சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்

ரமழான் புனிதமான மாதம். அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்; லைலதுல் கத்ர் எனும் 1000 மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவை உள்ளடக்கிய ஒரு மாதம்; தர்மம், இரவுத் தொழுகை, நோன்பு போன்ற சிறந்த அமல்களின் மாதம்; இந்த மாதத்தை உரிய முறையில் பயன்படுத்தி பாக்கியம பெற முயல வேண்டும்.

வழமையாக நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்களுக்குள் மார்க்கச் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அடிதடிகள், நீதிமன்றம் என காலத்தைக் கடத்தாமல் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நாம் உறுதியெடுக்க வேண்டும். ரமழான் முடியும் வரை சண்டை பிடிப்பதும், ரமழான் முடிந்ததும் சமாதானமாவதும் தான் எமது வேலையா என்பதை சிந்திக்க வேண்டும்.
“நீங்கள் நோன்புடன் இருக்கும் போது உங்களுடன் ஒருவர் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிவிடுங்கள்” என்ற ஹதீஸைப் புறக்கணித்து, நோன்பில் தான் அடுத்தவர்களை வம்புக்கு இழுப்பதும், சண்டை பிடிப்பதும் அதிகரிக்கின்றது. இது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் பிற சமூகத்தவர்களுடன் மனக் கசப்புக்களை ஏற்படுத்தும் மாதமாகவும் இது மாறியுள்ளமை கவலைக்குரிய அம்சமாகும். முஸ்லிம் இளைஞர்களில் சிலர், வீதிகளை இரவில் விளையாட்டு மைதானமாக்குகின்றனர். இரவில் மாங்காய் பறித்தல், குரும்பை பிய்த்தல் போன்ற சேட்டைகளைச் செய்கின்றனர். ரமழான் இரவுகள் இபாதத்திற்குரியவை. அவை விளையாட்டுக்கும், களியாட்டத்திற்கும் உரியவை அல்ல என்பது கண்டிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.  
அடுத்து, பிற சமூக மக்களுடன் வாழும் போது குறிப்பாக அவர்கள் மஸ்ஜித்களின் அருகில் வசிக்கும் நிலையிருந்தால் இரவுத் தொழுகைகளுக்காக வெளி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சாலப் பொருத்தமானது. நீண்ட நேரம் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் சில போது அவர்கள் எரிச்சலடையலாம்; வெறுப்படையலாம்; பொறாமை கொள்ளலாம். இது விடயத்தில் பள்ளி நிர்வாகிகள் நிதானமாகவும், புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டும்.
புனித ரமழானில் பித்ரா என்ற பெயரில் பிச்சை எடுக்கும் படலத்தை சிலர் ஆரம்பித்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் குமரிப் பெண்களையும் அழைத்துக் கொண்டு வீதிகளில் அலைந்து திரிவதைப் பார்க்கும் போது கேவலமாக உள்ளது. இந்த நிலை முற்று முழுதாக தவிர்க்கப்பட வேண்டும். ஸகாத், ஸகாதுல் பித்ரா போன்றவற்றைக் கூட்டாகச் சேகரித்து திட்டமிட்டு பகிர்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஸகாத்தை தனித்தனியாகப் பத்து இருவது என பிச்சைக்காகப் பகிர்வதைத் தனவந்தர்கள் தவிர்க்க வேண்டும்.
                                                                                      மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget