2019

ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள்.
அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி…
ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும்.
நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்வு நடந்ததினால், நபியவர்களின் பிள்ளையின் மரணத்திற்காக தான் இது நிகழ்தது என்று கூறினார்கள்.
அதே போல இது நடப்பதால் ஆட்சியாளருக்கு கேடு.அல்லது நாட்டிற்கு இது நடக்கும் அது நடக்கும் என்று சிலர் தனது மடமையை வெளிக்காட்டுவார்கள்.
யாருடைய இறப்பிற்காகவோ, அல்லது பிறப்பிற்காகவோ இது நடப்பது கிடையாது. அல்லது இதனால் நல்லது அல்லது கெட்டது என்பதும் கிடையாது.
“சூரியனை மையமாகக் கொண்டு, சூரிய குடும்பத்தில் உள்ள பூமி உட்பட எல்லாக் கோள்களும் சுழன்று வருகின்றன. இவ்வாறு சுழன்று வரும் போது, சூரியனுக்கும், பூமிக்கும் இடையே பூமியின் துணைக் கோளான சந்திரன் குறுக்கே வரும். அப்போது சூரியனின் ஒளி தற்காலிகமாக மறைந்து விடும்.இதையே சூரிய கிரகணம் எண்பர்.
சுற்றுப்பாதையில் வரும் போது, எந்த அளவிற்குச் சூரியனை சந்திரன் மறைக்குமோ அந்த அளவிற்கு முழு சூரிய கிரகணம், அல்லது பாதி சூரிய கிரகணம் ஏற்படுவதுண்டு.
இதைப் போன்றே சுழற்ச்சி முறையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி குறுக்கிடும் போது, சந்திரனின் ஒளி தற்காலிகமாக தடைப்படும் இதையே சந்திர கிரகணம் எண்பர்.  அல்லாஹ் மிக அறிந்தவன்.
கிரகண தொழுகை முறைகள்…
(01) இந்த தொழுகை கூட்டாக தொழுவிக்கப்பட வேண்டும்.
(02) ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தொழுவிக்கப்பட வேண்டும்.
(03) முதலில் தொழுகையும், இரண்டாவது குத்பாவும் நிகழ்த்தப் பட வேண்டும்.
(04) இந்த தொழுகைக்கான பகிரங்க அறிவித்தல் (அழைப்பு) கொடுக்கப்பட வேண்டும்.
(05) இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் நான்கு ருகூஃகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(06) அல்லது இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் ஆறு ருகூகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(07) அல்லது இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் எட்டு ருகூகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(08) கிரகண தொழுகையில் ருகூஃவில் மட்டும் மாற்றம் செய்ய வேண்டும்.
தொழுகையின் விளக்கமும் ஆதாரங்களும்
இரண்டு ரக்அத்துகளில் நான்கு ருகூஃ என்றால் முதலாவது ரக்அத்தில் சூரா பாதிஹா ஓதி விட்டு, அதன் பின் நீண்ட சூரா ஓத வேண்டும். அதன் பின் ருகூஃ நீண்ட நேரம் செய்ய வேண்டும். பிறகு நிலைக்கு வந்து ஸஜ்தாவிற்கு சென்று விடாமல் மீண்டும் நிலையில் நின்று பாதிஹாவை தவிர்த்து ஏற்கனவே ஓதிய சூராவை விட சற்று குறைத்து நீண்ட நேரம் ஓத வேண்டும். 

அதன் பிறகு ருகூஃ நீண்ட நேரம் செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைக்கு வந்து வழமைப் போன்று ஸஜ்தாவிற்கு செல்ல வேண்டும். நீண்ட ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். 

அடுத்த இரண்டாவது ரக்அத்திலும் அவ்வாறே செய்ய வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் இரண்டு ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் இரண்டு ருகூஃகளும் செய்ய வேண்டும் என்பதை விங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மரணம், கப்ர், மறுமை, நரகம், சுவனம் அனைத்தையும் உள்ளடக்கியதாக நினைவுப் படுத்தி குத்பா (உபதேசம்) செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை புகாரி- 1051லும், முஸ்லிம்-1662லும் விரிவாக காணலாம்.
அடுத்ததாக இரண்டு ரக்அத்துகளில் ஆறு ருகூஃ, மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் என்றாலும் மேற்ச் சுட்டிக் காட்டிய படியே தொழ வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் அடுத்தடுத்து தொடராக மூன்று ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் மூன்று ருகூஃகளும் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை முஸ்லிம்- 1652ல் விரிவாக காணலாம்.
அடுத்ததாக இரண்டு ரக்அத்துகளில் எட்டு ருகூஃ, மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் என்றாலும் மேற்ச் சுட்டிக் காட்டிய படியே தொழ வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் அடுத்தடுத்து தொடராக நான்கு ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் நான்கு ருகூஃகளும் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை முஸ்லிம்- 1660ல் விரிவாக காணலாம்.
குறிப்பாக நீங்கள் தொழுவிப்பதற்கு முன் எத்தனை ருகூஃகளை கொண்ட தொழுகையை தொழுவிக்கப் போகிறோம் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்ளவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வானாக !

                                                                   மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

[கேள்வி-பதில்] :ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா ?  


இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்பது, அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒன்றாக அமர்ந்து கல்வி பயில்வது ஆகுமானதா என்பதுவே கேள்வியின் உள்ளடக்கமாகும்.
இவ்விசயத்தில் ( இறைவன் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் ) மார்க்க அளவுகோல் யாதெனில், ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுமானால், வகுப்பறையின் முன் பகுதியில் ஆண்களும், பின் பகுதியில் பெண்களும் அமர்ந்து கல்வி கற்றுவிட்டு, வகுப்பு முடிந்தவுடன் பெண்கள் முதலாவதாக வகுப்பறையை விட்டு வெளியேற வேண்டும். அதன்பின் ஆண்கள் வகுப்பறையை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் சிறந்தது.
ஆனால் இன்றைய கல்வி நிலையங்களில் அவ்வாறான நிலை இல்லை. கல்லூரிகளில் வகுப்பறைக்குள் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்வதும், பரிகாசம் செய்து கொள்வதும், வரம்புமீறிய நடவடிக்கைகளில் சில நேரங்களில் ஈடுபடுவதும், அதுபோலவே, தனிமையாக ஜோடி ஜோடியாக இணைந்து மறைவாக அமர்ந்து கொள்வதற்கான இடவசதிகளும் பல கல்லூரிகளில் காண முடிகிறது.
 இதுபோன்ற நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபடுவது இல்லை என்றாலும். சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மாணவ மாணவியரும் இந்த சூழ்நிலைக்குள் தங்களை அறியாமலே தள்ளப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமாகும்.
இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம் மாணவ மாணவிகள் தங்களது கல்லூரி வளாகத்துக்குள் மிகவும் கண்ணியத்தோடும், மார்க்க விசயங்களில் மிகுந்த கடைபிடிப்போடும், பிற முஸ்லிம் மாணவ மாணவியரும் மார்க்க விசயங்களை பேணி நடக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தோடும் செயல்படுகிறார்கள் என்பது மிகவும் போற்றத்தக்க விசயமாகும். இதை பல கல்லூரி வளாகங்களின் நாம் நேரடியாகவே காணக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ் …
இந்நிலையைப் பொறுத்தவரை, முஸ்லிம் மாணவ மாணவியர் தங்களால் இயன்றளவு குரூப் ஸ்டடி போன்ற சூழ்நிலைகளை தவிர்த்துக் கொள்வதே நலமாகும். இருப்பினும் தவிர்க்க இயலாத சூழ்நிலை இருக்குமானால், குரூப் ஸ்டடி நடக்கக்கூடிய இடங்களில், தங்களது பார்வையை தாழ்த்திக் கொள்வது, வரம்பு மீறிய பேச்சுக்களையும், தேவையற்ற விசயங்களையும் தவிர்த்துக்கொள்வது, அதிகமான மாணவ மாணவியரை குரூப் ஸ்டடியில் இணைத்துக் கொள்வது, வகுப்பு முடிந்துவிட்டால் விரைவாக வகுப்பறையைவிட்டு வெளியேறிவிடுவது போன்ற செயல்களால் மார்க்க வரம்புகளை மீறாமல், ஓரளவு தங்களை காத்துக்கொண்டு கல்வியை கற்றுக் கொள்ளலாம்.
இஸ்லாமிய கல்லூரி நிறுவனங்களும் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துவது போலவே, இவ்விசயத்திலும் அதிக கவனம் செலுத்தி, மார்க்க வரம்புகளை மீறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஆவண செய்யவேண்டும் என்பதே எமது பேராவல்.
எந்த சூழ்நிலையிலும் மார்க்க வரம்புகளை மீறாத நன்மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கிவைப்பானாக …
                                                                                                  முஜாஹித் இப்னு ரஸீன்

கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே..! மனிதன் தவறு செய்கின்றவன் தவறு செய்யாதவன் மனிதன் கிடையாது என்பது அடிப்படை அவன் சொந்த வாழ்வில் செய்யும் தவறுகளில் எவை அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியிலான தவறுகளாக இருக்கின்றதோ அவற்றை எந்த காரணம் கொண்டும் இரண்டாம் நபர் ஒருபுறபிருக்க சம்பந்தபட்ட நபர் வெளியில் பேசி பகிரங்கபடுத்துவதை கூட அல்லாஹ் விரும்ப வில்லை இப்படியானவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் மாட்டான் என்று இருக்க ஒருவரின் தவறை மற்றவர் பேசித்திரிந்தால் அதற்கான தண்டனை என்ன..? அதை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவானா..?

தான் இரகசியமாக செய்த தவறைக் கூட பகிரங்கபடுத்துவதை தடை செய்துள்ள மார்க்கத்தில் இருந்து கொண்டு அடுத்தவன் செய்த தவறை சந்தி சந்தியாகவும் முக்காடு போட்டு இணைய தளங்கள் வழியாகவும் பேச முன்வைக்கப்படும் வாதங்களை ஒவ்வொன்றாக உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்றைய சூழலில் மிக பொறுத்தம் என கருதுகிறேன்.  

* வாதம் 01:
நாம் உண்மையை தானே கூறுகின்றோம்..? அவரை பற்றி இல்லாததை பேசவில்லையே..? 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ?

( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ , நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5048

* வாதம் 02:
நாம் இந்த நபர் பற்றி கேள்விப்பட்ட பின் அனைவரிடமும் விசாரித்து அவரின் தொலைதொடர்பு சாதனங்கள் முதல் அணைத்தையுமே கண்காணித்து தான் இந்த முடிவை எடுத்தோம்

*அல்லாஹ் பேசுகின்றான்*
நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். *துருவித் துருவி ஆராயாதீர்கள்!* உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 49:12
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அல் குர்ஆன் 104:1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ; ( அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;

கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5006

புறம் பேசுகின்றவர்களின் மண்ணறை நிலை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லலை.
இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி புறம்பேசித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள். பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள். நூல்: புகாரி 6052

புறம் பேசியவர்களின் மறுமை நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள் தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார். நூல்: அபூதாவூத் 4235

*வாதம் 03*
இன்ன பெண்ணுடன் அவர் தனிமையில் இருந்தார் என்பதற்கு சான்றுகள் இருக்க அவர் விபச்சாரத்தில் ஈடுபாட்டார் என்று நம்பாமல் எப்படி நம்புவது...? அதை எப்படி அவதூரு என்று மறுக்கலாம்..?

*அல்லாஹ் கூறுகிறான்*
وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ 
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (அல்குர்ஆன் : 24:4)
ஆயிஷா ரலி அவர்கள் ஒரு ஆணுடன் தனிமைப்பட வேண்டி ஏற்பட்ட அந்த சம்பவத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட விபச்சார குற்றசாட்டு தொடர்பில் தீர்வாக இறங்கிய வசனமே இந்த வசனம் இன்று ஆதாரங்களை மறுத்து வாதங்களை கொள்கையாக கொண்டு அடுத்தவர்களின் மானத்தில் கைவைப்போருக்கு இந்த தொடர் வசனங்களின் சபபுன் நுஸூல் போதுமானது..

*வாதம் 04*
நான்கு பேரை கூட்டிக் கொண்டு தான் ஒருவன் விபச்சாரம் செய்வானா..? Cctv , Video, Recording போன்ற வசதிகள் உள்ள காலத்தில் எதற்கு நான்கு சாட்சிகள்..?
*வஹியின் நிழலில் எமது பதில்*
1) இந்த வாதத்தை அல் குர்ஆன் முஃமீன்களுக்குரிய பண்புகளாக கூறும் பண்புகளை கொண்ட ஒரு முஃமின் முன்வைக்க மாட்டான்.
2) ஒருவர் விபச்சாரம் செய்தார் என்பதற்கு 100% வீதம் உறுதியான வீடியோ சான்றாகள் இருந்தால் கூட சம்பந்தபட்டவர் மறுக்கும் போது அதை நேரில் கண்ட நான்கு சாட்சிகள் தேவை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

காரணம் இஸ்லாம் அந்த அளவு ஒருவரின் மானத்தை பாதுகாக்கின்றது

*வஹியை அறிவிக்க ஒரு நபித்தோழர் போதும் அடுத்தவரின் மீது விபச்சார குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதற்கு நான்கு சாட்சிகள் தேவை அந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் வஹியை அறிவிக்கும் பத்ர் யுத்தத்தில் கலந்துகொண்ட ஒரு நபித்தோழராக இருந்தாலும் சரியே நான்கு சாட்சிகளை கொண்டுவராமல் இருந்தால் அவருக்கும் கஷையடி விழும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு எனும் போது வீடியோ, ஆடியோ போதுமான சான்று என்று கூறுவோர் அதற்கு வைக்கும் வாதங்கள் எதுவும் ஏற்புடையதல்ல என்பதை உறுதிப்படுத்த பின்வரும் செய்தி ஒரு பெரும் சான்றாக உள்ளது*

2671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று மீண்டும் கூறினார்கள்.அறிவிப்பாளர் கூறுகிறார்: 
இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) 'லிஆன்' தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 52. சாட்சியங்கள்..
தன் மனைவி விபச்சாரம் புரிவதை கண்களால் பார்த்து விட்டு நபி ஸல் அவர்களிடம் முறையிட்ட பத்ரில் கலந்துகொண்ட நபித்தோழர் அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் கூறிய முதல் பதில் என்ன..? ஆதாரம் கொண்டுவா.. இல்லை எனில் முதுகில் கசையடி விழும் என்பது தான் எனும் போது இந்த செய்திகளை கண்டுகொள்களாமல் எங்களுக்கு வீடியோ , ஆடியோ சான்று போதும் என்பவர்களின் நிலை என்ன..? விபச்சாரம் செய்வதை விட ஒருவர் மீது அவதூறு சொல்வது மிகப்பெரிய பாவமாகும்

*ஒருவரின் மானம் உலகில் உள்ள முதல் இறையில்லமாகிய கஃபாவை விட புனிதமானது*

துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள்.
அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள்.
நாங்கள் "ஆம்' என்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 67)

*உதாரணமாக:*
ஒருவர் விபச்சாரம் செய்வவதை நானும் இன்னும் இருவரும் நேரில் கண்டு விட்டோம் உரியவர் கையும் களவுமாக மாட்டி விட்டார் இப்படியான சந்தர்ப்பத்தில் அதை நாம் ஊர் ஜமாஅத்துக்கு கொண்டு சென்று அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்தால் கூட அந்த இடத்தில் தண்டிக்க பட வேண்டியவர்கள் நாங்கள் காரணம் எம்மிடம் நான்கு ஷாஹித்கள் இல்லை அவரின் மானத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்பதால்
இங்கே எமக்கு தண்டனை வழங்கபடுவதற்கு காரணம் நாம் பொய் கூறிமை அல்ல நாம் நேரில் கண்டது உண்மை அவரின் மானத்தை அம்பல படுத்தியமைக்ககே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
நல்லொழுக்கமுள்ள பெண்ணொருத்தியின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்து அதை நிரூபிக்கும் வகையில் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் குற்றச்சாட்டுச் சொன்னவர்களை எண்பது கசையடி அடிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டமாகும். அவர்களின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ 
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 24:5)

நான் விபச்சாரம் செய்தேன் என்று கூறியவறுடன் நபி ஸல் நடந்து கொண்டமுறை
6824. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள்.
அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்

வாதம் 05
என்னிடம் அவர் கூறினார் அவர் கூறுவது பொய் இல்லை என்பதை நான் அறிந்தேன் அதை. அப்படியே தனிப்பட முறையில் ஒரு சிலருடன் நல்ல எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன்.
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ 
நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை? (அல்குர்ஆன் : 24:12)

لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏ 
அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர். (அல்குர்ஆன் : 24:13)
உண்மையாக A யும் B யும் விபச்சாரம் செய்யும் காட்சியை கண்டவர் அதற்கு நான்கு பேரை சான்றாக நிறுத்த வில்லை என்றால் அவர் தான் பொய்யர் என்று அல்லாஹ் கூறுகின்றான் காரணம் அடுத்தவர்களின் மானம் புனிதமானது

வாதம் 06
மார்க்க விரோதிகளிடம் இவற்றை நாம் பரப்பவில்லை எங்க ஜமாஅத் உறுப்பினர்களுக்கு மத்தியில் தான் இவற்றை பகிர்ந்து கொண்டோம்.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏ 
நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது. (அல்குர்ஆன் : 24:15)

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏ 
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை? (அல்குர்ஆன் : 24:16)

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 
இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன் : 24:19)


*யார் மீது வீண் பழி சுமத்தபடுகின்றதோ..? அவரை பார்த்து அல்லாஹ் சொல்கின்றான்*
اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏ 
இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது. (அல்குர்ஆன் : 24:11)
அவதூறு கூறுபவர்கள் மார்க்கத்தின் இந்த எச்சரிக்கைகளை மனதில் கொண்டு அதுபோன்ற தீமைகளிலிருந்து விலகிட வேண்டும் என்று வாஞ்சையோடு கூறிக் கொள்கிறோம். அவ்வளவு எளிதில் நாங்கள் திருந்துவோமா என்று கேட்பவர்களாக இருந்தால் அவதூறு கூறுவதால் பாதிக்கப்படுவோர்க்கு நன்மைகள் தானே தவிர ஒரு பாதிப்பும் இல்லை தவிர அவதூறு கூறுவோர் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒரு போதும் தப்ப இயலாது.
*வாதம் 07*
இன்னவர் விபச்சாரம் செய்தார் என்பதற்கு எம்மிடம் வீடியோ, ஆடியோ ஆதாரமாக பாதுகாப்பாக உள்ளது அதை நாம் ஏன் அழிக்க வேண்டும்..?
*அல்லாஹ் கூறுகின்றான்*
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ‏ 
மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்; (அல்குர்ஆன் : 25:68)


يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ‏ 
மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான். (அல்குர்ஆன் : 25:69)

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 
ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான்.  
மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான் (அல்குர்ஆன் : 25:70)

وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا‏ 
எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார். (அல்குர்ஆன் : 25:71)

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 
மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:72)


இந்த அடியான் விபச்சாரம் செய்து எந்த ரப்பை கோபமடைய வைத்தானோ அப்படியாபட்ட ரப்புல் ஆலமீனே தவ்பா செய்து மீள்கின்றவர்களின் விபச்சார குற்றத்தை அழித்து நன்மைகளாக மாற்றும் போதும் அடுத்தவர்களின் மானம் தொடர்பான வீடியோ , ஆடியோ ஆதாரங்களை அழியாமல் பாதுகாக்க இவர்கள் யார்...?
*ஒரு பெண்ணை முத்தமிட்ட நபித்தோழர் அவர்களுக்கு நபி ஸல் சொன்ன பரிகாரம்*
இங்கே ஊர் நீக்கமோ.. ஜமாஅத் நீக்கமோ.. வேறு தடைளோ அவருக்கு இல்லை

4687. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்' எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது.

அந்த மனிதர், 'இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

கேட்டததை எல்லாம் உண்மை என கருதி பரப்பிக்கொண்டுள்ள சகோதரர்களுக்கு
அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி 2766)

33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6478

பொய்யான சொல்லை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் (22:30)
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)

                                                                                                         அஷ்சேஹ் இன்திஹாப் உமரி 
  

இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.
அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் “ஆடை” என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187
மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் “ஆடை” என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லாதவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
“இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.
ஆடைத் தெரிவு : 
நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.
இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.
அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.
சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். 
இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான். மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவி கணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ; அவளது பணத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக.

நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!
ஆடையில் அழகும் அந்தஸ்தும் :
மானத்தை மறைப்பதுதான் ஆடையின் அடிப்படை அம்சம்! எனினும் ஆடையைத் தெரிவு செய்யும் போது வெறுமனே அவ்ரத்தை மறைப்பதை மட்டும் நாம் கவனிப்பதில்லை. அந்த ஆடை எமக்கு அழகைத் தரவேண்டும் என்று விரும்புகின்றோம். அதன் மூலம் எமது உடல் சூடு, குளிரில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆடையின் மூலம் அந்தஸ்தை, மகிழ்ச்சியை என பல அம்சங்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
இல்லற ஆடையாகிய வாழ்க்கைத் துணைக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல. அங்கே மகிழ்ச்சி நிலவ வேண்டும், கணவன் எனும் ஆடை மூலம் மனைவியும், மனைவி எனும் ஆடை மூலம் கணவனும் சமூகத்தில் பாதுகாப்பையும், அலங்காரத்தையும், அந்தஸ்த்தையும் அடைய வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பாதுபாப்பும், அந்தஸ்த்தும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இவன்தான் உன் கணவனா(?) என்ற ரீதியில் அவள் அவமானத்தையோ, அசிங்கத்தையோ, இவனின் மனைவி என்றால் எப்படிவேண்டுமானாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒருபெண் சம்பாதிக்கக் கூடாது.
அவ்வாறே, இவளா உன் மனைவி(?) வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்ற தோரணையில் ஒரு கணவன் நோக்கப்படும் விதத்தில் மனைவியின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறே, ஆடை அழகையும், அந்தஸ்தையும் அபயமற்ற நிலைமையையும் தர வேண்டும்.
ஆடையின் தன்மையறிந்து பணி செய்வோம்!
நாம் வெள்ளை நிற ஆடை அணிந்து வயலில் வேலை செய்ய மாட்டோம். மென்மையான ஆடையணிந்து கடின பணிகளில் ஈடுபடமாட்டோம். விளையாட்டுக்கு, வீட்டு வேலைக்கு, ஆலயத்திற்கு, தொழில் செய்வதற்கு என பணிகளுக்கு ஏற்ப ஆடை அணிகின்றோம். ஆடையின் தன்மையறிந்தே செயல்படுகின்றோம். இவ்வாறே இல்லறம் இனிமையாக அமைய வாழ்க்கைத்துணை எனும் ஆடை பற்றிய அறிவும் அதற்கேற்ற செயற்பாடும் அவசியமாகும்.
இல்லற வாழ்வில் இணைந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, விட்டுக் கொடுத்து அல்லது விட்டுப்பிடித்து செயல்பட அறிந்து கொள்ள வேண்டும்.
சில கணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, தேநீர் இல்லாவிட்டால் கோபம் வரும். சிலருக்கு ஆடைகள் ஒழுங்காக கழுவப்படாவிட்டால் பிடிக்காது. சில பெண்களுக்கு கணவன், தன் குடும்பத்தவர் பற்றிய குறைகளைப் பேசினால் பிடிக்காது. இவ்வாறான பல பிடிக்காத விடயங்கள் இருக்கும். இவற்றைப் புரிந்து, தவிர்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் நெருப்பானால் மற்றவர் பஞ்சாகாமல் நீராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஆடையை அறிந்து செயல்படும் பக்குவம் இன்பமான இல்லறத்திற்கு இன்றிய மையாததாகும்.
ஆடையின் குறையை மறைப்போம்: 
எமது ஆடையில் ஏதேனும் அழுக்கோ, அசிங்கமோ பட்டுவிட்டால், அல்லது ஏதேனும் கிழிவுகள் ஏற்பட்டுவிட்டால் எமது கௌரவத்திற்காக அதை மறைக்கவே முயல்வோம். அழுக்குப்பட்ட பகுதி வெளியில் தெரியாமல் அணியமுடியுமாக இருந்தால் அதை அப்படியே அணிவோம். இல்லற ஆடையையும் இப்படித்தான் நாம் கையாள வேண்டும். என் கணவர் மோசம், அவர் சரியில்லை. கருமி, முன்கோபக்காரர், மூர்க்கமாக நடப்பவர் என்று மனைவியோ, அவள் சரியில்லை ஒழுக்கமில்லாதவள், ஒழுங்காகப் பேசவோ, நடக்கவோ, சமைக்கவோ தெரியாதவள், ஆணவக்காறி, அடங்காப்பிடாரி என்று கணவனோ வாழ்க்கைத் துணை எனும் ஆடையை அசிங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
ஆடையில் அழுக்குப்பட்டால் :
நாம் எவ்வளவுதான் நிதானமாக நடந்தாலும் எமது ஆடையில் அழுக்குப்படவே செய்யும். அது கசங்கிப்போகும். அதற்காக அதை கழற்றி எறிந்தா விடுகின்றோம். அழுக்கு நீங்கக் கழுவி, மடிப்பு நீங்க அயன் பண்ணி மீண்டும் அணிந்து கொள்கின்றோம். ஏன் சின்னச் சின்ன கிழிசல்களைக் கூட தைத்து மறுபடியும் அணிந்து கொள்கின்றோம்.
இவ்வாறுதான் வாழ்க்கை வண்டி நகர நகர புதிய புதிய பிரச்சினைகள் புற்றீசல் போல் கிளர்ந்து வரலாம். அவை எமது தவறான அணுகு முறைகளால் பூதாகரமாகக் கூட மாறிப் போகலாம். இச்சந்தர்ப்பங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாற்போல் செயல்பட்டு இல்லற ஆடையைக் கழற்றி எறிந்து விடக் கூடாது. அழுக்குப்பட்டால் கழுவுவது போல், நொறுங்கிப் போனால் அயன் பண்ணுவதுபோல், கிழிந்தால் தைத்துக்கொள்வது போல் சமாளித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு “முஃமினான ஆணும் (தன் மனைவியான) முஃமினான பெண்ணிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தியுறட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் இதனையே கூறியுள்ளார்கள்.
ஆடையே அவமானமாக மாறல் :
ஆடையில் அழுக்கு நீக்குவது போல் இல்லற ஆடையின் குறைநீக்க இஸ்லாம் வழி கூறுகின்றது.
ஒரு பெண்ணிடம் கணவன் குறைகாணும் போது பின்வரும் வழிமுறைகளையே கையாள வேண்டும்.
01. இதமாக எடுத்துக்கூற வேண்டும். இதனால் அவள் திருந்தவில்லையாயின்
02. படுக்கையை வேறாக்கி அவளை உளவியல் ரீதியாக திருத்த முற்பட வேண்டும். அதனாலும் மாற்றம் ஏற்படவில்லையானால்
03. காயம் ஏற்படாதவாறு இலேசாக அடித்து விவகாரம் விகாரமாகிச் செல்வதை உணர்த்த வேண்டும்.
04. இதுவும் பயன்தராத பட்சத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருவரிடம் விபரத்தைக்கூறி சுமூகமாக தீர்வு காண முயல வேண்டும்.
இதையும் தாண்டிவிட்டால் இருவரும் இனிமையாக இல்லறம் நடத்த முடியாது என்பது உறுதியாகும் போதும் மட்டும் தான் “தலாக்” என்கிற இறுதிக்கட்டத்திற்கு வர வேண்டும்.
ஒருவன் அணிந்த ஆடையே அவனுக்கு அவமானத்தை தருகின்றது என்றால், மானத்தை மறைப்பதற்குப் பதிலாக மானபங்கப் படுத்துகின்றது என்றால், அழகுக்குப் பகரமாக அசிங்கத்தையும், கௌரவத்திற்குப் பகரமாக அவமானத்தையும் தருகின்றது என்றால் அவன் அதைக் களற்றிப்போடுவதே சிறந்ததாகும். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், சிலர் துரதிஷ்ட வசமாக இறுதி முடிவையே ஆரம்பத்தில் எடுத்து வருவது தான் ஆச்சரியமாகவுள்ளது.
                                                                                                                     அஷ்சேஹ்  இஸ்மாயில் ஸலபி

உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள வேணடுமென்பதில் அதிக கரிசனை காட்டுவான்.
அந்த வகையில்தான் ஒரு முஃமினின் இலட்சியம், நோக்கங்களில் மிகப் பிரதானமானது வானம் பூமியை விட விசாலமான சுவனத்தை அடைவதாகும். இந்த சுவனத்தை அடைவதாக இருந்தால் உண்மையில் நாம் செய்கின்ற அமல், இபாதத்கள் மட்டும் போதாதாகும். சுவனம் நுழைவதாக இருந்தால் அல்லாஹ்வுடைய றஹ்மத் கிடைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் ஹதீஸ்கள் மூலமாகவும் அறியலாம்.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து உங்களில் ஒருவர் தான் செய்த அமல்கள் மூலமாக சுவனம் நுழையமாட்டார். அல்லாஹ்வுடைய றஹ்மத் இருந்தாலே தவிர என்ற கருத்தில் கூறிய போது அல்லாஹ்வுடைய தூதரே நீங்களும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் நுழைய முடியாதா என்று ஸஹாபாக்கள் கேட்க நானும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் முடியாது என்று நபியவர்களே கூறினார்களென்றால் நானும் நீங்களும் கட்டாயமாக இது பற்றி சிந்திக்க வேண்டும்.
அந்த ஸஹாபாக்களது வாழ்வைப் பற்றி நாம் நாளாந்தம் அறிந்து கொண்டே இருக்கிறோம். அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வுக்காக தங்களது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்தார்கள். தங்களது சொந்த பந்தங்களை இழந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்தவர்கள். அந்த ஸஹாபாக்களுக்கே இந்த நிலையென்றால் நானும் நீங்களும் எந்தளவு இந்த விடயத்தில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். எனவே அல்லாஹ்வுடைய றஹ்மத் பற்றிய சிறு அறிவு எமக்கு அவசியமாகும். எனவே இந்த தலைப்பை சில உப தலைப்புகளைக் கொண்டு அவதானிப்போம்.
01) அல்குர்ஆன் றஹ்மத் என்று எவைகளை அடையாளப்படுத்துகின்றது.
முதலாவது வசனம் 

{قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون}
“அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும் அவனுடைய கருனை கொண்டுமுள்ளதாகும். ஆகவே அவர்கள் அதைக் கொண்டு சந்தோஷமடையட்டும்.இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றை விட மிகச் சிறந்தது என்று நபியே நீர் கூறுவீராக” (10:58)

இவ்வசனத்துக்கு உலமாக்கள் விளக்கம் சொல்லும் போது இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் அல்குர்ஆனையே குறிக்கின்றது என்ற கருத்தில் விளக்கம் சொல்லி இருக்கின்றார்கள். ஏனெனில் அல்குர்ஆனது நாம் அறியாத விடயங்களை எமக்கு கற்றுத் தருகின்றது. எமக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மை நரகை விட்டும் பாதுகாக்கின்றது. எனவே அல்குர்ஆன் அல்லாஹ்வின் மாபெரும் றஹ்மத்தாகும்.
இரண்டாவது வசனம்
{قل ياعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله}
“வரம்பு மீறி தவறு செய்த என்னுடைய அடியார்களே நீங்கள் அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” (39:53)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பாவமன்னிப்பு, தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுதல் என்ற அர்த்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் தவறுகள் செய்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கின்ற போது அல்லாஹ் அவனது றஹ்மத்தினால் அவைகளை அப்படியே அழித்து விடுகிறான்.
மூன்றாவது வசனம்
{إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي}
“நிச்சயமாக உள்ளங்கள் பாவங்கள் பால் சாயக்கூடியதாகும். என்னுடைய இரட்சகன் அன்பு காட்டியவர்களைத் தவிர” (12:53)
இந்த வசனம் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகும். அரசரின் மனைவி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தவறான அழைத்ததன் பிற்பாடுதான் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த செய்தியைக் குறிப்பிட்டார்கள்.
எனவே ஒரு மனிதன் பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதும் அல்லாஹ்வின் றஹ்மத்தில் உள்ளதாகும்.
நான்காவது வசனம்
{إن رحمت الله قريب من المحسنين}
“அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு சமீபத்தில் இருக்கிறது” (07:56)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்பது நன்மை கூலி என்ற அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஐந்தாவது வசனம்
{ذكر رحمت ربّك عبده زكريا}
“இது உமது இரட்சகன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு புரிந்த அருள் பற்றி நினைவு கூர்வதாகும்.” (19:02)

இந்த வசனம் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதியவராக இருந்தும் பிள்ளை கிடைக்காத சந்தர்ப்பத்தில் இறைவனிடம் தனக்கு ஒரு பிள்ளையை தருமாறு பிரார்த்தித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அன்பளிப்பாக வழங்கி அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். எனவே நாம் கேட்கின்ற பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அல்லாஹ்வுடைய றஹ்மதில் உள்ளதாகும்.
ஆறாவது வசனம்
{ أولئك يرجون رحمة الله}
“அவர்கள் அருளின் பக்கம் ஆதரவு வைப்பார்கள்” (02:218)

இத்திருமறை வசனத்தில் வருகின்ற றஹ்மத் என்ற பதம் சுவனம், கூலி என்ற கருத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட திருமறை வசனங்களிலும் இதுவல்லாமல் இன்னும் சில வசனங்களில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பல்வேறுபட்ட அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வர்த்தங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து விளங்குவதாயின் அல்லாஹ்வுடைய றஹ்மத் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கின்ற எல்லாவிதமான சிறப்புகள், அபிவிருத்திகளையும் குறிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக
வாழ்கின்ற காலப்பகுதியில் அல்லாஹ்வுடைய றஹ்மதை சரியான முறையில் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..

                                                                                M.F.பர்ஹான் அஹமட் ஸலபி

இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட உளத்தூய்மைக்கு பேதிய சான்றாகும்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹ் அல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன். நூல் – முகத்திமா இப்னுஸ் ஸலாஹ் – 10 இப்னுஸ் ஸலாஹ் ரஹிமஹுல்லாஹ்.
முஹம்மத் இப்னு ஹம்தவைஹி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன் என்று கூறியதை தாம் கேட்டதாக கூறியுள்ளார்கள். நூல் – முகத்திமது பத்ஹில் பாரி – 488. ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்,
இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவில் உறங்கச்சென்று இடையில் கண்விழித்தால் உடனே விளக்கைப் பத்தவைத்து தமக்கு ஞாபகத்துக்கு வருகின்ற ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக்கொள்வார்கள்.
இப்படியாக ஓர் இரவில் மாத்திரம் கிட்டத்தட்ட இருபது தடவைகள் விழித்தெழுந்து ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக் கொள்வார்கள். நூல் – அல்பிதாயா வந்நிஹாயா 11/31. இமாம் இப்னு கஸீர் அத்திமிஷ்கி ரஹிமஹுல்லாஹ்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் நான் ஸஹீஹுல் புஹாரியின் எந்த ஒரு ஹதீஸை எழுதுவதற்கு முன்பும் குளித்து சுத்தமாகி இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுதுவிட்டே எழுதுவேன். நூல் – பத்ஹுல் பாரி – 1/7 ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்.
வுழுவுடன் பல்லாயிரக்கணக்கான ரக்அத்துக்கள் நபிலான தொழுகைகள் தொழுது, தொழுது பிரார்த்தித்து எழுதப்பட்ட ஹதீஸ் தொகுப்பே ஸஹீஹுல் புஹாரியாகும்.
அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
(எனது உஸ்தாத்) அலி இப்னு மதீனீ அவர்களைக் கண்டால் சிறுபிள்ளையைப் போன்று என்னை நான் அற்பமாகக் கருதிக் கொள்வேன். தத்கிரதுல் ஹுப்பாழ் – 2/428 இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
தனது துறையில் தான் உச்சத்தில் இருந்த போதும் பெருமையற்று, சத்தியத்தில் நிலைத்திருந்த மூத்த அறிஞர்களை மதிக்கின்ற உயர்ந்த குணமே இமாமவர்களின் அறிவின் அபிவிருத்திக்கும் மக்களிடையே அவர்களுக்குள்ள நன்மதிப்புக்கும் மிகப்பெரிய காரணியாய் அமைந்தது.
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களது இரு கண்களுக்கும் இடையில் முத்தமிடுவார்கள், பின்பு ஆசான்களுக்கெல்லாம் ஆசானே முஹத்திஸீன்களின் தலைவரே என்னை விடுங்கள் நான் உங்கள் கால்களை முத்தமிடுகிறேன் எனக்கூறுவார்கள் என்பதாக அஹ்மத் பின் ஹம்தூன் இன்திஸார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்கள் – அல் பிதாயா வந்நிஹாயா, தாரீஹ் பக்தாத், தாரீஹ் திமிஷ்க், தாரீஹ் நைஸாபூர்
அல்லாமா ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ” உம்ததுஸ் ஸாமிஃ வல் காரி பீ பவாயிதி ஸஹீஹில் புஹாரி” என்ற அழகான நூலை தொகுத்துள்ளார்கள் அந்த நூலை அல்லாமா ஜாமிஃ ரிழ்வான் ஜாமிஃ அவர்கள் தஹ்கீக் செய்துள்ளார்கள், இதனை படிப்பதன் மூலம் ஸஹீஹுல் புஹாரியின் போங்கு பற்றிய தெளிவைப் பெற முடியும்.
அல்லாமா அப்துஸ் ஸலாம் முபாரக்பூரி அவர்கள் “ஸீரதுல் இமாம் அல் புஹாரி” என்ற தமது நூலில் ஸஹீஹுல் புஹாரியின் பயன்கள், புஹாரிக்கான விரைவுரைகள் பற்றிய மேலதிக விளக்கங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாமா முஹம்மத் இஸாம் அரார் அல் ஹுஸைனி அவர்கள் தமது “இத்திஹாபுல் காரி பிமஃரிபதி ஜுஹூதி வஅஃமாலில் உலமா அலா ஸஹீஹில் புஹாரி” என்ற நூலில் ஸஹீஹுல் புஹாரிக்கான விரிவுரைகளில் 375 நூல்களை குறிப்பிட்டுள்ளார்கள், இதில் ஒன்றையோ இரண்டையோ முழுமையாக வாசிக்க எம்மால் முடியாவிட்டாலும் கூட இப்படி விரிவுரை நூல்களை இமாம்கள் ஏன் எழுதினார்கள் என்பதனை சிந்தித்தாவது பார்க்க வேண்டும்.
காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு ஏசி அறைகளுக்ககுள் மடிக்கணினியின் முன் அமர்ந்து கொண்டு கண்மூடித்தனமாக இமாம்களை விமர்சிப்பவர்கள் இந்த துறைக்காக இமாம்கள் தமது வாழ்நாட்களையே எவ்வாறு அர்ப்பணித்திருக்கிறார்கள், அவர்கள் தமது மூத்த அறிஞர்கள், முன் வாழ்ந்த நல்லோர்களை எப்படி கீர்த்திப்படுத்தியுள்ளார்கள் என்பது பற்றி கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுவார்களாக!
எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக!
                                                            
                                                         -அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget