ஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.!

மறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன்.

“ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68

“பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். -19:69

“பின்னர், அந்நரகத்தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். -19:70
“மேலும், அதனை(பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். -19:71
“அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அந்நரகத்தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். -19:72
மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் யாராக இருந்தாலும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை விளங்கமுடிகிறது. நல்லடியார்களும், பாவிகளும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேல மர முற்கள்’ எனப்படும்’ என்றார்கள். 
(தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த இறைவனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள்…(புகாரி 7439)
”நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப் படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். ‘இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!’ என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். 
நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களும் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.”
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தின் பாலத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி 6535)
எனவே மேற்ச் சென்ற குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் அந்த பாலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அந்த பாலம் கரு வேல முள்ளை விட கூர்மையாக இருக்கும். பாலத்திற்கு இடை, இடையே கொக்கிகள் போடப்பட்டிருக்கும், அந்த பாலத்தை நல்லவர்களும் கடக்க வேண்டும். பாவிகளும் கடக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் கடந்து விடுவார்கள் ஆனால் எந்த பாவிகளையும் அந்த பாலத்தில் போடப்பட்டிருக்கும் கொக்கிகள் விட்டு விடாது பிடித்து, பிடித்து நரகத்தில் தள்ளி விடும் என்பதை விளங்கி கொண்டீர்கள்.
அதே நேரம் இந்த பாலத்தை பற்றி பேசும் போது ஸிராத்துல் முஸ்தகீம் என்று மௌலவிமார்கள் சொல்வார்கள். ஆனால் நபியவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் அதாவது முஸ்தகீம் என்ற வார்த்தையை சேர்த்து சொல்ல வில்லை, நான் மேலே புகாரி ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிட்டுள்ளேன் அவற்றை வைத்து நேரடியாக ஹதீஸ் கிதாப்களில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். மாறாக ஸிராத் அல்லது அதற்கு ஒத்த கருத்தை (பாலம்) என்று மட்டும் தான் நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். நபியவர்கள் சொல்லாத பெயரை நாம் சொல்லி மறுமையில் நாம் குற்றவாளியாக மாறுவதை விட, நபியவர்கள் சொன்ன ஸிராத் என்ற சொன்ன சொல்லையே மக்களுக்கு எடுத்துக் காட்டி மறுமையில் ஈடேற்றம் அடைவோமாக!
இப்றாஹீம் நபியும், தந்தையும்…
மறுமை நாளில் இப்றாஹீம் நபியும், அவரது தந்தையும் நேரடியாக கண்டு கொள்ளும் காட்சியை நபியவர்கள் இப்படி எடுத்துக் காட்டுகிறார்கள்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்’ என்று பதிலளிப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4769)
மற்றொரு அறிவிப்பில் இப்றாஹீம் நபியின் தந்தையை அல்லாஹ் கழுதை புலி உருவத்தில் மாற்றி நரகத்தில் வீசிவான் என்பதை காணலாம். அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை தான் இந்த சம்பவம் எச்சரிக்கிறது.
மறுமை நாளில் மூஸா நபி…
மறுமை நாளில் மூஸா நபி அல்லாஹ்வுடைய அர்ஷை பிடித்தவர்களாக இருப்பார்கள் என்பதை நபியவர்கள் பின் வரும் செய்தியின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்கள்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்ட போதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களர் அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?’ என்று எனக்குத் தெரியாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4813)
                                                                   மௌலவி :-யூனுஸ் தப்ரீஸ் 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget