தற்காலத்தில் நடைமுறையில் உள்ள இழப்பீட்டை பெறுவதற்கான காப்புறுதி முறைகள் அனைத்தும் சூதின் ஓர் வகையாகும்.
ஓர் வாகனம் பாதிப்புக்குள்ளாகின்றது. மூன்று இலட்சம் நஸ்ட ஈடாக காப்புறுதியின் மூலம் பெற்றுக்கொள்கின்றார். ஆனால் இதுவரை அவர் காப்புறுதிப் பணமாக கட்டியது 25000 ரூபாய் மட்டுமே.
இங்கு அவருக்கு சொந்தமான அவர் கட்டிய பணம் 25000 ரூபாய்கள். ஆனால் அவர் இழப்பீடாக பெற்ற மூன்று இலட்சம் ரூபாயில் 275000 ரூபாய் அவருக்கு எந்த வகையில் உரிமையானது.
வியாபாரம் செய்து ஆதாயமாக பெற்றுக் கொண்டாரா ? அது இல்லை. வட்டிக்கு கொடுத்து வட்டியாக பெற்றாரா ? அது ஹராம்தான். என்றாலும் அதுவும் இல்லை. எனவே அது யாருடைய பணம் ?
உண்மையில் இவரைப் போன்று அங்கே பலர் காப்புறுதியின் பெயரால் பணம் செலுத்தி வருகின்றார்களே அவர்களின் பணம் தான் இங்கே இவருக்கு கிடைக்கிறது.
அவர்களுக்கு ஆபத்துகள் நடக்காததால் அந்தப் பணம் மீளவும் கிடைக்காது. கேட்டுப் பெறவும் முடியாது. இங்கு சூது விளையாடுகின்றவர்களின் செயலுக்கு ஒப்பான ஒரு விடயம் நடைபெறுவதை அவதானிக்கலாம்.
பலர் பணத்தை கட்டுவார்கள். ஒருவர் அல்லது சிலர் எல்லோரின் பணத்தையும் அவ்விளையாட்டில் வெற்றிபெற்றவன் என்ற பெயரில் எடுத்துக்கொள்வார்.
இதை நாம் சூது என்கின்றோம். அதன் வடிவங்கள் ஊருக்கூர்,இடத்துக்கிடம் வௌவேறாக இருந்தாலும் இறுதியாக பலரின் பணத்தை ஒருவர் உரிமையில்லாமல் சுருட்டிக்கொள்வதை சூதாகவே கருதப்படும்.
தான் காப்புறுதி செய்தி பொருளுக்கு ஆபத்து ஏற்பட்டவன் வெற்றிபெற்றவன் போன்றும் ஆபத்துகள் ஏற்படாதவர்கள் தோல்வியடைந்தவர்கள் போன்றதுமான ஓர் நிலையை இங்கே உணரமுடிகிறது.
பாதிக்கப்பட்டவர் இவர்களின் பணத்திலிருந்து பாதிப்பின் அளவிற்கு எடுத்துக்கொள்கின்ற இந்த நிலையில் இந்த காப்புறுதி நிலையத்தை நடத்துபவர் மிகுதி அனைத்துப் பணத்தையும் எவ்வித உரிமையும் இன்றி முழுமையாக விழுங்கிக்கொள்கின்றார்.
கடனாகத் தந்தேன் திருப்பித் தாருங்கள் என்று கேட்கவும் முடியாது. அல்லது வியாபாரத்திற்கு தந்தேன் . என் முதலீட்டின் அளவிற்கு ஆதாயத்தை தாருங்கள் என வியாபார உரிமையும் கோரவும் முடியாது.
இங்கு நடப்பது என்ன? பெரிய அளவிளான சூதுக் கம்பனி ஒன்று நடைபெறுகின்றது.அதன் மூலம் அதை நடத்துபவர்கள் நூதனமான முறையில் திட்டமிட்டு நமது பணத்தை அபகரித்துக் கொள்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு இங்கு ஓர் சிறிய கணக்கு போட்டுக்கொள்வோம்.
காப்புறுதியின் பெயரால் மாதாந்தம் பணத்தை கட்டுபவர்கள் 1000 பேர். ஆவர்கள் மாதாந்தம் கட்டிய தொகை ஒருவருக்கு 5000 ரூபாய் பிரகாரம் 5000000 (ஐம்பது இலட்சம்). ஒருமாதத்தில் விபத்துக்குள்ளானவர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த இழப்பீடு 2500000 ரூபாய் . மிகுதி 2500000 ரூபாய் இந்த கம்பனியை நடத்துபவர்கள் செலவுகளாகவும் ,மிகுதியை இலாபங்களாகவும் என எடுத்துக் கொள்வார்கள்.
அந்த 1000 பேரில் விபத்துகளை எதிர்நோக்குபவர்கள் பெரும்பாலும் சுமார் 50 பேருக்கு உட்பட்டவர்களாக இருப்பதையே சாதாரணமாக கண்கூடாக கண்டு வருகின்றோம்.
இதனாலேயே இவ்வாறான காப்புறுதி நிறுவனங்களை ஆரம்பித்து கொள்ளை இலாபம் பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதே வேளை எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய சுனாமி , புயல் , வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து சொத்துகளும் அழிய வேண்டி ஏற்பட்டால் அனைவருக்கும் நஸ்டயீடு கொடுக்க வேண்டிவரும்.
ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்படுவதால் இந்த நிறுவனங்கள் கைவிரிக்கின்ற நிலைகளில் ஆகுவதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதாவது காப்புறுதி மூலம் கட்டப்பட்ட மொத்தத் தொகை ஐந்து கோடியாக இருக்கின்ற வேளையில் காப்புறுதி செய்யப்பட்ட பொருள்களுக்கான மொத்த இழப்பீடு ஐம்பது காடியாக இருந்தால் எங்கிருந்து அந்த இழப்பீட்டை கொடுப்பார்கள்.
இது போன்ற நிலைகள் அனர்த்தங்கள் ஏற்பட்ட நாடுகளில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாளாந்த செய்திகளை படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
எனவே முஸ்லிம்களான நாம் இது போன்ற பிழையான வழிகளில் பணம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் பிழைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்காமல் அவ்வாறான வழிகளை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை இதற்கு முன் இதைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாத நிலையில் நாங்கள் இழப்பீடுகள் பெறும் நோக்கில் பணம் கட்டியிருந்தால் நாம் கட்டிய தொகையை மட்டுமே ஏதும் இழப்பு வந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கப்பால் நாம் வரம்பு மீறி பிறர் சொத்தை எடுத்துவிடக் கூடாது.
அல்லாஹ் கூறுகின்றான்
(விசுவாசம் கொண்டவர்களே உங்களின் பொருள்களை உங்களுக்கிடையில் பிழையான முறையில் உண்ணாதீர்கள்.)அல்பகரா-188 இதே வேளை இன்று இதை நியாயப்படுத்துவதற்காக அவற்றின் மூலம் இலாபம் அடையும் பலர் இதற்கு ஹலால் பத்வா தேடி அலைகிறார்கள்.
இதிலே தனிநபர்கள் உள்ளதைப் போன்று இஸ்லாத்தின் பெயரால் சில நிறுவனங்களும் இந்தக் காப்புறுதிற்கு ஹலால் பத்வா கொடுத்து வருவதாக கேள்விப்படுகின்றோம்.
சகோதரர்களே இலகுவாக வருமானத்தை ஈட்டுவதற்கு வழி கிடைக்காதா ? என குறுக்கு வழியை முஸ்லிம்களே இன்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் நமக்கு நியாயமாக படாவிட்டாலும் யாராவது சிலர் ஹலால் என தீர்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்தானே என மனதிற்கு சாந்தி சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
நமக்கு சார்பாக இருந்தாலும் நியாயமான முறையில் சிந்தித்தால் பிழையாகவே தென்படுகிறது என்றால் சுயலாபங்களை விட்டுவிட்டு அல்லாஹ் றஸுலின் வழியைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். தவறினால் வழிதவறி விடுவோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மௌலவி அன்ஸார் தப்லீகி
Post a Comment