ஒரு மனிதன் சில உதவிகள் செய்யும் போது, அல்லது ஒரு நல்ல காரியத்தை செய்து கொடுக்கும் போது, அவரது சேவை தொடராக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களின் ஆயுளை நீளமாக்குவானாக ! என்று நேரடியாக சொல்வார்கள். அல்லது சம்பந்தப்பட்டவர் பக்கத்தில் இல்லை என்றால் அவரது ஆயுளை அல்லாஹ் நீடித்து வைப்பானாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.

இப்படி பிரார்த்தனை செய்வதற்கு இஸ்லாம் அனுமதி தருகிறதா என்பதை ஹதீஸின் ஊடாக விடை காண்போம்.
தாயின் கர்ப்ப அறையில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்…
ஒரு மனிதன் தனது தாயின் கர்ப்பத்தில் சிசுவாக இருக்கும் போது, ஏற்கனவே அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட அவனது சகல விசயங்களையும் ஒரு மலக்கின் மூலமாக அந்த நேரத்தில் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான், என்பதை பின் வரும் ஹதீஸின் மூலமாக நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
“உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.

எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த ஓரிறைவன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5145)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான அத்தனை விசயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. எந்த விசயமும் இதன் பிறகு கூட்டப்படவும் மாட்டாது. குறைக்கப்படவும் மாட்டாது. எது நடந்தாலும் தீர்மானிக்கப்பட்ட விசயத்திற்குள்ளேயே மட்டும் தான் நடக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பிரார்த்தனையைப் பொருத்தவரை அல்லாஹ் குர்ஆன் மூலமும், நபியவர்கள் ஹதீஸின் மூலமும் தாராளமாக அனுமதி தருகிறார்கள். வேண்டிய து ஆக்களை அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்ளலாம். எதை கேட்டாலும் ஏற்கனவே முடிவு செய்த அம்சங்கள் மட்டும் தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு மனிதன் தனது ஆயுள் நீடிப்புக்கோ அல்லது வெறொருவரின் ஆயுள் நீடிபுக்கோ துஆ கேட்கலாமா என்றால், நபியவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தடை செய்கிறார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
“அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டு விட்ட (வாழ்)நாட்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டு வந்துவிடவுமாட்டான்; அவற்றில் எதையும்,அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்… ( முஸ்லிம் 5176)

அது போல நபியவர்கள் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ! தள்ளாடும் வயதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று அடிக்கடி து ஆ கேட்பார்கள் என்பதையும் ஹதீஸில் நாம் காணலாம்.
எனவே நீண்ட ஆயுளை நபியவர்கள் விரும்ப வில்லை என்பதை இப்படியான ஹதீஸிலிருந்து விளங்கலாம். அதனால் தான் எனது உம்மத்தின் வயதெல்லை அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட காலம் என்று கூறினார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.இந்த விசயத்தில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் ஹதீஸின் அடிப்படையில் பதிவுகளை பதிந்தால் பொருத்தமாக இருக்கும்.


                                                                              மௌலவி யூனுஸ் தப்ரீஸ்