தாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்குமா.?

குழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தையின் சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள். 

ஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களால் எப்படி சொல்ல முடிந்தது. விஞ்ஞானம் என்றால் என்னவென்று தெரியாத அந்த காலத்தில் விஞ்ஞானம் சம்பந்தமான செய்தியை நபியவர்கள் கூறினார்கள் என்றால், முஹம்மதை தனது தூதராக அனுப்பிய அல்லாஹ் சொல்லிக் கொடுத்த செய்தியை மக்கள் மன்றத்தில் முன் வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

எனவே அல்லாஹ் உண்மையானவன், அவனால் அனுப்பப்பட்ட தூதரான முஹம்மது நபி உண்மையானவர், முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை வேதமான இந்த குர்ஆன் உண்மையானது என்பதை இந்த தகவல்கள் உண்மைப் படுத்துகிறது என்பதை உலக மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி இல்லறத்தில் இணையும் போது மனைவியுடைய சினை முட்டை கணவனுடைய விந்தணுவை விட முந்திக் கொண்டு கர்ப்ப அறையில் சென்று விட்டால், பிறக்கும் குழந்தை தாயினுடைய, அல்லது மாமாமார்களின் முகச் சாயலில் பிறக்கும். மனைவியுடைய சினை முட்டையை விட, கணவனுடைய விந்தணு முந்திக் கொண்டு மனைவியின் கர்ப்ப அறைக்குள் சென்று விட்டால், தந்தை அல்லது சாச்சாமார்களின் முகச் சாயலில் குழந்தை பிறக்கும். என்ற ஆச்சரியமான செய்திகளையும், அதே போல் ஒரு குழந்தை ஆண் குழந்தையாக, அல்லது பெண் குழந்தையாக பிறக்கும் அமைப்பையும் பின் வரும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். 

(இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விருவரின் நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம் 521)

மேலும் “ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

அப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு! (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது! பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள்.(முஸ்லிம் 524)

மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க! என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். 

நான்,அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே)? என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா? என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்! என்றார்கள்.

அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று கேட்டார். 

அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.  

பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தையின் பிறப்பு குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.

அந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.(முஸ்லிம் 525)

                                                              மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget