நானும் வருகின்றேன் உன்னோடு உன் மண்ணறை நோக்கி.

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் ! என் ஈமானிய உறவுகளே! தட்டி எழுப்புங்கள் உங்கள் மனசாட்சியை ! நிலையற்ற இவ்வுலகத்தில் நிஜமான சில வரிகளை சொல்லபோகிறேன் !

ஆம் உண்மைதான் .
முஸ்லிம் என்ற போர்வையை குளிர்காய்வதற்காக போட்டிருக்கும் என் அன்பு முஸ்லிம்களை பற்றிதான் என் பேனாமை பேசப்போகின்றது . ஏகனை விசுவாசித்த எம் ஈமானிய உள்ளங்கள் இன்று கல்வி , விவசாயம் , வர்த்தகம் என்று எண்ணில் அடங்காத எத்தனயோ துறைகளில் துணிச்சலோடு வீர நடை போடுகின்றது .அதிலும் வியப்பு என்ன தெரியுமா ? எம் முஸ்லிம் சமுதயாம் கல்வியில் வானளவிற்கு வளர்ந்ததை கண்டு வாய்பிளந்து வயிற்றெரிச்சல் கொள்கின்றார்கள் மாற்று மத வாரிசுகள் .

"கல்வி" என்ற மூன்றெழுத்தில் உலகத்தை மட்டும் மட்டிட்டமைதான் இன்றைய கல்வியின் உண்மை நிலை என்றால் அதற்கு மாற்றுகருத்து கூறுவது யாரால் முடியும் ? சற்று சிந்திப்போம் .

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும் மறுக்கமுடியாத ஒரு வரம் தான் மரணம் . இந்த அற்பமான உலகில் தன் பெயருக்குபின்னால் பட்டங்களை அடுக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையை அர்பணிக்கும் மனிதனோ அப்பட்டங்கள் அனைத்தும் தன் மூச்சு சுவாசப்பையில் இருக்கும் வரைதான் என்ற உண்மையை மறந்ததுதான் கவலைகுரியது .... நாம் மண்ணறைக்கு சொந்தங்களாக மாறிவிட்டாலும் கூட எம் சொந்தங்களாக வரவிருக்கும் விடயங்கள் என்று மூன்று விடயங்களை நபி ஸல் அவர்கள் கூறிக்காட்டுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம் ...

"إذا مات بن ادم إنقطع عمله إلا من ثلاث : صدقة جارية و علم ينتفع به و ولد صالح يدعو له"
"ஆதமுடைய மகன் மரணித்தால் மூன்று விடயங்களை தவிர அவனுடைய அமல்கள் துண்டிக்கப்பட்டுவிடும் : நிலையான தர்மம் , பிரயோசனமளிக்கும் கல்வி , அவனுக்காக பிரார்த்திக்கும் சாலிஹான குழந்தை "  சற்று சிந்திப்போம் ! இந்த மூன்று விடயங்களில் விடை பெறும் எம் பிரியாவிடை பயணத்திக்கு நாம் சேர்த்தவைதான் எத்தனை?? பரந்து விரிந்த இந்த உலகத்தில் பதவியை தேடி செல்கிறோம் . ஒரு கணம் சிந்திப்பதை மறந்துவிட்டது எம் உள்ளம் .

மார்க்கத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு நாடு கடந்து செல்கின்ற எக்கல்வியாக இருந்தாலும் அவை அனைத்தும் படைப்பாளனிடத்தில் பயனற்றவைதான் என்பதை மறக்கக்கூடாது . நாம் கற்கும் கல்வி உலகத்தில் எம்மை உயர்த்தினாலும் மறுமையில் கைகொடுக்கவில்லை என்றால் அக் கல்வி ஒரு செல்லாக்காசுதான்.

நாம் கல்வியைகூட வணக்கமாக மாற்றலாம் . ஆம்! எமது கல்வி எப்போது மார்க்கத்தோடு இணைந்து செல்கின்றதோ அந்நொடிப்பொழுதில் அது கூட வணக்கம்தான் . கல்வி என்ற துறையில் கால் தடத்தை பதிக்கும் ஒவ்வொரு ஈமானிய உறவும் "கல்வி"எனும் விடயத்தை கீழ் வரும் துணுக்குகளைக்கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் .

1 - மார்க்கம் அனுமதிக்காத கல்வி
2- மார்க்கம் அனுமதித்த கல்வியை அடையக்கூடிய வழிமுறைகள்.
3 - இறைவனை மறந்த கல்வி 

இம்மூன்றிலும் எம் சமுதாயம் எதை தேர்ந்தடுக்கின்றது என எம் ஆழ்மனதில் கேட்டுபார்ப்போம் . அமைதியாக பதில் சொல்லும் எமக்கு மார்க்கம் அனுமதிக்காத கல்வி அல்லாஹ் தனித்தவன் என்று ஏகத்துவப்படுத்தும் எம் சமுதாய மக்கள் கல்வியென தாம் தேர்ந்தெடுத்துள்ளது என்னவென்று பரீசீலிக்க தவறியதும் ஏனோ ? அதிலும் விஷேடமாக, சிற்பிக்குள் இருக்க வேண்டிய முத்தை போன்ற பெண்கள் சீரழிந்து இருப்பதுதான் கவலைக்குரிய விடயம் ...

நாட்டியக்காரியின் நடனத்தையும் , இழிவாக்கப்பட்ட இசையையும் தனக்குரிய தகைமையென நபிகளாரை ஏற்றுக்கொண்ட பெண் சூட்டிக்கொள்கிறாள். இசைத்துறையில் பங்கு பற்றி முதலாம் இடத்தை தட்டி செல்கிறார் "இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் சிறுமி " எங்கே செல்கின்றது எம் ஈமானிய உள்ளங்கள் ? பாராட்டி கை அசைக்கும் பெற்றோர்கள் .

வெட்கப்படவேண்டாமா ?
ஆம் ! நாம் தேர்ந்தடுக்கும் கல்வியில் இறையச்சம் ஒரு அங்கமாக இல்லாவிட்டால் இறைவனின் வரையறைகளை மீறி அது எவரெஸ்ட் வரை சென்றாலும் அது படுகுழியில் தான் முடியும் என்பதை மறக்கக்கூடாது.
மார்க்கம் அனுமதித்த கல்வியை அடையக்கூடிய வழிமுறைகள்
எம் சமுதாய ஆண்கள் தகுதி இல்லாத அவர்களின் பதவியை தக்கவைத்துகொள்ள சமூகத்தில் அந்தஸ்து இல்லாத, தைரியம் இழந்த அப்பாவிகளின் பதவியை ஆட்பலத்தாலும் பணபலத்தாலும் தட்டி பறிக்கிறார்கள். இக்கைக்கூலியானது அகராதியில் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒரு" லஞ்சம்" என்பதை மறந்துவிட்டோம்.
அது மட்டும் அல்ல, அமல்களில் சிறந்த அமலான போருக்காக தன் பெயரை கொடுத்திருந்த சஹாபியை அதை விட்டு விட்டு ஹஜ்ஜுக்கு செல்லவிருந்த அவருடைய மனைவிக்கு துணையாக செல்லுமாறு கட்டளையிட்ட நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக !!!!!

அனுமதித்த கல்வியாக இருக்கின்ற வைத்திய துறை, மேலும் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுக்கின்ற எம் முஸ்லிம் பெண் பிள்ளைகள் சுமார் ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்கள் மஹ்ரம் இல்லாமல் தனிமையில் பிரயாணம் செய்து கல்வியை தொடர்கின்ற ஒரு அவல நிலையை காண்கின்றோம்.
இதோடு முடியவில்லை. மார்க்க கல்வியை தேர்ந்தெடுத்த எம் சகோதரிகள் இறுதி ஆண்டில் கிடைக்கும் புலமைப்பரிசிலில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு வழிகாட்டியாக இருக்ககூடிய மஹ்ரத்தை மறந்துவிடுகிறாள். மார்க்கத்தை படிப்பது அவள் நோக்கமாக இருந்தாலும் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என்று அவள் கல்வியை தேடும் ஊடகம் ஹராமாக இருப்பதுதான் கண்ணீர்சிந்த வேண்டிய விடயமாக இருக்கிறது.

இறைவனை மறந்த கல்வி
வானம் ,பூமி, கோள்கள் , நட்சத்திரங்கள் ,உடுத்தொகுதி என மாணவர்களை வியப்பிக்கும் அளவுக்கு கல்வியை போதிக்கும் ஆசான்கள் அதற்குரிய படைப்பாளன் "அல்லாஹ் " தான் என்பதை சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டார்கள். தலையை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு கட்டிடத்தை ஒரு பொறியியலாளர் கட்டினால் அவரை தலைக்கு மேல் வைக்கும் எம் சமுதாயம் அவருக்கு சிந்திக்கும் மூளையை கொடுத்தது இறைவன்தான் என்பதை சிந்திக்க தவறிவிட்டார்கள்.

இன்று கப்பலை கட்டி கடலில் விட்ட கண்டுபிடிப்பாளனை கண்டு கண்ணயர்ந்து போகின்றோம் . ஆனால் அக்கப்பலுக்கு கடலை வசப்படுத்தி கொடுத்தவனை கண்ணியப்படுத்த தவறிவிட்டோம். தற்காலத்தில் உள்ள பொறியியல் வித்தைகளை கண்டு மெச்சுகின்ற உலகம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் அது இருந்தது என்பதை அறியாமல் இருக்கின்றது.
பால்வெளி வரையுள்ள படைப்பினங்களை படித்து பதம் பார்த்து விட்டு, அவற்றுக்கு பின்னால் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் எனும் பகுப்பாய்வை பத்திரமாய் பதுக்கிவிட்டு பண்டிதப்படிப்பு என கூறப்படும் இந்நிலையானது ஏகஇறைவனை ஆழ்மனதால் கண்ணியப்படுத்தும் ஓர் இறை அடியானைப்பொறுத்தவரையில் அது பாமரப்படிப்பு தான்!

நாம் இவ்வுலகில் பல தரப்பட்ட கல்வித்துறைகளில் மேலோங்கிப்போனாலும், அது எமக்குள் ஈமானையும் உளத்தூய்மையையும் இறையச்சத்தையும் தான் அதிகரிக்க வேண்டும் என்பதற்கான சான்று எம்மவர்களில் இருந்து பின்வருமாறு!

சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதத்தைப் பற்றி அல்லாஹ் சூரா நம்ல் இல் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான் .
" சுலைமான் நபியவர்களின் மாளிகைக்கு நுழைந்த மகா ராணி தரையில் உள்ளது நீர்தடாகம் என்று எண்ணி அவரது ஆடைகளை கெண்டைகாலுக்கு மேல் உயர்த்தினார் . இதை கண்ட சுலைமான் நபியவர்கள் இது நிச்சயமாக பளிங்குகளினால் வடிவமைக்கப்பட்ட மாளிகை என்று கூறினார் ." ( சூரா அந் நம்ல் 44 )

இந்த 3d தொழில்நுட்ப முறையில் இன்று பல கட்டிடங்களை கட்டும் பொறியியலார்களுக்கு மத்தியில் அன்றே இறைவன் இந்த தொழில்நுட்ப முறையை கற்றுகொடுத்து விட்டான். சுப்ஹானல்லாஹ். இதே சூராவில் , தன் இறைவன் தனக்கு அளித்த அற்புதங்களுக்காக இறைவனை புகழ்ந்து தன்னை ஒரு அடியானாக அவர் கூறும் அழகான பிராத்தனை 19 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளது .

படைப்பாளனை மறந்து தம் கல்வியை கொண்டு பெருமையடித்தவர் இழிவை சந்திப்பார் என்பது எமக்கு " டைட்டானிக் " கப்பலை கட்டி "இந்த கப்பலை யாராலும் அழிக்க முடியாது" என்று இறைவனை மறந்து கூறிய வார்த்தையின் விபரீதத்தை நான் கூறத்தேவையில்லை . நீங்களே மீட்டி பாருங்கள் .

அது மாத்திரமில்லாமல் இறைவனால் கூறப்படுகின்ற மற்றுமொரு பொறியியலாளர்தான் "துல்கர்னைன் " என்று சொல்லப்படுகின்ற ஒரு சாலீஹான மனிதர். யஃஜூஜ் , மஃஜூஜ் என்ற கூட்டத்தின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் முறையிட்ட சமூதாயத்திற்காக ஒரு பிரமாண்டமான தடுப்புச்சுவரை கட்டிவிட்டு அவர் கூறிய அழகான வார்த்தை சூரா கஹப் 98 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளது. "இது எனது இரட்சகனின் அருளிலிருந்து உள்ளது .எனது இறைவனின் வாக்கு வந்துவிட்டால் இதை தூள் தூளாக ஆக்கிவிடுவான் " என்று அவரது பலத்தை இறைவனின் சக்திக்கு சிறியதாக மதிப்பிட்டு தான் ஒரு அடியான் என்பதை அழகான முறையில் கூறுகின்றார்.

எனவே தன்னுடைய அறிவால் எத்தனை சாதனைகள் படைத்தாலும் தான் இறைவனின் அடியான் என்பதை அந்த மனிதர்கள் மறக்கவில்லை .
இந்தக்கல்வி ஒருபுறமிருக்க நபியவர்கள் இன்னொரு கல்வியை முக்கியத்துவப்படுதினார்கள். 

" خيركم من تعلم القران و علمه "
'யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுகொடுக்கிறாரோ அவர்தான் உங்களில் மிகவும் சிறந்தவர்" இந்த நபியவர்களின் வார்த்தையை வாழ்கையின் வரைவிலக்கணமாக எடுத்துக்கொண்டார்கள் சஹாபாக்களும் அவர்களை தொடர்ந்து வந்த இமாம்களும் . ஒரு மணிநேர மார்க்க வகுப்பிற்கு சாட்டு போக்குச்சொல்லும் எம் சமுதாயத்திற்கு மத்தியில் பின்வரும் சம்பவத்தை சொல்வது என் கடமைதான்.

" ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்ற நபித்தோழர் ஒரேயொரு நபிமொழியை அறிவதற்காக தன் கைப்பணத்தில் ஒட்டகம் வாங்கி ஒரு மாதம் நடைப்பயணம் செய்யும் தூரத்திற்கு ஊர் விட்டு ஊர் சென்றார். "
சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் உடல் சக்தி இழந்து போய்விடும் . இந்த நபித்தோழர் ஒரு மாத காலம் ஓராயிரம் பொன்மொழியை கேட்பதற்காக அல்லாமல் ஒரே ஒரு நபிமொழியை அறிவதற்காக பிரயாணம் செய்தது அவரின் இறைகல்வியின் தாகத்தை எடுத்துக்காட்டுகிறது.

எதிர்காலத்தில் தன் பிள்ளை விமானியாகவேண்டும் , சிறந்த வைத்தியராக வேண்டும் என்று எண்ணுகின்ற பெற்றோர்களே !! சமூகத்தின் தேவை கருதி உங்களில் எத்தனை பேர் மார்க்க அறிஞராக வர வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ????

மார்க்ககல்வியை கற்க வேண்டும் என்று உலகக்கல்வியை விட்டுசெல்லும் எம்பிள்ளைகளை பார்த்து "பாடசாலை கல்வியில் சித்தியடையவில்லையா" என்று கேட்கின்ற சமுதாயமே சற்று சிந்தியுங்கள் ! இன்றைய மதரசாக்கள் பகுதி நேர வகுப்புகளை மிகவும் கீழ்த்தரமாக கணக்கெடுக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் இன்றைய மதரசாக்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்று பெண்களை பாதுகாக்கும் நிலையங்களாக மாறிவிட்டது . சிந்திக்கும் நேரம் இது ! சமுதாயத்தில் பெரிய புள்ளிகளாக திகழும் எம்மில் எத்தனை பேருக்கு அல்குர்ஆனை சரளமாக ஓத முடியும் ?" உலகக்கல்வியை முழுமையாக ஒதுக்கிவைத்துவிட சொல்வது எனது நோக்கமல்ல ! மாறாக மார்க்க அறிவல்லாமல் மட்டிடப்பட்ட உலகக்கல்வி பற்றி கூறுவதே என் நோக்கமாகும் . 

வைத்தியர்களாக வரக்கூடிய ஒவ்வொருவரும் அவர்களின் மருத்துவத்திற்கு மேல் இறைவனின் விதியை உண்மைப்படுத்த வேண்டும், உயர்ந்த மாடிகளை கட்டுவதற்க்கு வழிகாட்டும் பொறியிலாளர்கள் அவர்களின்' அறிவுக்கு மேல் இறைவனின் வல்லமையை உண்மைபடுத்த வேண்டும் , விஞ்ஞனியாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் விண்ணைபடைத்தவனை உண்மைபடுத்த வேண்டும் , படைப்பினங்களை பற்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் படைப்பாளனின் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும் . மாறிப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ?

என் இஸ்லாமிய உள்ளங்களே !! எம் இறுதிப்பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என தீர்மானிக்கும் நொடி இது என் ஈமானிய உள்ளங்களே !
எங்கள் இறுதிபயணம் வரும்முன்னரே அதற்கு பின் பயனளிக்கும் கட்டிச்சாதனத்தை தயார்படுத்திக்கொள்வோம். மாற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக !!! வாசித்தும் புறக்கணித்துவிட்டு செல்லும் உள்ளங்களை அல்லாஹ் விசாலப்படுத்துவனாக !!!  நின்று சிந்தியுங்கள் ...நியாமான வரிகள் இவை !!!!

                                                              
உம்மு காலீத் பின்த் ஷரயியா

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget