August 2017

மொழி வழக்கில் உள்ஹிய்யா என்பது சூரியன் உதயமாகி அது உயர்வடைந்துள்ள நேரத்தைக் குறிக்கும். இஸ்லாமிய வழக்கில் உள்ஹிய்யா என்பது, "சில நிபந்தனைகளுடன் குறித்த ஒரு தினத்தில் இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் அறுக்கப்படும் குறிப்பிட்ட வயதையுடைய ஒரு பிராணிக்குச் சொல்லப்படும் பெயராகும்." என்று அறிஞர்கள் வரைவிலக்கணப் படுத்தியுள்ளார்கள்.
உள்ஹிய்யாவின் முக்கியத்துவமும், சிறப்பும்:
இறைவனின் கட்டளைப்படி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் அன்பு மகன் இஸ்மாயீலை அறுக்க முனைந்தபோது அல்லாஹ் அதற்குப் பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கி அதை அறுக்குமாறு சொன்னான். இந்த சோதனையில், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
இதனை நினைவூட்டும் வகையில் அமையப்பெற்ற முக்கியமான வணக்கங்களில் ஒன்றே உழ்ஹிய்யாவாகும். அதாவது இறைவனின் கட்டளையை நிறை வேற்றுவதற்காக ஷைத்தானிய சக்திகளுக்கு அடிபணியமாட்டேன், இஸ்லாத்திற்காக எனது உடல் பொருள், சொந்தங்கள் அனைத்தையும் இழக்கத் தயார், மற்றவர்களுடன் இதற்காக போராடவும், இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று எந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு ஏகத்துவவாதியாக வாழவும் நான் தயார் எனும் உணர்வை உருவாக்கும் உன்னத வணக்கம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
எல்லோரும் உண்டு கழித்து உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள், மற்றும் அதை அடுத்துவரும் தினங்களில் தன் குடும்பத்தாரையும் ஏனைய ஏழைகளையும் சந்தோசப்படுத்தி அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மிகச் சிறந்த வணக்கமாகவும், ஈகைப் பண்பை உருவாக்குவதாகவும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு செயலாகவும் காணப்படுகின்றது.
"யாருக்கு வசதி இருந்தும் அவர் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நாங்கள் தொழும் திடலை நெருங்க வேண்டாம்." என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு மாஜா, ஹாகிம்)
உள்ஹிய்யா கொடுப்பவர்:  
உள்ஹிய்யா கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காக் கொள்ளாமல் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும்.
01. இஹ்லாஸ் (மனத்தூய்மை):
உள்ஹிய்யா கொடுப்பவர்களின் புகழும், அவர் நல்லவர் என்ற எண்ணமும் சமுதாயத்தில் வளர்வது இயல்பானது. ஆனால், அதை அவர் எதிர்பார்க்கக்கூடாது. இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே இஸ்லாம் காட்டித் தந்த கடமையை நிறைவேற்றியவராக அவர் மாறமுடியும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.
"உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக." (அல்குர்ஆன் 108:02)
"(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்." (அல்குர்ஆன் 22:37)
இறைவன் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "யார் எனக்காக ஒரு அமலைச் செய்து பிறருக்கும் அதில் பங்கு கொடுக்கிறானோ அவனையும் அவன் செய்த அமலையும் நான் விட்டு விடுகிறேன்." (நூல்: முஸ்லிம்)
"நான் உங்களிடத்தில் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். இவ்வாறு முகஸ்துதிக்காக செயற்பட்டவர்களை நாளை மறுமையில் அல்லாஹ்: யாருக்கு காட்டுவதற்காக அவர்கள் அமல் செய்தார்களோ அவர்களிடமே செல்லுமாறும், அவர்களிடம் கூலி கிடைக்கிறதா என்று பார்க்குமாறும் கூறுவான்." (நூல்: அஹ்மத், பைஹகீ)
02. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுதல்:
எமது எல்லா வணக்க வழிபாடுகளிலும் இஹ்லாஸ், நபியின் வழிமுறை என்ற இரண்டு விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவை கவனிக்கப்படும் வணக்க வழிபாடுகள் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் நபியவர்கள் காட்டிய விதத்திலேயே தனது உழ்ஹிய்யாவும், ஏனைய விடயங்களும் அமைய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். இறைவன் அவனது கட்டளைகளை அவனது தூதர் மூலமே கற்பிக்கிறான் அவரிடமிருந்து நாம் அவைகளைப் பெற்றுக் கொள்ளாமல், இஸ்லாமிய கடமையை நிறைவேற்றி விட்டதாகவும் கூலி கிடைக்கும் என்றும் நினைப்பது, புத்திஜீவிகளின் முடிவாக இருக்காது.
"உங்களுடைய தூதர் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 59: 07)
03. முடி, நகம் களைதல் கூடாது:
உள்ஹிய்யா கொடுக்க நினைக்கும் ஒருவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து தனது நகம், முடி என்பவற்றை களைதல் கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உழ்ஹிய்யா கொடுப்பதற்கு யாராவது விரும்பினால் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து பிறை பத்து (பெருநாள் தினம்) வரை தன் முடி, நகங்களை அகற்றாமலிருக்கட்டும்."
 (நூல்: முஸ்லிம், அஹ்மத்)
இதிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க நினைப்பவர் மாத்திரமே நகம், முடி ஆகியவற்றை அகற்றக்கூடாது என்பதும், அவர் யாருக்காக உழ்ஹிய்யா கொடுக்கிறாரோ அவர்கள் இதைப் பின்பற்றத் தேவையில்லை என்பதும் தெளிவாகின்றது.
04. நல்ல வார்த்தை பேசுதல்:
உள்ஹிய்யா கொடுப்பவர்களின் வீடு தேடி வரும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நச்சரிப்பதோ, நாம் கொடுத்தவற்றை சொல்லிக்காட்டி அவர்களை சிறுமைப்படுத்துவதோ நம் அமலை வீணாக்கிவிடும் செயல்களாகும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும், எப்போதும் நல்ல வார்த்தைகள் பேச பழகிக்கொள்ள வேண்டும்.
"தர்மம் செய்துவிட்டு (அதற்காக) துன்புறுத்துவதை விட நல்ல வார்த்தையும், மன்னிப்பும் (அல்லாஹ்விடத்தில்) மிகவும் சிறந்தவையாகும். இன்னும் அல்லாஹ் (தன் படைப்புகளை விட்டும்) தேவை அற்றவன், மிகவும் சகிப்புத் தன்மை உடையவன்." (அல்குர்ஆன் 2: 263)
ள்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணி:
ள்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் கவனிக்கப்படவேண்டிய நிபந்தனைகளை மூன்று வகையாக பிரித்து நோக்கலாம்.
01. பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் மட்டுமே உழ்ஹிய்யாவுக்கு தகுதியானதாகும்:
இதில் எந்த அறிஞரும் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை. எருமை மாட்டின் ஒரு வகையாக இருப்பதனால் அதையும் கொடுக்க முடியும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இவை அல்லாதவைகளை நாம் கொடுக்க முடியாது. இதை விரிவாக வாசிக்க விரும்புவோர் அல்குர்ஆனில் 5:01,95ஃ 06:142,143ஃ 22:28 போன்ற இடங்களில் அவதானிக்கலாம்.
02. குறித்த வயதை அடைந்திருத்தல்:
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் நாம் நினைப்பவற்றையெல்லாம் கொடுத்துவிட முடியாது, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வயது சொல்லப்பட்டுள்ளது. ஆவைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
செம்மறியாடு: ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்தது.
வெள்ளாடு: ஒரு வருடம் பூர்த்தியடைந்தது.
மாடு: இரு வருடம் பூர்த்தியடைந்திருத்தல்.
ஓட்டகம்: ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்திருத்தல்.
03. குறைகளற்றதாக இருத்தல்:
உள்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணிகளில் உள்ள குறைகள் பற்றி சொல்லப்படுபவற்றை தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக அவைகளை மூன்று வகையாகப் பிரித்து நோக்குவோம்.
1. ஹதீஸ்களில் தெளிவாகச்சொல்லப்பட்டுள்ள குறைகள்: இவைகளுள்ள பிராணியை உழ்ஹிய்யாவுக்காக அறுக்க முடியாது. அந்த வகையில் பின்வரும் குறைகளைக் குறிப்பிடலாம்.
தெளிவான குருடு: ஒற்றைக்கண் செயலிழந்து போதல், குருடாக இருத்தல்.
தெளிவான நோய்: அதாவது குறித்த பிராணியின் இறைச்சியை கெடுக்கக்கூடிய அல்லது
அதன் மெலிவுக்கு காரணமான நோய்கள் என்று இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்.
தெளிவான முடம்.
மிகவும் மெலிந்தது, பலவீனமானது.
"ஒரு முறை எங்களுக்கு மத்தியில் எழுந்த நபியவர்கள்: தெளிவான குருடு, தெளிவான நோய், தெளிவான முடம், தேர முடியாத மெலிவு எனும் நான்கு குறைகளை உடைய பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது" என்றார்கள். (அறிவிப்பவர்: பராஃ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜாஹ்)
மேலே சொல்லப்பட்ட குறைகளுடன் குருடு, ஆட்டின் பின்புறத்திலுள்ள கொழுப்புடன் கூடிய சதைப்பிண்டம் அகற்றப்பட்டிருத்தல் போன்றவற்றையும் அல்லது அதுபோன்ற நிலையில் உள்ள குறைகளையும், அதைவிடவும் கூடிய நிலையிலுள்ள குறைகளையும் அதனுடன் அறிஞர்கள் சேர்த்துள்ளனர். எனவே இவைகளில் ஏதாவது ஒன்று குறித்த பிராணியில் இருப்பின் அது உழ்ஹிய்யாவிற்கு தகுதியற்றதாகவே கருதப்படும்.
2. இருக்க முடியுமான குறைகள்:
உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் உள்ள சில குறைகளால் அந்தப் பிராணியை நாம் ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலையில் உள்ள குறைகளையே இது குறிக்கும்.
பின்வருவனவற்றை அத்தகைய குறைகளாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நலம் போடப்பட்டவை.
அடிப்படையிலேயே கொம்பு இல்லாதது.
அடிப்படையிலேயே காது இல்லாதது.
சிறிய காதுள்ளது.
சில பற்கள் விழுந்த்தவை.
கர்ப்பிணியான பிராணி:
இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: "கர்ப்பிணியாக உள்ள பிராணிகளைக் கொடுக்க முடியும், அதன் குட்டி செத்த நிலையில் வெளியேறினால் அதை அறுக்க வேண்டியதில்லை என்பதே இமாம் ‘ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்களின் கருத்தாகும்’ அது உயிருடன் வெளியேறினால் அதையும் அறுக்க வேண்டும்." (நூல்: மஜ்மூஉல் ஃபதாவா)
3. பின்வரும் குறைகள் இருக்கும் பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியுமா, முடியாதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.
காது முன்புறமாகவோ பின்புறமாகவோ வெட்டப்பட்டது அல்லது துளையிடப்பட்டது அல்லது சிதைக்கப்பட்டது. காது, கொம்பின் அரைப்பகுதி வெட்டப்பட்ட பிராணிகளையும் உழ்ஹிய்யாவுக்காக தேர்வு செய்ய முடியுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு நிலவுகின்றது. எது எவ்வாறாயினும் உழ்ஹிய்யாவின் முழுமை கருதி இவை போன்றவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது.
பொதுவாக, உழ்ஹிய்யாவுக்காக நாம் தெரிவு செய்யும் பிராணிகள் கொழுத்ததாகவும் எல்லா நோய்களை விட்டும் தூரமாகியும் இருப்பதுடன் பார்ப்பதற்கு அழகானதாயும் புசிப்பதற்கு சிறந்ததாகவும் இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரண்டு ஆண் ஆடுகளை உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள், தனது கரத்தினால் அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பிர் சொன்னார்கள்." (புகாரி, முஸ்லிம்)
மதீனாவில் நாம் கொழுத்த (பிராணிகளை) உழ்ஹிய்யா கொடுத்தோம் முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள் என்று அபூ உமாமா பின் ஸஹ்ல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி)
உள்ஹிய்யா கொடுப்பதற்கான நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை என்பது நோன்புப் பெருநாள் தொழுகையை விடவும் சற்று முன்னர் இடம்பெறுகிறது. எனவே தொழுகை முடிந்ததன் பின்பே உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுத்தல் வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் தொழுவதற்கு முன்னர் அறுத்தாரோ நிச்சயமாக அவர் தனது (தேவைக்காகவே) அறுத்தார். (அது உழ்ஹிய்யா அல்ல.)தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்ததன் பின்பு யார் அறுத்தாரோ அவர் தனது வணக்கத்தைப் பூரணப்படுத்தினார், சுன்னத்தையும் நிறைவேற்றினார்." (நூல்: புகாரி, முஸ்லிம்)
"நாம் தொழும் வரை யார் அறுக்கவில்லையோ அவர்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
நபியவர்கள் பெருநாள் தொழுகை முடிந்தபின் கூறினார்கள்: "யார் தொழுவதற்கு முன் அறுத்தாறோ அவர் உழ்ஹிய்யாவுக்காக வேறு ஒன்றை (ஒரு பிராணியை) அறுக்கட்டும்." (நூல்: புகாரி)
உள்ஹிய்யா என்பது தொழும் திடலில் தொழுகையை முடித்த பின்பு கூட்டாக நிறைவேற்றப்படுவதே சிறந்ததாகும் அவ்வாறே நபியவர்களின் காலத்தில் நடந்திருக்கிறது.
பிராணியை அறுக்கும் போது:
உள்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்படும் பிராணிகள் சாகப்போகிறதுதானே என்பதற்காக நோவினை செய்வதோ, அதற்கு தீனி வழங்காமல் இருப்பதோ நாம் அதற்குச் செய்யும் அநியாயங்களாகும். இறைவன் கூறுகிறான் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் அவைகளை அறுத்து புசிக்கவும், மற்றவர்களுக்கு கொடுக்கவும் செய்கிறோம் என்பதை மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.
உள்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிராணிகளை அறுக்கும்போது பின்வரும் விடயங்களை கவனிக்க வேண்டும்.
01. கத்தியை தீட்டுதல், பிராணியை விட்டும் மறைத்தல்:
"உங்களில் ஒருவர் பிராணியை அறுக்க விரும்பினால் அதற்காகத் தயாராகட்டும், கத்தியை தீட்டிக்கொள்ளட்டும், அறுக்கப்படும் பிராணியை விட்டும் அதை மறைவாக வைக்கட்டும்." என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள். (நூல்: இப்னு மாஜாஹ், பைஹகீ)
02. உள்ஹிய்யாவை கொடுப்ப்பவர் அறுப்பது சிறந்தது:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: தான் உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகளை தனது கரத்தினாலேயே அறுக்கக்கூடியவராக இருந்தார்கள்." என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, ஹாகிம்)
இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் புஹாரியிலும் பதிவாகியுள்ளது.
பிறரிடம் கொடுத்தும் அறுக்கலாம் ஆனால் அறுப்பவர் முஸ்லிமாக இருக்கின்றாரா? நன்றாக அறுக்கத் தெரிந்தவரா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
03. அல்லாஹ்-வின் பெயர் சொல்லுதல்:
அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத எந்த மாமிசமும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டதாகும். எனவே, பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரு ஆண் ஆடுகளை உள்ஹிய்யா கொடுத்தார்கள், அவற்றை தனது கரத்தினாலேயே அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பீர் சொன்னார்கள்." (புகாரி, முஸ்லிம்)
"பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" என்று சொல்லுதல் வேண்டும்.
"பிஸ்மில்லாஹ்" என்று சொன்னாலும் போதுமானது.
04. அறுக்கப்பட்ட பிராணியின் உயிர் முழுமையாகப் பிரியும் வரை ஓய்வாக விடுதல்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் அறுத்தால் அறுப்பதை நன்றாக அறுக்கட்டும், கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுக்கப்பட்ட பிராணியை ஓய்வெடுக்க விடட்டும்." (நூல்: முஸ்லிம்)
பங்கு வைத்தல்:
உள்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணிகளை பங்கு வைக்கும்போது மூன்று பங்குகளாக அதைப்பிரிக்கலாம், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு பகுதி மற்ற இரண்டும் வீடு தேடி வராத ஏழைகளுக்கும், கேட்டு வருவோருக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.
"அ(றுக்கப்பட்டவைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள்." (அல்குர்ஆன் 22:18)
"அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், (தேவையுடையோராய் இருந்தும் பிறறிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசிப்போருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்." (அல்குர்ஆன் 22:36)
நபியவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின்போது தான் அறுத்த ஒவ்வொரு பிராணியிலிருந்தும் ஒவ்வொரு துண்டு வீதம் எடுத்து சமைத்து சாப்பிட்டார்கள். பங்குவைக்கும் போது தோல், தலை என்பனவும் பங்கு வைக்கப்படுதல் வேண்டும் அவற்றை அறுத்தவருக்கு கூலியாகக் கொடுப்பதோ, அதை விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.
"யார் உள்ஹிய்யாப் பிராணியின் தோலை விற்றானோ அவன் உழ்ஹிய்யா கொடுத்தவனாக கருதப்படமாட்டான்." என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகி, ஹாகிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்ட ஒட்டகத்தை கவனிக்குமாறும் அதை பங்கிடுமாறும், அதன் இறைச்சி, தொழி, அதைப் போர்த்தியிருந்த ஆடை எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடுக்குமாறும் அவற்றில் எதையும் அறுத்தவருக்கு கொடுக்க வேண்டாம் என்றும் ஏவினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஐயமும் தெளிவும்:
01. உள்ஹிய்யாவின் போது நிய்யத்தை வாயால் மொழிய வேண்டுமா?
இல்லை, நிய்யத் என்பது எண்ணம் அது வாயால் சொல்லப்படுவதில்லை. ஆனால் பிறருக்காக உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் இறைவா! இதை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்வதில் தப்பில்லை. இது பிரார்த்தனையாகும்.
02. உள்ஹிய்யாவுக்காக பசு மாடு கொடுக்கலாமா?
மாடு என்ற பொதுப் பெயரில் பசுவும் அடங்குகின்றது. பசுவை கொடுக்கக்கூடாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. எனவே அதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், மிகவும் சிறந்தவற்றை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பசுவைத் தவிர்ப்பவரை குறைகாண முடியாது.
03. வயது கூடிய பிராணியை கொடுக்கலாமா?
ஆடு, மாடு, ஒட்டகை போன்ற பிராணிகளுக்கு சொல்லப்பட்டுள்ள வயதை விட குறைந்த வயதை கொடுப்பதே தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த வயதெல்லையை தாண்டியதை வழங்கலாம். ஆனால் வயது சென்றதால் மிகவும் மெலிந்து காணப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
04. எருமை மாடு கொடுக்கலாமா?
மாடு என்ற வட்டத்தில் எருமை மாடும் அடங்குகின்றது எனவே அதைக்கொடுக்கலாம் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
05. பலர் சேர்ந்து ஒரு பிராணியை கொடுக்கலாமா?
மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேர்ந்து கொடுக்கலாம்.
"மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேருமாறு நபியவர்கள் எமக்கு ஏவினார்கள்." (நூல்: புகாரி, முஸ்லிம்)
இவர்கள் குறித்த நபரின் குடும்ப அங்கத்தவர்களாகவும், அல்லது குடும்பமில்லாதவர்களாகவும் இருக்கலாம். ஏனெனில், ஹதீஸ் பொதுவாகவே வந்துள்ளது.
ஆட்டில் கூட்டுச்சேர முடியாது.
06. மற்றவருக்காக நாம் அறுக்கலாமா?
மற்றவரின் பெயரில் நாம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம், நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியர்களுக்காக அறுத்துள்ளார்கள். அதுபோல் தனது சமுதாயத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியாதவர் களுக்காகவும் அறுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் பெயர் சொல்லி ஒரு ஆட்டை அறுத்துவிட்டு இறைவா! இதை முஹம்மதிடமிருந்தும் அவருடைய குடும்பம், அவருடைய சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: முஸ்லிம்)
07. தன் வீட்டில் உள்ளவர்களுக்குமாகச்சேர்த்து ஒருவர் ஒரு பிராணியை உழ்ஹ்ஹிய்ய்யாவாக கொடுக்க்க முடியுமா?
கொடுக்கலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியருக்காகவும் தனக்காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக கொடுத்துள்ளார்கள்.
08. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் உள்ஹிய்யாவிற்க்கு மிகவும் சிறந்தது எது?
முதலில் ஒட்டகம் அதையடுத்து மாடு அதற்கடுத்த தரத்தில் ஆடு சிறப்புப் பெருகிறது ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஜும்மாவிற்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகம் கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும், இரண்டாமவர் ஒரு மாடு கொடுத்ததற்கான கூலியையும் மூன்றாமவர் ஒரு ஆடு கொடுத்ததற்கான கூலியையும் அதற்கடுத்தவர் ஒரு கோழி அவருக்கு பின் வருபவர் ஒரு முட்டையை கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும்" குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி)
09. பிறகு பணம் தருவதாகச் சொல்லி இன்னுமொருவரிடம் உள்ஹிய்யாவை அறுக்கச் சொல்லலாமா?
அவ்வாறு செய்ய முடியும் என்று சவூதி அரேபிய உலமாப்பேரவை தீர்ப்பளித்துள்ளது.
10. மரணித்தவருக்காக உள்ஹிய்யா கொடுக்கலாமா?
இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.
மரணித்தவர்களுக்காக நாம் தர்மம் செய்ய முடியும், உள்ஹிய்யாவும் ஒரு தர்மமே எனவே அதை செய்வதில் தப்பில்லை என்று சில அறிஞர்களும், நபியவர்களோ ஸஹாபாக்களோ இதை செய்யவில்லை எனவே நாமும் செய்ய முடியாது என்று சில அறிஞர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
11. உள்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புபுகளை உடைக்கக்கூடாது என்பது சரியா? 
அது தவறான கருத்து.  
12. உள்ஹிய்யாவை அறுத்தவருக்கு கூலியாக அல்லாமல் அந்த உள்ஹிய்யாவிலிருந்து கொடுப்பது தவறா?
அதை கூலியாகக் கொடுப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரை விடவும் தேவையுடையவர்கள் இருப்பின் அவர்களை முற்படுத்த வேண்டும்.
13. உள்ஹிய்யா இறைச்சியை சேமித்து வைத்து காலம் தாழ்த்தி சாப்பிடலாமா?
ஆரம்பத்தில் உழ்ஹிய்யா இறைச்சியை சேமிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்பு நபியவர்கள் அதை மாற்றி சேமித்து வைத்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.
ஆனால் சமூகத்தில் கஷ்டம் நிலவினால் மற்றவர்களுக்கு பங்குவைப்பதே சிறந்தது.
"(உள்ஹிய்யாவுக்காக அறுத்தவற்றில் இருந்து) நீங்கள் சாப்பிடுங்கள், பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், சேமித்து வையுங்கள். அந்த ஆண்டு மனிதர்களுக்கு கஷ்டம் இருந்தது அதனால் அவர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்தேன்" (அதனாலேயே சேமிப்பதற்கு தடைவிதித்திருந்தேன்.) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
14. உள்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்திலிருந்து மாற்று மத சகோதரர்களுக்கு வழங்க முடியுமா?
மாற்று மத சகோதரர் இஸ்லாத்திற்கு எதிராக போராடாதவராக இருந்தால் கொடுக்கலாம்.
"(விசுவாசிகளே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் இறைவன் தடுக்க வில்லை, நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்." (அல்குர்ஆன் 60:08)
அதுபோலவே அபூபக்ரின் மகள் அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய் இனைவைப்பவளாக இருந்தபோதிலும் அவளை சேர்ந்து நடக்குமாறும் பன ரீதியான உதவிகளை செய்யுமாறும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள் என்ற செய்தி புஹாரியில் பதிவாகியுள்ளது.
15. உள்ஹிய்யாவை எதுவரை கொடுக்கலாம்?
ஹஜ்ஜுப் பெருநாள் தினம், அதை அடுத்துவரும் 03 தினங்களிலும் கொடுக்கலாம் என்பதே அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்.
16. உள்ஹிய்யாவாக கொடுக்கப்பட்ட பிராணியின் தலை, தோழ், எழும்பு போன்றவற்றை ஒரு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமா?
இவ்வாறு செய்வதனால்தான் நாளை மறுமையில் இவைகள் வரும் என்றொரு மூட நம்பிக்கை எம் சமூகத்திடம் உள்ளது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.
                                                                                                         M.B.M. இஸ்மாயில் (ஸலாமி)  

உழ்ஹிய்யா சம்பந்தமாக மக்களிடையே பரவிக் காணப்படும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்!!

حديث زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: سُنَّةُ أبيكم إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام، قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ . قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَة

நபித்தோழர்கள் நபிகளாரிடம்; “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன உழ்ஹிய்யா என்பது!” என்று கேற்க, நபியவர்கள் “இது உங்கள் தந்தையாகிய இபறாஹீம் (அலை) அவர்களின் வழிமுறையாகும்.” என்று கூறவே, “அதில் எமக்கு என்ன இருக்கின்றது? என்று தோழர்கள் கேற்க, “ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு.” என்று நபியவர்கள் கூறினார்கள். என்று ஸைத் பின் அர்கம் (ரழி) அறிவிக்கிறார்கள்.(அஹ்மத், இப்னு மாஜா, மற்றும் பலர்)
அதன் அறிவிப்பாளர்களுள் “நுபைஃ இப்னுல் ஹாரிஸுல் ஹமதானி அபூதாவுத்” என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ஹதீஸ் புனையக்கூடியவராவார். மேலும் ஆஇதுனில்லாஹ் என்பவரும் பலவீனமானவரே. எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும். இதனை அறிஞர் அல்பானி அவர்களும் இட்டுக்கட்டப்பட்டது என ஸில்ஸிலதுல் ளஈபாவில் கூறியுள்ளார்கள்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ حَسَنِ بْنِ حَسَنٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ضَحَّى طَيِّبَةً بِهَا نَفْسُهُ، مُحْتَسِبًا لِأُضْحِيَّتِهِ؛ كَانَتْ لَهُ حِجَابًا مِنَ النَّارِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உள்ளத்தளவில் திருப்திபட்டவராக, நண்மையை எதிர்பார்த்து உழ்ஹிய்யா கொடுக்கின்றாரோ, அது அவருக்கு நரகத்திலிருந்து தடையாக இருக்கும். (தபரானி) இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸுலைமான் பின் அம்ர் அன்னகஇஎன்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் பொய்யராவார். இதுவும் இட்டுக்கட்டப்பட்டது.

وحديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ رضي الله عنها: ((قَوْمِي إِلَى أُضْحِيَّتِكَ فَاشْهَدِيهَا فَإِنَّ لَكِ بِأَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِهَا يُغْفَرُ لَكِ مَا سَلَفَ مِنْ ذُنُوبُكَ. قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا لَنَا أَهْلَ الْبَيْتِ خَاصَّةً أَوْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً؟ قَالَ: بَلْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً)).

அபூ சஈத் (ரழி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பாதிமா (ரழி) அவர்களிடம் “நீங்கள் எழுந்து சென்று, உமது உழ்ஹிய்யாவை அறுப்பீராக, ஏனெனில் அதிலிருந்து விழும் முதல் இரத்த சொட்டுடனே உங்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்”, அப்போது பாதிமா அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது அஹ்ல் பைத்தாகிய எமக்கு மட்டுமா, அல்லது அனைத்து முஸ்லிம்களிம்களுக்குமா?” என்று கேற்கவே, “எங்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது” என பதிள் அழித்தார்கள் நபியவர்கள்.(ஹாகிம்,பைஹகீ)
இந்த செய்தி பல வழிகளில் பதியப்பட்டிருந்தாலும், அனைத்திலும் குறைபாடு காணப்படுகிறது. அறிவிப்பாளர் தொடரில் “அபூ ஹம்ஸா” என்ற பலவீனர் இடம் பெற்றுள்ளார், மேலும் “அதிய்யதுப்னு ஸஃத்” என்ற பலவீனர் இடம் பெற்றிப்பதோடு, சில தொடர்களில் அறியப்படாத “மஜ்ஹூல்கள்” பலர் இடம்பெற்றுள்ளனர்.
எனவே இது பலவீனமான, முன்கரான செய்தியாகும். இதனை அறிஞர் அல்பானி அவர்களும் முன்கர் என ளஈபுத் தர்கீபில் கூறியுள்ளார்கள்.

وحديث أَبو هُرَيْرَةَ رضي الله عنه، أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: ((مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا)).

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாருக்கு வசதி இருந்தும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் எமது தொழும் திடலை நெருங்க வேண்டாம்” (அஹ்மத், ஹாகிம்)
இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் அய்யாஷ்என்ற மனன சக்தி குறைந்த, தவறு விட்டு, முறன்பட்டு அறிவிக்கும் அறிவிப்பாளர் இடம் பெற்றிருப்பதோடு, அவர் தனித்தும் அறிவித்துள்ளார். மேலும் நபிகளாரின் கூற்றாக அறிவிப்பதிலும், நபித்தோழர் கூற்றாக அறிவிப்பதிலும் தடுமாறியுமுள்ளார்.

இதுவும் முன்கர் வகையை சார்ந்ததாகும். இமாம் தஹபி அவர்களும் “தன்கீஹுத் தஹ்கீக்” என்ற நூலில் முன்கர் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஹ்மத், பைஹகீ, இப்னு ஹஜர், அல்முன்ஸிரீ போன்றோரும் பலவீனப்படுத்தியுள்ளனர்.


وحديث عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا تُقُرِّبَ إِلَى اللَّهِ تَعَالَى يَوْمَ النَّحْرِ بِشَيْءٍ هُوَ أَحَبُّ إِلَى اللَّهُ تَعَالَى مِنْ إِهْرَاقِ الدَّمِ وَأَنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهُ تَعَالَى بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَيَطِيبُوا بِهَا نَفْسًا)).

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: ஹஜ் பெருநாள் தினமன்று இரத்தம் ஓட்டும் (உழ்ஹிய்யா) வணக்கத்தை விடவும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான வேறு ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க முடியாது. (உழ்ஹிய்யா) மிருகம் மறுமையில் தனது முடிகள், கொம்புகளுடன வரும், அதன் இரத்தமோ பூமியில் விழ முன் அல்லாஹ்வின் இடமொன்றில் விழுகிறது, எனவே அவர்கள் உள்ளத்தளவில் சிறப்படையட்டும். (ஹாகிம், திர்மிதி)
அதில் “அபுல் முசன்னா ஸுலைமான் பின் யஸீத்” என்ற  பலவீனமானவர்  இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றி புகாரி இமாமவர்கள் “முன்கருல் ஹதீஸ்” என்று கூறியுள்ளார்கள். இதுவும் பலவீனமான செய்தி. இதனை அறிஞர் அல்பானி அவர்களும் பலவீனமானது என ளஈபுத் தர்கீபில் கூறியுள்ளார்கள்

وعَنْ عَائِشَةَ رضي الله عنها، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: ((ضَحُّوا، وَطَيِّبُوا بِهَا أَنْفُسَكُمْ، فَإِنَّهُ لَيْسَ مِنْ مُسْلِمٍ يُوَجِّهُ ضَحِيَّتَهُ إِلَى الْقِبْلَةِ إِلا كَانَ دَمُهَا، وَفَرَثُهَا، وَصَوْفُهَا، حَسَنَاتٍ مُحْضَرَاتٍ فِي مِيزَانِهِ يَوْمَ الْقِيَامَةِ)).

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: நீங்கள் உழ்ஹிய்யா கொடுத்து, மனதளவில் சிறப்படையுங்கள், எனேனில் எந்தவொரு முஸ்லிமாவது தனது உழ்ஹிய்யா பிராணியை கிப்லாவை நோக்கி படுக்கவைத்தால், அதனது இரத்தம், பாதம், தோல் போன்றவை மறுமை நாளில் அவனது தராசுத் தட்டில் நன்மைகளாக வராமல் இருப்பதில்லை.  (முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
அதில் “அபூ ஸஈதுஷ் ஷாமி” என்ற “மத்ரூகுல் ஹதீஸ்” ஹதீஸ் துரையில் விடப்பட்டவர் என்ற தரத்தில் உள்ளவர் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆயிஷா அவர்களைத் தொட்டு அதாஃ என்பவர் அறிவித்தால் அது ஆதாரத்திற்க எடுக்கப்படமாட்டாது. (தஹ்தீபுத் தஹ்தீப், மீஸானுல் இஃதிதால், அள்ளுஅபாஉஸ் ஸகீர்) உழ்ஹிய்யா விடயத்தில் வந்திருக்கும் குர்ஆன் வசனத்தோடும், நபிகளாரின் ஸஹீஹான ஹதீஸோடும் போதுமாக்கிக் கொள்வோம்!!!
உழ்ஹிய்யா பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

 ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
(அல்குர்ஆன்: 22:32)

صحيح البخاري: ٩٧٦ – عَنِ البَرَاءِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أَضْحًى إِلَى البَقِيعِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، وَقَالَ: «إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا، أَنْ نَبْدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ وَافَقَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ، فَإِنَّمَا هُوَ شَيْءٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ» فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ؟ قَالَ: «اذْبَحْهَا، وَلاَ تَفِي عَنْ أَحَدٍ بَعْدَكَ»

பராஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் பகீஃ எனுமிடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களை நோக்கி, ‘இன்று நாம் செய்யும் முதல் காரியம் தொழுகையை நிறைவேற்றுவது. பின்னர்(இல்லம்) திரும்பி (குர்பானிப் பிராணியை) அறுப்பது. இவ்வாறு தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் தம் குடும்பத்தாருக்காக, அவசரமாக அறுத்தவராவார். 

அது குர்பானியாகாது’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்கு முன்பே) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய ஆட்டை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று இருக்கிறது. (அதை அறுக்கலாமா?)’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை அறுப்பீராக! உமக்குப் பின் மற்றவர்களுக்கு இது பொருந்தாது” என்று கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 976)


                                                                                                                     மௌலவி :- முர்ஸீத் அப்பாஸி 

உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)
உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ சுல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்.
பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு,'எனினும், இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அஸ்லம்)
''நெரிசலுள்ள நேரத்திலும், நெரிசலற்ற நேரத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.''
''இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?' என நாஃபிஉ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டபோது, 'முத்தமிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்' எனக் கூறினார்'' என்று உபைதுல்லாஹ் அறிவித்தார். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
''ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.'' (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு)   
''ஒருவர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, 'நான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!'' என (மீண்டும்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸுபைர் இப்னு அரபி)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் சைகை செய்தார்கள்.''(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு 'அல்லாஹு அக்பர்' 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று கூறினார்கள்.'' (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
-இங்கு இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் ஸஹீஹ் புகாரியில் உள்ளது

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை நிலை நாட்டப்பட்டு விட்டால் நீங்கள் விரைந்தோடி வரவேண்டாம் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாருங்கள். நீங்கள் அடைந்தால் தொழுங்கள், தவறினால் தவறியதை நிறைவேற்றுங்கள். தொழுகைக்காக வரும் ஒருவர் தொழுகையில் இருப்பவர் தான்”(ஆதாரம்:- புஹாரி).


பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. 
தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.
அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.
'எங்களை இங்கே விட்டுவிட்டுச் செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'
'ஆமாம்'
'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.
அந்தப் பெருமகனார் பெயர் இபுராஹீம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்), அவர் துணைவியார் பெயர் ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அந்தப் பாலகர் பெயர் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்).
திரும்பி நடந்த அந்தப் பெருமகனார் மலைக்குன்றுகளைக் கடந்ததும் தம் முகத்தை அந்த மணல்மேட்டின் பக்கம் திருப்பினார். இரு கரங்களையும் விரித்து இறைவனிடம் இறைஞ்சினார்.
'இறைவனே! யாருமற்ற, விவசாயமுமில்லாத இந்த பாலைப் பள்ளத்தாக்கில் என் சந்ததிகளைக் குடியமர்த்தி இருக்கிறேன் - தொழுகையை நிலைநிறுத்துவதற்காக! மக்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!'
சில நாட்களில் கொண்டு வந்த உணவுப்பொருளும் குடிநீரும் தீர்ந்தது. அதனால் நீரைத் தேடவேண்டிய அவசியம் உண்டாயிற்று. குழந்தை பசியால் அழுதது. தாகத்தில், வெயிலின் வேகத்தில் அழுதது. அழுத குழந்தையின் தாகம் தீர்க்க நீரில்லை. அன்னையோ மிகக் கவலையுற்றார். பக்கத்தில் நின்றிருந்த இருமலைக் குன்றுகளையும் நோக்கினார். ஒருவேளை அங்கே ஏதேனும் நீரூற்று இருக்கக் கூடுமோ என ஐயுற்றார். 

முதலில் ஒரு மலைக்குன்றில் ஏறினார்கள். அதன் பெயர் ஸஃபா. அங்கே நீரில்லை. பிறகு அடுத்த மலையில் ஏறினார்கள். தேடினார்கள். அங்கும் நீரில்லை. அதன் பெயர் மர்வா. இரு குன்றுகளிலும் ஏறித் தேடியும் நீரில்லாமல் வாடினார்கள்.  மீண்டும் குழந்தையின் நிலையறிய ஓடினார்கள். அங்கே கண்ட அந்த அதிசயக் காட்சியில் மனம் தேறினார்கள். தம் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் நோக்கினார்கள்.
 அங்கே குழந்தையின் காலடி உதைப்பில், வானவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்களது காலடியிலிருந்து நீர் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிசயித்த அன்னை, நீரை அள்ளியள்ளிப் பருகினார்கள். இறைவனின் அற்புதப் பேரதிசயத்தில் மனம் நிறைந்து உருகினார்கள். நீர்ப்பை நிறைந்திட நீரெடுத்துப் பெருக்கினார்கள். தம் கைகளால், பாலைமணல் கொண்டு சிறு கரை கட்டி, நீரை அணை கட்டினார்கள் - 'ஜம் ஜம்' – நில் நில் - என்று தம் வாயுரையால் பொங்கிப் பெருகிய நீரை கரைகட்டினார்கள்.
'இறைவன், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! அன்று மட்டும் அன்னை ஹாஜரா 'ஜம்-ஜம்' ஊற்றுக்குக் கரை கட்டவில்லையெனில் அது பொங்கிப் பெருகி இந்த பூலோகமெல்லாம் நனைத்திருக்கும்.' என்று பின்னாளில் பொருள் விளக்கம் தந்தார் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்கள் தங்கியிருந்த அந்த பாலைப் பெருவெளிக்கு 'மக்கா' என்று பெயர். பூமியிலிருந்து சற்றே உயர்ந்து மணல் திட்டாய் காணப்பட்ட அந்த ஒளிப் புள்ளிதான் பூமிப்பந்தின் நடுப்புள்ளியாய் இலங்கும் ஆதியிறை ஆலயம் 'கஅபா'. வானவர் அல்லது அக்குழந்தை, இருவேறு கருத்துக்கள், காலடியில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய அந்த நீரூற்றுதான் வற்றாத ஜீவனாய் இன்னும் ஊறிக் கொண்டிருக்கும் வசந்தத் தேனூற்று 'ஜம்-ஜம்'. மக்காவுக்கு மாநிலத்தின் மார்பிடம் என்றொரு அடைமொழிப் பெயர் உண்டு. ஒருவேளை 'ஜம்-ஜம்' எனும் பால் அங்கு சுரந்து கொண்டிருக்கும் காரணமாயிருக்குமோ?
நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான பெருந்தகையாளர். அவருக்கு இரு மனைவியரை அளித்து இறைவன் சிறப்புச் செய்தான். மூத்தவர் பெயர் ஸாரா அலைஹிஸ்ஸலாம். இளையவர் ஹாஜரா அலைஹிஸ்ஸலாம். அவர்கள் ஓர் அரச குலத்துப் புறா. இபுராஹீம் நபிகளோடு இணைந்து நடந்த நிலா, மூத்தவருக்கு இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இளையவருக்கு இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மகவாகப் பிறந்தனர். இந்த இளையவர் வழி அநேக அற்புதங்களை இறைவன் நடத்திக் காட்டினான்.
இறைவன் கட்டளைப்படி மக்கா எனும் மணிநிலத்தில், தம் கண்ணின் மணிகளைக் கழற்றி வைத்துவிட்டு இபுராஹீம் நபிகள் சொந்த நாடு திரும்பினார்.
ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அன்னையாரும் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) இளஞ்சிசுவும் இறையின் காவலில் இருந்தனர். தமது இதயநேசர் வேண்டிய இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்ளாமலா இருப்பான்? மக்காவின் பாதையில் வழிநடந்து செல்லும் வழிப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லுகின்ற அந்தப் பாட்டையில், ஒரு புதுமையைப் பார்த்தனர். நீரிருக்கும் இடம் மட்டுமே வட்டமிட்டுப் பறக்கும் தண்ணீர்ப்பறவை, 'ஜம்-ஜம்' ஊற்றுருகே வட்டமிடுவது கண்டு வியப்புற்றனர். இவ்வளவு காலமாக இந்தப் பாதையில் வருகிறோம். 

இதுவரை இங்கே நீர் இருந்ததில்லையே என்று தமக்குள் வினா விடுத்துக் கொண்டனர். அந்த அதிசயம் என்னவென்று காண வந்திருந்தவர்களில் ஓரிருவரை அனுப்பி வைத்தனர். அவர்கள் கண்டு வந்து சொன்ன நீரூற்றுபற்றி அறிந்து மகிழ்வுற்றனர். அன்னை ஹாஜராவிடம் தாங்களும் அங்கு வந்து தங்கி வாழ அனுமதி கேட்டனர். மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதில் ஆர்வம் கொண்ட அன்னையார் அனுமதி அளித்தார். ஆயினும் நீரூற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் தரமுடியாது என்றும் எடுத்துரைத்தார். அந்நீரை பயன்படுத்திக் கொள்வதில் தடையில்லை என்று உறுதிமொழியும் உடன் தந்தார். பிறகென்ன?
நீரிருக்கும் இடம் ஊரிருக்கும். 'ஜம்-ஜம்' நீர் வந்தபிறகு மக்காவில் ஊர் வந்தது. அங்கு முதலில் வந்து குடியேறியவர்கள் 'ஜர்ஹம்' இனத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் வடித்து வைத்திருக்கின்றனர்.
இளவல் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபராய் வளர்ந்தார். அழகும், இளமையும், பொலிவும் புதுமையும் பெற்று மிளிர்ந்தார். தக்க வயது வந்ததம் குடியேறிய குலத்தாரிடம் பெண் முடித்தார். இறை நாட்டப்படி மீண்டும் நபி இபுராஹீம் அவர்கள் மக்கா வந்தார். அவர் வந்த வேளை, இளையவர் இல்லத்தில் இல்லை. அவர்களது மனைவி மட்டும் இருந்தார். அவர்களிடம், அவர்களது நிலைபற்றிக் கேட்க அவர்கள் சிரமத்தில் இருப்பதாக பதில் தந்தார். இபுராஹீம் நபிகளாரோ அவரிடத்து இளையவர் வந்தால் தமது 'ஸலாம்' உரைக்கும்படி கூறி, 'வீட்டு நிலைப்படியை மாற்றி வருக' எனக் கூறுமாறு கூறிச் சென்றார்.
நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லத்தில் நுழைந்தபோது தமது தந்தையார் இறைத்தூதர் இபுராஹீம் நபிகள் அவர்கள் வந்து சென்றது அறிந்து, உள்ளுணர்வில் அது பற்றி வினவினார். அவரது மனைவியாரும் நடந்தது பற்றி எடுத்துரைத்தார். 'வீட்டு நிலைப்படி என்பது நீதான். உன்னை மணவிடுதலை செய்து விடுகிறேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்' என்று கூறி அம்மங்கையை அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் அதே குலத்திலிருந்து இன்னொரு பெண்ணை மணமுடித்தார்.
இறை நாடியவரை பொறுத்திருந்த நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் மக்கா வந்தார். அப்போதும் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லத்திலே இல்லை. துணைவியார் இருந்தார்கள். வந்த முதியவரை முகமலர்ந்து வரவேற்றார்கள். நன்கு உபசரித்தார்கள். இறைச்சியும் நீரும் கொண்டு தந்து அன்பளித்தார்கள். தங்கள் வாழ்க்கை நிலை இறையருளால் மிக நல்ல நிலையில் இருப்பதாக ஒப்பித்தார்கள். அவர்களிடம் 'இஸ்மாயில் வந்தால் என் ஸலாம் கூறுங்கள். வீட்டு நிலைப்படியைப் பேணி நிலைப்படுத்துங்கள் என்று கூறுக' எனக் கூறிச் சென்றார்கள்.
முன்னர்போலவே - இறை உதிப்புணர்வால் - இல்லம் வந்த இஸ்மாயில்(அலை) அவர்கள் தமது மனைவியாரிடம் வினவ, அவர்களோ நடந்தவை அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். தந்தையார் கூற்றுப்படி அந்த மாதரசியைத் தங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டார்கள், தக்க வைத்துக் கொண்டார்கள். 

அன்னை ஹாஜரா இறையடி சேர்ந்திருந்தார்கள. காலம் கடந்து சென்றது. மீண்டும் இருவரும் இணையும் காலம் நெருங்கி வந்தது. 'ஜம்-ஜம்' ஊற்றருகே நின்றிருந்த பெரிய மரத்தின் நிழலில் இளையவர் அமர்ந்து அம்பொன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் பெருமகனார் அங்கே வந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு பாசமுள்ள இறைத் தூதர்களாகிய தந்தையும் மகனும் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். 

இறைத்தூதர்களாக இலங்கியவர்கள் அவர்கள். இறை கட்டளைகளையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். இறை கட்டளைக்கு இம்மியும் மாறு செய்யாதவர்கள் அவர்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதில் மண்டிக் கிடந்தது. உள்ளன்பும் உவகையும் பின்னிக் கிடந்தது. கனிவும் கருணையும் தேங்கிக் கிடந்தது.
பின்னர் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகனாரை நோக்கிக் கூறலானார்கள், 'இஸ்மாயிலே! இறைவன் எனக்கு ஒரு செயலைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறான். நீ அதில் எனக்கு உதவ முடியுமா?' என்பதாகக் கேட்டார்கள். 'இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் நிறைவேற்றுங்கள். நிச்சயம் நான் அதில் உங்களுக்கு உதவுகிறேன்' என்று பதிலளித்தார்கள்.
அப்போது இபுராஹீம் நபி அவர்கள் சுற்றியிருந்த இடங்களில் சற்று உயரமாக, சற்றே மேலோங்கியிருந்த மணற்திட்டைக் காட்டிச் சொல்லலானார்கள், 'இங்கே நான் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி எழுப்ப வேண்டும்'. நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களைக் கொண்டு வந்து தரவும் அவர்கள் கட்டவும் தொடங்கினார்கள். ஓரளவு உயரம் வந்தபொழுது 'மகாமே இபுராஹீம்' என்று சொல்லப்படும் அந்த கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள். நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதன்மேல் ஏறி நின்று கொண்டு கட்டலானார்கள்.
இதற்கு முன்னால் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது இபுராஹீம் நபியவர்கள் கனவொன்று கண்டார்கள். தமது அருமை மகனை அறுத்துப் பலியிடக் கனவு கண்டார்கள். இறைவன் தூதராக இயங்கிய அந்தப் பெருமகனாரிடம், மற்றோரிடம் இல்லாத இனிய பண்பொன்று மிளிர்ந்தது. அது கனவாயினும் அல்லது இறையறிவிப்பாயினும் எதுவாயிருப்பினும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனடியாக நிறைவேற்றி விடுவதுதான் அது. கனவு கண்டபிறகு மகனைச் சந்தித்ததும், அவரிடம் இதுகுறித்து வினவினார்கள். 'அருமை மகனே! உன்னை அறுத்து பலியிடுவதாகக் கனவொன்று கண்டேன். 

உன் விருப்பம் எதுவோ?'. தந்தை இபுராஹீம் நபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகும் அந்த அற்புதர் இஸ்மாயில் நபிகள், 'இறைவன் விருப்பம் அதுவேயாயின் உங்களுக்கு, உங்கள் ஆசைக்கு அடிபணியும் பிள்ளையாகவே என்னைக் காண்பீர்கள்' என்றார்கள். இறைவன் கட்டளையல்லவா? எனவே அப்படி வந்தது பதில். இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்றெல்லாம் விபரீதமாகத் தங்கள் புத்தியை தீட்டாமல் மகனைப் பலியிட கத்தியைத் தீட்டியவர் அந்தக் காருண்யர்!
பக்கத்திலே 'மினா' வெறும் மைதானம். அங்கே அழைத்துச் செல்கிறார்கள அருமை மைந்தனை. பளபளப்பாகத் தீட்டப்பட்ட கத்தி கைகளில். தந்தையார் ஆணைக்குத் தலை தாழ்த்தி தரும் தனயன். பக்கத்திலே பாறையொன்று. இறைவன் இட்டது முடிக்கும் நல்ல நெறிப்பெற்றியர் மகனது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறார்கள். அவர்களது வீரத்திற்கும் முறுக்கேறிய வலிமைக்குமாக இணங்கி அறுபட வேண்டிய உயிர் முடிச்சு இன்னும் இன்னும் விறைத்து நிற்கிறது. கழுத்தில் கத்தி வைக்கின்ற போதெல்லாம் அறுந்து போகவில்லை கழுத்து. 

மாறாக, கத்தி குரல்வளை விட்டும் நழுவிப் போகிறது. என்ன அதிசயம்! என்ன அதிசயம்! வலிமை போயிற்றே! கரம் வலுவிழந்து போனதோ? முதுமையில் கரங்கள் தளர்ந்து போனதோ? இறiவா என்ன இது வேதனை? நீ காட்டித்தந்த கனவினை நனவாக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் இறைபக்தியில் கனிந்த அந்தப் பெருமகனாரின் மனம் உருகுகிறது. கத்தி கூர்மைப்படவில்லையோ என்று சோதிக்கும் முகத்தான பக்கத்தில் நின்றிருந்த பாறைக் குன்றின்மேல் ஓங்கி அடிக்கிறார்கள். 

பாறை பிளந்து விடுகிறது. அப்போது வானின்றும் கொழுத்த ஆடொன்று இறங்கி வருகிறது. அதோடு இறைச் செய்தியும் வருகிறது. அதன்படி அந்த ஆட்டை மட்டும் அறுத்து பலியிடுகிறார்கள். இறைச் சோதனையில் வென்று காட்டுகிறார்கள்!
அதற்குப் பிறகுதான் கஅபா புனித ஆதியிறையாலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்கு முன்னாலும் கஅபா இருந்தது. வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று, இன்ன பிற இயற்கையின் சீற்றங்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுப் போயிற்று. இறைவேதம் அல் குர்ஆன், கஅபா இறையாலயத்தை, உலகத்தின் முதல் தோன்றிய ஆதியிறை ஆலயமாகச் சிறப்பித்துப் பேசும். வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துப்படி இதுவரை ஏறத்தாழ பன்னிரு முறைகள் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதன் முக்கிய அடித்தளமாக இபுராஹீம் நபிகள் கட்டிய அவர்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச் சுவரே அடிப்படையாக அமைந்தது.
இரு நபிமார்களும் இறையில்லத்தைக் கட்டி முடித்தனர். பின்னர் இறையிடம் இறைஞ்சினர்! 'இறைவனே! இந்த புனிதப் பணியை எம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே நன்கு அறிந்தவனாகவும் செவியேற்பவனாகவும் இருக்கிறாய்! என்று திரும்பத் திரும்பக் கூறியபடி அவ்வாலயத்தைச் சுற்றி வட்டமிட்டு நடந்தனர்.
இபுராஹீம் நபி இன்னும் இறைஞ்சினார்கள்! 'இறைவனே! எங்கள் பணியை ஏற்றுக் கொள்வாயாக! இஸ்லாமியராகவே எங்களை உன்னூலில் நூற்றுக் கொள்வாயாக! எங்கள் சந்ததியைப் பெருக்கு! உனை வணங்கும் கூட்டத்தாரை அதில் ஆக்கு. அவர்களில் இருந்தே ஒரு உன்னதத் தூதரை உண்டாக்கு. அவர்களுக்கு உனது வேதத்தையும் ஞானத்தையும் பரிசாக்கு!'
இந்தப் பிரார்த்தனையின் பயன் நமக்கு ஈருலக இரட்சகராம் அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளப்பட்டார்கள். அனைத்துலகுக்கும் ஓர் அருட்கொடையாக அகிலத்தின் அழகான முன்மாதிரியாக  இதைத்தான் பெருமானார் பின்னாளில் இப்படிப் பேசினார்கள். 'நான் என் தந்தை இபுராஹீமின் பிரார்த்தனையாக இருக்கிறேன்!'
நபிகள் பெருமானாரின் தலைமுறை வரிசை இபுராஹீம் நபிகளாரைத் தொடும். இபுராஹீம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் இரண்டாம் துணைவியாரிடம் அவர் கொண்டுவந்து கொடுத்த இறைச்சியிலும், நீரிலும் இறைவா நீ அபிவிருத்தி செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான் இவ்விரு உணவும் கனிவகைகளில் பிரார்த்தித்த கனிவகைகளும் இந்த மக்கா மாநகரில் மட்டும் இன்றும் அதிகமதிகம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. 

இறைச்சியும் நீரும் தினமும் உண்டாலும் அது மக்கா மக்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக மற்றவர்களுக்கு அனுதினமும் ஒத்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த பாகத்திலும் கிடைக்காத கனிவர்க்கங்கள் எல்லாம் இன்று மக்காவில் மட்டும் அதிகமாகக் கிடைக்கிறது. ஆய்வாளர்களை அது ஆச்சர்யப்பட வைக்கிறது.

இறைத்தூதரின் வேண்டுதலையும் இறைவன் அவர்களுக்களித்த உயர்சிறப்பையும் உற்று நோக்குவோர் இதனை இறைவன் பேரற்புதமாகவும் பெருந்தகை வேண்டுதலின் பெரும் பயனாகவுமே போற்றி ஏற்பர். உண்மையும் அதுதான். அந்தப் பெருமகனாரின் நினைவை தியாகத்தைப் போற்றும் வகையிலேதான் இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
எவ்வளவு பெரிய சோதனையில் அவர்கள் சிக்கித் தவித்தார்கள் என்பது அந்தச் சூழலிலிருந்து ஆய்வோருக்குத்தான் தெரியும். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகரைப் பாலைக்காட்டில் கொண்டுவிடும் பண்பாகட்டும், அரச குலத்து இளமனைவியை இறைவனின் அடைக்கலத்தில் விட்டுவிடும் தன்மையாகட்டும், கனவுதான் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளையை பலிகொடுக்கத் துணிந்த வீரமாகட்டும், பெரியவரின் கட்டளையேற்று மணல்மேடாய்க் கிடந்த இறையாலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய பொலிவாகட்டும், 

இறைகட்டளை எதுவென்றாலும் முகமன் கூறி வரவேற்று அடிபணிந்து காட்டிய பெருந்திறல் பண்பாகட்டும், அத்தனையும் அந்த வல்லவனிடமே ஒப்புவித்து, ஓர் அடிமையாய் தம்மை அர்ப்பணித்தளித்த ஓங்குயர் நிலையாகட்டும், இதயப் பிரார்த்தனையில் நம் ஈருலகும் வெற்றிபெற வைக்கும் நபிகள் நாயகத்தின் மூதாதையர் எனும் உயர்குலச் சிறப்பிலாகட்டும், எண்ண எண்ண எண்ணமெலாம் இனிக்கும் அந்த இனிய பெருந்தகையாளரின் இயல்பையும் திறத்தையும் எவர்தான் முழுதுமாக இயம்பவியலும்?
அவர்களைப்பற்றி எத்தனை ஆயிரம் நூற்கள் எழுதினாலும் அவர்களின் கால் துகளில் பட்டுத்தெறித்த தூசிக்குக்கூட இணையாகாது. அந்தப் பெருமகனாரின் நினைவாகத்தான் இந்தப் பெருநாள் - தியாகத் திருநாள்.
'இறைவா! மனிதர்களில் சிலரை இவர்களை நோக்கித் திருப்புவாயாக!' என்று அந்த இறைத்தூதர் இறைஞ்சினார்கள். இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இதயமும் புனித கஅபாவின் பக்கம் வாழ்வில் ஒருமுறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும். புனித ஹஜ் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
பெற்ற மகனை பலிகொடுக்கத் துணிந்த அந்த வீரச்செயலைப் போற்றி, ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்துப் பலியிடுதல் கடனாக்கப்பட்டிருக்கிறது. இரத்தமும் சதையும் எதுவும் இறைவன் விருப்பமல்ல. எனினும் இபுராஹீம் நபிகள் செய்யத் துணிந்த அந்த தியாகத்தைப் பாராட்டும் வகையில் இது ஹஜ்ஜுக் கடமையின் ஓர் அங்கமாக இறைவனாலும் இறைத் தூதராலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. பொங்கிப் பெருகும் 'ஜம்-ஜம்' நீ ஆண்டுகள் ஆயிரங்களைக் கடந்தும் இன்னும் பொங்கியபடியே இருக்கிறது. அதன் புதுமையும் பழம்பெருமையும் இஸ்லாமிய உலகு மட்டுமின்றி, அனைத்துலகும் தொட்டும் தொடர்ந்தும் பொங்கியபடியே இருக்கிறது.
'இறைவா! இந்த இறைச்சியிலும் நீரிலும் அபிவிருத்தி அளிப்பாயாக!' என்று வேண்டினார்கள். அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்னை ஹாஜராவை விட்டுப் பிரிகையில் 'கனிவகைகளை வழங்குவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். உலகின் எந்த பாகத்திலும் கிடைக்கும் அத்தனை கனிவகைகளிலும் மக்கம் கனிந்து கிடக்கிறது.
உலகம் அனைத்தும் மானுடம் அனைத்தும் ஓர்குலம். ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனே இறைவன். அவனது அடிமைகள் நாம் எனும் 'தல்பியா' எனும் சங்கநாதம் மக்கம் தொட்டு ஒலிக்கிறது. அதன் பழமையும் பெருமையும் மானுட சமுதாயம் போற்றும் உரிமையும் கடமையும் சமதர்மச் சமுதாயச் சோலையாக, சரிநிகர் சமானமாக அனைவரையும் 'வெள்ளாடை' தரித்த புனிதர்களாகக் காட்டும் புண்ணியத் திருவிழா ஆரம்பமாயிற்று. 

அண்ணலின் ஆதிகுலத் தோன்றல் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தந்தையார் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், துணைவியார் ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அம்மையார் நினைவுகளில் மக்கம் பூத்துக் கிடக்கிறது. உலக முழுவதும் அதன் வழித்தடம் பார்த்து நடக்கிறது. இனி உலகம் உள்ளளவும் இந்த வரலாறு 'ஜம்-ஜம்' நீர்போல் வந்து கொண்டேயிருக்கும் கஅபா இறையாலயம் அந்த கண்ணியனின் புகழ்மொழியில் நனைந்து கொண்டேயிருக்கும்!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget