எவர் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களே (அல்குர்ஆன் 49:11)
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மனிதர்களாக பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவத்தை விட்டும் பாவமன்னிப்பை விட்டும் அப்பாற் பட்டவர் எவருமில்லை. நாம் செய்த பாவத் திற்கு பச்சாதப்பட்டு, அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்தவர்களாக மன்னிப்புக் கோரவேண்டும்.
நபியே நீங்கள் கூறுங்கள்| தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பு கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் அருள்பாளிப் போனுமாக இருக்கிறான். (39:53)
நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைக்கும், பாவமன்னிப்புக்கும் பதிலளிக்கக் கூடிய ஒரே கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவனிடமே கையேந்த வேண்டும்
அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தை செய்து விட்டாலும், அல்லது தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தங்களுடைய பாவங்களுக்கு அவனிடமே பிழை பொறுக்கத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? இவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டால் (அதில்) நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகிவிடுவார்கள்) (அல்குர்ஆன் 3:135)
தவ்பா வருடத்திற்கு ஒரு முறை கேட்க வேண்டுமா?
சகோதர சகோதரிகளே! பாவமன்னிப்பு கேட்பதற்கென்று விஷேடமான ஒரு தினம் இஸ்லாத்தில் கிடையாது! இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக தவ்பா கேட்க வேண்டும் என்ற நடைமுறையும் இஸ்லாத்தில் கிடையாது. தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தனக்கு தெரிந்த பாஷையில் உடனே பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும் என்பதை மேலேயுள்ள இவ்வசனங்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறே ஐவேளை தொழுகைகள் முடிந்த பின்பும் பாவமன்னிப்பு கேட்பதற்கான முறையில் துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகளை பாடமாக்கி கருத்துக்களை உணர்ந்து ஓதுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
ரமழான் 27ல் தவ்பா கேட்பதா?
பெரும்பாலான மக்கள் ரமழான் மாதம் நோன்பு 27 நள்ளிரவில் பள்ளிவாசலில் (ஆண்கள், பெண்கள்) ஒன்று கூடி இமாம் சொல்லிக் கொடுக்கும் தவ்பாவை கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று செய்த பாவம், இன்று செய்த பாவம், நாளை செய்யும் பாவம், முன் செய்த பாவம், இருட்டில் செய்த பாவம், வெளிச்சத்தில் செய்த பாவம்… என்று பாவத்தை கோர்வை செய்து ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பை மொத்தமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கேட்டுவிட்டு அடுத்த வருடம் ரமழான் நோன்பு 27ல் மீண்டும் பள்ளிக்கு வந்து நள்ளிரவில் தவ்பா கேட்கிறார்கள். இப்படியான ஒரு வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு காட்டித்தரவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தராத எந்த வழி முறையும் மார்க்கமாக மாட்டாது. எனவே முஸ்லிம்கள் இந்த வேடிக்கையான பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
எந்த நாளும் மன்னிப்புக் கோர வேண்டும் :-
பகலில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதற்காக, நிச்சயமாக அல்லாஹ் தனது கையை இரவில் விரித்து (பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்றுக்) கொள்கிறான். இரவில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்காக பாவமன்னிப்புக் கோருவதற்காக நிச்சயமாக அல்லாஹ் தனது கையை பகலில் விரித்து (பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்று) கொள்கிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை (அதாவது கியாமத் நாள் வரும் வரை) அல்லாஹ் இவ்வாறு செய்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா (ரலி) நூல் முஸ்லிம்.
ஒருவன் செய்த பாவத்திற்கு எந்நேரமும் மன்னிப்பு வழங்க தவ்பாவை ஏற்றுக்கொள்ள கருனையுள்ள அல்லாஹ் தயாராக இருக்கும் போது நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்ய முயல்வது தவறான வழிமுறையாகும். கிழமைக்கு ஒருமுறை மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்யும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை.
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கோருகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஹர் பின் யஸார் (ரலி) நூல் முஸ்லிம்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே எந்த நாளும் பாவமன்னிப்புத் தேடும் போது நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பு தேடுவது சரிதானா என்பதை சிந்தியுங்கள்.
மெளலவி எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி
Post a Comment