நேசம் யாருக்காக.? நேசம் கொள்வதிலே ஏற்படுத்தப்படும் ஷிர்க்

நேசம் யாருக்காக.? நேசம் கொள்வதிலே ஏற்படுத்தப்படும் ஷிர்க்
(அஷ் ஷேஹ் ஸாலிஹ் அல் பவ்ஷான் அவர்களின் அல்இர்ஷாத் இலா சஹீஹில் இஃதிகாத் என்ற நூலில் இருந்து )  அல்லாஹ்வை நேசிப்பதானது, அது அவன் மீதான நேசத்தோடு பிணைக்கபட்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில், அச்சத்தை கொண்டு மாத்திரம் நீ அல்லாஹ்வை வணங்குவதானது, அது கவாரிஜ்களின் அடிப்படை அம்சமாகும். அல்லாஹ்வை நேசிப்பதானது, அது இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை விடயமாகும். அல்லாஹ்வை பூரணமாக நேசிப்பதால் தான் ஒரு மனிதனின் மார்க்கம் பூரணத்துவம் பெறும். அது குறைவதால் அவன் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதிலே குறைவு ஏற்படும்.

இங்கே, "நேசம்" என்பதன் மூலம் நாடப்படுவது: தாழ்வையும், பணிவையும், பூரணத்துவம் பெற்ற வழிபாட்டையும், மேலும் ஏனையோரை விட நேசிக்கப்படவேண்டியவரை(அல்லாஹ்வை) சிறப்புப்படுத்துவதை வேண்டி நிற்கும் வணக்க ரீதியான நேசம் ஆகும். இந்த நேசமானது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தானதாகும். அதிலே அவனோடு வேறொருவரை இணையாக்குவது எந்த ஒருவருக்கும் அனுமதி ஆகாது; ஏனெனில் நேசம் கொள்ளல் என்பது பிரதானமாக இரு வகைப்படும்.

1. தனித்துவமான நேசம்: இது தான் நேசிக்கப்பட வேண்டியவனுக்கான (அல்லாஹ்வுக்கான) பூரண பணிவையும்,பூரண வழிபாட்டையும் வேண்டிநிற்கும் வணக்க ரீதியான நேசம். இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்துவமானது.
2. பங்கு போடப்படக்கூடிய நேசம்: இது மூன்று வகைப்படும்.

I. இயற்கையான விருப்பு; உதாரணமாக பசித்தவர் உணவை விரும்பல்.
II. இரக்கத்தை வெளிப்படுத்தும் நேசம்; உதாரணமாக தந்தை தனது பிள்ளையை நேசித்தல்.
III. ஆறுதல் , பரஸ்பரம் பரிமாறும் நேசம் : உதாரணமாக, ஒருவர் தன துணையை நேசித்தல், ஒருவர் தன் நண்பனை நேசித்தல். 

இம்மூன்று வகையான நேசமானது  மகத்துவப்படுதுவதையோ பணிந்து நடப்தையோ வேண்டி நிற்காது. அதற்காக எந்த ஒருவரும் குற்றம் பிடிக்கப்படவும் மாட்டார்கள். மேலும் இந்த வகையான நேசமானது (அல்லாஹ் மீது மாத்திரம் வைக்கப்படவேண்டிய) தனித்துவமான நேசத்தோடு போட்டி போடவும் மாட்டாது. மேலும் இந்த வகையான நேசம் இருப்பது ஷிர்க்’ஆகவும் மாட்டாது. என்றாலும்; (அல்லாஹ் மீது மாத்திரம் வைக்கப்பட வேண்டிய) தனித்துவமான நேசமானது இதை விட முற்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியம் ஆகும்.

மேலும், தனித்துவமான நேசம்-வணக்க ரீதியான் நேசம்- அது குறித்து தான் பின்வரும் அல்லாஹ்வின் கூற்றிலே கூறப்படுகிறது. “மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு நித்’களை-இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர். (ஆனால்) விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்”
 (அல்பகறா:165)

இமாம் இப்னுல் கையும் (ரஹ்) இந்த வசனத்தை பற்றி கூறுகையில்; அல்லாஹ்வை நேசிப்பது போல யார் அல்லாஹ் அல்லாததை நேசிக்கின்றாரோ அவர் நேசிப்பதிலும், மகத்துவப்படுத்துவதிலும் அல்லாஹ் அல்லாத நித்’களை (இணையாளர்களை) எடுத்துக்கொண்டவர் ஆவார் என அல்லாஹ் தெரிவிக்கிறான்
.
மேலும், இப்னு கஸீர்(ரஹ்) கூறுகையில்; முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வுக்கு நித்’களை; அதாவது இணையாளர்களையும், நிகரானவற்றையும் எடுத்துக்கொண்ட ரீதியிலே, இம்மையிலே அவர்களுடைய நிலை குறித்தும் மறுமையிலே அவர்களுக்காக இருக்கும் வேதனை, தண்டனை குறித்தும் அல்லாஹ் கூறுகிறான். “அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை (நித்’களை) நேசிக்கின்றனர்.” அதாவது: நேசிப்பதிலும், மகதுவப்படுதுவதிலும் அவற்றை அல்லாஹ்வுக்கு சமப்படுத்துகின்றனர். இப்னு கஸீர்(ரஹ்) கூறிய இக்கூற்றானது, அது தான் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) இனது தேர்வுமாகும். அதே போல தான், அல்லாஹ் அவர்களுடைய இந்த சமப்படுத்தல் செயல் குறித்து தன கூற்றிலே பின்வருமாறு கூறுகிறான்:

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தோம். அகிலத்தாரின் இரட்சகனாக இருப்பவனுக்கு (இணையாக்கப்பட்ட) உங்களை நாங்கள் சமமாக ஆக்கி வைத்த போது_ (நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தோம்)”
(அஷ்ஷுஅரா:97,98).

இன்னுமொரு கூற்றிலே: அதன் பின்னரும்,  நிராகரிப்போர் (அல்லாஹ்வாகிய) தங்கள் இரட்சகனுக்கு (அவன் படைத்தவற்றில் சிலதை) சமமாக்குகின்றனர்” (அல்அன்ஆம்:1).

இன்னுமொரு கூற்றிலே “விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்” அதாவது, இணையாளர்களை வணங்கக்கூடியவர்களது அல்லாஹ்வுக்கான நேசத்தை விட மு’மின்களினது அல்லாஹ்வுக்கான நேசமானது கடினமானதாகும். மேலும் “இணையாளர்களை வணங்கக்கூடியோர் அவர்கள் இணையாளர்களை நேசிப்பதை விட (மு’மின்களது) அல்லாஹ்வுக்கான நேசம் கடினமானதாகும்.” எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்த வசனமானது யார் அல்லாஹ்வை நேசிப்பதை போல் வேறொரு விடயத்தை நேசிக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்காக ஒரு இணையை ஏற்படுத்தி விட்டார் என்பதை உணர்த்தி நிற்கிறது.

ஷேக் முஹம்மத் இப்னு அப்ததில்வஹ்ஹாப் கூறுகிறார்: அல்லாஹ்வை நேசிப்பதற்கு சமனாகின்ற அளவுக்கு ஒருவர் (அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட)ஒரு இணையை நேசிப்பது, அது பெரிய வகை ஷிர்க் ஆகும்- எனும் விடயமும் இந்த வசனத்திலே இருக்கிறது. வணக்க ரீதியான நேசமான அல்லாஹ்வின் மீதான நேசமானது, அதை அது அல்லாத நேசத்தை விட-. அதாவது, பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள், செல்வத்தை போன்றவற்றை நேசிப்பதை விட முற்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், இந்த நேசத்தை அல்லாஹ்வை நேசிப்பதை விட முற்படுத்துபவரை அல்லாஹ் எச்சரித்து கூறுகிறான். அல்லாஹ் கூறுகிறான்:

நீர் கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய ஆண்மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் எதனை சம்பாதித்து வைத்திருக்கிறீர்களோ அந்த செல்வங்களும் , நீங்கள் எதனுடைய நஷடத்தை பயப்படுகிறீர்களோ அத்தகைய வியாபாரமும், நீங்கள் எதனை திருப்திபடுகிறீர்களோ அத்தகைய குடியிருப்பிடங்களும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையும் விட உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால், அப்போது நீங்கள் (தண்டனைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிபார்த்திருங்கள். மேலும், அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(அத்தவ்பா:24)

ஆகவே, அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவன் விரும்பக்கூடிய செயல்களையும் நேசிப்பதை விட அற்பகிரயங்களுக்காக நேசிக்கப்படக்கூடிய இவற்றை முற்படுத்துபவரை அல்லாஹ் எச்சரிக்கின்றான். அல்லாஹ் இந்த விடயங்களை நேசிப்பதற்காகவே மாத்திரம் எச்சரிக்கவில்லை. ஏனெனில், இவை தேர்வோடு சம்பந்தப்படாமல் மனிதன் மீது வலுகட்டயமாக்கப்பட்ட சில விடயங்களாகும். அந்த வகையில், அல்லாஹ் எச்சரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கக்கூடியவற்றை நேசிப்பதை முற்படுத்துவபவரைத்தான். ஆகவே, ஒரு அடியான் தான் விரும்புவதையும், தான் நாடுவதையும் விட அல்லாஹ் தான் அடியானிடமிருந்து விரும்புவதையும், நாடுவதையும் சிறப்புப்படுத்துவது அவசியமாகும்.

அல்லாஹ்வை நேசிப்பதை உணர்த்தி நிற்கக்கூடிய சில அடையாளங்கள்
யார் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ அவர் நிச்சயமாக தான் விருப்பம் கொள்ளும் மனோ இச்சைகள், சுவாரஷ்யமானவைகள், செல்வங்கள், பிள்ளைகள், பிரதேசங்கள் போன்றவற்றை விட அல்லாஹ் விரும்பும் அமல்களை முற்படுத்துவார்.

யார் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ அவர் நிச்சயமாக அவனது தூதரை அவர் எடுத்து வந்தவற்றிலே பின்பற்றுவார். அவர் ஏவியதை செய்வார். அவர் தடுத்ததை விட்டு விடுவார். அல்லாஹ் கூறுகிறான்:"
நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபை உடையவன்”. நீர் கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்; பின்னர் அவர்கள் புறக்கணித்தால்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்க மாட்டான்.”
(ஆலுஇம்ரான்: 31,32).

ஸலபுகளில் சிலர் கூறுகின்றனர்; அல்லாஹ்வை நேசிப்பதை குறித்து ஒரு கூட்டத்தினர் வாதிட்டனர். அப்போது அல்லாஹ் (அவனை) நேசிப்பது குறித்த இந்த வசனத்தை இறக்கி வைத்தான். “நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்” (ஆலுஇம்ரான்: 31)

மேலும் இந்த வசனத்திலே அல்லாஹ்வை நேசிப்பதற்கான ஆதரத்தினது தெளிவும், அதனது பிரதிபலனினது தெளிவும், அதனது பிரயோசனத்தினது தெளிவும் இருக்கிறது. அந்த வகையில், அல்லாஹ்வை நேசிப்பதன் ஆதாரமும், அடையாளமும் ஆனது; அவனது தூதரை பின்பற்றுவதாகும். அதனது பிரயோசனமும், பிரதிபலனும் ஆனது; அல்லாஹ்வின் நேசம் அடியானை அடைவதும், அவனது பாவத்திற்கான அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் ஆகும்.

அல்லாஹ் தன கூற்றிலே பின்வருமாறு கூறுவதும் ஒரு அடியான் அல்லாஹ்வை நேசிப்பதை உண்மைப்படுத்தும் அடையாளமாகும்
. “விசுவாசம் கொண்டோரே! உங்களில் இருந்து எவர் தன மார்க்கத்தை விட்டும் ,மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்கு பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் விசுவாசம் கொண்டவர்களிடம் இரக்கம் காட்டுபவர்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள்; இன்னும் பழிப்பவரின் பழிப்புக்கும் அஞ்சமாட்டார்கள்”
(அல்மா’இதா: 54).

இந்த வசனத்தில் அல்லாஹ்வை நேசிப்பதற்கு நான்கு அடையாளங்கள் இருப்பதாக அவன் கூறிக்காட்டுகிறான்.
1. அல்லாஹ்வை நேசிக்கக்கூடியோர் மு’மின்களிடம் இரக்கம் காட்டுவார்கள்; அதாவது, அவர்களோடு பாசம் கொள்வார்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள், அவர்களோடு மென்மையாக நடந்து கொள்வார்கள். அதா (ரஹ்) கூறுகிறார்; தந்தை தன பிள்ளையோடு இருப்பதைப்போன்று அவர்கள் மு’மின்களோடு நடந்துகொள்வார்கள்.

2. அவர்கள் காபிர்களோடு கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். அதாவது, அவர்கள் காபிர்களுக்கு கோபத்தையும், கடினத்தன்மையையும், அவர்களில் இருந்து ஒதுங்கிக்கொள்வதையும் வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்காக பணிவையும், பலவீனத்தையும் வெளிக்காட்டமாட்டர்கள்.

3. அவர்கள் தன ஆன்மா, கை, செல்வம், நாவு போன்றவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை கண்ணியப்படுதுவற்காகவும் அதன் பகைவர்களை ஒழிப்பதற்காகவும் ஒவ்வொரு ஊடகத்தைக்கொண்டும் அல்லாஹ்வின் பாதையிலே போராடுவார்கள்.

4. அல்லாஹ்வின் விடயத்திலே பழிக்கக்கூடிய எவரினது பழிப்பும் அவர்களை பீடிக்காது. அவர்கள் இருக்கின்ற மார்க்கத்தின் உண்மைத்தன்மையையைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்ததமை யினாலும், அவர்களது ஈமானின் பலத்தினாலும், அவர்களது உறுதியாலும் சத்தியத்தின் வெற்றிற்காக தங்களையும் தம் செல்வத்தையும் அர்ப்பணிப்பதிலே அவர்களை மக்கள் கேவலமாக பார்ப்பதும், பழிப்பதும் அவர்களிலே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பழிப்பு தன்னிலே தாக்கம் செலுத்தி அதன் காரணத்தால் தன நேசதிற்குரியவருக்கு உதவுவதிலே பலவீனமடையும் ஒவ்வொரு நேசகனும் உண்மையிலே ஒரு நேசகனாக இருக்க மாட்டான்.

இமாம் இப்னுல் கையும்(ரஹ்) கூறும் அல்லாஹ்வின் நேசத்தை வரவழைக்கக்கூடிய 10 காரணிகள்
1. அல்குர்ஆனின் கருத்துக்களை மேலும் அதன் மூலம் நாடப்படுபவைப்பற்றி சிந்தித்தவாறும், விளங்கி எடுத்தவாறும் அதை ஓதிவருதல்.

2. பர்ளான கடமைகளுக்கு பின் நபீலான வணக்கங்களை கொண்டு அல்லாஹ்வை நெருங்கிக்கொள்ளல்.

3. நாவாலும், உள்ளதாலும், செயலாலும் அல்லாஹ்வைப்பற்றிய திக்ரிலே நீடித்திருத்தல்.

4. இரண்டு நேசகங்கள் ஒன்றோடு ஓன்று போட்டியிடும் வேளை அடியான் தான் விரும்பும் அம்சங்களை விட அல்லாஹ் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்தல்.

5. அல்லாஹ்வின் திருனாமங்களையும், அவனது பண்புகளைப் பற்றியும் மேலும் அவனது பூரணத்துவத்தையும் கண்ணியத்தையும் உணர்த்தக்கூடியவற்றைப்பற்றியும் மேலும் இவற்றுக்கென இருக்கும் புகழுக்குரிய தாக்கத்தைப்பற்றியும் ஆழமாக சிந்தித்தல்.

6. அல்லாஹ் அளித்திருக்கும் வெளிப்படையான, உள்ரங்கமான அருட்கொடைகளையும், அவன் அடியார்களுக்கு நலவு நாடுவதையும், நல்லுபகாரம் செய்வதையும், அருள்புரிவதையும் உற்று நோக்கல்.

7. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் உள்ளம் உடைந்து போய், அவன் பால் தேவையுடையவனாக நிற்றல்.

8. இரவின் மூன்றில் ஒரு பங்கின் இறுதி மீதமாக இருக்கும் போது இறைவன் இறங்கி வரும் வேளையில் அல்லாஹ்வோடு தனித்திருத்தல். மேலும் இந்நேரத்திலே அல்குர்ஆன் ஓதுவதோடு பாவமன்னிப்பு கோருவதன் மூலமும், பாவமீட்சியில் ஈடுபடுவதன் மூலமும் அந்நேரத்தை நிறைவு செய்தல்.

9. அல்லாஹ்வை நேசிக்கக்கூடிய நல்லோர்களோடும், சீர்திருத்தவாதிகளோடும் அமர்ந்திருந்து அவர்களது பேச்சின் மூலம் பிரயோசனம் பெறல்.

10. உள்ளத்திற்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் சூழ்ந்து கொள்ளும் பராக்காக்கக்கூடிய காரணிகளிலிருந்து தூரமாக இருந்து கொள்ளல்.

இன்னும், அல்லாஹ்வை நேசிக்கும் விடயத்தோடு பின்தொடரக்கூடியதுமான மேலும் அதற்கு மிக அவசியமானது தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசித்தல். இமாம் புகாரி(ரஹ்) அனஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் ஒரு ஹதீஸை வெளிக்கொணர்ந்து கூறுவது போல “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; நான் உங்களின் ஒருவர் பால் அவரது பிள்ளை, பெற்றோர், மக்கள் அனைவரையும் விட மிக விருப்பத்திற்குரியவராகும் வரை அவர் ஈமான் கொள்ள மாட்டார்.”
அதாவது எவர் பால் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை விடவும் நேசதிற்குரியவராகவும், மக்களிலே மிக நெருக்கமானவராகவும் இருக்கிறாரோ அவரைத்தவிர வேறொருவரும் பூரணமான ஈமானை உணரமாட்டார். அல்லாஹ்வின் தூதரை நேசிப்பதானது அல்லாஹ்வை நேசிப்பதோடு பின்தொடர்ந்து வரக்கூடியதும் அதனோடு இணைபிரியாததுமாகும்.

யார் தூதர்(ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்கிறாரோ அவர் அவரை பின்பற்றுவார். ஆனால் அவர் கொண்டு வந்ததிலே முரண்பட்டுக்கொண்டும், தடம் புரண்டோர் மற்றும் பித்’அத்வாதிகள் மற்றும் புத்திகெட்டோர் போன்ற இறைத்தூதர்(ஸல்) அல்லாதோரை பின்பற்றிக்கொண்டும், பித்’அத்தை உயிர்ப்பித்துக்கொண்டு சுன்னாவை விட்டு விட்ட நிலையிலே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதான தன நேசத்திற்காக யார் வாதாடுகிறாரோ அவர் தான் இறைதூதரை நேசிப்பதாக கூறும் வாதாட்டத்திலே பொய்யர் ஆவார். ஏனெனில் ஒரு நேசகர் எப்போதும் தன நேசதிற்குரியவரை தான் பின்பற்றுவார்.

மவ்லிதுன்நபி மேலும் ஏனைய பித்அத’ஆன் செயற்பாடுகளை உயிர்பிப்பதைக்கொண்டு இறைதூதரின் சுன்னாவுக்கு முரணான பித்அத்தை புதிதாக உருவாக்கக்கூடியோர் அல்லது நபி(ஸல்) அவர்களது விடயத்தில் இதை விட பெரியதோர் வரம்பு மீறிய செயற்பாட்டை செய்து அல்லாஹ்விடமில்லாமல் நபியவரிடம் பிரார்த்தித்து, அவரிடம் புகழ்வேண்டி, அவர் மூலம் பாதுகாப்பு தேடக்கூடியவர்கள்- இவ்வனைத்தோடு சேர்த்து அவர்கள் தாம் நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக கூறுவதானது மிகப் பாரியதொரு பொய்யாகும்.

அவர்களோ அல்லாஹ் பின்வரும் வசனத்திலே கூறிக்காட்டுபவர்களைப்போன்றோர் ஆவர். “அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். (அவர்களின் கட்டளைகளுக்கு) நாங்கள் கீழ்படிக்கிறோம் என்றும் கூறுகின்றனர். பின்னர், அவர்களில் ஒரு பிரிவினர் அதற்கு பிறகு புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) விசுவாசிகள் அல்லர்”
(அந்நூர்: 47).

ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) இது போன்ற விடயங்களை விட்டும் தடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ தாம் அவரை நேசிப்பதாக கூறி அவர் தடுத்தவற்றிலே முரண்படுகின்றனர். அதற்கு மாறு செய்கின்றனர். அந்த வகையில் அவர்கள் பொய்ப்பித்து விட்டனர். நாம் அல்லாஹ்விடம் (அனைத்தின் ) ஈடேற்றத்திற்காகவும் பிரார்த்திப்போம்.

                                                                                            தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபிக் கல்லூரி
மேலும்பார்க்க > 
 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget