2018

மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. 
மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். மூஸா நபி சமூகத்தில் ஸாமிரி என்ற ஒருவன் இருந்தான். இந்த ஸாமிரி என்பவன் மூஸா நபியுடன் உரையாடிக் கொண்டிருந்த ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடிபட்ட மண்ணை எடுத்து வைத்திருந்தான். மூஸா நபி தலைமைப் பொறுப்பை ஹாரூண் நபியிடம் கொடுத்துவிட்டு, அல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் சென்று விட்டார்கள்.
அப்போது இந்த ஸாமிரி, மக்களின் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கினான். அவற்றை உருக்கினான். ஒரு காளை மாட்டை சிலை வடித்தான். அதன் மீது ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி தடம்பட்ட மண்ணைப் போட்டான். ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் காளை மாட்டுச் சிலை மாடு போன்று கத்தியது. அதற்கு சதையும் உண்டானது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஏமாந்தனர். அதிசயங்கள் ஆதாரமாகாது
அல்லாஹ் சோதிப்பதற்காக கெட்டவன் மூலமாகக் கூட அதிசயத்தை வெளிப்படுத்தலாம். மக்கள் அந்த காளை மாட்டுச் சிலையை வணங்க ஆரம்பித்தனர். ஹாரூன் நபி “இது என்ன சிலை? அல்லாஹ் சோதிக்கின்றான். வழிதவறி விடாதீர்கள்” என்று எடுத்துச் சொன்னார். ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை. மாட்டின் மீதுள்ள மோகம் அதிகரித்தது. ஹாரூன் நபியைக் கொலை செய்யவும் முற்பட்டனர்.
மூஸா நபிக்கு அல்லாஹ் நடந்ததைச் சொன்னான். ஆத்திரப்பட்ட அவர் தன் சமூகத்திடம் வந்தார். ஹாரூன் நபி மீது கோபப்பட்டு விசாரித்தார். அவர் நடந்ததை விவரித்தார்.
மூஸா நபி, ஸாமிரியை அழைத்து விசாரித்தார். அவனைக் கண்டித்தார். “நீ எங்கு சென்றாலும் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலைதான் இருக்கும். நீ வணங்கிய உனது கடவுளைப் பார்” எனக்கூறி அதை எரித்து அதைக் கடலில் தூவினார். காளை மாட்டுச் சிலைக்குக் கடவுளின் தன்மை இல்லை என்பதை நிரூபித்தார்
தம்பி தங்கைகளே. . . அற்புதங்களைக் கண்டு ஏமாறக்கூடாது. ஆதாரத்தின் அடிப்படையில் தான் நாம் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவம் அடங்கிய செய்திகள் திருக்குர்ஆனில் பின்வரும் இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20:83-98, 7:148-149, 7:138.
7:138 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ‌ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ‌  ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏
7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்
7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ‌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ‏
7:148. மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் – இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:149 وَلَـمَّا سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
7:149. அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
20:83 وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى‏
20:83. “மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
20:84 قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏
20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
20:85 قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ‏
20:85. “நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று
20:86 فَرَجَعَ مُوْسَىٰۤ اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا  ۙ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِىْ‏
20:86. ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
20:87 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ‏
20:87. “உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
20:88 فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى فَنَسِىَ‏
20:88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
20:89 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا
20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?
20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ‌ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ‏
20:90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
20:91 قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى‏
20:91. “மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
20:92 قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏
20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
20:93 اَلَّا تَتَّبِعَنِ‌ؕ اَفَعَصَيْتَ اَمْرِىْ‏
20:93. “நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”
20:94 قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏
20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
20:95 قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏
20:95. “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.
20:96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏
20:96. “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
20:97 قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ‌ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا‌ ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا‏
20:97. “நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.
20:98 اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَ‌ؕ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏
20:98. “உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.

                                                                                      அஷ்சேஹ் இஸ்மாயில் ஸலபி 

யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன? ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது? என அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றீர்களா? வாருங்கள் கதைக்குள் செல்வோம்
மக்கா புனித பூமி என்பதை அறிவீர்கள். அதற்கு ‘உம்முல் குரா” – நகரங்களின் தாய்- என்ற பெயரும் உண்டு. அங்குதான் ‘பைதுல் அதீக்” எனப்படும் பழமையான ஆலயமான ‘கஃபா” உள்ளது. கஃபாவை மக்கள் பெரிதும் மதித்து வந்தனர; யமனில் ‘ஆப்ரஹா” என்றொரு மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் ‘ஸன்ஆ”வில் மிகப் பிரம்மாண்டமான கலை நுணுக்கம் மிக்க ஒரு ஆலயத்தைக் கட்டினான். மக்கள் கஃபாவை விட்டு விட்டு இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்தான். அவனது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
கஃபாவின் மதிப்பைக் கெடுக்க முனைந்த அவனது நாட்டம் நிறைவேறவில்லை. இதே வேளை, இந்த மன்னனின் சதியால் ஆத்திரமுற்ற சிலர் அந்த ஆலயத்தையும் அசிங்கப்படுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமுற்ற மன்னன் கஃபாவைத் துண்டு துண்டாகத் தகர்த்துவிட்டால் அதன் பின்னர் தனது ஆலயத்தை நோக்கித்தான் மக்கள் வர வேண்டும் என்று கணக்குப் போட்டான். ஒரு நாள் அவன் மிகப் பெரும் யானைப் படையுடன் மக்கா நோக்கிப் படையெடுத்தான். கஃபாவை மதித்து வந்த சில அரபிகள் அவனுடன் சண்டையிட்டு தோல்வி கண்டனர்
அப்துல் முத்தலிப்
அவன் கஃபாவிற்கு அருகில் வந்த போது அங்குள்ள கால் நடைகளைக் கைப்பற்றிக் கொண்டான். நபி(ஸல்) அவர்களின் ‘அழிக்கப்பட்ட யானைப்படை’ பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களது 200 ஒட்டகங்களையும் பிடித்துக் கொண்டான். கஃபா அருகில் வந்த ‘ஆப்ரஹா” மக்காவாசிகளுக்கு ஒரு செய்தி அனுப்பினான். ‘எனக்கு உங்களுடன் போர் செய்யும் எண்ணம் இல்லை. கஃபாவை உடைப்பது மட்டுமே எனது நோக்கம்” என்பதுதான் அந்தச் செய்தி! மக்காவின் தலைவர் அப்துல் முத்தலிப் மன்னன் ஆப்ரஹாவைச் சந்தித்தார். மன்னனும் அவரது அழகிய தோற்றம், வயது என்பவற்றைக் கண்ணுற்று அவரை மதித்தான். அவர் மன்னனிடம், ‘உங்கள் தளபதிகள் என் 200 ஒட்டகங்களை எடுத்துக் கொண்டார்கள். அதை திருப்பித் தாருங்கள்” என்றார். இது கேட்ட மன்னன், ‘உங்களது ஆலயத்தை நான் உடைக்க வந்துள்ளேன். நீங்கள் அது பற்றிப் பேசுவீர்கள் என நினைத்தேன் ஆனால், நீங்கள் உங்கள் ஒட்டகத்தைப் பற்றிப் பேசுகின்றீர்களே” என ஆச்சரியத்துடன் கேட்டான்
அதற்கு அப்துல் முத்தலிப், ‘ஒட்டகத்திற்கு உரிமையாளன் நான். எனவே, அது பற்றி நான் பேசுகின்றேன். இந்த ஆலயத்திற்கு உரிமையாளனான ஒரு இறைவன் இருக்கின்றான். அதை அவன் பார்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
அப்துல் முத்தலிபிடம் அவருக்குச் சொந்தமான ஒட்டகம் கொடுக்கப்பட்டது. அவர் கஃபாவுக்கு வந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இந்தப் படையை எதிர் கொள்ள நம்மிடம் பலம் இல்லையே என வருந்தி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள். பின்னர் மலை உச்சிகளுக்குச் சென்றுவிடுமாறு மக்களுக்கு அப்துல் முத்தலிப் உத்தரவிட்டார்கள். அதோ அந்தப் படை ஆணவத்துடன் கஃபாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. திடீரென தலைமை யானை கஃபாவை நோக்கிச் செல்லாது அடம்பிடிக்க ஆரம்பித்தது. அது கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்தது. யமன் நோக்கிச் செல்லத் திருப்பினால் செல்லத் தயாரானது. கஃபாவை நோக்கி நகர்த்தினால் படுத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் அதை அசைக்க முடியவில்லை.
அபாபீல்
அப்போது தான் பல்லாயிரக்கணக்கான ‘அபாபீல்” எனும் சிறு பறவைக் கூட்டம் வந்தது. அவற்றின் கால்களிலும் சொண்டுகளிலும் சிறு சிறு கற்கள் இருந்தன. அவை அவற்றை அந்தப் படை மீது வீசின. அந்தக் கற்கள் பட்டவர்கள் செத்து மடிந்தனர். ஆணவத்துடன் வந்த யானைப் படை சிதறுண்டு போனது. அந்தப் படையுடன் மன்னன் ஆப்ரஹாவும் அழிக்கப்பட்டான். இந்த நிகழ்வால் கஃபாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. இன்ஷா அல்லாஹ் உலக அழிவு நெருங்கும் வரை யாரும் இந்த கஃபாவை எதுவும் செய்ய முடியாது!
உலக அழிவு நெருங்கும் போது இந்தக் கஃபா உடைக்கப்படும். யானைப் படை அழிக்கப்பட்ட அந்த ஆண்டு ‘ஆமுல் பீல்” -யானை வருடம்- என்று கூறப்படும். இந்த நிகழ்வு நடந்த ஆண்டில்தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
அழிக்கப்பட்ட இந்த யானைப் படை பற்றி சூறா ‘அல் பீல்” – யானை வருடம் – எனும் (நூற்றி ஐந்தாவது) அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
‘யானைப் படையினரை உமது இரட்சகன் எப்படி அழியச் செய்தான் என்பதை (நபியே!) நீர் அறியவில்லையா?” அவர்களது சூழ்ச்சியை அவன் வீணாக்கி விடவில்லையா?” ‘அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.” ‘சூடேற்றப்பட்ட கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.” ‘அதனால், மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று அவன் அவர்களை ஆக்கி விட்டான். ” (105:1-5)


                                                                                அஷ்ஷேஹ் இஸ்மாயில் ஸலபி

அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276)
இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் வரியை விதித்து மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். 
தொழில் நிறுவனங்கள் வட்டி கட்டுவதற்காகப் பொருட்களின் விலையைப் பன்மடங்காகப் பெருக்குகின்றன. சாதாரண மனிதனும் வட்டியின் வலையில் இருந்து மீள முடியாதுள்ளான். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் அழிவையே சந்திக்கும் என்பது அல்லாஹ்வின் முடிவாகும்.
இந்த வசனத்தில் அல்லாஹ் வட்டியை அழிப்பான் என்று கூறுகின்றான். வட்டி கொடுத்தவனுக்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். தர்மம் செய்பவனின் பொருளாதாரம் தேய்ந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால், வட்டி அழிவைத் தரும் என்று அல்லாஹ் இங்கே கூறுகின்றான்.
நாய்கள் ஒரே தடவையில் பல குட்டிகளை ஈனுகின்றன. ஆடுகள் பெரும்பாலும் அதிகபட்சமாக ஒரே தடவையில் இரு குட்டிகளைத்தான் ஈனுகின்றன. தினமும் இலட்சோப இலட்சம் ஆடுகள் உணவுக்காக அறுக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. பொதுவாக கணக்கிட்டுப் பார்த்தால் களத்தில் ஆடுகளை விட நாய்களே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், உலகில் நாய்களை விட ஆடுகளே அதிகம் உள்ளன. எதை வளர்க்க வேண்டும், எதை அழிக்க வேண்டும் என்று அவன்தான் முடிவு செய்கின்றான். அவன் முடிவு செய்துவிட்டால் உலகின் நியதிகளுக்கு மாற்றமாக அது இருந்தாலும் அல்லாஹ்வின் முடிவில் மாற்றம் இருக்காது.
தொடர்ந்து வரும் வசனங்களும் வட்டியை வன்மையாகக் கண்டிக்கின்றன.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள்.”
‘(அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டு தௌபாச் செய்து) மீண்டு விட்டால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்குரியதாகும். (இதன் மூலம்) நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள்; அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள்.” (2:278-279)
அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடும் சமூகம் அழிவைத்தானே சந்திக்கும். எனவே, வட்டி அழிவைத்தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வட்டி ஒழிய வேண்டும் என்றால் ஸதகா, ஸகாத் என்பன ஊக்குவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் கடன் வழங்குவது ஊக்குவிக்கப்பட வேண்டும். கடனைத் திருப்பித் தர முடியாத கஷ்ட நிலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வட்டி அழிக்கப்பட்டால் அது அனைவருக்கும் நலமாக அமையும். எனவேதான் வட்டியைத் தடை செய்வதற்கு முன்புள்ள வசனங்கள் தான தர்மங்களை ஊக்குவிக்கின்றன. வட்டியைத் தடுத்ததன் பின்னுள்ள வசனங்கள் கடன் பற்றிப் பேசுகின்றன.
கடனுக்கு பெண்ணின் சாட்சியம்:

‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும். மேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்….” (2:282)
கடன் வழங்கும் போது இரண்டு ஆண்களை சாட்சியாக வைக்குமாறும் இல்லாத போது ஒரு ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சியாக ஆக்கும்படியும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த சட்டத்தை வைத்து இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை, அவமதித்துள்ளது என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
இந்த வசனம் பெண்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக அருளப்பட்ட வசனம் அன்று. கடன் கொடுக்கல் வாங்கல் பற்றிப் பேசும் குர்ஆனில் உள்ள மிகப்பெரும் வசனமே இதுதான். இதனை ‘ஆயதுத்தைன்” கடன் பற்றிய வசனம் என்று கூறுவார்கள்.
இஸ்லாம் பல விடயங்களில் ஆண்களையும் பெண்களையும் சமப்படுத்திப் பேசுகின்றது.
‘நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர். தீமையை விட்டும் தடுக்கின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.”

‘நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுவனச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சுவனச் சோலைகளில் தூய்மையான வாழ்விடங்களையும் (அல்லாஹ் வாக்களித்துள்ளான். இவையனைத்தையும் விட) அல்லாஹ்விடமிருந்துள்ள பொருத்தமே மிகப் பெரியதாகும். இதுவே மகத்தான வெற்றியுமாகும்.” (9:71,72)
‘இதை நீங்கள் செவியேற்ற போது நம்பிக் கையாளர்களான ஆண்களும், பெண்களும் தங்களைக் குறித்து நல்லதை எண்ணி, ‘இது தெளிவான அவதூறே” என்று கூறியிருக்கக் கூடாதா?” (24:12)
‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர் களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரும் ஆண்களும், நினைவு கூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்செய்து வைத்துள்ளான்.” (33:35)
‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறெவரும் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக! இன்னும், உமது பாவத்திற்காகவும், நம்பிக்கையாளர்களான ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! மேலும், உங்களது செயற் பாட்டையும் உங்களது தங்குமிடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.” (47:19)
‘உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்கு அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருளை உம்மீது பூரணப்படுத்துவதற்காகவும், நேரான பாதையில் உம்மைச் செலுத்துவதற்காகவும், பெரும் உதவியை அல்லாஹ் உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை வழங்கினான்.)” (48:3)
‘நம்பிக்கையாளர்களான ஆண்களையும் பெண்களையும் நீர் காணும் நாளில், அவர்களது ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப் புறமாகவும் விரைந்து கொண்டிருக்கும். இன்றைய நாளின் உங்களுக்கான நன்மாராயம் சுவனச் சோலை களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.” (57:12)

ஆன்மீகத்திலும் குற்றவியல் சட்டங்களிலும் பெண்ணையும் ஆணையும் இஸ்லாம் சமமாகப் பார்க்கின்றது. தாய்மை என்று வந்து விட்டால் பெண்ணை ஆணை விட உயர்த்திப் பார்க்கின்றது. சாட்சியத்தில் இஸ்லாம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியத்தை சமமாக்குவது ஏன் என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
பல பெண்கள் ஆண்களை விட அதிக நினைவாற்றல் உள்ளவர்களாக உள்ளனர். சில விடயங்களில் ஆண்களையே மிகைக்கும் திறமை உள்ளவர்களாகவும் அவர்கள் உள்ளனர். இதனை நபி(ஸல்) அவர்களே சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். இருப்பினும் ஆணும் பெண்ணும் உருவ அமைப்பில் மட்டுமன்றி குணங்கள், சிந்தனைப் போக்கு, உளப்பாங்கிலும் மாறுபட்டுள்ளனர்.
பெண்களின் சிந்தனையை விட அவர்களது பாசம், ரோசம், கோபம்; போன்ற உணர்வுகள் வலுவானது. குடும்ப சாட்சியம் சொல்லக் கூடிய அளவுக்குப் பெண்களுக்கு அறிவு, நினைவுத் திறன் இருந்தாலும் பாசம், கோபம் போன்ற உணர்வுகள் உள்ளதை உள்ளபடி சொல்ல முடியாமல் தடுக்கலாம். தனக்கு வேண்டிய ஒருவர் பணம் கொடுத்ததைப் பற்றிக் கூறும் போது கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்ததை என் கண்களால் கண்டேன் என்று மிகைப்படுத்திக் கூறலாம். பெண்ணின் இயல்பு இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பெண்கள் நல்லவர்கள் என்றாலும் சில விடயங்களில் நீதிக்குத் தேவையான நடத்தைகள் அவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. இந்தப் போக்கினால்தான் ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொற்குடம்” போன்ற பழமொழிகள் உருவாகின. தனது மகளுக்காக நீதி பேசுபவள், மருமகள் என்றதும் மாறிவிடுவதைக் காணலாம்.
இதே போன்று பெண் அச்சுறுத்தப்பட்டால் அடங்கிப் போகும் இயல்புகள் உள்ளவள். சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படும் போது சாட்சிகள் மாறிவிடலாம். இதனால் யாரோ ஒருவர் பாதிக்கப்படலாம். எனவே, இஸ்லாம் இதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
அடுத்து, பொதுவாகவே யார் எதனுடன் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக உள்ளனரோ அவர்கள் அது விடயத்தில் அதிக ஞாபக சக்தியும் நுணுக்கமான பார்வையும் உடையவர்களாக இருப்பர். பெண்கள் அதிகமாக வீட்டுடன் தொடர்புடையவர்களாவர். ஆண்கள் சமூகத்துடன் தொடர்புடையவர்களாவர். சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம். விதிவிலக்குகளை வைத்து சட்டங்கள் இயற்றப் படுவதில்லை.
கடன் கொடுக்கல்-வாங்கல் என்பது சமூகமயமானதாகும். எனவே, பெண்களுக்கு இதனுடன் சம்பந்தமோ அல்லது நுணுக்கமான பார்வையோ குறைவாகும். இந்த வகையிலும் இஸ்லாம் வேறுபடுத்திப் பார்க்கின்றது எனலாம்.
அடுத்து, பெண் வெட்கப்படும் இயல்புள்ள வளாவாள். தனியாக பல ஆண்களுக்கு முன்னால் வந்து சாட்சியங்கள் சொல்வதில் பல சங்கடங்களைச் சந்திக்கலாம். சாட்சிக்கு கூட இன்னு மொரு பெண் இருப்பது அவளுக்குக் கூடுதல் தெம்பை வழங்கலாம்.
அடுத்து, பெண்களுக்கு மட்டுமே ஒரு அசௌகரியம் உள்ளது. அதுதான் அவள் சந்திக்கும் மாதத்தீட்டுப் பிரச்சினை. சம்பவம் நடக்கும் போதோ அல்லது சாட்சியமளிக்கும் போதோ ஒரு பெண் இந்த நிலையில் இருந்தால் அவளது பேச்சில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். எல்லாப் பெண்களுக்கும் இப்படி இல்லை. என்றாலும் சில பெண்கள் இந்த சந்தர்ப்பத்தில் மனக்கிளர்ச்சி, கோபம், எரிச்சல், வெறுப்பு… போன்ற பல உணர்வுகளுக்கு உள்ளாகின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அடுத்து, சாட்சியத்திற்கு நேர்மை, நாணயம் முக்கியமானதாகும். பெண்களைப் பொருத்தவரையில் திடீரென எடுத்த எடுப்பிலேயே வித்தியாசமாகவும் நினையாப்புறமாக பொய் சொல்வதில் திறமைமிக்கவர்கள்.
முகபாவனையிலோ, பேசும் முறையிலோ எந்த வித்தியாசமும், தடுமாற்றமும் இல்லாமல் பொய்யை உருவாக்கி அதை அடுத்தவர் நம்பும் விதத்தில் சொல்லும் திறமை பெண்களிடம் உள்ளது. ஆண்களை விட அதிக கற்பனை வளமும் அவர்களிடம் உள்ளது. இந்த வகையிலும் அவர்கள் சாட்சியத்திற்குத் தேவையான தகுதியில் சற்றுக் குறைத்து மதிப்பிடப்படுகின்றனர்.
மனிதனைப் படைத்தவன் அல்லாஹ். மனித இயல்புகளையும், உணர்வுகளையும் தெளிவாகத் தெரிந்தவனும் அவனே! பெண்ணின் இயல்புக்கு ஏற்றதாக இந்த சட்டம் அமைந்துள்ளது. இது பெண்ணை இழிவு படுத்துவதாக அமையாது என்பதைக் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
                                                     அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ் நபி தனது சுய முடிவில் சென்றார்.
ஒரு கப்பல் இருந்தது. அதில் மக்கள் நிறைந்திருந்தனர். இவர் போய் அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டார். கப்பல் கடலில் பயணித்தது. இடை நடுவில் கப்பல் அலை மோத ஆரம்பித்தது. இவ்வாறு ஆபத்து வந்ததால் கப்பலில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி யாருடைய பெயர் வருகின்றதோ அவரைக் கடலில் குதிக்கச் சொல்வது அவர்களது மரபாகும். இந்த அடிப்படையில் சீட்டுக் குலுக்கிய போது யூனுஸ் நபியின் பெயர்தான் வந்தது. அவர் கடலில் குதித்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரம்மாண்டமான ஒரு மீன் யூனுஸ் நபியை விழுங்கிக் கொண்டது. யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் சென்றார். தான் சோதிக்கப்படுவதை அறிந்தும் கொண்டார். அவர் மீன் வயிற்றில் இருந்து கொண்டு,
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நான் அநீதமிளைத்தோரில் ஆகிவிட்டேன்! (திருக்குர்ஆன் 21:87) என்று பிரார்த்தித்தார். 
அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். மீன் அவரை கரையில் துப்பியது. அவர் கடற்கரையில் பலவீனமான நிலையில் இருக்கும் போது அல்லாஹ் சுரைக்காய் கொடியை வளரச் செய்து அவருக்கு நிழல் கொடுத்தான்.
யூனுஸ் நபியின் மக்கள் வேதனையின் அடையாளத்தைக் கண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் ஈமானும் தவ்பாவும் அவர்களைப் பாதுகாத்தது. யூனுஸ் நபியும் சோதனையில் இருந்து மீண்டு கொண்டார்.
பொறுமையின் அவசியம், தவ்பா அழிவில் இருந்து பாதுகாக்கும் போன்ற படிப்பினைகளை இச்சம்பவத்தில் இருந்து பெறலாம். யூனுஸ் நபி சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் திருக்குர்ஆனில் 37:139- 148, 68:48-50, 21:87-88 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

                                                                          அஷ்சேஹ் இஸ்மாயில் ஸலபி  

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் நபி ஸ்ல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. 

மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு கத்தினான். தனது சித்தப்பாவை அந்த சடலம் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று குற்றமும் சாட்டினான். இதனால் இரு பிரிவினருக்கும் மத்தியில் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டது. எனவே, இறுதியில் மூஸா நபியிடம் சென்று முறையிடமுன்வந்தனர்.
மூஸா நபியிடம் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. மூஸா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு, “அல்லாஹ் ஒரு மாட்டை அறுக்குமாறு கட்டளையிடுகின்றான்” என்று கூறினார். இதைக் கேட்ட மக்கள் ஆச்சரியப்பட்டனர். கொலையாளியைப் பற்றிக்கேட்டால் மாட்டை அறுக்கச் சொல்கின்றாரே என எண்ணிய அவர்கள், “எங்களைக் கேலி பண்ணுகின்றீர்களா?” என்று நபியை எதிர்த்துக் கேட்டனர்.
“அறிவீனன்தான் அல்லாஹ்வின் பெயரில் பொய்யுரைப்பான். நான் அத்தகைய அறிவீனனாக இருப்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார் மூஸா நபி.
அந்த மக்கள் நபி கூறியதற்குக் கட்டுப்பட்டு மாட்டை அறுத்திருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டனர். “மாடு என்றால் எத்தகைய மாடு” என்று கேட்டனர். அதற்கு, “அது கிழடும் அல்ல கன்றும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட வயதையுடையதாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அதன் பின்னர் என்ன நிறமுடைய மாட்டை அறுக்க வேண்டும் என்று கேட்டனர். பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தக் கூடிய அமைப்பில் உள்ள கருமஞ்சல் நிற மாடு என்று பதில் வந்தது. பின்னரும் அந்த மாட்டைப் பற்றி விசாரித்தனர். அந்த மாடு நிலத்தை உழவோ விவசாயத்திற்கு நீர் இறைக்கவோ பழக்கப்படாத மாடு. குறைகளோ, தழும்புகளோ அற்றதாக இருக்க வேண்டும் என்று மூஸா நபி கூறினார்.
அதன் பின்னர் தான் அத்தகைய மாட்டை அறுக்க முடிவெடுத்தனர். இவ்வளவு வர்ணனைகளும் உள்ள மாட்டைத் தேடி அலைந்தனர். பன்மடங்கு செல்வத்தை கொட்டிக் கொடுத்து அதை வாங்கி அறுத்தனர். அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை எடுத்து இறந்தவரின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அவ்வாறு அடித்ததும் அந்த ஆச்சரியம் நடந்தது. இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவன் தனது சகோதரன் மகன் தான் என கொலையாளியை அடையாளப்படுத்தினார்.
மீண்டும் அவரது உயிர் போய்விட்டது. கொலைகாரன் வசமாக மாட்டிக் கொண்டான். அவனது பண ஆசை அவனுக்கு அழிவைக் கொடுத்தது. அவன் தண்டனை பெற்றான்.
இதன் மூலம் அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான் என்பதை நேரடியாக அவர்கள் கண்ணால் கண்டார்கள். இருப்பினும் அந்த மக்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் இயல்பு உள்ளவர்ககளாக மாறவில்லை.
அதிக ஆசை ஆபத்தானது. என்பதையும் குறுக்கு வழியில் அடைய முயலக் கூடாது. குற்றம் செய்தவன் எவ்வளவு தந்திரம் செய்தாலும் மாட்டிக் கொள்வான். குற்றம் செய்து விட்டு அதை அடுத்தவர் தலையில் போடுவது பெருங்குற்றம். அளவுக்கு மீறிய கேள்விகள் அர்த்தமற்றவை. கொலையாளியைக் கண்டுபிடிக்க இறந்த உடலைப் பிரேத பரிசோனைக்குற்படுத்தலாம். போன்ற பல அம்சங்களை இக்கதை வாயிலாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

                                                                                           அஷ்சேஹ் இஸ்மாயில் ஸலபி 

மிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்பை ஏற்ப்படுத்துவதற்காக அதான் (பாங்கு) கடமையாக்கப்பட்டது. அந்த பாங்கு எப்படி கடமையாக்கப்பட்டது, பாங்கு சொல்பவரின் சிறப்புகள் என்ன? பாங்குடன் சம்பந்தமான ஏனைய செய்திகளை இக் கட்டுரையில் தொடராக படிக்கலாம்.
பாங்கு கடமையாக்கப் பட்ட வரலாறு…
நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். அப்போது மாறி, மாறி பல கருத்துகளை ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் ஒவ்வொரு வக்துக்கும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று நபியவர்கள் அதை வேண்டாம் என்றார்கள்.
மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபியவர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம் என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி) அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது. பின் வரக் கூடிய ஹதீஸ்களில் இவற்றில் சிலவற்றை காணலாம்.
“அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகைக்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( புகாரி 604, முஸ்லிம் 618)
பாங்கிற்கு பதில் கூறல்
பாங்கு சப்தம் கேட்கும் போது சொல்லப்படும் அந்த பாங்கிற்கு செவி தாழ்த்தி முஅத்தின் கூறுவதைப் போல நாமும் சொல்ல வேண்டும் என்பதை நபியவர்கள் பின் வரும் ஹதீஸின் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். “அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். 

பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.

 பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 629)
மேலும் “நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
(முஸ்லிம் 628)
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது பாங்கு சொல்லும் போது பாங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்லி விட்டு, பாங்கு துஆ ஓதும் முன் நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பாங்கு துஆ ஓத வேண்டும்.
பாங்கு துஆ…
பாங்கிற்கான பதிலை நபியவர்கள் சொல்லி தந்த அடிப்படையில் சொல்லி விட்டு, அதன் பிறகு பின் வரும் பாங்கு துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِه الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
“ சொல்வதைக் கேட்ட பின், ‘பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’ என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி 614)
பாங்கின் சிறப்புகள்…
யார் பாங்கு சொல்கிறாரோ அவருக்கு என்ன சிறப்புகள் (நன்மைகள்) கிடைக்கும் என்பதை பின் வரும் நபிமொழிகள் தெளிவுப்படுத்துகின்றன.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 615) 
மேலும்“ அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் ‘நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்’ எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். (புகாரி 609) 

மேலும்“ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள்,மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். (முஸ்லிம் 631)
பாங்கும் ஷைத்தானும்
பாங்கு சப்தத்தைக் கேட்டால் ஷைத்தான் வெகு தொலை தூரத்திற்கு விரண்டோடுகிறான் என்று நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப் பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 636)
                                                
                                                                                           அஷ்ஷேஹ் யூனுஸ் தப்ரீஸ்

சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”   
“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”
“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.”
“அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை புரிந்தார். ‘எனது இரட்சகனே! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ செய்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்வதற்கும் நீ எனக்கு அருள் புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.” (27:16-19)
சுலைமான் நபியுடன் சம்பந்தப்பட்ட இந்த சரித்திரத்தை எறும்பின் கதையாக சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம்.
சுலைமான் நபிக்கு மகத்தான ஆட்சியை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவருக்கு பறவைகள், ஏனைய உயிரினங்களின் மொழியையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்திருந்தான் என்பதை விளக்கலாம்.
அவர் ஒருநாள் தன் படையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு எறும்புக் கூட்ட ஓடையை அவர் அண்மித்தார். அப்போது ஒரு எறும்பு தனது சக எறும்புகளிடம், ‘ஓ எறும்புக் கூட்டமே! நீங்கள் உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவரது படையும் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அறியாமல் அவர்கள் உங்களை மிதித்துவிடப் போகின்றார்கள்’ என்று கூறியது.
இது சுலைமான் நபிக்குக் கேட்டது! புரிந்தது! அவர் சிரித்தார். அல்லாஹ் தந்த மகத்தான ஆட்சி, அறிவுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.
இந்த எறும்புக் கதையூடாக எறும்பின் ஒற்றுமை, உற்சாகம், சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கடமையைச் செய்தல்… என்ற நல்ல பண்புகளை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
இந்த எறும்பு தனது சக எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தி சமூக உணர்வுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கலாம்.
சுலைமான் நபிக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும் வழங்கியும் கூட அவர் ஆணவம் கொண்டவராக இருக்கவில்லை. அந்த ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும், தந்தவன் அல்லாஹ்தான். இது அவன் தந்த அருள் என பணிவுடன் நடந்தார். பக்குவமாக இருந்தார். இதற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் நடந்தார். நாமும் அப்படி நடக்க வேண்டும் என்பதை உணர்த்தலாம்.
                                                                                                          அஷ்சேஹ் இஸ்மாயில் ஸலபி 

ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள்  பார்க்கவில்லையா? 
என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள்.  
முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல் பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். எம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில் வாழ்ந்தனர்.
அந்த மக்களுக்கு போதனை செய்வதற்கு அல்லாஹ் “ஸாலிஹ்” என்றொரு நபியை அனுப்பினான். அவர் அந்த மக்களுக்குப் போதனை செய்தார். ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அந்த மக்கள் அதை ஏற்கவில்லை.
ஸாலிஹ் நபியை அந்த சமூகத்தில் உள்ள பலவீனமான மக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். இதை வைத்து ஆணவக்காரக் கூட்டம் சத்தியத்தை எதிர்த்தது. “நீ ஒரு நபியென்பதற்கு ஒரு அத்தாட்சி வேண்டும்” என்று கேட்டனர். “அதிசயமாக ஒரு கற்பாறையில் இருந்து ஒரு ஒட்டகம் வர வேண்டும்” என்று கேட்டனர்.
ஸாலிஹ் நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் அதிசயமான ஒரு ஒட்டகம் வந்தது. இருந்தும் அந்த மக்கள் சத்தியத்தை ஏற்கவில்லை. ஸாலிஹ் நபி “அந்த மக்களைப் பார்த்து இது அல்லாஹ்வின் ஒட்டகம் இதற்கு எந்தத் தீங்கும் செய்துவிடாதீர்கள். இந்த ஊரின் கிணற்றில் அதை நீரருந்தவிடுங்கள். பூமியில் அது மேய்ந்து திரியட்டும். அதற்கு தீங்கு செய்தால் அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று எச்சரித்தார்கள்.
இருந்தும் அந்த ஊரில் உள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்துவிட்டனர். அது மட்டுமன்றி நீ எச்சரிக்கை செய்த வேதனையைக் கொண்டு வா பார்க்கலாம் என்றும் ஸாலிஹ் நபிக்கு சவால் விட்டனர்.
ஸாலிஹ் நபி, ‘மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு. அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்’ என்று கூறினார்கள். சமூத் கூட்டம் தமது கற்குகை வீடுகள் பாதுகாக்கும் என்று நம்பினர்.
அந்த மூன்று நாட்களும் நகர்ந்தன. மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர். அந்த மக்கள் அழிக்கப்பட்ட பிரதேசம் மதாயின் ஸாலிஹ் என்ற பெயரில் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.
                                                                                    அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget