுங்கள் என்று கேட்கவே இல்லை. ஆனால் இறை தூதர் அவர்கள் அந்த அன்பளிப்பு தவறானது என்பதை அவருக்கு மட்டும் சுட்டி காட்டுவதோடு நின்று விடாமல் சமூகத்திற்கு முன்னிலையில் அத்தவறை அம்பலப்படுத்தி அதை கடுமையாக தடுக்கிறார்கள்.
 
வேதனைக்குரிய விடயம் என்ன வென்றால் சீதனத்தை ஒழிக்க கடமைப்பட்ட எம்மில் சிலரோ “அன்பளிப்பு என்று வாயால் மட்டும் சொன்னால் போதும்; பெண் வீட்டு சொத்து அனுமதி ஆகி விடும்” என்று மார்க்க தீர்ப்பு வழங்குவது சீதனத்தயே ஊக்குவிப்பது போன்றல்லவா இருக்கிறது.! இந்த ஹதீஸில் அந்த மனிதருக்கு கொடுக்க பட்டது தெளிவான அன்பளிப்பு. ஆனால் அங்கே அல்லாஹ்வின் தூதர் அன்பளிப்பு கொடுக்க பட்ட சந்தர்ப்பத்தை பார்க்கின்றார்கள். அன்பளிப்பு இவரை தேடி வர வில்லை. சகாத் வசூலிக்க போனதால் தான் அன்பளிப்பு கிடைத்தது. அதே போல் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க போனதால் தான் பெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைக்கிறது. அவரை தானாக அது தேடி வரவில்லை.
 
அனால் சிலரோ “இவர் அலுவலக ரீதியாக தான்(official visits) சென்றார். இந்த சந்தர்பத்தில் தான் இது லஞ்சமாக மாறுகின்றது. என்னுடைய சொந்த சகோதரி, சொந்த சகோதரன், சொந்த மாமா, சொந்த சாச்சா கஷ்டப்படும் போது என்னிடத்தில் வசதி இருந்தால் கொடுத்து உதவி செய்வதை எவ்வாறு தடை செய்வீர்கள்? என்று கேட்கிறார்கள். அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்களுடைய உறவுகளிற்கு உதவி செய்வதை இந்த ஹதீதை கொண்டு தடை செய்யவில்லை.மாறாக உதவியோ அன்பளிப்போ செய்யும் போது அந்த சந்தர்பத்தை கொஞ்சம் கவனியுங்கள் என்று தான் கனிவாய் வேண்டுகிறோம்.
 
உங்கள் தம்பி கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவது தவறில்லை. தம்பி அந்த பணத்தை கொண்டு சாராயம் வாங்குவார் என்று தெரிந்திருந்தும் பணம் கொடுப்பது தவறல்லவா? நீங்கள் கொடுக்கும் “வீட்டன்பளிப்பு”- “உங்கள் சொத்தில் இருந்து நீங்கள் வசிக்கின்ற இடங்களில் அவர்களையும் குடி இருப்பாட்டுங்கள்.” (அதலாக்:6) என்ற அல்லாஹ்வின் வசனத்தை நடைமுறைப் படுத்தாத உங்கள் மச்சினனுக்கு அல்லவா உதவியாக இருக்கிறது. 
 
தெளிவான அன்பளிப்பாக இருந்தாலும் அந்த சந்தர்ப்பம் எங்களை பாவத்தின் பால் இட்டு செல்லும் என்றிருந்தால் அதை தவிர்ந்து கொள்வதே இந்த நபி மொழி மூலம் எமக்கு கிடைத்த நபி வழி ஆகும். இந்த ஹதீதை வைத்து அன்பளிப்பிற்கான வாயலை மொத்தமாக நாங்கள் அடைக்கவில்லை. மாறாக இந்த ஹதீஸை சரியாக சிலர் விளங்காமல் சீதனம் எனும் சமூக கொடுமையின் வாசலை மொத்தமாக திறந்து விட்டிருக்கிறார்கள். சீதனம் எனும் சமூக கொடுமை நடக்கும் எமது சூழலில் அதனை அடிச்சுவடு இல்லாமல் அழித்தொழிப்பதே அல்லாஹ்விற்கு அடிபணிவதன் அடையாளம். அதை விட்டு பெயர் மாற்றி சீதனத்திற்கு அடித்தளம் இடுகிறார்கள். அல்லாஹ் பாதுகப்பானாக....
 
பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளிற்கு விரும்பி கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழும்பலாம்... ஆம்!
 
நுஅமான் பின் பசீர் (ரழி) அவர்கள் கூறியதாவது  என் தந்தை என்னை நபி (ஸல்) அவர்களிடம் கூட்டி சென்று “நான் என்னுடைய இந்த மகனுக்கு ஒரு அடிமையை அன்பளிப்பு செய்திருக்கிறேன்.” என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதை போன்றே அன்பளிப்பு செய்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று பதில் அளித்தார். நபி(ஸல்) அவர்கள் அப்படி என்றால் அதை திரும்ப பெற்று கொள்ளுங்கள். என்று கூறினார்கள். புகாரி:2586
 
இங்கே அல்லாஹ்வின் தூதர் சமனாக கொடுத்தீர்களா? என்று கேட்டு விட்டு அப்படி இல்லை என்ற உடனே அதை மீட்டெடுக்க சொல்கிறார்கள். மற்ற பிள்ளைகள் பொருந்தி கொண்டார்களா? என்று நபி(ஸல்) கேட்க வில்லை.....
 
ஆனால் சிலர் இவ்வாறு கேட்பது “அவ்வளவு பொருத்தமான விடயம் இல்லை” என்று அரை குறையாய் பதில் கூறுகிறார்கள். நடு நிலையாய் யோசிக்கும் மக்களிற்கு “எவ்வளவு பொருத்தம்” என்று விளங்கும்.
பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அன்பளிப்பு எனும் பெயரில் கொடுக்க வேண்டும் என்றால் ஆண் பிள்ளை , பெண் பிள்ளை என எல்லோருக்கும் சமனாக கொடுக்க வேண்டும். ஆனால் பெண் பிள்ளைகளிற்கு மட்டுமே அன்பளிப்பு கொடுக்க படுவதன் ரகசியம் தான் இன்னும் புரிய வில்லை....!
சகோதரர்கள் சேர்ந்து தங்கைக்கு ஏன் அன்பளிப்பு கொடுக்கிறார்கள்.....!.
 
தம்பி அன்பளிப்பு பெற தகுதி இல்லையா......?
சிந்தித்து பாருங்கள் மனசாட்சி பதில் சொல்லும்.....!.
 
தங்கைக்கு வீட்டையே பரிசாக கொடுக்கும் பல பணக்கார சகோதரர்கள் மனைவியின் வீட்டில் தஞ்சம் புகுந்து இருப்பது தான் இன்னும் புரியாத புதிர்..“அன்பளிப்பு” அனுமதி தானே என்று மனைவியின் வீட்டில் அடைக்கலம் பெற்றவர்கள் தன் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அவள் இருப்பதற்கான இருப்பிட வசதியை விவாகரத்து செய்த கணவனே செய்து கொடுக்க வேண்டும். என்ற இஸ்லாமிய சட்டத்தை எங்கு சென்று நடை முறைப்படுத்த போகிறார்கள்..! .சந்தோசமாக இருக்கும் போதே தன் மனைவிக்கென்று ஒரு வீட்டை ஆக்காதவன் விவாகரத்து செய்த பின் தனி வீடு தேடுவது சாத்தியம் இல்லாத ஒரு விடயம்.
 
அன்பளிப்பு அன்பளிப்பு என்று அலட்டிக்கொள்ளும் இவர்கள் அந்த மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து திருமணம் நடந்த ஒரு கிழமையில் அன்பளிப்பு வீட்டை விற்க தயாரானால் விட்டு விடுவார்களா.....?
 
அல்லது மாப்பிள்ளை தன் மனைவியை பிரிந்தால் அன்பளிப்பு வீடை அவரே எடுத்து செல்ல விட்டு விடுவார்களா....?
 
அன்பளிப்பு” என்றால் அது தேவை இல்லை என்று மறுக்கப்பட்ட உடன் கவலை வர வேண்டும். அனால் அந்த மாப்பிள்ளை உங்கள் தங்கை மட்டும் போதும் இதை எல்லாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன்னால் உண்மையிலேயே கவலைப்படுவார்களா....?

இல்லை என் மச்சினன் இவ்வாறு சொல்லி விட்டார் என்று அவரை புகழ்ந்து பேசுவார்களா...?
 
சிந்தித்து பாருங்கள் மனச்சாட்சி பதில் சொல்லும்.....
.
இன்று சமூகத்தில் நடக்கும் வட்டி எல்லாம் வேறு பல நல்ல பேர்களில் தான் நடக்கிறது. சந்தோசம், கைக்கூலி, அன்பளிப்பு என்றல்லாம் பெயர் வைப்பதால் வட்டி ஹலால் ஆகி விடுமா? ஏன் சகோதரர்களே! இன்று தெளிவான வட்டி வங்கியின் நிர்வாகம் விரும்பி தானே தருகிறார்கள்! விரும்பி தருகிறார்கள் என்பதற்காக ஹராம் ஹலால் ஆகி விடுமா? சிசு உதான போன்ற வங்கி கணக்கில் சிறுவர்களிற்கு பரிசுகள் பல கிடைக்கின்றன! அன்பளிப்பு தானே என்று ஹலால் ஆக்கி விடலாமா.?
 
சிந்தித்து பாருங்கள் மனசாட்சி பதில் சொல்லும்....!
 
உங்கள் சொத்தில் இருந்து நீங்கள் வசிக்கின்ற இடங்களில் அவர்களையும் குடி இருப்பாட்டுங்கள். (அதலாக்:6) என்ற திருமறை வசனம் எமது காதுகளை எட்டவில்லையா? யார் யாரோ கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை அன்பளிப்பு எனும் பேரில் அபகரித்து அனுபவிக்கும் மனிதன் மனிதநேயம் பெற்றவனா...? இவர்கள் பெரும் ஆசிரியர்களாக இருந்து எந்த சமுதாயத்தை உருவாக்க போகிறார்கள்...?
பெரும் வைத்தியர்களாக இருந்து எந்த நோயாளியின் மீது இரக்கம் காட்ட போகிறார்கள்...?
படித்தவர்கள் என்றால் மனித நேயமற்ற பகல் கொள்ளையர்களா...? அல்லது காருண்யத்தை செயல் வடிவில் காட்டும் பண்பாட்டாளர்களா?
 
மனிதனை மனித நேயமும் மனிதாபிமானமும் உள்ளவர்களாக மாற்றாத கல்வி கல்வியும் அல்ல. மனிதபிமானமற்றவன் கல்வி மானுமல்ல. சாதூர்யமாக சிந்திக்க வேண்டிய மனிதன் சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் ஒதுக்கி தள்ளி விட்டு “சீதனம்” என்ற சிந்தனையை முற்படுத்தி மனிதம் என்ற பண்பை மனிதனில் இருந்து மறைத்து மனித வாழ்வின் அமைதி இன்மையின் வழியை அவனாகவே ஏற்படுத்தியுள்ளான்.  இந்த சீர் கெட்ட சிந்தனை இஸ்லாத்தால் போதிக்க படவில்லை. என்றாலும் சில இடங்களிலே அதன் பிரதிபலிப்புக்களும் தாக்கங்களும் தான்தோன்றி தனமாக சென்று கொண்டு இருக்கிறது..
 
சீதனக் கொடுமையால் சீரழியும் எமது கிழக்கு மாகாணத்தை கணக்கில் கொண்டு நரகிற்கு இட்டு செல்லும் இந்த பாவத்தை முற்று முழுதாக தடுப்பது ஒவ்வொரு தனி நபரின் மீதும் கடமை.
சீதனத்தை தடுக்கும் பணியில் அசட்டையாய் இருப்பவர்களே....! நீங்கள் அதை தடுக்காவிடினும் பரவாயில்லை.. அதற்கு ஆதரவு வழங்குவதை போன்று பேசி பல கண்ணீர் துளி சுமந்து வரும் பாவத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக வேண்டாம்.  அல்லாஹ் எம் எல்லோர்களையும் இதிலிருந்து பாதுகப்பனாக!
 
                                                                                தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபிக் கல்லூரி .
மேலும்பார்க்க >
                          * வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்? 
                          * கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல... 
                          * மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம... 
                          * இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாக... 
                          * வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)
                          * வலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.?

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget