மௌலிதைத் தவிர்ப்போம்.! குர்ஆனை ஓதுவோம்.!

மாநபி மீது மௌலிது ஓதுவோம்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் மீது மௌலிது ஓதுவதற்கு குர்ஆனிலும் நபிவழியிலும் சான்றுகள் உள்ளன என்று சில செய்திகளை கூறியுள்ளனர். இந்த செய்திகளைப் பார்த்து பொதுமக்களாகிய அப்பாவி முஸ்லிம்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதனாலும் நன்மையெனக் கருதி இந்த மாபெரும் தீமையைச் செய்து நாளை மறுமையில் நரகப்படுகுழியில் போய்விழுந்து விடக் கூடாது என்ற அக்கறையினாலும் இந்த மறுப்பு பிரசுரம் வெளியிடப்படுகிறது.
திசை திருப்பும் முயற்சி          
அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களைக் காட்டிலும் புகழ்தலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள் என்பதிலும் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதனால் அதிகமான நன்மை கிடைக்கும் என்பதிலும் அவர்களின் மாண்புகளைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பாராட்டிப் பேசுகிறான் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மாற்றுக் கருத்துள்ளவர் முஸ்லிமாகவும் இருக்கமுடியாது.
இங்கே கேள்வி என்னவெனில், ‘யாரோ முகவரி இல்லாதவர்கள் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ள கதை கப்ஸாக்கள் அடங்கிய மௌலிது பாடலை நபி (ஸல்) அவர்கள் பெயரில் குறிப்பாக அவர்களின் பிறந்த நாளில் பாடுவற்கு ஆதாரமுள்ளதா?’ என்பதேயாகும்.
இந்த கேள்விக்கு அந்த பிரசுரத்தில் எந்த பதிலும் தராமல் அண்ணலாரை அல்லாஹ்வும் சஹாபா பெருமக்களும் புகழ்ந்துரைத்துள்ள எவருக்கும் மாற்றுக் கருத்தில்லாத செய்தியை ஆரம்பம் முதல் கடைசி வரை எழுதித்தள்ளியுள்ளனர். எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ள ஒரு செய்தியை பிரசுரம் வெளியிட்டு வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று சிந்திக்கும்போது இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம் அந்த செய்திகளை தங்களின் நச்சுக்கருத்துக்கு ஆதரவாக – ஆதாரமாக திசை திருப்ப முயற்சித்துள்ளது தெரிய வருகிறது.
சில சஹாபாக்கள் போரக்களம், களப்பணி, எதிரிகளோடு மோதுதல் நபியின் மீதுள்ள ஈர்ப்பு போன்ற தருணங்களில் (நபி ஸல் அவர்களின் பிறந்த நாளில் அல்ல) இஸ்லாத்தையும் அந்த இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய நபி (ஸல்) அவர்களையும் கவிதைகளால் புகழ்ந்து பாடியுள்ளனர். சில நேரங்களில் எதிரிகளை இகழ்ந்து பாடுவதற்கு கவித்திறன் மிக்க ஹஸ்ஸான் பின் தாபித் போன்ற நபித் தோழர்களை நபி (ஸல்) அவர்களே பணித்தும் உள்ளார்கள்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தையும் இறைத் தூதரையும் புகழ்ந்து பாடியதை மௌலிது ஓதினார் என்று குறிப்பிடுவது பொருள் மோசடியாகும், ஏனெனில் இன்று சில முஸ்லிம்களிடையே வழக்கத்தில் இருந்து வரும் மௌலிது மிகப் பிந்திய காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அது நபி (ஸல்) அவர்கள் காலத்திலோ சஹாபாக்கள் காலத்திலோ அவர்களை தொடர்ந்து வந்த உமைய்யாக்கள் மற்றும் அப்பாஸியர்கள் ஆட்சிகாலத்திலோ குறிப்பாக சுன்னத் வல் ஜமாத்தினர் பின் பற்றி வரும் நான்கு மத்ஹபைச் சார்ந்த மரியாதைக்குரிய இமாம்கள் காலத்திலோ இருந்ததில்லை.
உண்மை இவ்வாறிருக்க, மிக பிந்திய காலத்தில் உருவாக்கப்பட்ட மௌலிது எனும் வழக்குச் சொல்லை சஹாபாப் பெருமக்களுடன் சம்பந்தப்படுத்தி,
அப்துல்லாஹ் பின் ரவாஹா ஓதிய மௌலிது
ஹஸ்ஸான் பின் தாபித் ஓதிய மௌலிது
கஅப் பின் சுஹைர் ஓதிய மௌலிது
சஹாபாப் பெருமக்கள் ஓதிய மௌலிது
என்று எழுதியிருப்பது சஹாபாக்களின் மீது சுமத்தப்படும் மாபெரும் அபாண்டமாகும் இந்த அவதூறு செயலைச் செய்தமைக்காக சம்மந்தப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும் .
ஸஹாபாக்கள் நபியை புகழ்ந்து பாடியதை இவர்கள் மௌலிது என்று கூறினால் அவர்களின் காலத்தில் விரலால் எண்ணும் பழக்கத்தை இன்றைய ஜோதிடக்கலையின் ஒரு பகுதியாக இருக்கும் நியூமராலஜி என்று சொல்வார்களா? அன்றைக்கு சிலரின் பெயர்களை நபி (ஸல்) அவர்கள் மாற்றி அமைத்ததை அதே ஜோதிடக்கலையின் ஒரு பகுதியாக இருக்கும் நேமியாலஜி என்று சொல்வார்களா?
புதுமையான விளக்கம்
‘மௌலிது என்பது இஸ்லாமியர்களின் வழக்கில் இறைதூதர் (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புளை கவி நடையில் புகழ்வதற்கு மௌலிது என்று கூறப்படும்’ என பிரசுரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விளக்கம் யாரால் எப்போது எங்கே தரப்பட்டது?
‘இஸ்லாமியர்கள் வழக்கில்….’ என்றால் எந்த காலத்து இஸ்லாமியர்கள்? சமகாலத்தல் உள்ளவர்களா ? அல்லது சஹாபாக்கள் காலத்தில் உள்ளவர்களா?
நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்குத்தான் மௌலிது என்றால் ஷாஹுல் ஹமீது, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றவர்களையெல்லாம் புகழ்வதற்கு என்னவென்று சொல்வார்களாம்?
அதுவெல்லாம் மௌலிது இல்லை என்று சொல்வார்களா?
எனவே மேற்சொன்ன இவர்களது விளக்கம் மனோயிச்சையின் அடிப்படையில் சொல்லப்பட்ட விளக்கமே அல்லாமல் வேறில்லை.
‘நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் புனிதப் போர் செய்வோமென முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் நாங்கள’; என்று ஸஹாபாக்கள் பாடியதை சஹாபாப் பெருமக்கள் ஓதிய மௌலிது என குறிப்பிட்டுள்ள இவர்கள் வேண்டுமென்றே அதற்கு முந்திய வரிகளை இருட்டடிப்பு செய்துள்ளனர்.
இதோ நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் அகழ் யுத்ததத்தின்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறிய அந்த வரிகள்:
‘அல்லாஹ்வே வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்! எனவே நீ அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்களின் பிழை பொறுத்தருள்வாயாக !’
இந்த வரிகளின் பிந்திய வரிகளை சஹாபாக்கள் ஓதிய மௌலிது என்று சொன்னால் இந்த வரிகள் யார் யார் மீது ஓதிய மௌலிது?
நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்கள் பெயரில் ஓதிய மௌலிது என்று கூறப் போகிறார்களா?
ஒரு வாதத்திற்காக இவர்களின் கருத்துப்படி சஹாபாக்களின் புகழ்ச்சியை நபி (ஸல்)அவர்கள் பெயரில் ஓதிய மௌலிதுக்கு சான்றாக எடுத்துக் கொண்டாலும் இவர்கள் ஆதாரமாக காட்டும் பாடல்களைத்தான் இவர்கள் மௌலிது சபைகளில் ஓதுகிறார்களா?
மேலும் ஷாஹுல் ஹமீது, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றோர் பெயரால் ஓதப்படும் மௌலிதுக்கு இவர்கள் எதை சான்றாக காண்பிப்பார்கள்?
அதற்கு எங்கே ஆதாரமுள்ளது?
அப்படியானால் மற்றவர்கள் பெயரில் ஓதப்படும் மௌலிதுகளையெல்லாம் இவர்கள் விட்டுவிடுவதற்குத் தயாரா?
பிறந்த நாள் கொண்டாடலாமா ?
பிறப்பும் இறப்பும் இறைவனால் படைக்கப்பட்டிருப்பது இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்கையை மனிதன் எவ்வாறு அமைத்துக் கொள்கிறான் என்பதை சோதிப்பதற்காகத்தான். (பார்க்க: அல் குர்ஆன் 67:2 )
இதைத்தவிர பிறப்பிற்கோ இறப்பிற்கோ இஸ்லாத்தில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை அவ்வாறு முக்கியத்துவம் இருந்திருக்குமானால் தனக்கு முன்சென்ற நபிமார்களின் பிறந்ந நாளை நபி (ஸல்) அவர்களும் நபியின் பிறந்த நாளை நபித்தோழர்களும் ஆண்டு தோறும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் ஆனால் அப்படி ஒரு செய்தி ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் காணப்படவில்லை. ஆண்டு தோறும் பிறந்த நாள் காண்பதற்கு அரசியல் வாதிகளைப்போல் அண்ணலார் ஒன்றும் மலிவானவரல்லர் அவர்களுக்கு தனி மரயாதையை எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான்
நபிமார்களின் பிறப்பு பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக கூறி தங்களின் கருத்துக்கு ஆதாரம் தேட முனைந்துள்ளனர்.
பிறப்பு மட்டுமல்லாது வளர்ப்பு இறப்பும் கூடத்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது அதற்காக அவற்றின் பெயரால் விழா கொண்டாட வேண்டுமென்பது அதன் பொருளாகுமா?
மூஸா நபியின் பால் குடியைப் பற்றி குர்ஆனில் பேசப்பட்டுள்ளதால் பால் குடி விழா நடத்த வேண்டுமென்று யாராவது பொருள் கொள்வார்களா?
பிறந்த நாள் விழாக்கள் யூத கிருத்தவ மாற்றுமதக் கலாச்சாரத்தின் தாக்கமே அன்றி வேறில்லை.
வரம்பு மீறும் மௌலிது பாடல்கள்
இஸ்லாத்தையும் அண்ணலாரையும் சஹாபாக்கள் புகழ்ந்து பாடிய பாடல்கள் அர்த்தமுள்ளவை, வரம்பு மீறாதவை. ஆனால் அண்ணலாரை புகழ்கிறோம் என்ற பெயரில் இன்று இவர்கள் பாடும் பாடல்கள் அர்த்தமற்றவை, வரம்பு மீறியவை, மேலும் பொய்யானவைகளாகும். இறைத்துதரை இறைவனின் இடத்திற்கு உயர்த்தும் அளவிற்கு கொடுமையானவை.
இடமின்மையால் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகிறோம்:
‘அந்த ஹக்கன் கியாசுல் கல்கி அஜ்மயிஹிம்’
பொருள் : மெய்யாகவே படைப்புகள் அனைத்திற்கும் தாங்கள்தான் காவலர்
இந்த விஷவரி பின்வரும் குர்ஆன் வசனத்தோடு நேரடியாக மோதுவதைப்பாருங்கள்:
‘வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது என்பதையும் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவுபவனோ இல்லையென்பதையும் நீர் அறிய வில்லையா? ‘ (2:107)
அல்லாஹ்தான் மெய்க்காவலன் என்று குர்ஆன் சொல்கிறது, இல்லை…! அண்ணலார்தான் மெய்க்காவலன் என்று மௌலிது சொல்கிறது இதில் எதை இவர்கள் ஏற்கப்போகிறார்கள்?
குர்ஆன் ஹதீஸுடன் மௌலிது வரிகள் எந்தளவுக்கு மோதுகின்றன என்பதை தனி வெளியீடாகவே பிரசுரிக்கலாம்.
தன்னை வரம்பு கடந்து புகழ்வதை நபி (ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
‘மர்யமின் குமாரர் ஈஸாவை கிருத்தவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள்! நான் அல்லாஹ்வின் அடியார ; ஆவேன், எனவே என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறுங்கள் (நூல் புகாரி 3277)
அரபு நாட்டுப் பெண்கள் அண்ணலாரைப்பற்றி,
‘எங்கள் மத்தியில் ஒரு நபியிருக்கிறார் அவர் நாளை நடப்பதை அறிவார் என புகழ்ந்து பாடிய போது ‘அவ்வாறு கூறாதீர்கள் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்த சம்பவம் புகாரி எண் 3798 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்ரஸாக்களின் மார்க்கத் தீர்ப்பு
சுன்னத் வல் ஜமாத்தினர் மத்ரஸாக்களின் தாய்க் கல்லூரியாகக் கருதப்படும் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி, மௌலிது ஓதுவது கூடாது என்று அதன் ஃபத்வா தொகுப்பில் வெளியிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதைப்பபோல தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக்கல்லூரியும் இவ்வாறே ஃபத்வா வழங்கியுள்ளது.
மௌலிது ஓதுவதன் நோக்கம்
முல்லாக்களும் ஒரு சில மௌலவிகளும் மௌலிதை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதற்குக் காரணம், தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வஞ்சகம் வந்து விடக்கூடாது என்பதேயாகும். இவர்கள் யாரும் தங்களின் சொந்த வீடுகளில் இதை ஓதுவதில்லை, ஏனெனில் வருமானம் கிடைக்காது.
குர்ஆன் ஓதுவோம்
எனவே மௌலிது ஒதுவதினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து நரகப்படுகுழியில் தள்ளுவதற்கு காரணமான அதை விட்டும் முற்றிலுமாக விலகி ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன குர்ஆனை அதிகமதிகம் ஓதியுணர்ந்து சொர்க்கம் செல்வோமாக!
அண்ணல் நபியின் அடிச்சுவற்றை அடி பிறழாமல் பின்பற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்பதை விளங்கி செயல்படுவோமாக! ஆமீன்.
                                                                                                   மெளலவி S. சையத் அலி ஃபைஸி


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget