மூஸா நபியும் அதிசயப் பாம்பும் (திருக்குர்ஆன் கூறும் கதைகள்)

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார்.
வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார்.
எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு வெளிச்சம் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு சென்ற போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அங்கு மக்கள் யாரும் இருக்கவில்லை. ஒரு ஒளி தென்பட்டது! அல்லாஹ் மூஸா நபியுடன் நேரடியாகப் பேசினான்.
‘மூஸாவே! நான்தான் உன் இரட்சகன். நீர் ‘துவா” எனும் புனித பள்ளத்தாக்கில் நீர் இருக்கின்றீர். உமது செருப்பைக் கழட்டும்” என அல்லாஹ் கூறினான். மூஸா நபிக்கு அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து…
‘மூஸாவே! உம்மை நாம் நபியாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். நான்தான் வணக்கத்திற்குரியவன். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. நீர் என்னையே வணங்க வேண்டும். மறுமை நாள் உண்டு! என்னைத் தொழ வேண்டும்! இந்த செய்திகளை இஸ்ரவேல் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் அல்லாஹ் கூறினான். அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பும் போது அவர்களுக்கு சில அற்புதங்களையும் வழங்குவான். அதை ‘முஃஜிஸா” என்பார்கள்.
மூஸா நபியின் கையில் ஒரு தடி இருந்தது. ‘உனது வலது கையில் இருப்பது என்ன?” என அல்லாஹ் கேட்டான். மூஸா நபிக்கு அல்லாஹ்வுடன் உரையாடுவது பேரின்பமாக இருந்தது.
“இது எனது தடி! இதன் மீது சாய்ந்து கொள்வேன். எனது ஆட்டுக்கு இலை, குலை பறிப்பேன். இதில் எனக்கு வேறு பயன்களும் இருக்கின்றது” எனப் பதிலளித்தார்கள்.
அல்லாஹ், “மூஸாவே! உமது தடியைக் கீழே போடும்” என்றான். அவரும் போட்டார். அந்தத் தடி பெரிய பாம்பாக மாறியது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்களே! மூஸா நபிக்கும் அச்சம் ஏற்பட்டது. அவரும் ஓட முனைந்தார். உடனே அல்லாஹ், ‘மூஸாவே பயப்படாதே! அதை எடும். அதைப் பழையபடி நாம் கம்பாக மாற்றிவிடுவோம் என்று கூறினான். அவர் எடுத்தார். அது கம்பாகவே மாறிவிட்டது.
இந்த அற்புதத்தை ஆதாரமாக வைத்து இஸ்ரவேல் சமுதாயத்தில் அவரை பிரச்சாரம் செய்ய அல்லாஹ் அனுப்பினான்.
தடி பாம்பாக மாறிய இந்த அதிசய சம்பவம் திருக்குர்ஆனில் அத்தியாயம் 20:9-21, 27:7-13, 28:29-31 போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளது.
                                                                                               மௌலவி இஸ்மாயில் ஸலஃபி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget