யார் இறை நேசகர்கள்.?

எமது முஸ்லீம் சமுதாயத்தில் சிலர், தனிமனிதர்கள் மீது கொண்ட எல்லை கடந்த மரியாதை, அன்பு போன்றவற்றினால் அவர்கள் அல்லாஹ் விடத்தில் மிக நெருக்கமான இறைநேசகர்கள் என்று எண்ணி, இறைவனிடம் கேட்கவேண்டிய இறைமன்னிப்பையும் ,பிரார்த்தனைகளையும் அந்த நேசகர்களிடம் கேட்கின்ற நிலையைக் காண்கின்றோம்.

அல்லாஹ்வோ அவன் நேசிக்கக்கூடிய மனிதர்களுக்கு சில தகைமைகள் இருக்க வேண்டும் என்று, அவனுடைய திறுமறையில் குறிப்பிடுகின்றான்.
ஆனால், இன்று மக்களால் இறை நேசகர்களாக கருதப்படுபவர்களிடத்தில், சாதாரண மார்க்க அறிவோடுள்ள ஒரு பாமர மனிதன் செய்யும் கடமையான ஐவேளைத் தொழுகை, நோன்பு, கடமையான குளிப்புக்கள்,கடமையான சுத்தம் போன்றவை கூட இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இப்படிப்பட்டவர்களை மட்டுமல்லாது புத்திசுயாதீன மற்றவர்களைக் கூட இன்று எமது சமூகம் அவுலியாக்கள் என்று கூறி வழிப்படுவது, இஸ்லாம் கூறிய இறைநம்பிக்கைக் கோட்பாடு இவர்களிடத்தில் இடம் பிடிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
 அல்லாஹ்வோ இறை நேசகர்களுக்கு இருக்க வேண்டிய பண்பை திருமறையில் கூறுகையில், "الا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون . الذين أمنوا و كانوا يتقون "
(سورة يونس -62,63) 

“(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை. அவர்கள் கவலையையையும் அடையமாட்டார்கள்.” “அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்.”

இதனடிப்படையில், அல்லாஹ் நேசிக்கும் ஒர் அடியான் ,அல்லாஹ்வை ஈமான் கொள்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல் அவனின் அனைத்து செயற்பாடுகளிலும் இறையச்சத்தோடு செயற்படுவான் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

உதாரணமாக:-
அவனின் சம்பாத்தியத்தில் இறைவன் தடுத்த ஹராமானதை விட்டும் விலகி ஹலாலான முறைகளில் சம்பாதிப்பது, அதில் அவனுக்குக் கடமையான ஸகாத்தை நிறைவேற்றுவது, இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோசனமளிக்கும் கல்வியைத் தேடுவது, இவ்வாறு சிறு விடயமான பாதணி அணிவது தொடக்கம் கொடுக்கல் வாங்கல் வரை, ஒட்டுமொத்த அவனது வாழ்கையில் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களை எடுத்து நடந்து, இறைவனுக்குப் பயந்து நடக்கும் ஓர் அடியானால் மாத்திரம் தான் இறை நேசகராக மாறமுடியும்.

இந்தப் பண்பாட்டை விட்டு விட்டு தன் மனோஇச்சைப்படி அல்லது மார்க்க சட்டங்களை தகர்த்தெறியுமளவு வாழக்கூடிய ஒருவரால் இறை நேசகராக மாறமுடியாது. மாறாக, அவன் ஷைத்தானின் நேசகனாகத்தான் ஆகமுடியும்.
இறை நேசகனின் மற்றுமொரு பண்பை நபி (ஸல்) கூறுகையில்,
"قال النبي (صلى) : ((ىقول الله تعالى: من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء احب الي اقترضت عليه, وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها , ورجله التي يمشي بها, وإن سألني لأعطينه ولإن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت و انا أكره مساءته))

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் கூறுகின்றான்: எவன் என் நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கின்றேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலாக (நபீலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். 
அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கின்றான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.”

ஒரு அடியான், அவன் மீது கடமையாக்கப்பட்ட வணக்கங்களோடு மட்டும் நின்றுகொள்ளாமல் மேலதிகமாக (நபீலான) வணக்கவழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் அந்த அடியானை நேசிப்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் . 
ஆனால், எம்மத்தியில் அவ்லியாக்கள் என்ற பெயரில் இருப்பவர்கள்,

“அல்லாஹ் கடமையாக்கிய ஐவேளை தொழுகையைக் கூட விட்டுவிட்டு, தாங்கள் இறைவனோடு நேரடியாகப் பேசுகின்றோம், தொழுகை எங்கள்மீது கடமை இல்லை ” என்று கூறுகின்றனர்,
ஆனால், வலிமார்களுக்கல்லாம் மிகப் பெரும் வலியான நபி(ஸல்) மரணத்தருவாயில் கூட தொழுகையை நிலைநாட்டி மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டிருக்க இப்படியான கூற்றுக்களை கூறி மக்களை ஏமாற்றும் இவர்கள் எப்படி இறை நேசகர்களாக முடியும்?......

எனவே , இறைவனின் உண்மையான நேசகர்கள் அவனை ஈமான் கொண்டு உயிருக்கு மேலாக அவனை நேசித்து,அவன் நேசிப்பவர்களை நேசித்து, அவன் வெறுப்பவர்களை வெறுத்து, அவன் பொருந்திக்கொள்பவர்களை பொருந்திக்கொண்டு, அவன் கோபம் கொள்பவர்களை கோபாம் கொண்டு, அவன் ஏவியவற்றையெல்லாம் ஏவி, அவன் தடுத்தவற்றையெல்லாம் தடுத்து, வாழ்பவர்களே உண்மையான இறை நேசகர்களாவார்கள்.
எனவே, இப்படிப்பட்ட இறைவன் நேசிக்கும் சிறந்த மக்களோடு அல்லாஹ் எம்மையும் சேர்த்து வைப்பானாக!....

                                                       மௌலவியா:- 
றுஸ்தா அஷ்ஷரயிய்யாஹ்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget