பாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்

மிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்பை ஏற்ப்படுத்துவதற்காக அதான் (பாங்கு) கடமையாக்கப்பட்டது. அந்த பாங்கு எப்படி கடமையாக்கப்பட்டது, பாங்கு சொல்பவரின் சிறப்புகள் என்ன? பாங்குடன் சம்பந்தமான ஏனைய செய்திகளை இக் கட்டுரையில் தொடராக படிக்கலாம்.
பாங்கு கடமையாக்கப் பட்ட வரலாறு…
நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். அப்போது மாறி, மாறி பல கருத்துகளை ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் ஒவ்வொரு வக்துக்கும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று நபியவர்கள் அதை வேண்டாம் என்றார்கள்.
மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபியவர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம் என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி) அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது. பின் வரக் கூடிய ஹதீஸ்களில் இவற்றில் சிலவற்றை காணலாம்.
“அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகைக்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( புகாரி 604, முஸ்லிம் 618)
பாங்கிற்கு பதில் கூறல்
பாங்கு சப்தம் கேட்கும் போது சொல்லப்படும் அந்த பாங்கிற்கு செவி தாழ்த்தி முஅத்தின் கூறுவதைப் போல நாமும் சொல்ல வேண்டும் என்பதை நபியவர்கள் பின் வரும் ஹதீஸின் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். “அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். 

பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.

 பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 629)
மேலும் “நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
(முஸ்லிம் 628)
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது பாங்கு சொல்லும் போது பாங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்லி விட்டு, பாங்கு துஆ ஓதும் முன் நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பாங்கு துஆ ஓத வேண்டும்.
பாங்கு துஆ…
பாங்கிற்கான பதிலை நபியவர்கள் சொல்லி தந்த அடிப்படையில் சொல்லி விட்டு, அதன் பிறகு பின் வரும் பாங்கு துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِه الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
“ சொல்வதைக் கேட்ட பின், ‘பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’ என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி 614)
பாங்கின் சிறப்புகள்…
யார் பாங்கு சொல்கிறாரோ அவருக்கு என்ன சிறப்புகள் (நன்மைகள்) கிடைக்கும் என்பதை பின் வரும் நபிமொழிகள் தெளிவுப்படுத்துகின்றன.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 615) 
மேலும்“ அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் ‘நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்’ எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். (புகாரி 609) 

மேலும்“ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள்,மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். (முஸ்லிம் 631)
பாங்கும் ஷைத்தானும்
பாங்கு சப்தத்தைக் கேட்டால் ஷைத்தான் வெகு தொலை தூரத்திற்கு விரண்டோடுகிறான் என்று நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப் பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 636)
                                                
                                                                                           அஷ்ஷேஹ் யூனுஸ் தப்ரீஸ்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget