பருவ வயது வந்த, ஒவ்வொரு ஆண், பெண்ணின் மீதும் இந்த ரமலான் நோன்பு கடமையாகிறது.
பெண்கள் தனது மாதவிடாய் காலத்தில் நோன்பு பிடிப்பதை தடை செய்து, ரமலான் அல்லாத காலத்தில் ரமலானில் விட்ட நோன்புகளை களா செய்யும் படி இஸ்லாம் வழிக் காட்டுகிறது.அது போல ரமலான் காலத்தில் சுகயீனம் காரணமாக, அல்லது பயணம் காரணமாக அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நோன்பை நோற்க முடியா விட்டால், ரமலான் அல்லாத காலத்தில் அதை நிறை வேற்ற வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் களா நோன்பை நிறைவேற்றவதற்கு முன் மரணித்து விட்டால், அந்த களா நோன்புகளை மரணித்தவரின் குடும்பத்தார்கள் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலமாக மரணித்தவரின் கடமை நிறை வேற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அது சம்பந்தமான ஹதீஸ்களை கவனியுங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 1952)
மேலும்“ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறை வேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரி மரணித்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் இறந்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், 'என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.(புகாரி 1953)
எனவே யாருக்கு எத்தனை பர்ளான நோன்புகளோ அல்லது நேர்ச்சை நோன்புகளோ விடுப்படுகிறதோ அவர் கட்டாயமாக ஒரு டயரியில் இத்தனை நோன்புகள் நான் பிடிக்க வேண்டியுள்ளது என்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் சம்பந்தப்பட்டவர் மரணித்தாலும் அவரது குடும்பத்தார்கள் அதை நிறைவேற்றுவதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.
Post a Comment