ஒரு நோன்பாளிக்கு அல்லாஹ் கொடுக்கும் கூலி என்ன.?

நோன்பைத் தவிர தொழுகை, ஸகாத், ஹஜ்ஜு போன்று இன்னும் பல நற்கருமங்கள் இருக்கின்ற போதிலும், அவை முகஸ்த்துதிக்காகவும் பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்ய இயலுமான காரியங்களாகும். ஆனால் நோன்பு அப்படியில்லை. ஏனெனில் அடியான் நோன்பு நோற்றுள்ளானா, இல்லையா.? 

என்பது பரம இரகசியமாகும். அதனை அடியானும் அல்லாஹ்வும்தான் அறிவர்.
எனவேதான் நோன்பு தவிர்ந்த நற்கருமங்களுக் குறிய கூலியின் அளவு நிர்னயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்பின் கூலி இன்னது என்று நிர்ணயிக்கப்படவில்லை. எனவே நேன்புக்கு அல்லாஹ் விரும்பிய மட்டும் கூலியை வாரி வழங்குவான். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

عن أبي هريرة رضي الله عنه قال قالرسول الله صلى الله عليه وسلم كُلُّ عَمَلِ ابْنِ آدم لَهُ إلاَّ الصِّيامَ فَإنَّهُ لِي وَأنَا أجْزيْ بِهِ وَالصِّيامُ جُنَّةٌ فَإذا كَانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فَلاَ يَرْفَثْ ولاَيَصْخَبْ فَإنْ سَابَّهُ أحَدٌ أوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إنِّيْ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخَلُوْفُ فَمِ الصَّائِمِ أطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيْحِ الْمِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يفْرَحُهُمَا إذا أفطَرَ فَرِحَ بِفِطْرِهِ وإذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ(متفق عليه)

“மனிதனின் செயல்கள் யாவும் அவனுக்குரியன. ஆனால் நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. அதன் கூலியை நானே தருவேன்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயம். உங்களில் நோன்பை அடைந்து கொண்டவர், ஆபாச பேச்சுக்களைப் பேசவோ, கூச்சலிடவோ வேண்டாம். யாரேனும் அவரைத் திட்டினாலோ அல்லது அவருடன் சண்டைக்கு வந்தாலோ, “நான் நோன்பாளி” என்று அவர் சொல்வாராக. 

முஹம்மதுவின் ஆத்மா எவன் வசம் இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் வாசனை மிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்சிகள் இருக்கின்றன. ஒன்று நோன்பு திறக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, மற்றையது அவன் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி யாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் ஒரு பகுதி முன்னர் எடுத்துக் கூறப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களை இங்கு கவணிப்போம். எல்லா நல்ல கருமங்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். ஆயினும் நோன்பைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது அதற்குத் தானே கூலி தருவதாக விஷேசமாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

 அதன் கருத்தாவது, ஏனைய நல்ல கருமங்களுக்கெல்லாம் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்புக்குக் கூலி எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. ஆகையால் நோன்பிற்குக் கூலி வழங்கும் பொருப்பினை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரும்பிய மட்டும் அதற்குத் தாரளமாகத் தான் கூலி தருவதாகவும் அல்லாஹ் உறுதி யளித்துள்ளான், என்பதே இதன் கருத்தாகும்.
மேலும் நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறான், என்று இங்கு குறிப்படப்பட்டுள்ளது. ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் அவன் அடையும் மகிழ்ச்சி. இதனை எல்லா நோன்பாளிகளும் அனுபவித்து வருகின்றனர். மற்றையது மறு உலகத்தில் அல்லாஹ்வை அவன் சந்திக்கும் போது அவன் அடையும் மகிழ்ச்சியாகும். இது நாளை மறுமை நாளில் நோன்பாளிக்கு அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்ற சுப செய்தியைத் தருகிறது. இந்த பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புறிவானாக.

பொதுவாக வாயின் துர்வாடையை யாவரும் வெறுக்கின்ற போதிலும், நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவன் மீது அன்பு கொண்டு நோன்பு வைத்ததன் காரணமாக அவனின் இரைப்பை காய்ந்து விட்டது. அதன் விளைவு, வயிற்றின் வெப்பம் வாய் மூலம் துர் வாடையாக வெளியேறுகிறது. எனவே தான் அந்த வாசத்தை கஸ்தூரியை விடவும் மேலானது என்று அல்லாஹ் பாராட்டுகின்றான். இதுவெல்லாம் மற்றெல்லா நற்கிரியைகளை விடவும் நோன்பு மேலானது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இது மாத்திரமின்றி நோன்பாளிகளை மேலும் கௌரவிக்கு முகமாக,அவர்கள் சுவர்க்கம் செல்ல அவர்களுக் கென்று தனி வாயல் ஒன்றைக் கூட அல்லாஹ் ஏற்படுத்தி, அதற்கு بَابُ الرَيان என்று பெயரும் இட்டுள்ளான். உலகத்தில் சிரேஷ்ட்ட பிரஜைகள் VIP என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் விஷேசமாக மேற் கொள்ளப் படுகின்றன. 

அவர்கள் வந்து செல்வதற்குக் கூட தனி வாயல்கள் ஏற்பாடு செய்யப் படுகின்றன. அப்படியாயின் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் சிரேஷ்ட்டமான நோன்பாளிகள் சுவர்க்கம் செல்ல அவர்களுக்கென்று தனியான ஒரு வாயலை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்றால் அதில் என்ன வியப்பு இருக்கிறது? இந்த வாயலைப் பற்றி நபியவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்,
عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن فِي الْجَنةِ بَابًا يُقَالُ لَهُ الريان يَدْخُلُ فِيْهِ الصائِمُوْنَ يَوْمَ الْقِيامةِ لاَيَدْخُلُ مِنْهُ أَحدٌ غَيْرُهُمْ ُيقَالُ أيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَيَدْخُلُ مِنْهُ أحَدٌ غَيْرُهُمْ فَإذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أحَدٌ (سنن الترمذي والنسائي وابن ماجة ومسند الامام احمد)
“சுவர்க்கத்தில் “ரையான்” என்றழைக்கப் படும் ஒரு வாசல் உண்டு. அது மறுமை நாளில் நோன்பாளிகள் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் வாசல். அவர்களைத் தவிர வேறு எவருக்கும் அதனூடாகச் செல்ல அனுமதியில்லை. நோன்பாளிகள் எங்கே? என்று வினவப்பட்டதும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்கள் அல்லாத எவருக்கும் அதனுள் செல்ல அனுமதி இல்லாத படியால், அவர்கள் உள்ளே பிரவேசித்ததும், அந்த வாயல் அடைக்கப்படும்” என்று நபியவர்கள் கூறினார்கள், என ஸஹ்ல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ, நஸாஈ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

நோன்பாளிகளுக்கு அல்லாஹ் எந்த அளவு மதிப்பளித்துள்ளான் என்பதற்கு இந்நபி மொழி சிறந்த அத்தாட்சியாகும். ஆனால் நோன்பை உரிய முறையில் நோற்ற நோன்பாளிகளுக்கே இந்த கௌரவம் உரித்துடையது என்பதை நினைவில் வைத்தல் வேண்டும்.

எனவே உண்மையான நோன்பாளிகளின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்து அவர்களுக்குரிய கௌரவத்தை நமக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget