அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் சந்தோசத்தை ஏற்ப்படுத்துகிறான். முஃமின்களைப் பொருத்தவரை நல்லமல்கள் செய்யும் போது கிடைக்க கூடிய சந்தோசத்தை விட வேறு எதிலும் உச்ச கட்டமான சந்தோசத்தை அடைந்து கொள்ள மாட்டார்கள்.
அதிலும் இந்த உலகத்தில் நோன்பு நோற்று, நோன்பை திறக்கும் போது ஏற்படக் கூடிய சந்தோசத்தை அல்லாஹ்வே வரவேற்கிறான் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலமாக காணலாம்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்).
அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்த மனிதரை அல்லாஹ் சந்தோசப் படுத்துகிறான். நோன்பு திறக்கும் போது சரியான நேரம் வந்த உடன், எந்த தாமதமின்றி உடனே நோன்பை திறந்து விட வேண்டும்.
பொருத்தது பொருத்து விட்டோம் சற்று தாமதித்து திறந்தால் நஷ்டமா ஏற்ப்படபோகிறது என்று நேரம் கடந்து நோன்பை திறக்க கூடாது.
குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் அதிகமாக அலட்சியமாக இருப்பார்கள். பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'
இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (புகாரி 1957)
மேலும் “அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர், 'மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!' என்றார்கள். (புகாரி 1958)
மேலும் “ அபூ அத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப் படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)" என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?" என்று கேட்டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.(முஸ்லிம் 2004)
எனவே சொல்லித்தரப்பட்ட அமல்களையும், அதன் ஒழுங்கு முறைகளையும் நாம் சரியாக பேணி வாழ்க்கையில் நடை முறைப் படுத்த வேண்டும். அப்போது தான் இறையன்பை சரியாக பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லாஹ் போதுமானவன்
அல்லாஹ் போதுமானவன்
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
Post a Comment