மனித குலம் அறிய வேண்டிய "சோதனை எனும் அல்லாஹ்வின் நியதி

அடியார்களுக்குச் சோதனைகளை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் வழிமுறைகளில் ஒன்றாகும். காலங்கள் மாறுபடுவதாலோ, இடங்கள் வேறுபடுவதாலோ அல்லாஹ்வின் வழிமுறைகள் மாறுபடுவதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள். (அல்குர்ஆன் 33:62)

அல்லாஹ் அடியார்களுக்கு ஏற்படுத்தும் சோதனைகளை பல வகைகளாக ஆக்கியுள்ளான்.
01. பொதுவான சோதனை
இந்தச் சோதனை மனித குலத்தை முழுமையாகப் பீடிக்கும் சோதனை. மனித குலத்தில் யாரும் இச்சோதனையிலிருந்து விடுதலை பெறமுடியாது. அதுதான் "மனித குலத்தை ஓரிறைக் கொள்கைவாதி, இறைநிராகரிப்பாளன் எனப் பிரிக்கும் அல்லாஹ்வின் உயர்ந்த சோதனை" இப்பூமியில் வசிக்கும் ஓர் அடியானுக்கு இரண்டு தேர்வுகளே வழங்கப்பட்டுள்ளன‌. ஒன்று, அவன் தவ்ஹீதை ஒப்புக் கொண்ட ஓரிறைக் கொள்கைவாதியாக இருக்க வேண்டும். அல்லது தவ்ஹீதை மறுத்த இறைநிராகரிப்பாளனாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத‌ மூன்றாவது ஒரு தேர்வு எந்த மனிதனுக்கும் வழங்கப்படவில்லை.

நாளை மறுமை நாளில் அடியார்கள் முஸ்லிம்களாக, அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைக்காத‌ ஓரிறைக் கொள்கைவாதிகளாக அல்லாஹ்வைச் சந்திப்பார்கள். அல்லது குப்பார்களாக, அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக, அல்லாஹ்வை மறுத்தவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67:02)

பிரிதொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:07)

மனோ இச்சைகளிலும், சுக போகங்களிலும் மூழ்கிப் போயுள்ள இறைநிராகரிப்பாளர்களிலிருந்து உண்மையான முஸ்லிம்களைப் பிரித்தெடுக்கவே அல்லாஹ் வாழ்வையும், சாவையும் சோதனையாக ஆக்கினான். அல்லாஹ் கூறுகிறான்: அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 11:07)

02. முஸ்லிம்களை மாத்திரம் பீடிக்கும் சோதனை
இந்தச் சோதனை "நானும் முஸ்லிம்தான்" எனச் சொல்வோருக்கும், உண்மையான முஸ்லிமுக்குமிடையில் அல்லாஹ் ஏற்படுத்திய சோதனையாகும். இந்தச் சோதனையைக் கொண்டுதான் அல்லாஹ் உண்மையான முஸ்லிமையும், இஸ்லாத்தை உதட்டளவில் சொல்லிக் கொண்டு உள்ளத்தில் வெறுக்கும் (முனாபிக்) நயவஞ்சனையும் அடையாளம் காணுகிறான்.

இந்தச் சோதனை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு வடிவத்தில் ஏற்படும். சில பொழுதுகளில் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் ஒரே வடிவில் ஏற்படும். சில பொழுதுகளில் ஒரு ஊரில் வாழும் முஸ்லிம்களில் ஒரு குழுவினருக்கு மாத்திரம் கூட இந்தச் சோதனை ஏற்படும். இதன் வடிவங்கள் பல உள்ளன. விரிவாக பின்னர் நோக்குவோம் இன்ஷாஅல்லாஹ்.

03. முஃமின்களான இறைவிசுவாசிகளை மாத்திரம் பீடிக்கும் சோதனை
ஈமான் எனும் நம்பிக்கையின் நிபந்தனைகளான அல்லாஹ்வை, வானவர்களை, வேதங்களை, தூதர்களை, மறுமை நாளை, களா கத்ர் எனும் விதியை முழுமையாக உண்மைப்படுத்தி, ஈமானின் தரத்தை அடைந்து கொண்ட முஸ்லிம்களில் ஒரு குழுவினரையே நாம் முஃமின்கள் என்றழைக்கிறோம்.

மேற்குறித்த ஆறு அம்சங்களை ஒரு முஸ்லிம் நம்பினாலும் பெரும்பாலும் அவன் சோதனைக்குள்ளாக்கப்படுவது களா கத்ர் எனும் விதியை நம்பும் விடயத்தில் தான் என்றால் மிகையில்லை. ஏனெனில் நாம் மறைவான விடயங்களை அறியாத பலவீனமான படைப்பாக இருக்கிறோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு குறைவான அறிவே! ஆதலால் அல்லாஹ்வின் விதியையும், தீர்ப்பையும் நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ஈமான் கொண்டதாக வாதிடுவோரில் உண்மையான முஃமின்களைப் பிரித்தெடுக்கவே அல்லாஹ், களா கத்ர் உட்பட மறைவான விடயங்களை ஈமான் கொள்ளும் நியதியை முஸ்லிம்களுக்குச் சோதனையாக ஆக்கினான். அல்லாஹ் ஏற்படுத்திய இந்தச் சோதனையில் உண்மையாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:11)

அல்லாஹ் கூறுகிறான்: ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (இறைவன்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 33:08)

உண்மையாளர்கள் கூட சோதிக்கப்பட்ட‌ பின்னரும் அல்லாஹ் கேள்வி கேட்டு விசாரிப்பான் என்றால் "இறை விசுவாச சோதனையை" நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள்!
ஒரு அடியான் அவனுடைய மார்க்க உணர்வு, நம்பிக்கை, மார்க்க நடத்தைக்கு ஏற்பவே சோதனைகளைச் சந்திப்பான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் அவனது மார்க்க அளவுக்கு ஏற்பவே சோதனைக்குள்ளாக்கப்படுகிறான். நூல்: முஸ்னத் அஹ்மத் 1555

ஒரு அடியான் ஷஹாதத்துடைய இரு வார்த்தைகளான கலிமாவை எப்போது மொழிகின்றானோ அப்போது அவன் முஸ்லிமாக மாறிவிடுவான். ஆனால் ஈமான் என்பது வெரும் வார்த்தை மட்டுமல்ல. அல்லாஹ்வை உறுதியாக நம்புவதும், மறைவான அம்சங்களை நம்புவதும், உடலுறுப்புக்களால் அதைச் செயல்படுத்துவதுமே ஈமான் என அழைக்கப்படுகிறது. இஸ்லாத்திற்கு ஈமான் நிபந்தனையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஈமானுக்கு இஸ்லாம் நிபந்தனையாகச் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம் பூர்த்தியானது எனச் சொன்னால் ஈமான் தரத்தில் உயர்ந்தது எனக் கூறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்: "நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் "நாங்கள் வழிபட்டோம்" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 49:14)

மேற்குறித்த வசனத்தின்படி "வெளிப்படையான அம்சங்களைக் கொண்டது இஸ்லாம் என்றும், உள்ளத்தில் வேரூண்றி, நாவினால் மொழிந்து, செயற்பாடுகள் மூலம் நிறூபண‌மாகுவது ஈமான்" என்றும் இலகுவாக நாம் முடிவு செய்யலாம். முஃமின்களை அல்லாஹ் விஷேடமாகச் சோதிப்பான். அதுவும் கடுமையான முறையில் அவன் சோதிப்பான்.

இவ்வாறு அல்லாஹ் சத்திய சோதனைக்கு அவர்களை உள்ளாக்குவதின் நோக்கம் அவர்களை அவன் அதிகதிகம் நேசிப்பதுதான். மனித குலத்திற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அதிக சோதனைகளுள்ளாகி உள்ளார்கள் என்றால் "அல்லாஹ் சோதிக்கப்படும் மக்களை விரும்புகிறான்" என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதனை அதிகமான மனிதர்கள் அறிந்து கொள்வதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "மனிதர்களில் அதிக சோதனையைச் சந்தித்தவர்கள் யார்?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "இறைத்தூதர்கள் பின்னர் அவர்களைப் போன்றோர். பின்னர் அவர்களைப் போன்றோர். ஒரு மனிதன் அவனது மார்க்க அளவுக்கேற்பவே சோதிக்கப்படுவான். அவனது மார்க்கம் நேர்மையாக இருந்தால் சோதனை கடுமையாக இருக்கும். அவனது மார்க்க உணர்வில் மென்போக்கு இருந்தால் அவனது மார்க்க அளவுக்கேற்பவே அவன் சோதிக்கப்படுவான்" என பதிலளித்தார்கள். நூல்: ஸுனனுத் திர்மிதி 2398

நபிமார்களும், ரஸூல்மார்களும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான படைப்பினங்களாகும். அவர்களையே அல்லாஹ் சோதிக்கும் போது ஓரிறைக் கொள்கைவாதிகளான நாமெல்லாம் எம்மாத்திரம்? நபிமார்களையும். இறைவிசுவாசிகளையும் அல்லாஹ் கடுமையாக சோதிப்பதன் மூலம் தீங்கை அவன் நாடவில்லை.

சோதனைகளை ஏற்படுத்துவன் மூலம் அவன் பாவ மன்னிப்பையும், அந்தஸ்த்துக்களை உயர்த்துவதையுமே நாடுகிறான். சோதனைகளின் போது நெறி பிறழ்ந்து விடாமல் உறுதியாக இருந்தமைக்காக "அல்லாஹ்வின் திருப் பொருத்தம், உயர்ந்த சுவர்க்கம், மகத்தான வெற்றி" போன்ற‌ வெகுமதிகளையும் அவன் வழங்குகிறான்.

                                                      மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget