யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள் எப்போது.?

அல்லாஹ் இந்த உலகத்தில் பல கோடி படைப்புகளைப் படைத்து, அந்த படைப்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், ஏற்ப அல்லாஹ் வெளியாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானதொரு படைப்பு தான் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமாகும்.  
இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டங்கள் எங்குள்ளார்கள்? இவர்களை நேரடியாக கண்டவர்கள் யார்? இவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவுப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
யார் இந்த துல்கர்னைன்…
துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புக்காரர் அல்லது இரட்டை மணிமுடியார் என்பதாகும். ரோம், பாரசீகத்தை ஆட்சி செய்ததினால் இரட்டை மணிமுடியார் என்றும் அல்லது அவரது தலை கவசத்தில் இரண்டு கொம்புகள் போன்ற அமைப்பு இருந்ததால் இரண்டு கொம்புக்காரர் என்றும் அழைக்கப்படுவதாகவும், இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர் ஓர் நல்ல இறையடியாராகவும், மேலும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவராகவும் காணப்பட்டார். இவரின் இயற்பெயர் இஸ்கந்தர் என்றும், இவர் இப்றாஹீம் நபியின் காலத்தில் மன்னராக திகழ்ந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. (பார்க்க தப்ஸீர் இப்னு கஸீர்)
துல்கர்னும்,யஃஜூஜ், மஃஜூஜூம்…
துல்கர்ன் ஆட்சி காலத்தில் மலையடிவாரத்தில் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் காணப்பட்டதாகவும், அவர்கள் பேசும் பாஷை புரியவில்லை என்றும் அவர்கள் மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு செய்வதாகவும் அன்றைய மக்கள் துல்கர்னைன் மன்னனிடம் எடுத்து கூறி, மேலும் நாங்கள் எங்கள்  பொருளாதாரத்தை தருகிறோம் இந்த (யஃஜூஜ், மஃஜூஜ்) கூட்டத்தை ஏதாவது செய்யுங்கள் என்று மக்கள் வேண்டிய போது, அல்லாஹ் எனக்கு நிறைய பொருளாதாரத்தை தந்துள்ளான். என்றாலும் உங்கள் உடல் ரீதியான  ஒத்துழைப்பை தாருங்கள் என்று மக்களிடம் மன்னன் கூறி விட்டு, இரும்பு பாலங்களை தூக்கி வாருங்கள் என்று துல்கர்னைன் கட்டளையிட்டார்.

அதன் பின் யஃஜூஜ், மஃஜூஜ் இருந்த மலையடிவாரத்திற்கு மக்களோடு  துல்கர்னைன் சென்றார். தூக்கி கொண்டு போயிருந்த இரும்பு பாலங்களை  இரண்டு மலைகளுக்கு இடையில் அடுக்க சொல்லி, அதன் பிறகு அந்த இரும்பின் மீது நெருப்பை மூட்டச் சொன்னார். அதன் பிறகு உருக்கிய செம்பை அந்த எறிக்கப்பட்ட இரும்பின் மீது துல்கர்னைன் ஊற்றினார். இனிமேல் இவர்கள் உங்களுக்கு எந்த இடையூறும் தரமுடியாது, அல்லாஹ் என்றைக்கு நாடுகிறானோ அன்றைக்கு இந்த மலையை உடைத்து விட்டு வெளியேறுவார்கள் என்று துல்கர்னைன் சொன்ன இந்த சம்பவத்தை பின் வரும் குர்ஆன் வசனங்களின் மூலம் காணலாம்.
…“முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். ‘துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். ‘என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு உதவுங்கள்!  உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்”  என்றார்.  (தனது பணியாளர்களி டம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது  என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.  (அல்குர்ஆன் 18:94-99)
எனவே எப்படி தஜ்ஜால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளானோ, அது போல யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமும் படைக்கப்பட்டு இரண்டு மலைகளுக்கு இடையில் அடைக்கப்பட்டுள்ளனர். யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அந்த குறிப்பிட்ட நாள் வரைக்கும் மறைக்கப்பட்டுள்ளனர். அந்த நாள் வந்து விட்டால் வெள்ளம் பாய்ந்து வருவதைப் போல பல திசையின் பக்கம் விரைந்து வருவார்கள் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்கிறது.
“இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.   (அல்குர்ஆன் 21:96)
நபியவர்களின் எச்சரிக்கை…
“நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது” என்று கூறியபடி வெளியேறினார்கள். (“இந்த அளவுக்கு” என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5521)
ஈஸா நபியும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமும்…
உலக அழிவுக்கு முன்னால் முக்கியமான பத்து அடையாளங்கள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்று ஈஸா நபியின் வருகையும், இரண்டாவது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமுமாகும். ஈஸா நபியன் வருகைக்குப் பின் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டம் வருகிறது. அந்த சம்பவத்தை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள்.
பின்னர், அல்லாஹ் “யஃஜூஜ்” “மஃஜூஜ்” கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாகக் கீழே இறங்கி வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) “தபரிய்யா” ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. “முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்” என்று பேசிக்கொள்வார்கள். 

பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (“தூர்” மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். 

பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும்  (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே  காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும். 

பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடிவீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். 

எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே  போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும். இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். 

இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம் 5629)
மேலும் “யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில  விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்:  காலித் பின் அப்துல்லாஹ், (நூல்: அஹ்மத்)
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), (நூல்: தப்ரானி)
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது. யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
…உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி 3348)
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி 1593)

முக்கிய குறிப்பு:
ஷாபி மத்ஹபினர் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமாக ஒரு கதையை இட்டிக் கட்டி சொல்வார்கள். அதாவது இந்த யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டத்தினர் அடைக்கப்பட்ட மலைக்குள் இருந்து கொண்டு அந்த மலையை நாக்கால் நக்கிக் கொண்டே வருவார்கள். ஷாபி மத்ஹபினர் சுப்ஹூ தொழுகையில் குனூத் ஓதும் போது அந்த மலை பழைய நிலைமைக்கு போய் விடும், இப்படியே ஒவ்வொரு  நாளும் நடக்கும்.   

 என்றைக்கு ஷாபி மத்ஹபினர் குனூத் ஓத  மறக்கின்றார்களோ அன்றைக்கு அந்த மலையை உடைத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்று கதையை கட்டி வைத்துள்ளார்கள் அப்படி ஒரு செய்தியை அல்லாஹ்வோ, நபியவர்களோ சொல்லவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் இன்னும் சிலர் இந்த யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டம் கத்திரிக்கா அளவில் குட்டை, குட்டையாக இருப்பார்கள் என்றும் கதை அளந்து வைத்துள்ளார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.


                                                                        அஷ்ஷேஹ் யூனுஸ் தப்ரீஸ்


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget