ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா?

றமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும்.

ஹதீஸ் : 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள் ஹதீஸின் நிலைப்பாடு  இருப்பினும் இச் செய்தி பலவீனமான ஓர் செய்தியாகும்.
பலவீனத்திற்கு காரணம்
இந்த ஹதீதானது இமாம் அபூ தாவுதின் சுனன் என்ற கிரந்தங்களிலும் (2237), இமாம் நசாயியின் சுனனுல் குப்ரா என்ற கிரந்தத்திலும் (2923), இமாம் அப்துர்ரசாக்கின் முஸன்னப் என்ற கிரந்தத்திலும் (7325), இமாம் திர்மிதியின் சுனன் என்ற கிரந்தத்திலும் (738), இமாம் அஹமதின் முஸ்னத் என்ற கிரந்தத்திலும் (9707) மற்றும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
அபூ ஹூறைறா (ரழி) அவர்களினால் அறிவிக்கப்படும் இந்த ஹதீத் அலா இப்னு அப்துர்ரஹ்மான் என்ற ஒரு அறிவிப்பாளரின் வாயிலாகவே அனைத்து கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
இவர் இதனை தன் தந்தையிடம் கேட்டு அறிவிக்கின்றார் என்றாலும் இந்த அறிவிப்பாளர் அலா இப்னு அப்துர்ரஹ்மான் ஹதீஸ் கலை அறிஞர்கள் பலராலும் குறை கூறப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த அறிவிப்பாளராகும்.
இவரின் நிலை பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்.
அறிவிப்பாளர்களை சுண்டிப்பார்ப்பதில் பாண்டித்தியம் பெற்ற இமாம்களான இமாம் அபூ ஹாதம் ''இவர் நம்பகமானவர்களைத் தொட்டும் அறிவிப்பார் இருப்பினும் நான் இவரின் ஹதீதில் சிலதை மறுக்கின்றேன்'' என்றும் இமாம் அபூ சுர்ஆ ''இவர் பலமானவர் இல்லை'' என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் இமாம் யஹ்யா இப்னு மயீன் ''இவர் ஒன்றும் அல்லாதவர், மக்கள் இவரின் ஹதீதை பயப்படக்கூடியவர்களாக இருந்தார்கள்'' என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் ''இவரின் ஹதீத் ஆதாரபூர்வமானது இல்லை இ.ன்னும் இவர் பலவீனமானவர்'' என்றும் கூறியுள்ளார்கள்.
அதுபோல் இமாம் தஹபி '' இவரின் ஹதீத்கள் ஹஸன் என்ற படித்தரத்தை விட்டும் குறைந்திடாது என்றாலும் இவரின் சில முக்கரான ஹதீத்களால் இவர் தூரமாக்கப்படுவார் என்றும் இமாம் இப்னுஹஜர் '' உணமையாளர், சில வேளைகளில் தவறுவிடுவார்'' என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இவ்வறிஞர்கள் அனைவருக்கும் மாற்றமாக ''இவர் நம்பகமானவர் இவரில் யாரும் குறை கூறவில்லை'' என்ற கருத்தை கூறியிருந்தாலும் இந்த ஹதீதை ஆதாரமற்றது என்று கூறிவிட்டார்.
இது இங்கு கோடிட்டு காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆக மொத்தத்தில் ஹதீத் கலையில் பிரசித்திபெற்ற அறிஞர்கள் பலர் இவரை குறையுள்ளவர் என்று விமர்சித்திருப்பது மேல் கூறப்பட்டவைகள் மூலம் தெளிவாகின்றது.
இதே வேளை இதற்கு மாற்றமாக மற்றொரு ஆதாரமான ஹதீஸ் வருவது இதை இன்னும் பலயீனமாக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''உங்களில் ஒருவர் ரமழானை ஒன்று அல்லது இரண்டு நோன்புகளால் முந்த வேண்டாம் வழமையான சுன்னத்து நோன்பு வைப்பவரைத்தவிர'' (அறிவிப்பவர் அபூ ஹூறைறா ரழி நூல் புஹாரி 1914)
எனவே அபூ ஹூறைறா ரழி அவர்களைத் தொட்டும் மிக நம்பகமானவர்கள் வாயிலாக வந்த செய்தி ரமழானின் முன்னிரு நாட்கள் மட்டும் நேன்பை விட்டும் தடுப்பதால், அதே அபூ ஹூறைறா ரழி அவர்களைத் தொட்டும் பலராலும் குறைகூறப்பட்ட ஒருவர் அறிவிக்கும் தலைப்பு ஹதீஸ் மறுக்கப்படும் பலவீனமான ஓர் செய்தியாகின்றது.
இச் செய்தியின் நிலை பற்றி இமாம்களின் கருத்துக்கள்.
இமாம் அஹ்மத் ''இந்த ஹதீத் சரியானது அல்ல'' என்று கூறுகின்றார். இன்னும் அவர் கூறுகையில் ''அலா நம்பகமானவர் என்றாலும் இந்த ஹதீதைத் தவிர வேறு எதையும் நான் மறுக்கவில்லை'' என்கிறார்.
அதே போல் இமாம் நசாயீ ''அலாவைத் தவிர இந்த ஹதீதை வேறுயாரும் அறிவித்ததாக நாங்கள் அறியவில்லை.'' என்று கூறுகின்றார்.
இன்னும் இமாம் அபூ சுர்ஆ இதனை மறுத்தார் என அவரின் கிரந்தமான அல்லுஅபா என்ற கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்னும் இமாம் தஹபி அலா தன் தந்தையின் வாயிலாக அறிவிக்கும் (யாரும் அறிவிக்காத) அரிதான ஹதீத்களில் இதுவும் ஒன்றாகும். எனவும் கூறினார்.
ஹதீதின் விபரீதம் 
ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள் என்ற இந்த பலவீனமான செய்தியை ஆதாரபூர்வமானது என நம்பிய பலர் தாங்களின் (கழா) விடுபட்ட நோன்புகளைக் கூட நோற்பதற்கு தயங்கி அவைகளை நோற்காமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இன்னும் அத்தினங்களில் நோன்பு நோற்பது பாவமானது, நபியவர்கள் கூற்றுக்கு மாற்றமானது எனவும் கருதுகிறார்கள்.
முடிவு
இச் செய்தி பலவீனமான ஓர் செய்தியாகும். எனவே தங்கள் நோன்புகளை கழாச் செய்ய விரும்புபவர்கள் ரமழானின் அருகிலுள்ள ஷஃபானின் இறுதி இரு நாற்களில் தவிர அனைத்துக் காலங்களிலும் தங்கள் நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.
இது போக நபி (ஸல்) ஷஃபானில் தான் அதிகம் நோன்பு நோற்பார்கள் 
மற்றும் ஆயிஷா ரழி அவர்கள் தங்களின் அதிக வேலை காரணத்தால் ஷஃபானின் இறுதியில் தான் விட்ட நோன்புகளை கழாச் செய்வார்கள் என ஏராளமான சான்றுகள் மேல் கண்ட பலவீனமான ஹதீதுக்கு மாற்றமாக ஆதாரபூர்வமாக புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளதால் தாம் நோன்புகளை ஷஃபானில் நோற்பது எவ்விதத்திலும் பாவமான காரியமாகாது. அல்லாஹ்வே கூலி வழங்கப் போதுமானவன்.
                                                                                        

                                                  சுமையா (ஷரயிய்யா)


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget