தொழுகை நேரத்தை அடைந்தும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் சட்டம்.

கேள்வி:- நான் ஒரு தொழுகை நேரத்தை அடைந்து விட்டேன் உதாரணமாக லுஹர் தொழுகைக்கான நேரமாகிவிட்டது. எனினும் என் வீட்டுவேலை காரணமாக நேரம் முடிவடைவதற்கு முன் தொழுவோம் என்று நான் எண்ணியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? குறிக்கப்பட்ட தொழுகையை சற்று தாமதப்படுத்தியதால் நான் குற்றவாளியாவேனா? அல்லது தூய்மையானதன் பின் நான் அதை கழா செய்ய வேண்டுமா.?

பதில்:- அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் வஅலா ஆலிஹி வசஹபிஹி வமன் தபியகும் பிஇஹ்சான் இலா யவ்மித்தீன்.

சகோதரி கேட்ட குறிக்கப்பட்ட கேள்வி பொதுவாக பல பெண்களுக்கு எழுகின்ற சந்தேகமே! இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் ஒரு விடயத்தை சொல்லிக்கொள்கின்றேன்.
அல்லாஹ் கூறுவதைப்போன்று தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. உதாரணமாக, அதான் சொல்லி பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் உதிக்கும் வரை பஜ்ர் தொழுகையின் நேரமாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் குறிப்பிட்ட நேரவரையறை இருக்கிறது. இந்த நேரத்திற்குள் எம் தொழுகைகளை நாம் தொழுதாக வேண்டும்.

எனினும் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தொழுவது மிகவும் சிறப்புக்குரிய விடயமாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»

நான் நபி(ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது எனக்கேட்டேன். அதற்கவர் “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவதாகும்” என்றார். பின்னர் எது? எனக்கேட்டேன். அதற்கவர் “பின்னர் பெற்றோருக்கு நல்லறம் செய்வதாகும்” என்றார். பின்னர் எது? எனக்கேட்டேன். அதற்கவர் “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதாகும்” என்றார். (அல்புகாரி-112)

மேற்படி ஹதீஸில் “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவதாகும்” எனும் வாசகத்திற்கு இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் விளக்கம் சொல்லும் போது : தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் எனக்கூறியிருக்கின்றார்கள்.

அதாவது மஸ்ஜிதில் ஜமாஅத்தாக தொழுபவர்கள் பெரும்பாலும் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தான் தொழுவார்கள். அவ்வாறே வீட்டில் தொழும் பெண்களான நாங்களும் ஆரம்ப நேரத்தில் எமது தொழுகையை அமைத்துக்கொள்வது மிகச்சிறந்ததாகும். ஆயினும் ஒரு பெண் அவளது வேலைப்பளு காரணமாக ஆரம்ப நேரத்தில் தொழவில்லை எனின் அவள் மீது தவறில்லை. மாறாக நேரம் முடியும் வரை அவள் பொடுபோக்காக இருந்தால் அவள் குற்றவாளியாக ஆகிவிடுகிறாள்.

முதலாவதாக , குறிக்கப்பட்ட சகோதரி “தொழுகையை தாமதப் படுத்தியதால் நான் குற்றவாளியா ?” என கேட்டிருக்கிறார் . நிச்சயமாக இல்லை . ஏனெனில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேர வரையறைக்குள்தான் தாமதப்படுத்தியுள்ளீர்கள். அதற்கிடையில் மாதவிலக்கு ஏற்பட்டது உங்களின் சக்திற்கு அப்பாற்பட்ட ஒன்று . எனினும் சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்குரிய அடையாளமாக அது ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னிருந்தே அவர்களின் உடம்பில் சில மாற்றங்கள் வெளிப்படும் . அப்படிப்பட்டவர்கள் தொழுகையை பிற்படுத்தாமல் ஆரம்ப நேரத்திலேயே தொழுது கொள்ள வேண்டும் 

இரண்டாவதாக , “ நான் சுத்தமான பின் அத்தொழுகையை களா செய்ய வேண்டுமா? எனக் கேட்டுள்ளீர்.
“இல்லை” ,அவ்வாறு கட்டாயமாக கழாச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் எந்த ஆதாரத்தையும் குர்ஆன் சுன்னாவிலிருந்து நாம் காணவில்லை .

என்றாலும் சில அறிஞர்கள் அவள் கட்டாயம் கழாச் செய்ய வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
صحيح مسلم (1/ 477)
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَسِيَ صَلَاةً، أَوْ نَامَ عَنْهَا، فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا

யார் ஒரு தொழுகையை மறந்து விடுகிறாரோ அல்லது தூங்கிவிட்டாரோ அதற்குரிய பரிகாரம் அவர் நினைவு கூர்ந்தால் தொழுவதாகும் ( முஸ்லிம் ) இந்த ஹதீஸ் சஹீஹுல் புகாரி மற்றும் பல ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது .

இந்த ஹதீஸைப் பொறுத்த வரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் தொழுகையை விட்டவருக்குரிய பரிகாரத்தையே கூறியிருக்கிறார்கள் . “கழா” என்றால் நேரத்திற்கு நிறை வேற்றப்பட்டாத ஒரு கடமையை தாமதப்படுத்தியேனும் நிறை வேற்றுவதாகும்.

தொழுகையைப்பொருத்தவரை எந்தசந்தர்ப்பத்திலும் அதை விட்டு விட்டு நேரம் முடிந்த பின் கழாசெய்ய முடியாது .அவ்வாறு முடியும் என்றிருந்தால் போர் நேரங்களில் அதை விட்டு விட்டு பின்னர் கழா செய்யுமாறு நபி (ஸல்) பணித்திருப்பர்கள். ஆனால் இஸ்லாத்தில் அச்சந்தர்ப்பத்தில் கூட தொழுகையை விட அனுமதியில்லை.

எனினும் தொழும் நேரத்தில் தூங்கியவர், அல்லது அதை மறந்தவர் இவர்கள் இருவரையும் பொறுத்தவரையில் அவர்களின் தொழுகை நேரம் எழும்பியவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழுவது ஆகும் . அது எந்த நேரமாக இருந்தாலும் சரியே .எக்காரணம் கொண்டும் அவர்கள் அதை பிற்படுத்தி கழா செய்ய முடியாது.

எனவே இவர்கள் இருவருக்கும் குறிப்பாக்கப்பட்ட விடயம் . இது மாதவிலக்கு ஏற்றப்பட்ட பெண் விடயத்தில் ஆதாரமாக மாட்டாது.
ஆக , அவள் தூய்மையடைந்த பின் அத்தொழுகையை கழா செய்யவேண்டும் என்பதற்கு எந்த தெளிவான ஆதாரமும் இல்லாததால் அது அவள் மீது கடமையாக மாட்டாது.
.
இதையே ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள் الفتاوى الكبرى لابن تيمية (2/ 303)
وَالْأَظْهَرُ فِي الدَّلِيلِ مَذْهَبُ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ أَنَّهَا لَا يَلْزَمُهَا شَيْءٌ؛ لِأَنَّ الْقَضَاءَ إنَّمَا يَجِبُ بِأَمْرٍ جَدِيدٍ، وَلَا أَمْرَ هُنَا يَلْزَمُهَا بِالْقَضَاءِ، وَلِأَنَّهَا أَخَّرَتْ تَأْخِيرًا جَائِزًا فَهِيَ غَيْرُ مُفَرِّطَةٍ، وَأَمَّا النَّائِمُ أَوْ النَّاسِي - وَإِنْ كَانَ غَيْرَ مُفَرِّطٍ أَيْضًا - فَإِنَّ مَا يَفْعَلُهُ لَيْسَ قَضَاءً، بَلْ ذَلِكَ وَقْتُ الصَّلَاةِ فِي حَقِّهِ حِينَ يَسْتَيْقِظُ وَيَذْكُرُ، كَمَا قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «مَنْ نَامَ عَنْ صَلَاةٍ أَوْ نَسِيَهَا فَلْيُصَلِّهَا إذَا ذَكَرَهَا فَإِنَّ ذَلِكَ وَقْتُهَا»>

இறுதியாக ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் . அதாவது , ஒரு பெண் “தொழுகையைத் தான் தாமதப்படுத்தியதால் தான் விட நேர்ந்தது” என்று எண்ணி தூய்மையடைந்த பின் கழா செய்யவிரும்பினால் அது அவளின் பேணுதலைபொருத்தது .அவ்வாறு செய்பவர்களை தடுப்பதும் அனுமதி இல்லை.

அதே போன்று அவளது சக்தியை மீறி கடமையற்றதாக மாறிவிட்ட ஒன்றை கழா செய்யுமாறு கட்டாயப்படுத்துவதும் அனுமதியல்ல. எனவே இறைத்தூதரின் வழிகாட்டலோடு நின்றுகொள்ள அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக.

                                                       மௌலவியா:- உம்மு அஹ்மத் ஷரஇயா 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget