January 2019

அல்லாஹ்வின் பண்புகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வழிகேடுகளும் அதற்கான காரணங்களும்

உரை:- மௌலவி அன்ஸார் தப்லீகி


எமது முஸ்லீம் சமுதாயத்தில் சிலர், தனிமனிதர்கள் மீது கொண்ட எல்லை கடந்த மரியாதை, அன்பு போன்றவற்றினால் அவர்கள் அல்லாஹ் விடத்தில் மிக நெருக்கமான இறைநேசகர்கள் என்று எண்ணி, இறைவனிடம் கேட்கவேண்டிய இறைமன்னிப்பையும் ,பிரார்த்தனைகளையும் அந்த நேசகர்களிடம் கேட்கின்ற நிலையைக் காண்கின்றோம்.

அல்லாஹ்வோ அவன் நேசிக்கக்கூடிய மனிதர்களுக்கு சில தகைமைகள் இருக்க வேண்டும் என்று, அவனுடைய திறுமறையில் குறிப்பிடுகின்றான்.
ஆனால், இன்று மக்களால் இறை நேசகர்களாக கருதப்படுபவர்களிடத்தில், சாதாரண மார்க்க அறிவோடுள்ள ஒரு பாமர மனிதன் செய்யும் கடமையான ஐவேளைத் தொழுகை, நோன்பு, கடமையான குளிப்புக்கள்,கடமையான சுத்தம் போன்றவை கூட இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இப்படிப்பட்டவர்களை மட்டுமல்லாது புத்திசுயாதீன மற்றவர்களைக் கூட இன்று எமது சமூகம் அவுலியாக்கள் என்று கூறி வழிப்படுவது, இஸ்லாம் கூறிய இறைநம்பிக்கைக் கோட்பாடு இவர்களிடத்தில் இடம் பிடிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
 அல்லாஹ்வோ இறை நேசகர்களுக்கு இருக்க வேண்டிய பண்பை திருமறையில் கூறுகையில், "الا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون . الذين أمنوا و كانوا يتقون "
(سورة يونس -62,63) 

“(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை. அவர்கள் கவலையையையும் அடையமாட்டார்கள்.” “அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்.”

இதனடிப்படையில், அல்லாஹ் நேசிக்கும் ஒர் அடியான் ,அல்லாஹ்வை ஈமான் கொள்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல் அவனின் அனைத்து செயற்பாடுகளிலும் இறையச்சத்தோடு செயற்படுவான் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

உதாரணமாக:-
அவனின் சம்பாத்தியத்தில் இறைவன் தடுத்த ஹராமானதை விட்டும் விலகி ஹலாலான முறைகளில் சம்பாதிப்பது, அதில் அவனுக்குக் கடமையான ஸகாத்தை நிறைவேற்றுவது, இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோசனமளிக்கும் கல்வியைத் தேடுவது, இவ்வாறு சிறு விடயமான பாதணி அணிவது தொடக்கம் கொடுக்கல் வாங்கல் வரை, ஒட்டுமொத்த அவனது வாழ்கையில் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களை எடுத்து நடந்து, இறைவனுக்குப் பயந்து நடக்கும் ஓர் அடியானால் மாத்திரம் தான் இறை நேசகராக மாறமுடியும்.

இந்தப் பண்பாட்டை விட்டு விட்டு தன் மனோஇச்சைப்படி அல்லது மார்க்க சட்டங்களை தகர்த்தெறியுமளவு வாழக்கூடிய ஒருவரால் இறை நேசகராக மாறமுடியாது. மாறாக, அவன் ஷைத்தானின் நேசகனாகத்தான் ஆகமுடியும்.
இறை நேசகனின் மற்றுமொரு பண்பை நபி (ஸல்) கூறுகையில்,
"قال النبي (صلى) : ((ىقول الله تعالى: من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء احب الي اقترضت عليه, وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها , ورجله التي يمشي بها, وإن سألني لأعطينه ولإن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت و انا أكره مساءته))

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் கூறுகின்றான்: எவன் என் நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கின்றேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலாக (நபீலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். 
அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கின்றான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.”

ஒரு அடியான், அவன் மீது கடமையாக்கப்பட்ட வணக்கங்களோடு மட்டும் நின்றுகொள்ளாமல் மேலதிகமாக (நபீலான) வணக்கவழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் அந்த அடியானை நேசிப்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் . 
ஆனால், எம்மத்தியில் அவ்லியாக்கள் என்ற பெயரில் இருப்பவர்கள்,

“அல்லாஹ் கடமையாக்கிய ஐவேளை தொழுகையைக் கூட விட்டுவிட்டு, தாங்கள் இறைவனோடு நேரடியாகப் பேசுகின்றோம், தொழுகை எங்கள்மீது கடமை இல்லை ” என்று கூறுகின்றனர்,
ஆனால், வலிமார்களுக்கல்லாம் மிகப் பெரும் வலியான நபி(ஸல்) மரணத்தருவாயில் கூட தொழுகையை நிலைநாட்டி மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டிருக்க இப்படியான கூற்றுக்களை கூறி மக்களை ஏமாற்றும் இவர்கள் எப்படி இறை நேசகர்களாக முடியும்?......

எனவே , இறைவனின் உண்மையான நேசகர்கள் அவனை ஈமான் கொண்டு உயிருக்கு மேலாக அவனை நேசித்து,அவன் நேசிப்பவர்களை நேசித்து, அவன் வெறுப்பவர்களை வெறுத்து, அவன் பொருந்திக்கொள்பவர்களை பொருந்திக்கொண்டு, அவன் கோபம் கொள்பவர்களை கோபாம் கொண்டு, அவன் ஏவியவற்றையெல்லாம் ஏவி, அவன் தடுத்தவற்றையெல்லாம் தடுத்து, வாழ்பவர்களே உண்மையான இறை நேசகர்களாவார்கள்.
எனவே, இப்படிப்பட்ட இறைவன் நேசிக்கும் சிறந்த மக்களோடு அல்லாஹ் எம்மையும் சேர்த்து வைப்பானாக!....

                                                       மௌலவியா:- 
றுஸ்தா அஷ்ஷரயிய்யாஹ்

மார்க்கத்துக்கு முரண்பாடான செய்யலை செய்தால் அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்குமா ? அந்த அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? என்பதை நாம் விளங்க வேண்டும்! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லி கொண்டு காலத்தை கடத்தி செல்வதினால் என்ன பலன் கிடைக்க போகிறது? இவர் முறையாக மார்க்கத்தை கற்று ,நபி வழியை பின்பற்றி வந்தார் என்றால் அவரின் பிள்ளை அவருக்காக துஆச் செய்யும் , மார்க்கத்தில் இல்லாத சடங்கு ,சன்பிராதயம் இப்படி செய்து கொண்டு போனால் நாளை மறுமையில் போகும் இடம் நரகமாகத்தான் அமையும் நம் அனைவரையும் அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.கேள்வி:- நான் ஒரு தொழுகை நேரத்தை அடைந்து விட்டேன் உதாரணமாக லுஹர் தொழுகைக்கான நேரமாகிவிட்டது. எனினும் என் வீட்டுவேலை காரணமாக நேரம் முடிவடைவதற்கு முன் தொழுவோம் என்று நான் எண்ணியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? குறிக்கப்பட்ட தொழுகையை சற்று தாமதப்படுத்தியதால் நான் குற்றவாளியாவேனா? அல்லது தூய்மையானதன் பின் நான் அதை கழா செய்ய வேண்டுமா.?

பதில்:- அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் வஅலா ஆலிஹி வசஹபிஹி வமன் தபியகும் பிஇஹ்சான் இலா யவ்மித்தீன்.

சகோதரி கேட்ட குறிக்கப்பட்ட கேள்வி பொதுவாக பல பெண்களுக்கு எழுகின்ற சந்தேகமே! இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் ஒரு விடயத்தை சொல்லிக்கொள்கின்றேன்.
அல்லாஹ் கூறுவதைப்போன்று தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. உதாரணமாக, அதான் சொல்லி பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் உதிக்கும் வரை பஜ்ர் தொழுகையின் நேரமாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் குறிப்பிட்ட நேரவரையறை இருக்கிறது. இந்த நேரத்திற்குள் எம் தொழுகைகளை நாம் தொழுதாக வேண்டும்.

எனினும் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தொழுவது மிகவும் சிறப்புக்குரிய விடயமாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»

நான் நபி(ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது எனக்கேட்டேன். அதற்கவர் “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவதாகும்” என்றார். பின்னர் எது? எனக்கேட்டேன். அதற்கவர் “பின்னர் பெற்றோருக்கு நல்லறம் செய்வதாகும்” என்றார். பின்னர் எது? எனக்கேட்டேன். அதற்கவர் “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதாகும்” என்றார். (அல்புகாரி-112)

மேற்படி ஹதீஸில் “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவதாகும்” எனும் வாசகத்திற்கு இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் விளக்கம் சொல்லும் போது : தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் எனக்கூறியிருக்கின்றார்கள்.

அதாவது மஸ்ஜிதில் ஜமாஅத்தாக தொழுபவர்கள் பெரும்பாலும் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தான் தொழுவார்கள். அவ்வாறே வீட்டில் தொழும் பெண்களான நாங்களும் ஆரம்ப நேரத்தில் எமது தொழுகையை அமைத்துக்கொள்வது மிகச்சிறந்ததாகும். ஆயினும் ஒரு பெண் அவளது வேலைப்பளு காரணமாக ஆரம்ப நேரத்தில் தொழவில்லை எனின் அவள் மீது தவறில்லை. மாறாக நேரம் முடியும் வரை அவள் பொடுபோக்காக இருந்தால் அவள் குற்றவாளியாக ஆகிவிடுகிறாள்.

முதலாவதாக , குறிக்கப்பட்ட சகோதரி “தொழுகையை தாமதப் படுத்தியதால் நான் குற்றவாளியா ?” என கேட்டிருக்கிறார் . நிச்சயமாக இல்லை . ஏனெனில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேர வரையறைக்குள்தான் தாமதப்படுத்தியுள்ளீர்கள். அதற்கிடையில் மாதவிலக்கு ஏற்பட்டது உங்களின் சக்திற்கு அப்பாற்பட்ட ஒன்று . எனினும் சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்குரிய அடையாளமாக அது ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னிருந்தே அவர்களின் உடம்பில் சில மாற்றங்கள் வெளிப்படும் . அப்படிப்பட்டவர்கள் தொழுகையை பிற்படுத்தாமல் ஆரம்ப நேரத்திலேயே தொழுது கொள்ள வேண்டும் 

இரண்டாவதாக , “ நான் சுத்தமான பின் அத்தொழுகையை களா செய்ய வேண்டுமா? எனக் கேட்டுள்ளீர்.
“இல்லை” ,அவ்வாறு கட்டாயமாக கழாச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் எந்த ஆதாரத்தையும் குர்ஆன் சுன்னாவிலிருந்து நாம் காணவில்லை .

என்றாலும் சில அறிஞர்கள் அவள் கட்டாயம் கழாச் செய்ய வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
صحيح مسلم (1/ 477)
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَسِيَ صَلَاةً، أَوْ نَامَ عَنْهَا، فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا

யார் ஒரு தொழுகையை மறந்து விடுகிறாரோ அல்லது தூங்கிவிட்டாரோ அதற்குரிய பரிகாரம் அவர் நினைவு கூர்ந்தால் தொழுவதாகும் ( முஸ்லிம் ) இந்த ஹதீஸ் சஹீஹுல் புகாரி மற்றும் பல ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது .

இந்த ஹதீஸைப் பொறுத்த வரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் தொழுகையை விட்டவருக்குரிய பரிகாரத்தையே கூறியிருக்கிறார்கள் . “கழா” என்றால் நேரத்திற்கு நிறை வேற்றப்பட்டாத ஒரு கடமையை தாமதப்படுத்தியேனும் நிறை வேற்றுவதாகும்.

தொழுகையைப்பொருத்தவரை எந்தசந்தர்ப்பத்திலும் அதை விட்டு விட்டு நேரம் முடிந்த பின் கழாசெய்ய முடியாது .அவ்வாறு முடியும் என்றிருந்தால் போர் நேரங்களில் அதை விட்டு விட்டு பின்னர் கழா செய்யுமாறு நபி (ஸல்) பணித்திருப்பர்கள். ஆனால் இஸ்லாத்தில் அச்சந்தர்ப்பத்தில் கூட தொழுகையை விட அனுமதியில்லை.

எனினும் தொழும் நேரத்தில் தூங்கியவர், அல்லது அதை மறந்தவர் இவர்கள் இருவரையும் பொறுத்தவரையில் அவர்களின் தொழுகை நேரம் எழும்பியவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழுவது ஆகும் . அது எந்த நேரமாக இருந்தாலும் சரியே .எக்காரணம் கொண்டும் அவர்கள் அதை பிற்படுத்தி கழா செய்ய முடியாது.

எனவே இவர்கள் இருவருக்கும் குறிப்பாக்கப்பட்ட விடயம் . இது மாதவிலக்கு ஏற்றப்பட்ட பெண் விடயத்தில் ஆதாரமாக மாட்டாது.
ஆக , அவள் தூய்மையடைந்த பின் அத்தொழுகையை கழா செய்யவேண்டும் என்பதற்கு எந்த தெளிவான ஆதாரமும் இல்லாததால் அது அவள் மீது கடமையாக மாட்டாது.
.
இதையே ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள் الفتاوى الكبرى لابن تيمية (2/ 303)
وَالْأَظْهَرُ فِي الدَّلِيلِ مَذْهَبُ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ أَنَّهَا لَا يَلْزَمُهَا شَيْءٌ؛ لِأَنَّ الْقَضَاءَ إنَّمَا يَجِبُ بِأَمْرٍ جَدِيدٍ، وَلَا أَمْرَ هُنَا يَلْزَمُهَا بِالْقَضَاءِ، وَلِأَنَّهَا أَخَّرَتْ تَأْخِيرًا جَائِزًا فَهِيَ غَيْرُ مُفَرِّطَةٍ، وَأَمَّا النَّائِمُ أَوْ النَّاسِي - وَإِنْ كَانَ غَيْرَ مُفَرِّطٍ أَيْضًا - فَإِنَّ مَا يَفْعَلُهُ لَيْسَ قَضَاءً، بَلْ ذَلِكَ وَقْتُ الصَّلَاةِ فِي حَقِّهِ حِينَ يَسْتَيْقِظُ وَيَذْكُرُ، كَمَا قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «مَنْ نَامَ عَنْ صَلَاةٍ أَوْ نَسِيَهَا فَلْيُصَلِّهَا إذَا ذَكَرَهَا فَإِنَّ ذَلِكَ وَقْتُهَا»>

இறுதியாக ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் . அதாவது , ஒரு பெண் “தொழுகையைத் தான் தாமதப்படுத்தியதால் தான் விட நேர்ந்தது” என்று எண்ணி தூய்மையடைந்த பின் கழா செய்யவிரும்பினால் அது அவளின் பேணுதலைபொருத்தது .அவ்வாறு செய்பவர்களை தடுப்பதும் அனுமதி இல்லை.

அதே போன்று அவளது சக்தியை மீறி கடமையற்றதாக மாறிவிட்ட ஒன்றை கழா செய்யுமாறு கட்டாயப்படுத்துவதும் அனுமதியல்ல. எனவே இறைத்தூதரின் வழிகாட்டலோடு நின்றுகொள்ள அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக.

                                                       மௌலவியா:- உம்மு அஹ்மத் ஷரஇயா 

உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும்.
உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும் ஜமாஅத்துத் தொழுகையின் அவசியத்தையும் அத்துடன் தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியத்தையுமே வலியுறுத்துகின்றன. அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விடப்படும் அமலாக தொழுகையும் ஜமாஅத்துத் தொழுகையும் இன்று மாறியுள்ளது. இது எமது பலவீனத்தின் வெளிப்பாடாகும்.
அச்சவேளைத் தொழுகைக்கான ஆதாரங்கள்:


அச்சமான வேளையில் தொழுகையின் முறைகளில் சில தக்ஸீர் – சுருக்குதல்களைச் செய்யலாம் என்பதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்ளலாம்.
“நீங்கள் பூமியில் பயணிக்கும் போது நிராகரித்தோர் உங்களைத் தாக்குவார்கள் என அஞ்சினால் தொழுகையை நீங்கள் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது குற்றம் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்குப் பகிரங்க விரோதிகளாகவே இருக்கின்றனர்.” (4:101)
பயணத்தில் நான்கு ரக்அத்துக்களை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் பயமான சுழலில் தொழும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதற்கும் இந்த வசனம் அனுமதி தருகின்றது.
“(நபியே) நீர் அவர்களுடன் (போர்க் களத்தில்) இருக்கும் போது அவர்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர்களில் ஓர் அணியினர் உம்முடன் தமது ஆயுதங்களை ஏந்தியவர்களாக (தொழுவதற்கு) நிற்கட்டும். அவர்கள் சுஜூது செய்து விட்டால் (அணியிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கட்டும். தொழாத மற்ற அணியினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் ஆயுதங்களிலும் உங்கள் பொருட்களிலும் கவனக்குறைவாக இருந்தால் உங்களை ஒரே தடவையில் தாக்கிவிட நிராகரிப் பாளர்கள் விரும்புகின்றனர். மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. ஆனாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்துள்ளான்.”(4:102)
மேற்படி வசனம் அச்சநேரத் தொழுகை பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்த வகையில் அச்ச நேரத் தொழுகைக்கான நேரடி ஆதாரமாக இரு அமைந்துள்ளது.
அத்துடன் நபி(ஸல்) அவர்களும் அச்ச வேளைத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள். ஆனால், இந்த சட்டம் நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது மட்டும் பின்பற்றப்படுமா அல்லது அவர்களது மரணத்தின் பின்னரும் இந்த சட்டம் இருக்கின்றதா? என்பதில் அறிஞர்களில் இமாம் அபூ யூசுப் (ரஹ்) மாற்றுக் கருத்தில் உள்ளார்.  
“நீர் அவர்களுக்குத் தொழுவிக்க எழுந்து நின்றால்” என நபி(ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறப்பட்டுள்ளதால் இது நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது மட்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முறையாகும் என அவர் கருதியுள்ளார். ஆனால், அது ஆதாரங்களுக்கு முரணாகும்.
  1. “என்னை எப்படித் தொழக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் தொழுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் பொதுவாகக் கூறியுள்ளார்கள். அதில் அச்சவேளைத் தொழுகையும் அடங்கும்.
  2. நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின் போர்க்களங்களில் நபித்தோழர்கள் இப்படித் தொழுதுள்ளார்கள் என பல அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது மட்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முறை என நபித்தோழர்கள் விளங்கியிருக்க வில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
அலி(ரலி) அவர்கள் இவ்வாறு போர்க்களத்தில் தொழுதுள்ளார்கள். அபூ மூஸல் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அஸ்பஹான் போரில் இவ்வாறு தொழுதுள்ளார்கள். ஹுதைபதுல் யமான்(ரலி) அவர்கள் திப்ரிஸ்த்தானில் தொழுதுள்ளார்கள். எனவே, அச்சவேளைத் தொழுகை முறை நபிகளாரின் காலத்துடன் முடிந்துவிட்டது என்பது தவறான முடிவாகும்.
அச்சவேளைத் தொழுகை முறை பற்றி விரிவாக விளக்குவது அலுப்பைத் தருவதுடன் போதிய தெளிவைத் தரமாட்டாது என எண்ணுகின்றேன். ஏனெனில், எமது நடைமுறையில் அது இல்லை எனக் கருதி கூடுதல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதால் அச்சநேரத் தொழுகை முறை பற்றி வந்துள்ள சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தர விரும்புகின்றேன்.
ஷுஜப் அறிவித்தார்: “நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா?” என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். “நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்” என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.” (புகாரி: 942)
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் “தாத்துர் ரிகாஉ” போரில் பங்கெடுத்த (நபித்தோழர்களில்) ஒருவர் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி(ச) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்திவிட்டு அப்படியே நின்றார்கள்.

நபி(ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்து திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்தார்கள். பிறகு அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.” இதை ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவித்தார்.”
(புகாரி: 4129)
இதில் கூறப்படாத மற்றும் பல வழிமுறைகளும் ஹதீஸ்களில் வந்துள்ளன. ஒரு ரக்அத்துக் கூட தொழலாம்.
‘உங்கள் நபி(ஸல்) மூலமாக ஊரில் நான்கும், பயணத்தில் இருண்டும் பயமான சூழலில் ஒரு ரக்அத்தும் தொழுவதை அல்லாஹ் விதியாக்கினான் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.”  (ஸஹீஹ் முஸ்லிம்: 687-6)
அச்ச நிலையில் ஜமாஅத்துத் தொழ முடியாத நிலை இருக்கின்றது. ஆனால், தொழுகையின் நேரம் முடிவதற்குள் நிலைமை சீரடைந்துவிடும் என்றால் தொழுகையைத் தாமதப்படுத்தலாம்.
தொழுகை நேரம் முடிந்துவிடும் என்றால் அவர்கள் தனித்துத் தனியாகத் தொழுது கொள்ளலாம். நின்று தொழ முடியாவிட்டால் நடந்தவர்களாகக் கூட தொழலாம். கிப்லா திசை நோக்கியோ அல்லது வேறு திசை நோக்கியோ எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம்.
“(உரிய முறையில் தொழ முடியாது என) நீங்கள் அஞ்சினால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ (தொழுது கொள்ளுங்கள்.) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகி விட்டால் நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்ததைப் போன்று அவனைத் தொழுது நினைவு கூருங்கள்.” (2:239)
நாஃபிவு அறிவித்தார்: ‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்” என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ‘எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.”  (புகாரி: 943)
ருகூஃ, சுஜூத் செய்ய முடியாவிட்டால் சைக்கினை செய்யலாம். எதிரியின் தாக்குதல் காரணத்தால் உரிய நேரத்தில் தொழ முடியாது போனால் அவர்கள் குற்றவாளிகள் அல்லர். நேரம் தவறிவிட்டால் விடுபட்ட தொழுகைகளை ஒழுங்குமுறையில் தொழுது கொள்ளலாம். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக அமையும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்த போது அவர்களில் சிலர் (மட்டும்) ருகூவு செய்தனர். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அவர்களுடன் ஸஜ்தாச் செய்தனர். பிறகு இரண்டாவது ரக்அத்துக்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தபோது ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து தங்கள் சகோதரர்களைப பாதுகாக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு கூட்டத்தினர் வந்து ருகூவு செய்து ஸஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தனர்.”  (புகாரி: 944)
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: ‘அகழ்ப்போரின் போது குரைஷீ இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே உமர்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சு+ரியன் மறையத் துவங்கும் வரை நான் அஸர் தொழவில்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் இது வரை அஸர் தொழவில்லை” என்று கூறிவிட்டு, புத்ஹான் என்னுமிடத்திற்குச் சென்று வுழூச் செய்து விட்டு, சு+ரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃரிபையும் தொழுதனர். ” (புகாரி: 945)
அச்சநேரத் தொழுகை பற்றிய சட்டங்கள் இஸ்லாத்தில் தொழுகையின் முக்கியத்துவத்தைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதுவும் உரிய நேரத்தில், ஜமாஅத்துடன், ஒரே தலைமையில், ஒன்றாகத் தொழுவதை இஸ்லாம் எவ்வளவு கடுமையாக வலியுறுத்தியுள்ளது என்பதைப் புரிந்தவர்கள் சாதாரண நிலையில் எப்படி தொழுகையை விடுபவர்களாக இருக்க முடியும்?
              
                                                                அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி), நூல்: திர்மிதி எண்: 1082) 
ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானனாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.
இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபட வில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.
உணவு உடை
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, 'நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: அபூதாவூத் 1830)
நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல் அவர்கள் கட்டளையிடுகிறார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி ஸல் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு. அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56)
சுய மரியாதையைப் போற்றுதல்
மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
'நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின ஸம்ஆ (ரலி), நூல்: புஹாரி 4942, 5204)
மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்ற இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக 'பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். 

இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுய மரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.
மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயாந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக டத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட அயிஷா (ரலி) எழுந்து நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின் தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.  

மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகிறார்கள். 'பகீஃ க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்' என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 1619)
இங்கு நபி ஸல் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதற்கு பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ 'பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி' என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தமது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைபிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதி விட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புஹாரி 1119)
மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, 'நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் செல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி, எண்: 950)
இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வை பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணிகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

                         மௌலவி அலி அக்பர் உமரி

இஸ்லாம் மாற்று மதத்தவர்களை எந்த அளவிற்கு கண்ணிணப்படுத்துகின்றது. மாற்று மதத்தவர்களோடு எத்தகைய பரஸ்பர தொடர்புடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.
முதலாவதாக இஸ்லாம் கூறுகின்றது:
"லா இக்ராஹஃபித்தீன்"
''மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரிந்து முற்றிலும் தெளிவாகிவிட்டது.''
அன்று இந்தியா மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் மாற்றத்துக்கும் நாட்டுப் பணம்தான் காரணம் என்று சொல்லும் மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் உள்ள இத்தகைய உண்மை நிலையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
பணத்தையோ, பதவியையோ அல்லது வேறு எதையும் விலையாகக் கொடுத்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அவ்வாறு இஸ்லாத்திற்கும், இவர்களுக்கும், அவ்வாறு வருவதற்கு காரணமானவர்களுக்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகவே அறிந்திருப்பதால், மாற்று மதத்தவர்கள் இத்தகைய பொய் குற்றச்சாட்டை கூறுவது பொருத்தமற்றதும், பொறாமையுமாகும்.
அன்று மக்காவை விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித்தோழர்களும் மதீனாவுக்கு ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். அதில் இறை திருப்திக்காக பலர் நாடு துறந்தார்கள். வேறு சிலர் மதீனாவின் செழிப்பை நாடி, அங்கு சென்று செழிப்பாக வாழலாம் என்ற நோக்கோடு புறப்பட்டனர். மேலும் சிலர் மக்காவில்தான் மணந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த பெண்கள் மதீனா சென்று விட்டார்கள். அப்பெண்களைத் தாம் அடைய வேண்டும் என்ற நோக்கோடு சென்றனர். அச்சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவர்கள் நிலைபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்"
செயல்கள் அனைத்தும் எண்ணத்தின் அடிப்படையிலேயே எண்ணத்திற்கு ஏற்றவாறே கூலி வழங்கப்படும்.'' என்று கூறினார்கள். ஆகவே இறைவனுடைய திருப்தியை பெறுவதற்காக ஹிஜ்ரத் சென்றார்களோ அதன் பலனை மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். யார் வேறு நோக்கோடு சென்றார்களோ அவர்களுக்கு மறுமையில் யாதொரு நன்மையும் இல்லை என்றார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.

இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்  2:256)
அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது தமக்கு விருப்பமில்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி நாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். 

அப்போதுதான் ''லாஇக்ராஹ ஃபித்தின்'' "மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை" என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துவிட்டார்கள். மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும். அவர்களை வெட்டுவது, கொலை செய்வது ஜிஹாத் புனித போர் என்றெல்லாம் நாகூசாமல் "இஸ்லாம் கூறுகின்றது" என்று பொய் கூறும் அருண்ஷோரி போன்றவர்கள் இத்தகைய வசனங்களைக் கண்டபிறகேதும் காழ்ப்புணர்ச்சியை மறந்து உண்மையை உரைக்கவேண்டும்.
இரண்டாவதாக இஸ்லாம் கூறுகின்றது:
"அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள். அவர்கள் அறியாமையினால் உங்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள்" (அல்குர்ஆன் 6:105)
அடுத்தவர்களுடைய, மாற்று மதத்தவருடைய தெய்வங்களைக் கூட திட்ட அனுமதிக்காத இஸ்லாம். அவர்களை பலவந்தமாக இஸ்லாத்தை ஏற்கச் சொல்கிறது என்றால் அருண்ஷோரீ போன்றவர்கள் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?
மூன்றாவதாக மாற்று மதத்தவர்களுடைய வழிபாட்டு ஆலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்லாம்.
"தீங்கு செய்யும் சிலரைச் சிலவாக கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் யூத ஆலயங்களும், கிறிஸ்தவ சர்ச்சுகளும், இறைவனைத் துதிக்கும் பள்ளிவாயில்களும் அழிந்தே போயிருக்கும்". (அல்குர்ஆன் 22:40)
என்று திருமறை மற்றவர்களின் ஆலயங்களையும் பாதுகாப்பது இஸ்லாமிய அரசின் கடமை என்கிறது.
நான்காவதாக அஹ்லுல் கிதாபு வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவ பெண்களை மணப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது.
"மூமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களுக்கும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மணமுடித்தும் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இஸ்லாத்திற்கும், மாற்று மதத்தவர்களுக்குமிடையில் உறவு முறையில் வளர்க்கிறது இஸ்லாம்.
ஐந்தாவதாக இஸ்லாம் மாற்று மதத்தவர்களுடன் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ள ஊக்குவிக்கின்றது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்று மதத்தவர்கள் அன்பளிப்போ அல்லது விருந்திற்கோ அழைத்தால் எவ்வித கசப்புணர்வும் இன்றி உடனே ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய இந்த வெள்ளை உள்ளத்தை பயன்படுத்தி ஒரு யூதப்பெண்மணி உணவில் விஷத்தை வைத்து கொல்ல முயற்சித்தாள். அந்த அளவிற்கு ஏன்? எதற்கு? என்ற சந்தேகக் கண்ணில்லாமல் திறந்த மனதுடன் மாற்று மதத்தவருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் மத வேறுபாடின்றி அந்நிய நாட்டுடனும் நல்லுறவு கொள்ளச் சொல்கிறது. அவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சிறந்த உபசரிப்பும் கொடுக்கச் சொல்கிறது.
ஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். (அல்பிதாயா வன்னிஹாயா பாகம் 5, பக்கம் 56) என்றால் மாற்று மறந்தவர்களுக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை இயம்பத் தேவை இல்லை.
இதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.
மாற்று மதத்தவர்களை எந்த வகையிலும் கொடுமைப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக கண்ணியப் படுத்தவும், அவர்களின் ஆலயத்தைப் பாதுகாக்கவும், கட்டளையிடுவது ஏன்? அவர்களின் தெய்வங்களை திட்டுவதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைப் பார்த்தோம். இதையே இஸ்லாத்தை தழுவாத அர்னால் என்ற அறிஞர் தன்னுடைய "Preaching of Islam" என்ற நூலில் எழுதியுள்ளார். எந்த அளவிற்கென்றால் இஸ்லாமியப் படைகள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்துவந்த ரோம தேசத்திற்குள் நுழைந்தபோது அந்த மக்கள் வரவேற்றார்கள். கடிதங்கள் கூட எழுதினார்கள். 

ஏனென்றால் எங்களை ஆட்சிசெய்ய எங்கள் மதத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் எங்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறார்கள். முஸ்லிம்கள் இங்கு வந்தால் நேர்மையான, நீதியான ஆட்சியைத் தருவார்கள் என்று கூறினால், அன்றைய நீதியான நபித்தோழர்கள் எவ்வளவு சீரான ஆட்சியை செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான "O Jerusalem" என்ற நூலில் கூட அதை எழுதிய யூத ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பாவில் யூதர்கள் அமைதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்ந்த காலம் ஒன்று உண்டென்றால் அது ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆட்சி செய்து வந்த காலம்தான் யூதர்கள் எவ்வித தொல்லைகளுக்கும் ஆளாகாத பொற்காலம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு மாற்று மதத்தவர்கள் கூட நற்சான்றிதழ் வழங்கிய மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அருண்ஷோரீ போன்ற சரித்திரம் தெரிந்த வகுப்புவாதிகள், இனியும் அவ்வுண்மையை மறைக்க முற்படவா போகிறார்கள்.
"மார்க்க (விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும், அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயம் அல்லாஹ் நீதி செய்கிறவர்களை நேசிக்கிறான்." (60:8)
இந்த இறைவசனம் தெளிவாக சத்தியத்தை நேரடியாக எதிர்க்காத மாற்று மதத்தினருக்கு உதவி செய்வதையும், நீதி செய்வதையும் உற்சாகப்படுத்துகிறது.
ஆக இஸ்லாம் மாற்று மதத்தவர்மீது போர் தொடுக்கச் சொல்லவில்லை. ஆனால் எத்தகையோர் மீது போர் தொடுக்கச் சொல்லவில்லை. ஆனால் எத்தகையோர் மீது போர் தொடுக்கச் சொல்கிறது என்பதைக் கீழே காண்போம்.
"உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள், ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை." (அல்குர்ஆன் 2:190)
இரண்டாவதாக அக்கிரமம், அநியாயத்திற்கும் எதிராக போராடுவதையும் இஸ்லாம் புனிதப் போர் என்கிறது.
"ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாவுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போராடுங்கள், ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் அக்கிரமக்காரர்கள் தவிரவேறு யாருடனும் பகை (கொண்டு போர் செய்தல் கூடாது)" (2:193)
"(மூமின்களே, இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்: ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்த) விலகிக்கொண்டால் (விட்டு விடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்." (அல்குர்ஆன் 8:39)
இறுதியாக நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதையும் இஸ்லாம் ஜிஹாத் என்கிறது.
அல்குர்ஆன் முழங்குகிறது:
"பலவீனமான நசுக்கப்பட்ட ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்க அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியத் தயங்குவதேன்? அவர்கள் அல்லாஹ்விடம், எங்களை இந்த அநியாயக்காரர்களிடமிருந்து வெளியேற்றி விடு: அல்லது எங்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பாளனையாவது அனுப்பித்தா" என்று பிரார்த்திப்பதாகக் கூறுகிறது." (அல்குர்ஆன் 4:75)
உண்மையிலேயே இன்று உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற கலீஃபாக்களின் ஆட்சி இருந்திருக்குமேயானால் இனவெறி கொண்டு அலைகின்ற தென்ஆப்பிரிக்காவை எதிர்த்து ஒரு பெரும்படையே சென்றிருக்கும். ஆனால் துரதிருஷ்டம் இன்றைய இஸ்லாமிய நாடுகள் அதுவும் இஸ்லாத்தை அரைகுறையாகவே பின்பற்றுபவையும், வல்லரசுகளும் தங்களுடைய சுய லாபத்தைக் கருதியே நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் இக்கொடுமையைக் கண்டும் காணாதிருக்கின்றன.
ஆக இஸ்லாம் எக்காலத்திலும், எக்காரணத்திற்கும் மாற்று மதத்தவர்களைத் துன்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ இல்லை. மாறாக கண்ணியமும், பாதுகாப்புமே கொடுக்கச் செல்கிறது. இதற்கு மாறாக எங்கேனும் ஏதும் நடந்திருந்தால் அது முஸ்லிம்களின் தவறாக இருக்குமேயன்றி இஸ்லாத்தின் போதனையில் உள்ள தவறு அல்ல என்பதை அருண்ஷோரீ போன்றவர்களுக்கு அறியத் தருகிறோம். வல்லநாயன் எல்லாரும் நேர்வழி அடைய தெளஃபீக் செய்வானாக! ஆமீன்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை
இந்த சந்தர்ப்பத்தில் தான் குழந்தை இஸ்மாயிலையும் அவரது தாயார் அன்னை ஹாஜரா அவர்களையும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியான (இப்போது) கஃபா அமைந்துள்ள மக்கா பூமியில் விட்டுவிட வேண்டும் என்ற கட்டளை அல்லாஹ்விடமிருந்து வந்தது. இப்ராஹிம் நபி எந்த சந்தர்ப்பத்திலும் இறை கட்டளைக்கு மாறு செய்யாதவர். அல்லாஹ்வின் கட்டளைப்படி இருவரையும் மக்கா பூமியில் விட்டுவிட்டு வந்தார்கள்.
பின்னர் இப்ராஹிம் நபி ஒரு கனவு கண்டார்கள். நபிமார்களுடைய கனவுகள் வஹி எனும் வேத வெளிப்பாடுகளாகும். அவர்களுடைய கனவில் ஷைத்தான் விளையாட முடியாது. இப்ராஹிம் நபி தனது அருமை மகன் இஸ்மாயிலை அறுப்பது போல் அந்தக் கனவு அமைந்திருந்தது. இதன்மூலம் தனது மகனை அறுக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுவதை நபி இப்ராஹிம்(அலை) அறிந்து கொண்டார்கள்.

அல்லாஹ் சொன்னால் ஏன்? எதற்கு? என்று காரணம் கேட்காமல் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக எமது பகுத்தறிவு அமைந்திருந்தாலும் கூட மறுத்துவிடக் கூடாது. அல்லாஹ்வின் கட்டளைதான் முதன்மையானது. எனவே, இப்ராஹிம் நபியவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார்கள். அன்புக் குழந்தை இஸ்மாயிலை அறுத்துவிடுவது என்ற முடிவில் எவ்வித மனஉறுத்தலும் இல்லாமல் உறுதியாக இருந்தார்கள்.

மக்கா வந்த இப்ராஹிம் நபியவர்கள் தனது அன்பு மகனை சந்தித்தார்கள். அவர் அப்போது தந்தையுடன் சேர்ந்து பணிசெய்யக் கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தார். நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் மகனை அறுத்துப் பலியிட வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்ற நபி இப்ராஹிம் அவர்கள் தனது அருமை மகனை நோக்கி,
“எனதருமை மகனே! நான் உங்களை அறுப்பது போல் கனவு கண்டேன். உங்களது முடிவு என்ன?” எனக் கேட்டார்கள். தவறு செய்த பிள்ளைக்குத் தந்தை அடிப்பதற்கு கம்பை எடுத்தாலே பிள்ளை வீட்டை விட்டும் ஓடிவிடுகின்றது.
இப்ராஹிம் நபி கையில் கத்தியுடன் “அல்லாஹ் உன்னை அறுக்கச் சொல்கின்றான். நீ என்ன சொல்கின்றாய்” என்று கேட்கிறார்கள். இஸ்மாயில் நபி எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுமாற்றம் இல்லாத குரலில். “எனதருமைத் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு என்ன செய்யச் சொன்னானோ அதைச் செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் நான் பொறுத்துக் கொள்கின்றேன்!” எனக் கூறினார்கள்.  அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தனது உயிரையும் பலியிடத் துணிந்த அவர்களின் உயர்ந்த பண்பைப் பாருங்கள்.
மகத்தான தியாகம்
இப்ராஹிம் நபி அறுக்க உறுதி கொண்டு விட்டார்கள். அவரது அன்பு மகனான இஸ்மாயீலும் உயிரைக் கொடுக்க இணங்கி விட்டார். இப்ராஹிம் நபி அறுக்கத் தயாரான போது அல்லாஹ்விடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. “இப்ராஹீமே… நீங்கள் உங்கள் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்கள். உங்களது இந்த மகத்தான தியாகத்தின் காரணமாக உங்களை நான் முழு மனிதகுலத்துக்கும் இமாமாக, தலைவராக, முன்மாதிரியாக ஆக்குகின்றேன்” என்று கூறினான். அதேவேளை, இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு ஆட்டை அல்லாஹ் இறக்கி அதனை அறுக்கு-மாறு கட்டளையிட்டான்.
இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு கொழுத்த ஆடொன்று அங்கே அறுக்கப்பட்டது. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகிய இந்த இருவரினதும் மகத்தான தியாகத்தை முன்னிட்டு உழ்ஹிய்யா எனும் மார்க்கக் கடமையை அல்லாஹ் விதித்தான். முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றான ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளில்தான் இச்சம்பவம் நடந்தது. இந்தத் தியாகத்தை நினைவு கூறும் முகமாக முஸ்லிம்கள் இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றை அறுத்து அதன் மாமிசத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அயலவர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
அல்லாஹ்வுக்காக எதையும் செய்யும் தியாக எண்ணத்தை வளர்ப்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். நாமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்து இப்ராஹீம், இஸ்மாயீல் நபிமார்கள் போன்று நடப்போம். இந்தச் சம்பவத்தை அல்குர்ஆனில் 37:101 முதல் 105 வரையான இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
‘எனவே சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.’ ‘அவருடன் இணைந்து செயல்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். ‘இன்ஷாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்! ” என்று கூறினார்’ ‘அவ்விருவதும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில்படக் கிடத்தியபோது, ‘இப்ராஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்’.


எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் ஒரு பொது இடத்தில் போட்டி ஏற்பாடாகியது.
போட்டி நடக்கும் இடத்திற்கு மூஸா நபியும் சூனியக்காரர்களும் வந்தனர். மக்களும் திராளாகக் கூடியிருந்தனர். சூனியக்காரர்கள் தமது கைத்தடிகளையும் கயிறுகளையும் போட்டனர்.
அவை நெளிந்து ஓடும் பாம்புகள் போல் போலியாகத் தோன்றின. மூஸா நபிக்கும் அவை பாம்புகள் போன்றுதான் தென்பட்டன. மக்களுக்கும் பாம்புகளாகத்தான் தென்பட்டன.
சூனியக்காரர்கள் மக்களின் கண்களை வசப்படுத்தினர். இதைக் கண்னுற்ற மக்கள் அச்சப்பட்டனர். மூஸா நபியின் உள்ளத்திலும் இலேசாக அச்சம் ஏற்பட்டது.
அல்லாஹ் மூஸா நபியிடம், ‘உமது கைத்தடியைப் போடும்’ என்றான். மூஸா நபி தனது கைத்தடியைப் போட்டார். அது நிஜமான பாம்பாக மாறியது. பாம்புகள் போல் தோன்றிய சூனியத்தை அது விழுங்கியது. சூனியக்காரர்களுக்கு சூனியத்தால் என்ன செய்யலாம் என்பது நன்றாகத் தெரியும்.
சூனியத்தால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டலாம். கயிரையும் தடியையும் போலியாகப் பாம்பு போல் தோன்றச் செய்யலாம். ஆனால், பாம்பாக மாற்ற முடியாது. மூஸா நபி சூனியக்காரர் அல்ல. அவர் செய்தது சூனியமும் அல்ல; அவர் ஒரு இறைத்தூதர், அவர் செய்தது அற்புதம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொண்டனர்.
எனவே, பணத்துக்காகவும், பதவிக்காவும் போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் அந்த இடத்திலேயே சுஜூதில் விழுந்து அல்லாஹ்வையும் மூஸா நபியையும் ஈமான் கொண்டனர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!


சூனியத்தை விழுங்கிய அந்தப் பாம்பு பற்றிய தகவல்கள் திருக்குர்ஆனில் 7:106-126, 10:76- 82, 20:63-76, 26:36-51 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

                                                                             அஷ்ஷேஹ் இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget