உமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 அல்லது 11 ரகாஅத்களா?

   உமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 ரகாஅத்களா? அல்லது 11 ரகாஅத்களா?

ரமழான் காலத்து இரவுத் தொழுகை (தராவீஹ்) எத்தனை ''ரகஅத்'' என்பதில் அறிஞர்களிடையில் பல கருத்துக்கள் இருந்து வந்துள்ளது. 47,41,36,23,11 என பல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. என்றாலும் பெரும்பாலும் 23 தொழப்படுவதை அவதானிக்கலாம். இதேவேளை மற்றொரு சாரார் ''11ரகஅத்''களை உலகின் பல கோணங்களிலும் தொழுது வருகின்றனர்.
 
ஆதாரங்கள்.
இவ்விருசாராரும் சில ஆதாரங்களை முன்வைத்து தமது கருத்தை நியாயப்படுத்துகின்றனர். ''23 ரகஅத்''களை ரமழான் கல இராவணக்கமாகத் தொழுதுவருபவர்கள் முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுவது உமர் (றழி) அவர்களைத் தொட்டும் வருகின்ற செய்தியையே.. (''உமர் (றழி)' அவர்கள் ''21ரகஅத்'' களை மக்களுக்கு தொழுவிக்குமாறு உபை இப்னு கஃப் (றழி), தமீமுத்தாரி (றழி) ஆகிய இருவருக்கும் கட்டளையிட்டார்கள்'' இந்த செய்தி இமாம் அப்துர்ரசாக் அவர்களுக்குரிய ''முஸன்னப்'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.  இது ஓர் முக்கியமான ஆதாரமாகும். இவ்வாறே, இன்னும் சிலர் நபிகளாரைத் தொட்டும் ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

''ரசூலுள்ளாஹ் (ஸல்) அவர்கள் ரமழானிலே 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தார்கள்''
இதை ''இப்னு அப்பாஸ் (றழி) அவர்களைத் தொட்டும் ''இமாம் தபரானி ''அல்-முஃஜம்'' என்ற கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள்.  என்றாலும் ''20 ரக்அத்'' தராவிஹ் தொழுகையை ஆதரிக்கக் கூடிய பெரும்பாண்மையான அறிஞர்கள் இந்த செய்தியை ஆதாரமனாதாகக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், இந்த ஹதீஸ் 'ஓர் பலவீனமான ஹதீஸ்'' என்று அவர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூறுகின்றார்கள்.

அதாவது, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய ''இப்ராஹீம் இப்னு உத்மான்'' எனும் அறிவிப்பாளர் ''பலவீனமானவர்'' என ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால் இவருடைய செய்தியை ஆதாரமாக ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான காலத் தொழுகைபற்றி ஸஹீஹூல் புஹாரி கிரந்தத்தில்   வந்த ஹதீஸிற்கு, மேற்சொன்ன ஹதீஸ் முற்றிலும் முரணானதாகவும் இருப்பதால் அதை ஹதீஸ்கலை அறிஞர்கள் ''பலவீனமானது'' என ஒரே கரத்தைத் தெரிவித்துள்ளனர்.
 
புஹாரிக் கிரந்தத்தில் வரும் ஹதீஸ் பின்வருமாறு:
''ரமழானில் நபிகளாரின் தொழுகை எவ்வாறு இருந்தது என ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமழானிலோ அல்லது ரமழான் அல்லாத காலத்திலோ 11ஐ விட அதிகமாகத் தொழுததில்லை'' என்று அவர்கள் கூறினார்கள்.
 
இவ்வாறு தெளிவாக நபி (ஸல்) அவர்களின் ரமழான் காலத் தொழுகை பற்றி வந்துள்ளதால் ''20 ரக்ஆத்'' கள் ''தராவீஹ்'' தொழுகின்றவர்கள் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உமiர் (ரழி) அவர்களின் செய்தியையே பிரதான ஆதாரமாக முன்வைக்கின்றனர்.  மேலும், அலி (ரழி) அவர்களைத் தொட்டும் இதே போன்று வரக்கூடிய சில செய்திகளையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

இதனுடன், எனது ஸூன்னத்தையும், குலபாஉர் ராசீதீன்களின் ஸூன்னத்தையும் பற்றிப் பிடியுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதை ஆதாரமாகக் காட்டி உமர் (ரழி), அலி (ரழி) போன்றவர்கள் நேர்வழி பெற்ற கலீபாக்களாக இருப்பதால் அவர்களைப் பின்பற்றுவதில் குற்றமில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
 
பதில்கள்
''11 ரக்அத்'' களை ரமழான்கால இராவணக்கமாகத் தொழுது வருபவர்கள் இவர்களின் இந்த வாதங்களுக்குக் கூறும் பதில் என்னவென்பதை தற்போது பார்ப்போம்.  உமர் (ரழி) அவரகள் ''21ரக்அத்'' கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக வருகின்ற செய்தியை ஆய்வு செய்த போது, அந்த செய்தி உண்மைக்குப் புறம்பான செய்தியாக தெரியவந்தது.
 
அல்ஹதீஸில் ஓர் விதி  அதை விபரிப்பத்ற்கு முன் பலவீனமான ஹதீஸ்களின் வகைகளில் ஒன்றான ''ஷாத் ஆன ஹதீஸ்'' என்பதைப்பற்றித் தெரிந்திருப்பது உதவியாக இருக்கும். இதைப்பற்றி, இதே இணையத்தளத்தில் ''வித்ருத் தொழுகையில் குனூத்'' எனும் தலைப்பில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்த்துக் கொள்ளவும்.

எனவே, சுருக்கமாகக் கூறுவதாயின், ஒரு ஆசரியரிடம் கேட்ட பல நம்பகமான மாணவர்கள் ஓர் செய்தியை ஒரே விதமாகக் கூறியிருக்க, அவர்களை விட நம்பகத்தன்மையில் ஏதோ ஓர் விதத்தில் குறைந்தவர் அச் செய்தியை அவர்களுக்கு மாற்றமாக கூறினால் அந்த தனிப்பிட்டவரின் செய்தி மறுக்கப்பட்டதாகக் கருதப்படும் இதற்கே ''ஷாத்'' என்று கூறப்படும்  இந்த விதியை எம்மனக்கண் முன் வைத்துக் கொண்டு ஆய்வுக்குள் நுழைவோம்.

உமர் (ரழி) அவர்கள் எத்தனை ''ரக்ஆத்''கள் தொழுவிக்குமாறு கட்டளை இட்டார்கள் என்ற செய்தியை அறிவிக்கக் கூடியவர் ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியாவார். அவரிடமிருந்து அந்த செய்தியை அறிவித்தவர் ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்ற தாபீயீன்களைச் சேர்ந்த மிக உறுதியான அறிவிப்பாளர் ஆவார். இவர் ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியின் பேரனுமாவார்.  இந்த இரண்டாம் நபரிடமிருந்து அந்த செய்தியை அறிவித்தவர்கள் ஆறு பேர்களாகும். இதில் நான்குபேர் ''11ரக்அத்''களை தொழுவிக்குமாறு கட்டளை இட்டதாகத் தெரிவிக்கின்றனர். ஐந்தாமவர் ''13ரக்அத்'' கள் என்றும் ஆறாமவர் ''21ரக்அத்'' கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

''11ரக்அத்''கள் எனக் குறிக்கப்பட்ட நான்கு பேர் 
01. இமாம் மாலிக் : இவர் நம்பகத்தன்மையில் மிக உச்ச நிலையில் உள்ள அறிவிப்பாளர். இவருடைய செய்தியை அவருக்குரிய கிரந்தமான ''முஅத்தா'' என்ற கிரந்தத்தில் காணலாம்.
 
02. இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல் கத்தான் : மனன சக்தியில் மலை எனப் போற்றப்பட்டவர்.  இவருடைய செய்தியை இமாம் அபூஷைபாவுக்குரிய ''முஸன்னப்'' என்ற கிரந்தத்தில் காணலாம்.

03. அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் : உறுதியான அறிவிப்பாளர் இவருடைய செய்தியை இமாம் ''ஸயீத் இப்னு மன்சூர்'' அவர்களின் ''ஸூனன்'' என்ற கிரந்தத்தில் காணலாம்.

04. இஸ்மாயில் இப்னு ஜஃபர் (அல் - மதனீ) : இவர் நம்பகத்தன்மையான உறுதியான அறிவிப்பாளர்
இவரின் செய்தி ''அஹாதீதுல் இஸ்மாயீல்'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
 
இதில் முதல் மூன்று பேரும் ''11ரக்அத்''களை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்பவர் அவரின் பாட்டன் ''ஸாயிப்'' என்ற ஸஹாபியிடம் கேட்டு தங்களுக்குச் சொன்னதாக ஒரே வார்த்தையில் அறிவித்துள்ளார்கள். 

நான்காமவர் உமர் (ரழி) காலத்தில் 11 ரக்அத் தொழுபவர்களாக இருந்தார்கள் என அறிவித்துள்ளார்.  இந்த செயல் நபி (ஸல்) அவர்களின் செயலுக்கு முற்றிலும் நேரபாடானதாகும். அதாவது நிச்சயமாக உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவாரேயன்றி அவருக்கு மாறு செய்பவர் அல்ல. அதனால் நபி (ஸல்) அவர்களின் தொழுகை ''11ரக்அத்'' களாக இருந்ததின் காரணமாக அதைப் போன்றே மக்களுக்கும் தொழுவிக்குமாறு ஏவியது நபிகளாரை பின்பற்றியதாக அமைகின்றது. இந்த நான்கு உச்சமான நம்பிக்கை கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திக்கு மாற்றமாக ஒருவர் ''13ரக்அத்'' கள் என்றும் மற்றவர் ''21ரக்அத்''கள் என்றும் அறிவித்துள்ளனர்.

''13ரக்அத்'' கள் எனக் குறிப்பிட் ஐந்தாவதுவர்  இவர் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் : ''இவரின் நம்பத்தன்மையில் அறிஞர்கள் குறைகண்டு விமர்சித்துள்ளார்கள்''  இவர் ''13ரக்அத்'' களை தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் ஏவினார்கள் என ''முஹம்மத் இப்னு யூசுப்'' சொன்னதாக அறிவிக்கின்றார். அதனால் இந்தப் '13ரக்அத்'' கள் என்பது மிக நம்பகமானவர்களின் செய்திக்கு மாற்றமாக வந்ததின் காரணமாக இந்த அறிவிப்பு மேலே விவரிக்கப்பட்ட ''ஷாத்'' என்ற பலவீனமாக ஹதீஸின் வகையில் சேர்க்கப்பட்டு மறுக்கப்பட்டுவிடும்.

21 ரக்அத் என அறிவிக்கும் ஆறாமவர் தாவுத் இப்னு கைஸ். இவர் உறுதியானவராக இருந்தாலும் அவரிடமிருந்த அறிவித்தவர் இமாம் அப்துர்ரஸ்ஸாக் ஆகும்.  இவருடைய இறுதிக்கட்டத்தில் இவரின் மனனத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டது. இவர் தனது கிரந்தத்தில் ''21 ரக்அத்'' தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் கட்டளை இட்டதாக பதிவு செய்த செய்தி மிக நம்பகரமான உச்ச நிலையிலுள்ள அறிவிப்பாளர்களின் ''11ரக்அத்'' என்ற கூற்றிற்கு முரணானதாகும்.

எனவே, மிக நம்பகரமான மூன்று அறிவிப்பாளர்களின் ''11 ரக்அத்'' என்ற செய்திக்கு மாற்றமாக குறைபாடு உள்ள தனிநபரின் இச்செய்திவருவதால் இது ''ஷாத்'' என்ற பலவீனமான ஹதிஸின் அடிப்படையில் மறுக்கப்பட்டதாகும்.  இந்த மாற்றமான அறிவிப்புக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகின்றது. அதாவது   இமாம் அப்துர்ரஸ்ஸாக்கின் கிரந்தத்தில் நோன்பின் பாடத்தை அறிவித்த அறிவிப்பாளர் ''இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம்'' என்பவர் ஆகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பல விமர்சனங்களுக்குட்பட்டு நம்பகத்தன்மை விடயத்தில் குறை கூறப்பட்டவர்.  அது மட்டுமன்றி ''இமாம் அப்துர்ரசாக்''கைத் தொட்டும் பல முரண்பாடான செய்திகளை நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தார்'' என்று இனங்காணப்பட்டவர்.

அதனால் ''இருபத்தியொரு ரக்அத்'' என இங்கு குறிப்பிட்டதற்கு இவரும் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. எனவே நியாயமான பார்வையுள்ள எந்தவொரு நபரும், துல்லியமாக ஆய்வு செய்யப்பட்ட இத்தரவுகளை முன்வைத்துப் பார்க்கின்ற போது ''உமர் (ரழி) அவர்கள் மக்களுக்ககு தொழுவிக்குமாறு ஏவியது, நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைக்கும் நேர்பாடான ''11 ரக்அத்'' கள் தான் என மிகத் தெளிவாக விளங்கும்.

மேலும் ''23 ரக்அத்'' இரவுத் தொழுகை தொழுகின்றவர்கள் காட்டுகின்ற அந்த ஆதாரம் பலவீனமானதுதான் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இன்னும் ''உத்தமமான ஸஹாபி'' உமர் (ரழி) அவர்கள் நபிகளாருக்கு மாறு செய்தார்கள் என்று பலவீனமான அறிவிப்புக்களை வைத்து அவர் மீது குற்றம் சுமத்துவதிலிருந்து நாம் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.  அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக..

''20 ரக்அத்'' கள் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம்
''ஸாயிப் இப்னு யசீதை''த் தொட்டும் ''யஸீத் இப்னு ஹூஸைபா'' என்பவர் அறிவிக்கிறார். உமர் (ரழி) அவர்களின் காலத்திலே ரமழானில் (மக்கள்) ''20 ரக்அத்'' கள் தொழுபவர்களாக இருந்தனர். இதனை இமாம் பிர்யாபீ ''அஸ் - ஸியாம்'' என்ற தனது கிரந்தத்திலும் இமாம் பைஹகீ, அஸ் - ஸூனன்'' என்ற தனது கிரந்தத்திலும் குறிப்பிட்டுள்ளனர். இதனையும் ஒரு முக்கியமான ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். என்றாலும் இந்த ஆதாரம் இரண்டு வகையில் மறுக்கப்பட்டுவிடும்.

முதலாவது மறுப்பு இந்த செய்தியை ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியைத் தொட்டும் அறிவிக்கக்கூடிய ''யசீத் இப்னு ஹூஸைபா'' என்பவர் உறுதியான அறிவிப்பாளராக இருந்தாலும் அவரைப்பற்றி இமாம் அஹ்மத் ஒரு சந்தர்ப்பத்தில் விமர்சித்தும் உள்ளார்.  அதாவது ''மிக உறுதியான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாகவும் சில வேளைகளில் செய்திகளை சொல்லிவிடக் கூடியவர்'' என்பதற்குரிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். மேலும் ''உமர் (ரழி) அவர்கள் ''11 ரக்அத்'' களை தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என்ற செய்தியை ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற ஸஹாபியிடமிருந்து செவியுற்ற அவரின் பேரரான ''முஹம்மத் இப்னு யூசுப்'' என்பவரை விட இவர் நம்பகத்தன்மையில் சற்று குறைவானவர். அதாவது ''ஸாயிப் இப்னு யசீத்'' என்ற இந்த ஸஹாபியிடமிருந்து இரண்டு பேர் செவியுறுகிறார்கள்.

01. முஹம்மத் இப்னு யூசுப் : இவர் மிக மிக உறுதியான நம்பகமான அறிவிப்பாள்ர் என இமாம்களால் கூறப்பட்டவர் (இவர்தான் ''11 ரக்அத்'' கள் எனக் குறிப்பிட்டவர்)
 
02. யசீத் இப்னு ஹூஸைன்பா : ''20 ரக்அத்'' கள் எனக் குறிப்பிட்டவர், இவரும் உறுதியானவர் ஆனால் முதலாம் நபரை விட உறுதி குறைந்தவர். 
 
எனவே இவ்விருவரும் முரண்படும் போது, ஹதீஸ்கலை விதியின் படி முதலாம் நபரின் அறிவிப்பே முற்படுத்தப்பட்டு ஏற்கப்பட வேண்டும். இரண்டாம் நபரின் அறிவிப்பு ஆரம்பத்தில் விபரித்த ளயீபான ஹதீஸின் வகையில் ஒன்றான ''ஷாத்'' என்ற வகையின் சட்டத்தின்படி பலவீனமாகக் கருதப்பட்டு மறுக்கப்பட்டுவிடும்
 
இரண்டாம் மறுப்பு 
ஒரு வாதத்திற்கு ''இந்த செய்தி உண்மையானதுதான்'' என்று வைத்துக் கொண்டாலும் ''20ரக்அத்''களைத் தொழுவது ''ஸூன்னத்'' என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஏனென்றால் இங்கு குறிப்பிடுவது உமர் (ரழி) காலத்தில் வாழ்ந்த சில மக்கள் ''20ரக்அத்''கள் தொழுத செய்தியாகும். மக்களின் நடவடிக்கை ஸூன்னாவாக ஆக முடியாது. இதனால் தான் உமர் (ரழி) அவர்கள் நபியவர்களைப் பின்பற்றி மக்களுக்கு ''11ரக்அத்'' களைத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுக்கு நேர்பாடாக மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரழி) அவர்கள் கட்டளையிட்ட அந்த ''11ரக்அத்'' களைத்  ஸூன்னாவாக எடுக்க வேண்டும்.

நபிகளாரின் வழிமுறைக்கும் உமர் (ரழி) அவர்களின் கட்டளைக்கும் மாற்றமாக மக்கள் ''20ரக்அத்'' கள் தொழுது வந்த செய்தி'' யை ஒரு போதும் ஆதாரமாகக் கொண்டு செயற்பட முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவைகள் தவிர இன்னும் சில செய்திகள் வந்துள்ளன அவையனைத்தும் பலவீனமானவையாகும்.

01. உமர் (ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ''23ரக்அத்'' கள் தொழுதார்கள் என ''யசீத் இப்னு ரூமான்'' என்பவர் அறிவிக்கின்றார். இந்த செய்தி இமாம் மாலிகின் ''முஅத்தா'' என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இந்த ''யசீத்'' உமர் (ரழி) அவர்களின் இறப்பின் பின்னரே பிறந்தவர் என்பதால் அவருடைய செய்தியும் நம்பமுடியாததாகும்.

02. அலி (ரழி) காலத்தில் மக்கள் ''20ரக்அத்'' கள் தொழுதார்கள் என்று இரண்டு அறிவிப்பாளர்கள் வரிசையூடாக செய்திகள் பதியப்பட்டுள்ளது. ஓர் அறிவிப்பாளர் வரிசையில் ''அபுல் ஹஸ்னா'' என்ற ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் விலாசமோ நம்பகத்தன்மையோ சொல்லப்படாத அறிவிப்பாளர்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இரண்டாம் அறிவிப்பாளர் வரிசையில் ''ஹம்மாத் இப்னு சுஐப்'' என்ற ளயீபான பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இதனால் இவர் இடம் பெறும் அறிவிப்பும் மறுக்கப்பட்டதாகும்.
எனவே ''குலபாஉர் ராசீதீன்கள் காலத்தில் மக்கள் ''23 ரக்அத்''கள் தொழுது வந்தாலும் அவர்கள் அதை அங்கீகரித்ததினாலும் நாங்களும் தொழுகின்றோம் என்று வாதிடக் கூடியவர்களிடம் அதனை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு சரியான ஆதாரங்களும் இல்லை. இன்னும், அபூபக்கர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகிய இரு நேர்வழி பெற்ற கலீபாகக்களைத் தொட்டும் இந்த விடயத்தில் சரியான செய்திகள் எதுவும் பதியப்படவில்லை.

இறுதியாக உமர் (ரழி) அவர்களைத் தொட்டும் வந்த செய்தியின் உண்மை நிலைபற்றி வாசகர்களான நீங்கள் புரிந்திருப்பீர்கள். எனவே ரமழான் கால இராவணக்கம் ''11ரக்அத்'' களாகவே இருப்பதினால் அதனையே நாம் கடைப்பிடிப்போம்.

மேலும் அதற்கு மாற்றமாக ''(நேர்வழி பெற்ற கலீபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழியல்லாஹூ அன்ஹூ) போன்றவர்கள் ''23 ரக்அத்'' கள் தொழுதார்கள் அல்லது தொழக்கட்டளையிட்டார்கள் என்ற தவறான வாதத்தை இதன் பின்னர் தவிர்ந்து கொள்வோம்.
''அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக''
 
                                                                                                                   மௌலவி அன்சார் (தப்லீகி)
மேலும்பார்க்க >
                     * நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்ட... 
                     * ரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)
                     * தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?
                     * ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூ...
                     * மகத்துவமிக்க இரவில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள்...
                     * ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்...!! 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget