கப்ரின் மீது மரம், கொடிகளை நாட்டலாமா.?

ஒரு வீட்டில் ஜனாஸா விழுந்து விட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, அடக்கம் செய்கின்ற வரை பலவிதமான மார்க்கத்திற்கு முரண்பாடான செயல்பாடுகளை காண்கிறோம். எல்லா அமல்களுக்கும் ஒரு முன்னோடியாக நபியவர்களை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அந்த துாதரின் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நபியவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்!
அந்தத் துாதர் அவர்கள் ஒவ்வொரு அமல்களையும் எப்படி செய்தார்கள் என்பதை விளங்கி விட்டால் எந்தப் பிரச்சினைகளும் நமக்கு மத்தியில் வராது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் நபியவர்கள் ஜனாஸாக்களை அடக்கி விட்டு அதற்கு மேல் செடி, கொடிகளை, பூ மரங்களை நட்டினார்களா என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.
நபியவர்கள் காலத்தில் யுத்த களத்திலும், ஊரிலும், ஊருக்கு வெளியிலும் ஏனைய இடங்களிலும் பல ஜனாஸாக்களை அடக்கியுள்ளார்கள், ஏதாவது ஒரு ஜனாஸாவில் சரி கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டினார்களா என்றால் எந்த ஆதாரமும் கிடையாது.
ஆனால் இன்று அதிகமான மையவாடிகளில் ஜனாஸாவை அடக்கிய பின் செடி, கொடிகளையும், பூ மரங்களையும் நாட்டி வைக்கிறார்கள். அது மட்டுமல்ல மீஸான் பலகையில் மரணித்தவரின் பெயர் தேதி போன்றவற்றை அச்சிட்டு வைக்கிறார்கள். வாகனங்களுக்கு நம்பர் பிளேட் வைப்பதைப் போல அடக்கப்பட்டவரின் கப்ரின் மீது வைக்கிறார்கள்?
கப்ரின் மீது செடி, கொடிகளை வைப்பதற்கு சில காரணங்களைக் கூறுகிறார்கள் அவைகளை முதலில் காண்போம்.
மரங்கள், செடி, கொடிகள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன தஸ்பீஹ் செய்யும் இடங்களுக்கு மலக்குமார்கள் வருவார்கள். எனவே அடக்கப்பட்ட கப்ரின் மீது செடி, கொடிகளை நாட்டினால் அடங்கப்பட்டவருக்கு வேதனை வழங்கப் படமாட்டாது என்ற நம்பிக்கையில் கப்ரின் மீது இப்படி செடி, கொடிகளை நாட்டுகிறார்கள். கப்ரின் மீது செடி கொடிகளை நாட்டினால் அடங்கப்பட்டவருக்கு வேதனை கொடுக்கப்பட மாட்டாது என்று நபியவர்கள் தான் சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஸஹீஹான எந்த செய்தியும் இல்லை.
இந்த மார்க்கம் பூரணத்துவம் படுத்தப்பட்ட மார்க்கம் இதில் மேலதிகமாக சேர்ப்பதற்கோ, அல்லது குறைப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது, என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கின்றது.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33 -36 )
நபியவர்கள் காட்டித்தராத ஒன்றை நாம் மார்க்கமாக செய்வோமேயானால் அவர்கள் வழிகேடர்கள்.என்பதை மேற்சென்ற குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
அதே நேரத்தில் அல்லாஹ்வையும், நபியவர்களையும் இந்த உலகத்தில் பின்பற்றாதவர்கள் மறுமை நாளில் கடினமாக தண்டிக்கப் படுவார்கள். என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கின்றது.
“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). (33 -66…)
எனவே தான் ஒரு அமலை செய்வதற்கு முன் அந்த அமலை நபியவர்கள் எப்படி செய்துள்ளார்கள். என்பதை கவனித்து நாமும் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மறுமை நாளில் கைசேதப்பட வேண்டி வரும்.
கப்ரின் மீது செடி, கொடிகளை நாட்டுவதற்கு பின் வரும் மற்றொரு ஆதாரத்தைக் காட்டுகிறார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இரு கப்ருகளைக் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, ‘இவ்விரு வரும் வேதனை செய்யப்படுகிறார்கள்: ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர்’ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நாட்டினார்கள் ‘இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள். ( புகாரி 1378 )
இந்த ஹதீஸின் மூலம் ஒவ்வொரு ஜனாஸாவையும் அடக்கி விட்டு அதன் மீது ஏதாவது செடி, கொடிகளை நாட்ட வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. செடி, கொடிகளை நாட்டுவது சுன்னத் என்றிருக்மேயானால் அதை நபியவர்களும், ஸஹாபாக்களும் எல்லா கப்ரின் மீதும் நாட்டிருப்பார்கள்.  
மேற்ச் சென்ற ஹதீஸை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள், மக்களுக்கு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக முஃஜிஸா என்ற அற்புதத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் கப்ருக்குள் நடக்கும் காட்சியை எடுத்துக் காட்டுகிறான். இரண்டாவது ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இது காயாமல் இருக்கும் வரை வேதனை குறைக்கப்படக் கூடும் என்கிறார்கள். ஈரமான மட்டை வளராது, அடுத்தது வேதனை குறையக் கூடும் என்கிறார்கள். ஈரமான மட்டையை நாட்டினால் வேதனை குறையும் என்று உறுதியாக கூறவில்லை. மேலும் நபியவர்களின் அற்புதத்தினால் தான் அப்படிக் கூறினார்கள்.
நீங்கள் மரம், கொடி நாட்டுவதாக இருந்தால் ஒன்று அந்த கபூரில் அடக்கம் செய்யபடடவர்க்கு வேதனை நடக்குது என்று உங்களுக்கு மறைவானவற்றை அறிய கூடியவராக இருக்கணும் அல்லது அல்லாஹ்விடம் இருந்து வகி வந்து இருக்கனும்  என் இஸ்லாமிய உறவுகளை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.
எனவே கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது சுன்னத் என்றோ, அல்லது பாவங்கள் மன்னிக்கப் படும் என்பதோ நபியவர்கள் கூறாத விடயங்களாகும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
                                                                                   மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget