February 2019

முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. இவை வெறும் அனுமானம் மட்டுமே! ஆதாரங்கள் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றேன்.
முதல் மனிதர் இறக்கப்பட்ட பிரதேசம்:
முதல் மனிதர் சுவனத்தில் இருந்து இறங்கிய போது அவர் நிர்வாணமாக இறங்கியதால் சுவனத்து இலைகளால் தன்னை மறைத்திருந்தார். இந்த சுவனத்து இலைகள் பட்ட தாவரங்கள் நறுமணம் மிக்கதாக மாறியதாக சில கருத்துக்கள் அனுமானம் கூறுகின்றன. பாவாத மலை அமைந்துள்ள பிரதேசமும் இலங்கையும் வாசனைத் திரவியங்கள் மிகுந்த மரங்கள் நிறைந்த நிலப்பரப்பாக அமைந்துள்ளது.
ஆதம் நபி பூமிக்கு இறக்கப்படும் போது அங்கிருந்து மாணிக்கக் கற்களை எடுத்து வந்ததாகவும் அவர் இறக்கப்பட்ட இடம் மாணிக்கக் கற்கள் நிறைந்த பிரதேசமாக அமைந்ததாகவும் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாவாத மலை அமைந்துள்ள சபரகமுவ வலையத்தில்தான் இலங்கையில் அதிகமான மாணிக்கக் கற்கள் உள்ள இரத்தினபுரி பிரதேசம் அமைந்துள்ளது. இலங்கையை அரபிகள் ‘ஜஸீரது யஃகூத்’ – மாணிக்கத் தீவு என்றே அழைத்து வந்தனர்.
இலங்கையும் பண்டைய குடியிருப்பும்:
முதல் மனிதர் இலங்கையில் இறக்கப் பட்டிருந்தால் பண்டைக் காலம் தொட்டே இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தற்கான தடையங்கள் இருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் உள்ளதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே. இந்தக் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் பாவாத மலை அமைந்துள்ள பகுதியில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பலாங்கொட பிரதேசத்தில் மனித இனம் வாழ்ந்ததற் கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் பலாங்கொட மனிதன் என்றும் பலாங்கொட நாகரீகம் என்றும் அழைக்கப்படும் பண்டைய இலங்கை பற்றிய குறிப்புக்களை ஆய்வுகளிலும் இணையதளங்களிலும் காணலாம்.
இது தொடர்பிலான சில தகவல்களைப் பார்ப்பதற்கு முன்னர் முதல் மனிதன் மற்றும் ஆதி மனிதன் பற்றிய சில தவறான அனுமானங்கள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித இனம் பற்றி ஆராய்பவர்கள் மத நம்பிக்கை அற்றவர்கள் என்பதால் வெறும் யுகங்களையும் அனுமானங்களையும் மட்டும் மையமாக வைத்து தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், அல் குர்ஆன் அதற்கு மாற்றமான சில அடிப்படைகளைத் தருகின்றது.
  • முதல் மனிதன் எந்த அறிவும் அற்றவனாக இருந்தான்.
  • அனைத்தையும் இயற்கையிடம் இருந்தே அவன் கற்றுக் கொண்டான்.
  • ஆரம்பத்தில் அவனிடம் மொழி அறிவு இருக்கவில்லை.
  • அவன் போகப் போகத்தான் கூட்டாக ஒரு இடத்தில் தங்கி வாழும் பழக்கத்தையும் நாகரிகத்தையும் கற்றுக் கொண்டான்.
  • நெருப்பு பற்றிய அறிவு அவனிடம் ஆரம்பத்தில் இருக்கவில்லை.
  • விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பவற்றை மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் அவன் கையாண்டான்.
மேற்போன்ற முடிவுகளை இவர்கள் கொண்டுள்ளனர்.
ஆனால், முதல் மனிதனுக்கு மொழியறிவும் இருந்தது. பொருட்கள் பற்றிய அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டது என குர்ஆன் கூறுகின்றது.
இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.
அவர்கள், (இரட்சகனே!) “நீ தூய்மை யானவன்’ நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறறிவு எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவனும்’ ஞானமிக்கவனுமாவாய்” எனக் கூறினார்கள்.
“ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” என (அல்லாஹ்) கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த போது, ‘நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் நன்கறிந்தவன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைத்துக் கொண்டிருப்ப வற்றையும் நான் நன்கறிவேன் என்றும் உங்களுக்குக் கூற வில்லையா? என (அல்லாஹ்) கேட்டான்.
பின்னர் நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சுஜூது செய்தனர். அவன் மறுத்தான், பெருமையும் கொண்டான். அவன் நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.” (2:31-33)
முதல் மனிதன் பூமிக்கு அனுப்பப் படும் போது எந்த வழிகாட்டலும் இல்லாமல் அனுப்பப்படவில்லை. அவனுக்கு தெய்வீக வழிகாட்டல் வழங்கப்பட்டது என குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“இதன்பின் ஷைத்தான், அவ்விருவரையும் அதிலிருந்து தடம்புறழச் செய்து, அவ்விருவருமிருந்த இடத்தை விட்டும் அவர்களை வெளியேற்றினான். இன்னும், ‘நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வாழ்க்கை வசதியும் உள்ளன” என்று நாம் கூறினோம்.
பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.
நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்! என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது என்னுடைய நேர்வழியை யார் பின்பற்றுகின்றார்களோ அவர் களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப் படவும் மாட்டார்கள் என்று கூறினோம்.
எவர்கள் நிராகரித்து எமது அத்தாட் சிகளையும் பொய்ப்பிக்கின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.” (2:36-39)
முதல் மனிதனின் பிள்ளைகள் ஆரம்ப காலத்திலேயே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர் என குர்ஆன் கூறுகின்றது.
குர்ஆனில் ஆதம் நபியின் இரு பிள்ளைகள் பற்றிய ஒரு சம்பவம் இப்படிக் கூறப்படுகின்றது.
(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப் பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” எனக் கூறினார்.
என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. “நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்.”
“என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக் காரர்களுக்குரிய கூலியாகும்” (என்றும் கூறினார்.)
“பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்துவிட்டான். இதனால் அவன் நஷ்ட வாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.
தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாத வனாகிவிட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதர னுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” (5:27-31)
இங்கு இருவரும் காணிக்கை செலுத்திய தாகவும் ஒருவருடைய காணிக்கை ஏற்கப்பட்டதாகவும் மற்றையவரது காணிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதில் ஒருவர் விவசாயம் செய்பவராகவும் மற்றையவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் தப்ஸீர்கள் கூறுகின்றன. (தபரீ)
இந்த சம்பவம் பற்றி விமர்சனம் செய்யும் நாஸ்திகர்கள் முதல் மனிதன் மரணம் பற்றிய அறிவற்றவன். அவன் எப்படி கொலை செய்வான் என்றெல்லாம் கேள்வி எழுப்பி தமது மேதாவித் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். ஆதி மனிதன் மரணத்தை அறியாமலா விலங்குகளைக் கொண்று உண்டு வந்தான் என்று கூட இவர்கள் சிந்திக்கத் திராணியற்றுப் போனார்கள்.
எனவே, ஆதி மனிதன் பல்வேறுபட்ட விடயங்களை அறிந்தே இருந்தான். அவன் இயற்கை யிடம் இருந்தும் சில விடயங்களைக் கற்றுக் கொண்டான் என்பதையும் சேர்த்தே முன்னைய சம்பவம் கூறுகின்றது.
இந்த விபரங்களோடு வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் குறிப்பாக, பாவாத மலையை அண்டிய பிரதேசங்களில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்திருக் கின்றார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தால் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கின்றன.
இது குறித்துப் பேசும் விக்கீபீடியாவில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
இற்றைக்கு கிட்டத்தட்ட 300000 முதல் 500000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த “ஓமோ எரெக்டசு” (Homo Erectus) இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. 125000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகள் உள்ளன. (Jump up to:2.0 2.1 1. Deraniyagala, Siran U. “Pre- and Protohistoric settlement in Sri Lanka”. XIII U. I. S. P. P. Congress Proceedings- Forli, 8 – 14 September 1996. International Union of Prehistoric and Protohistoric Sciences.)
அடுத்து ஆதிகாலத்திலேயே மனிதன் வேளான்மை செய்துள்ளான். இது பற்றிக் பேசும் போது,
பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலை நாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.(4)
[Jump up↑ Pichumani, K; T S Subramanian, S U Deraniyagala (05 – 18 June 2004). “Prehistoric basis for the rise of civilisation in Sri Lanka and southern India” Frontline 21 (12)] ஆரம்ப மனிதன் விலங்கு, வேளாண்மையிலும் ஈடுபட்டுள்ளான். அத்துடன் முதல் மனிதர் உலகுக்கு வந்த போது நாயை தனக்குத் தேர்ந்தெடுத்ததாகவும், அதன் தலையைத் தடவியதாகவும் அன்றிலிருந்து நாய் மனித இனத்திற்கு விசுவாசமானதாகவும் குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இது நேரடியாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ வராத விளக்கவுரை யாளர்கள் கூறும் செய்தி மட்டுமே! இருப்பினும் ஆதிகால இலங்கை வாழ் மனிதன் பற்றிய அந்தக் கட்டுரை விலங்கு, வேளாண்மை பற்றி இப்படிக் கூறுகின்றது,


நில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.(5)
“Deraniyagala, Siran (1992). The Prehistory of Sri Lanka. Colombo: Department of Archaeological Survey. Page. 454. ISBN 955 9159 00 3.
பலாங்கொட மனிதன் பற்றிய இந்த செய்திகள் இஸ்லாம் கூறும் தகவல்களுடன் ஒத்துச் செல்கின்றது. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் அம்சங்கள்தான் மிகப் பழமையானது என்பதற் கில்லை. இதைவிடப் பழமையான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்படலாம்.
அவ்வாறே கண்டெடுக்கப்பட்டதை விட பழமையான பல அம்சங்கள் கண்டெடுக்கப்படாமல் கூட இருக்கலாம். இருப்பினும் இந்த அம்சங்கள் ஒரு உண்மையைச் சொல்கின்றன. சிங்கள இனம் என்ற ஓர் இனம் உருவானதற்கு முன்னரே அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித இனம் வாழ்ந்துள்ளது. எனவே, இலங்கை சிங்கள இனத்துக்குச் சொந்தமான நாடு எனப் பீற்றிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஆதிகாலத்தில் தமிழ் இனத்தவர்கள் இலங்கையை ஆண்டும் உள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையில் மனித இனம் வாழ்ந்துள்ளது. அவர்கள் சிங்கள இனமும் அல்ல’ பௌத்த மதமும் அல்ல. பௌத்த மதம் புத்தருக்குப் பின்னர் புத்தரால் உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கையில் பௌத்தரும் அல்லாத சிங்களவர்களும் அல்லாத மனித இனத்தவர் ஆதிகாலம் தொட்டே வாழ்ந்துள்ளனர். இதை சிங்கள இனமோ, பௌத்த மதமோ தனித்து உரிமை கொண்டாட முடியாது!
இந்த நாட்டில் பௌத்த மக்களும் சிங்கள இனத்தவர்களும் அதிகமாக வாழ்வதால் இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பும் தனி அந்தஸ்தும் இருக்கலாhம்.
நாட்டில் பூர்வீகக் குடிகள் என்ற அந்தஸ்த்துக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்பதும் தமிழ் முஸ்லிம் மக்களை வந்தேரிகள் என குறைத்துக் கூற முடியாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த நாட்டில் வாழ்ந்த பண்டைய மக்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பூர்வீகத்துக்கும் உரிய தொடர்பு குறித்து அடுத்த இதழில் நோக்குவோம்.
இன்ஷா அல்லாஹ்.
                                                            
                                                               அஷ்ஷேஹ்:-  S.H.M. இஸ்மாயில் ஸலபி

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது.
மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர்.
இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு என்று நம்புகின்றனர். சிவன் நடனம் ஆடும் போது இமய மலையில் ஒரு காலையும் இம்மலையில் இன்னொரு காலையும் வைத்ததாக நம்புகின்றனர். ஆனால், இமய மலையில் இத்தகைய பாதச் சுவடு இருப்பதாக இதுவரையில் கேள்விப்படவில்லை. இந்த நம்பிக்கை காரணமாக இம்மலை இந்துக்களால் சிவனொலிபாத மலை என்று அழைக்கப்படுகின்றது.
இயேசு இலங்கை வந்ததாக எந்தச் செய்தியும் இல்லை. எனவே, கிறிஸ்த்தவர்களின் ஒரு பிரிவினர் இது செண்ட் தோமஸ் அவர்களின் பாதச் சுவடு என்று நம்புகின்றனர்.
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததால் அங்கிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் பூமியில் இந்த மலையில்தான் இறக்கப்பட்டார். அங்குபதிந்துள்ள பாதச் சுவடு முதல் மனிதர் ஆதம் அவர்களுடையது என்பது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிலரினதும் நம்பிக்கையாகும். எனவே, இது பாவாத (பாவா ஆதம்) மலை என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது.
‘பாவா’ என்பது தந்தையைக் குறிக்கப் பயன் படுத்தப்படும். மனித குலத்தின் தந்தையாக இவர் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இம்மலை (Adam’s Peak) என்று அழைக்கப்படுகின்றது.
இந்த அனைத்துத் தரப்பாரின் நம்பிக்கைகளையும் கவனத்திற் கொண்டு பாவாத மலைக்கு வழிகாட்டும் பதாதைகளில் கூட சிங்களத்தில் சிறீபாத என்றும் தமிழில் சிவனொலிபாத மலை என்றும் ஆங்கிலத்தில் Adam’s Peak என்றும் போடப்பட்டுள்ளது.
இது மும்மதத்தினரின் நம்பிக்கையை மதிக்கும் வண்ணம் செயற்பட்ட விதமாகும். இருப்பினும் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது சிலர் பகிரங்கமாகவே இதில் இடம் பெற்றிருந்த Adam’s Peak என்ற எழுத்துக்கள் மீது கருமையான மையைப் பூசி முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கும் விதத்தில் செயற்பட்டனர். இதற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதிலிருந்து முஸ்லிம்களின் பூர்வீகத்தை அழிக்கும் நடவடிக்கைகளை ஆளும் வர்க்கத்தில் இருப்பவர்களும் விரும்புகின்றனர் என்பதை அறியலாம்.
இலங்கையில் உள்ள பல சுற்றுலாத் தளங்களில் அறபு மொழி மூலம் பதாதைகள், தகவல்கள் போடப்பட்டுள்ளன. உதாரணமாக, சீகிரிய தளத்துக்குச் சென்றால் எல்லா அறிவிப்புக்களும் அரபியிலும்; இடம்பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அதிருப்தியை வெளியிடுவதென்றால் அரபு மொழிஅறிவித்தல்கள் மீதும் கறுப்பு மைகள் பூசப்பட வேண்டும். ஆனால் அதை வெறும் சுற்றுலா தளமாகவும் வருமானத்திற்குரிய வழியாகவும் ஆளும் வர்க்கமும் இனவாத சக்திகளும் பார்க்கின்றன. ஆனால், சிறீபாதையை சுற்றுலாத் தளமாகப் பார்க்கவில்லை. அதை ஆதம் மலை என்று கூறுவது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை அங்கீகரிப்பதாக அமையும் என்று பார்க்கின்றனர். அது புத்தரின் பாதச் சுவடு என்ற பற்றில் அவர்கள் செய்திருந்தால் சிவனொலிபாத மலை என்பதையும் அவர்கள் அழித்திருக்க வேண்டும். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுப்பதற்காக அவர்கள் ஆதம் மலை என்ற எழுத்தை அழிக்க நினைக்கின்றனர் என்றால் எமது பூர்வீகத்தை நிறுவவும் ஏன் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.  
அது யாருடைய பாதச் சுவடு.?
அங்கே பதிந்திருப்பது சாதாரண அளவில் உள்ள பாதச் சுவடு அல்ல. அது சராசரிப் பாதச் சுவடுகளை விட மிகப் பெரியதாகும். அந்தப் பாதச் சுவடு 5 அடி 4 அங்குல நீளமும் 2 அடி 6 அங்குலம் அகலமும் கொண்டது. புத்தர் வாழ்ந்த காலத்தையும், செண்ட் தோமஸ் வாழ்ந்த காலத்தையும் பார்த்தால் அந்தக் காலத்தவர்களின் காலின் அளவில் அது இல்லை. ஆனால், முதல் மனிதர் ஆதம் நபி பற்றிய இஸ்லாமிய மூலங்களில் சொல்லப்பட்ட தகவல்களைப் பார்க்கும் போது அவரது பாதம் பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
முதல் மனிதரின் உயரம்:
இறைத்தூதர் (PBUH) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (PBUH) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று சொன்னான். 

அவ்வாறே ஆதம் (PBUH) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்’ என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (PBUH) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (PBUH) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன’ என அபூ ஹுரைரா  (ர) அறிவித்தார்.’
நூல்: புகாரி:3326, 6227, 3327
முதல் மனிதர் 60 முழம் உடையவர் என இந்த செய்திகள் கூறுகின்றன. பாவாத மலையில் பதியப்பட்டுள்ள பாதச் சுவட்டின் அளவைப் பார்க்கும் போது புத்தர் கால மனிதனின் பாதச் சுவடாக அது இல்லை என்பது உறுதியாகும். ஆதம் நபி 60 முழம் உடையவர் என்பதால் அவரது பாதம் பாவாத மலையில் பதியப்பட்ட பாதச் சுவடு போல் பெரிதாக இருக்க வாய்ப்புள்ளதை உணரலாம்.
ஆதி மனிதனின் இருப்பிடம்:
முதல் மனிதர் ஆதம் நபி மக்காவில் இருந்துள்ளார் என்பது உறுதியானதாகும். ஏனெனில், அங்கு அவர் கஃபாவைக் கட்டியுள்ளார்.
‘(அல்லாஹ்வை வணங்குவதற்காக) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட முதல் வீடு ‘மக்கா’ எனப்படும் மக்காவில் உள்ளதாகும். (அது) பாக்கியம் பொருந்தியதும், அகிலத் தாருக்கு நேர்வழியுமாகும்.’ (3:96)
முதன் முதலில் உலகில் நிறுவப்பட்ட ஆலயம் கஃபாவாகும். அந்தக் கஃபா பழைய வீடு என்றும் இதனால் அழைக்கப்படுகின்றது. அல் குர்ஆனில் கஃபா ‘பைதுல் அதீக்’ பழமையான வீடு, ஆலயம் என இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.(பார்க்க: 22:29, 22:33)
எனவே, முதல் மனிதர் மக்காவில் வசித்துள்ளார் என்பது உறுதியாகும். இருப்பினும் அவர் இந்தியா, இலங்கை சார்ந்த பிரதேசங்களிலும் சஞ்சரித்துள்ளார் என அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளும் அறிஞர்களின் கருத்துக்களும் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் பாவாத மலையும் அதில் பதிந்துள்ள காலடித் தடமுமாகும்.
முதல் மனிதரும் இலங்கையும்:
முதல் மனிதர் வானத்திலிருந்து இறக்கப்பட்டவர். அவர் இறங்கிய இடம் குறித்து குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. வரலாற்றுக்கு முந்திய நிகழ்வு என்பதால் இதை வரலாற்று ரீதியாகவும் உறுதி செய்ய முடியாது! இருப்பினும் பல்வேறுபட்ட அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆதம் நபி இந்தியாவில் குறிப்பாக ‘செரண்டீப்’ எனும் இலங்கையில் அதிலும் குறிப்பாக ஒரு மலையில் இறங்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம். البحر المحيط في التفسير (1ஃ 263)
وقيل: لما نزل آدم بسرنديب من الهند ومعه ريح الجنة، علق بشجرها وأوديتها، فامتلأ ما هناك طيبا،
ஆதம் நபி இந்து பிரதேசத்தில் உள்ள செரண்டீபில் இறங்கும் போது அவரோடு சுவனத்தில் இருந்து கொண்டு வந்த வாசனை இருந்தது. அதனை அந்தப் பகுதி மரங்களிலும் பரவவிட்டார். அந்தப் பிரதேசம் நறுமணம் மிக்கதாக மாறியது.
(பஹ்ருல் முகீத்: 1{263)
الدر المنثور في التفسير بالمأثور (1ஃ 135)
وَأخرج الطَّبَرَانِيّ وَأَبُو نعيم فِي الْحِلْية وَابْن عَسَاكِر عَن أبي هُرَيْرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم: نزل آدم عَلَيْهِ السَّلَام بِالْهِنْدِ
தபரானி மற்றும் நுஅய்ம் ஹில்யாவிலும் இப்னு அஸாகிர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாகவும் ஆதம் நபி இந்து பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக அறிவிக்கின்றார். (குறிப்பு: இது பலவீனமான செய்தியாகும்.) (அத்துர்ருல் மன்தூர்: 1135)
وَأخرج ابْن أبي الدُّنْيَا فِي مكايد الشَّيْطَان وَابْن الْمُنْذر وَابْن عَسَاكِر عَن جَابر بن عبد الله قَالَ: إِن آدم لما أهبط إِلَى الأَرْض هَبَط بِالْهِنْد
ஆதம் நபி பூமிக்கு இறக்கப்பட்ட போது இந்துப் பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்வைத் தொட்டும் இப்னு அஸாகீர், இப்னுல் முன்திர் (மற்றும்) இப்னு அபீத்துண்யா மகாயிதுஷ் ஷெய்தானில் குறிப்பிடுகின்றனர்.
(அரத்துர்ருல் மன்தூர்: 1135)
الدر المنثور في التفسير بالمأثور (1ஃ 139)
وَأخرج ابْن أبي حَاتِم عَن السّديّ قَالَ: نزل آدم بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطّيب
இப்னு அபீ ஹாதிம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் மூலம் ஆதம் நபி இந்து பிரதேசத்தில் இறங்கியதாகும். அந்தப் பிரதேசத்தில் வாசனைத் திரவியங்கள் நிறைந்த மரங்கள் விளைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். (அரத்துர்ருல் மன்தூர்: 1139)
தப்ஸீருல் ஹானியில் அவர் செரண்டீபில் இறங்கியதாகவும் அவரிடம் ஹஜருல் அஸ்வத் கல் மற்றும் சுவனத்து இலை இருந்ததாகவும் அவர் இறங்கிய இடத்தில் வாசனை மரங்கள் முளைத்ததாகவும் கூறப்படுகின்றது. (பார்க்க: தப்ஸீருல் ஹாவி) இதே கருத்து தப்ஸீர் ஹதாயிகுர் ரூஹ் லிர் ரைஹான்: 1{321), அல் பிதாயா வன்னிஹாயா: 1{89, ரூஹுல் பயான்: 1{111, அஹ்பாருஸ் ஸமான்: 72 ஆகியவற்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒரு மலையில் இறங்கியதாக மற்றும் பல செய்திகள் கூறுகின்றன.
இந்துப் பிரதேசத்தில் செரண்டீப் எனும் இடத்திலுள்ள நூதா என்று அழைக்கப்படும் ஒரு மலை மீது ஆதம் நபி இறக்கப்பட்டார். (தப்ஸீர் அத் தஃலபீ: 1{84)
தப்ஸீர் அல் பகவியில் அந்த மலையின் பெயர் ‘நூத்’ என்று இடம்பெற்றுள்ளது.(தப்சீர் அல் பகவி: 1{84, தப்ஸீர் அல் ஹாஸின்: 1{39, பத்ஹ§ல் பயான் பீ மகாஸிதுல் குர்ஆன்: 1{136)
தப்ஸீர் குர்தூபியில் அந்த மலையின் பெயர் ‘பூதா’ என்று இடம்பெற்றுள்ளது.(தப்ஸீர் அல் குர்தூபி: 1{319, தாரீகுத் தபரி: 1{122)
ஏன் இந்த வித்தியாசம் என்ற சந்தேகம் எழலாம். உதாரணமாக தமிழில் ‘க’ வுக்கு மேலே புள்ளி வைத்தால் அதை ‘க்’ எனக் கூறுவோம். இந்தமாதிரி ஒரு எழுத்துக்கு அரபியில் புள்ளிக் குறியீடுகள் வைக்கும் பழக்கம் ஆதி காலத்தில் இருக்கவில்லை. ‘ب அரபு ப’ இது ஒரு அரபு எழுத்து. இதற்கு கீழே ஒரு புள்ளி வைத்தால் அது ‘ப’ எனப்படும். கீழே இரண்டு புள்ளி வைத்தால் அது ‘ய’ எனப்படும். மேலே ஒரு புள்ளி வைத்தால் ‘நூன்’ எனப்படும். இரு புள்ளி வைத்தால் ‘த’ எனப்படும். மூன்று புள்ளி வைத்தாலும் ‘தா’ வாக மாறிவிடும். அரபிகள் புள்ளிகளும் குறியீடுகளும் இல்லாமலேயே அரபு மொழிச் சொற்களைப் புரிந்து கொண்டு சரியாக வாசித்துவிடுவர். வேற்று மொழிச் சொற்களையும், பெயர்களையும் வாசிக்கும் போது குழப்பம் ஏற்படும். பூதா, நூத், நூதா என்பதெல்லாம் புள்ளிகள் இல்லாவிட்டால் ஒரே விதத்தில்தான் எழுதப்படும். இதனால் இந்தப் பெயர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
தப்ஸீர் அத்தஆலபீயின் அடிக் குறிப்பில் அந்த மலையின் பெயர் ‘அர் ராஹுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (மராஸிதுல் இத்லாஃ: 2{710)
மற்றும் சில குறிப்புக்களில் அந்த மலையின் பெயர் ‘வாஸ், வாஷிம்’ என்று இடம்பெற்றுள்ளது. (அல் முன்தலம் பீ தாரீகுல் முலூக் வல் உமம்: 1{139)அல்லாஹுதஆலா உஹது மலையை எமது நபிக்கும் தூர்ஸீனா மலையை மூஸா நபிக்கும் ஜூதி மலையை நூஹ் நபிக்கும் செரண்டீப் மலையை ஆதம் நபிக்கும் சிம்மாசனமாக ஆக்கியதாக ரூஹுல் பயானில் (8{233) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஃதல்லாத மற்றும் பல குறிப்புக்களிலும் ஆதம் நபி செரண்டீப் மலையில் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆதம் நபி இலங்கையில் மரணித்து அங்கேயே அடக்கப்பட்டதாகவும் செய்திகள் பதியப்பட்டுள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ”முதன் முதலில் மஹ்லால் இப்னு கைனான் இப்னு அறூஷ் இப்னு சீத் இப்னு ஆதம் காலத்தில்தான் சிலைகள் வணங்கப்பட்டன. ஆதம் நபி இந்து பிரதேசத்தில் செரண்டீபில் உள்ள ‘நூராஹ்’ என்ற இடத்தில் அடக்கப்பட்டார். அது மலைகள் நிறைந்த பூமியாகும். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவரது கப்ரை ஸியாரத் செய்து அவருக்கு அருள் வேண்டினர். காபீல் ஹாபீலைக் கொலை செய்த போது அவனை விரட்டிவிட்டனர். அவனும் அவனது சந்ததிகளும் அவர்களை விட்டும் விலகி இருந்தனர்;. அப்போது ஷைத்தான் நல்ல மனிதரின் தோற்றத்தில் வந்து சீது நபியின் பிள்ளைகள் ஆதம் மூலம் பரக்கத் பெறுகின்றார்கள். நீங்கள் ஆதமின் படத்தை வரைந்து அதன் மூலம் பரக்கத் பெறுங்கள் என்று தூண்டினான்……’ என்று இடம்பெற்றுள்ளது.(அல் பஹ்ருல் மதீத் பீ தப்ஸீரில் குர்ஆனில் மஜீத்: 7{149)
இந்தக் குறிப்புக்களை வைத்து நாம் ஆதம் நபி முதலில் இறங்கிய இடம் இலங்கை பாவாத மலைதான் என்பதை அடித்துச் சொல்ல முடியாது. ஏனெனில், இவைகள் எதுவும் உறுதியான ஆதாரங்கள் அல்ல. மாறாக கூற்றுக்கள்தான். முதல் மனிதன் பற்றி குர்ஆன், சுன்னா சொன்னது தவிர ஏனையவைகளை ஆய்வுகள் மூலமும் அனுமனங்கள் மூலமும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
இவ்வாறு அணுமானம் செய்வது அகீதா விடயத்தில் தடுக்கப்பட்டதாகும். வரலாறு விடயத்தில் அணுமானங்கள் தடுக்கப்பட்டது கிடையாது. இருப்பினும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்துக்கும் இந்த நம்பிக்கைக்கும் இடையில் இறுக்கமான தொடர்பு உள்ளது!
இன்ஷா அல்லாஹ் இதன் தொடரை எதிர்பாருங்கள்……….
                                                                  அஷ்ஷேஹ்:-  S.H.M. இஸ்மாயில் ஸலபி

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்’ (04:01)
இயற்கைத் தேர்வுக் கொள்கை அல்லது பரிணாம வளர்ச்சித் தத்துவம் என்கின்ற, படைப்பாளனான இறைவனை மறுக்கின்ற நாத்திக சிந்தனையானது இன்று பாட நூற்களில் புகுத்தப்பட்டு எமது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சாக இக்கருத்து விதைக்கப்பட்டு வருவதனால் இப்போலி வாதம் தொடர்பான தெளிவுக்காக இவ் வாக்கம் வரையப்படுகின்றது.

தோற்றம்.
இயற்கைத் தேர்வுக் கொள்கை என்கின்ற போலி தத்துவமானது, ஆரம்பத்தில் கிரேக்க தேசங்களில் தோற்றம் பெற்றிருந்ததாயினும், இதனை உயிர்ப்பித்து முதன் முதலில் கோட்பாட்டு வடிவம் கொடுத்தவர் பிரெஞ்சு தேசத்து உயிரியல் ஆராய்ச்சியாளர் ‘ஜீன் பேட்டிஸ் லாமார்க்’ என்பவராவார். உயிரினங்கள் தாம் பெற்றுக் கொண்ட இயல்புகளை தங்களது சந்ததிகளுக்கு வழங்கிவிட்டுச் செல்கின்றன என்பது இவரது வாதமாகும். 
மேலும், ஒரு உடற் பாகத்தினை தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அப்பாகம் வலிமை அடைய, பயன்படுத்தப்படாத பாகம் வலிமை குறைவடையும் என்று கூறுகின்ற ஜீன் பேட்டிஸ் லாமார்க் ஒட்டகச் சிவிங்கி உணவுக்காக தனது கழுத்தை தொடர்ச்சியாக நீட்டிக் கொண்டே சென்றதன் காரணமாக அதனது கழுத்து நீண்டது என்கிறார். ஆனால், அறிவியலின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் இவ்வாதமானது தவிடு பொடியாக் கப்பட்டது.

வைஸ்மேன்’ என்கின்ற அறிவியல் அறிஞர், எலிகளின் வால்களைத் தொடர்ச்சியாக எண்பது தலை முறைகளுக்கு அகற்றிய பிற்பாடும், பிறக்கின்ற எலிகளுக்கு தமது முன்னோர்களினைப் போன்று நன்கு செயற்பாடுடைய வால் இருந்ததை கண்டறிந்தார். ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் வாதத்தின் அடிப்படையில் பிறக்க கூடிய எலிகளுக்கு வால் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். (ஒரு எலியின் சராசரியான ஆயுட்காலம் இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களாகையால், எண்பது தலைமுறை எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும்)
இயற்கைத் தேர்வுக் கொள்கையின் தந்தை சார்ள்ஸ் டார்வின்! ஜீன் பேட்டிஸ் லாமார்க்கிற்கு பின்னர், இயற்கைத் தேர்வுக் கொள்கையை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியவர் ‘சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின்’ (Charles Robet Darwin) என்கின்ற இயற்கையியல் அறிஞராவார். இவர் இங்கிலாந்தில் 1809ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் நாள் பிறந்தார். இயற்கை விஞ்ஞானியான இவர் H.M.S.Beagle என்கின்ற அரசு கப்பலில் 1832ம் ஆண்டு தொடக்கம் 1836ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
கடல் வழியே இக்கப்பலில் உலகின் பல பாகங்களுக்கும் குறிப்பாக ‘காலாபாகசு’த் தீவுகளுக்கும் பயணித்து புதிய தாவரங்கள், விலங்கினங்கள் தொடர்பான தகவல்களினையும், புதை பொருள் தொடர்பான தகவல்களினையும் சேகரித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார். சிறிது காலத்தின் பின்னர், தான் சேகரித்த தகவல்கள் பார்த்த காட்சிகளின் அடிப்படையிலும், இங்கிலாந்து நாட்டு இயற்கை விஞ்ஞானியான ‘அல்பிரட் ரசல் வொல்ஸ்’ (1823-1913) என்பவரால் சார்ள்ஸ் டார்வினுக்கு வரையப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டும், 1856ல் ‘இயற்கைத் தேர்வின் காரணமாய் ஏற்பட்ட உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species by Means of Natural Selection) எனும் நூலை வெளியிட்டு பெரும் பரபரப்பை தோற்றுவித்ததுடன் நன்கு பிரசித்தமானார்.

எனினும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத எடுகோல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் அவருக்கே பலத்த சந்தேகம் தோன்றியது என்பதை ‘தத்துவங்களில் உள்ள இடர்கள்’ என்கின்ற அத்தியாயத்தில் அவரே, பல வினாக்களுக்கு தன்னால் சரியான பதிலை அளிக்க முடியாது என தனது இயலாமையை ஒப்புக் கொள்கின்ற அதேவேளை விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது தன்னை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்கப்படும் என சார்ள்ஸ் டார்வின் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாற்றமாக விஞ்ஞானம் அவரது கருத்துக்களை தொடர்ச்சியாக புதைகுழிக்குள் அனுப்பிக் கொண்டே வருகின்றது.

சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கை இவ்வுலகில் உயிர் வாழக் கூடிய அனைத்து உயிரினங்களும் ஒரே மாதிரியாகக் காணப்பட முடியாது. மாறாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற சூழல் மற்றும் கால மாற்றத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழவும், இம்மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத, வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத உயிரினங்கள் எல்லாம் அழிந்தும் விடுகின்றன. 

ஊர்ந்து செல்லக் கூடிய உயிரினங்களிலிருந்து குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களும் பறவைகளும் தோன்றின. மேலும் குட்டி போட்டு பாலூட்டும் இனத்திலிருந்து வாலில்லாக் குரங்குகளும் (Chimpanzees), வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதனும் தோன்றினான் என்பதுவே உயிரினங்களின் படைப்பு தொடர்பாக பரிணாம வாதிகள் தரும் விளக்கமாகும்.
உலக மனிதர்கள் ஒரு தாய், தந்தையிலிருந்து தோன்றியவர்களே!
சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்கின்றார் உயிரியல் துறை விஞ்ஞானியான ‘ஸ்பென்ஸர் வெல்ஸ்’ என்பவர். எந்த மனிதனின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போதிலும் அவனது ஆரம்பம் ஒரு ஆபிரிக்க தாய், தந்தையரிலேயே போய் முடிவடைகின்றது. எனவே, மனித குலத்தின் மூதாதையர் நிச்சயமாக ஆபிரிக்கப் பிரதேசத்திலேயே வாழ்ந்துள்ளனர். மேலும் சுமார் அறுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் இடம் பெற்ற குடிபெயர்வொன்றே உலகளாவிய குடியேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
ஆரம்ப கால மனிதன் கற்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தினான். ஆபிரிக்காவில் பனியுகத்தின் உருவாக்கத்தின் காரணமாகப் பாலைவனங்கள் பரவின. இதனால் ஆரம்ப கால மனிதனுக்கு உணவினைப் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக உருவெடுக்க, உணவிற்காகக் கரையோரம் நோக்கி நகரத் தொடங்கிய மனிதன் தொடர்ந்து நகர்ந்து கொண்டே சென்றான். பூமியின் பெரும் பங்கு நீரானது மலைகளின் மீது உறைந்த நிலையில் காணப்பட்டதனால் கடல் மட்டம் தற்போது காணப்படுவதனை விட 100m ஆழம் குறைவாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் சிங்கப்பூர், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒரே தொடர் பூமியாகக் காட்சிதந்தன.
இன்றைய இலங்கையானது ஆரம்பத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்தது. இந்தியாவின் மேற்குக்கரை தற்போது காணப்படுவதனை விட 200 km மேற்குப் பக்கமாக தூரத்தே காணப்பட்டது. மேலும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஆபிரிக்கா நோக்கி ஒரு கூட்டம் இடம்பெயர மற்றொரு கூட்டம் எகிப்து மேற்காசியாவின் ஊடாக மத்திய ஆசியா நோக்கிப்படை யெடுத்தனர். சிலர் சைபீரியா மற்றும் சீனா நோக்கி நகர்ந்து சென்றனர். இதுவே உலகளாவிய குடியேற்ற வரலாறு ஆகும் என தனது ஆய்வறிக்கையினை The Journey Of Man ‘மனிதனின் பயணம்’ எனும் நூலில் குறிப்பிடுவதன் ஊடாக சார்ள்ஸ் டார்வினின் வாலில்லா குரங்கிலிருந்து தோன்றியவனே மனிதன் என்கின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையினைப் புதைகுழிக்குள் அனுப்புகிறார் உயிரியல் விஞ்ஞானி ஸ்பென்ஸர் வெல்ஸ்.

குறிப்பு: மனித குலத்தின் ஆரம்பம் ஆபிரிக்க மூதாதையர் என்பது அல்குர்ஆனிலோ, அண்ணலாரின் பொன் மொழியிலோ கூறப்பட்ட உண்மை அன்று. மாறாக, உயிரியல் விஞ்ஞானி ‘ஸ்பென்ஸர் வெல்ஸின் ‘ ஆய்வின் முடிவே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்ளவும்.

முதல் உயிரினத்தின் தோற்றம்
இயற்கைத் தேர்வு வாதத்தை முன்வைப்பவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் எந்த உயிரினத்திலிருந்தும் மற்றொரு புதிய உயிரினம் தோன்ற முடியும். மேலும் ஒரு உயிரினம் கால மாற்றத்தில் முற்று முழுவதுமாக மாறுபட்ட புதிய ஒரு உயிரினமாக மாற்றமுற முடியும். ஆனால் அந்தோ பரிதாபம்! இயற்கைத் தேர்வுக் கொள்கையை முன்வைப்ப வர்களின் வாதத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் விஞ்ஞான ரீதியான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும் முதல் உயிரினத்தின் தோற்றத்திற்கு அவர்கள் தருகின்ற விளக்கம், உயிரற்ற பொருட்களான மண், பாறைகள், வாயுக்கள் இவ்வுலகினில் காணப்படுகையில் காற்று, மழை மற்றும் மின்னலின் விளைவாக முதல் உயிரணு தோன்றியது என இயற்கைத் தேர்வுக் கொள்கை வாதிக்கின்றது. ஆனால் இது உயிரியலின் மிக அடிப்படையான விதிக்கு முற்றிலும் மாறுபட்ட வாதமாகும். இத்தத்துவம் முன்வைக்கப்பட்ட போது இறைச்சியிலிருந்து தானாக பூச்சி புழுக்களும், கோதுமை யிலிருந்து எலியும் தோன்றின என நம்பப்பட்டது.
புதைகுழிக்கு அனுப்பப்படும் இயற்கைத் தேர்வுக் கொள்கை
பிரான்ஸ் நாட்டின் உயிரியல் விஞ்ஞானியான ‘லூயிபாஸ்டர்’ என்கின்ற அறிஞர் தனது ஆய்வினைப் பற்றி குறிப்பிடுகையில், உயிருள்ளவைதான் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்க முடியும் எனவும் தனது கண்டுபிடிப்பினூடாக, உயிரற்ற பொருட்களாலும் உயிரினங்களை உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற மூட நம்பிக்கை வரலாறு என்பது புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றார்.

பரிணாமவாதிகளே! சிந்தியுங்கள்!
நீங்கள் தூக்கி நிலை நிறுத்துவதற்காகப் பெரும் பாடுபடுகின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையில் உண்மை இருக்குமாக இருந்தால் மனிதக் குரங்குகளையும் (Gorillas), ஆபிரிக்காவில் வாழ்கின்ற வாலில்லாக் குரங்குகளையும் (Chimpanzees) இயற்கைத் தேர்வுக் கொள்கையினூடாக மனிதர்களாக மாறாது தடுத்தது எது? இயற்கைத் தேர்வுக் கொள்கையின் அடிப்படையில், மனிதனாக மாறுவதற்கு போதிய காலம் அவை இந்த பூமியில் வாழ்ந்துள்ளன.
பல இலட்ச ஆண்டுகள் அவை வாழ்ந்து விட்டனவே? பல இலட்ச வருடங் களுக்கு முன்னர் வாழ்ந்த வாலில்லாக் குரங்குகள் நமது வாழ்காலத்தில் ஏன் மனிதனாக மாற்றமடையவில்லை? எமது முன்னோர்களின் வாழ்காலத்திலாவது இவ்வாறு மாற்றம் அடைந்ததாக வரலாறு இல்லையே? பசுவின் நல்ல ரகம் வேண்டும் என விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை பசுவை இன்னுமொரு வகை பசுவோடு புணரச் செய்து நல்ல ரக பசுவைப் பெற்றுக் கொள்கிறார்கள். 
இதனை அவர்கள் பல வருடங் களாகவே செய்து வருகின்றார்கள். இவ்வாறு பிறக்கின்ற பசுக்கள் சில நேரங்களில் நிறத்திலும், தன்மையிலும் மாறுபடுகின்றன. ஆனாலும் அவை பசுக்களாகவே உள்ளன. அவை ஒருபோதும் பசு இனத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு புதிய வகை இனமாக மாறியதில்லை. கால மற்றும் சூழல் மாற்றத்தில் பசு இனம் ஆடுகளாகவோ மற்றொரு இனமாகவோ மாறியதில்லை. கழுதை காலங்கடந்ததால் குதிரையாகவோ, குதிரை நாள்கடந்ததால் ஒட்டகமாகவோ மாறியதாக வரலாறு இல்லை.

அருள்மறையின் ஒளியில்…
இறுதியாக, உயிரியலின் அடிப்படை விதியின் அடிப்படையில், உயிருள்ளவைகளில் இருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவதானால், உயிரினங்களை இறைவனான அல்லாஹ்வே படைத்தான். இதோ உலகப் பொது மறையாம் அருள் மறை எடுத்தியம்பு கின்றது.
‘அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத் தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின்சத்திலிருந்து உருவாக்கினான். பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். ‘பூமிக்குள் மறைந்த பின் புதுப் படைப்பை நாங்கள் பெறுவோமா?’ என்று அவர்கள் கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர்கள்தமது இறைவனின் சந்திப்பைமறுக்கின்றனா’ (உலகப் பொது மறை அல்குர்ஆன் 32:7-10).
‘அவனே, உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவர் அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள்அவள்(வயிறு) கணத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்’. என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்;தனர். (உலகப் பொது மறை 
அல்குர்ஆன் 7:189)

                                                                                  SLM அர்ஷாத், காத்தான்குடி

நாம் சொல்லக் கூடிய செய்திகளை உண்மைப் படுத்த வேண்டும் என்றால் அந்த செய்தி நம்பிக்கையானவர் சொல்லியிருக்க வேண்டும். சந்தேகமான செய்தி, அல்லது சந்தேகத்திற்கு இடமான செய்தி என்றால், அதை யாராவது உறுதிப் படுத்த வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் சத்தியம் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும். ஒரு முஸ்லிம் எப்படி சத்தியம் செய்ய வேண்டும்.? எதைக் கொண்டு சத்திம் செய்ய வேண்டும் என்பதை தெளிவுப் படுத்துவற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
கணவன் மனைவி சத்தியம்
ஒரு பெண் மானக் கேடான விபசாரத்தில் ஈடுபடுவதை கண்டால் அவளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக அந்த காட்சியை கண்ட நேரடியான நான்கு சாட்சிகள் இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கப் படமாட்டாது. அதே நேரம் தன் மனைவி வேறொரு ஆடவரோடு தவறாக மானக் கேடான விடயத்தில் ஈடுபடுவதை நேரடியாக கண்டால், அதற்கு நான்கு சாட்சிகள் இல்லாவிட்டால், இப்போது இருவரும் சத்தியம் செய்ய வேண்டும். அந்த சத்தியம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் குர்ஆன் மூலம் சொல்லித் தருகிறான். 

அதாவது முதலில் கணவன் நான்கு தடவைகள் நான் உண்மையாளன் என்றும், ஐந்தாவது தடவையாக நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்றும், அதே போல கணவன் பொய்யன் என்று நான்கு தடவையும், அவன் உண்மையாளனாக இருப்பானேயானால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்று ஐந்தாவது தடவையாக மனைவி கூற வேண்டும். என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவுப் படுத்துகிறது
“எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி, ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி, ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)”. (24:6.)
அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்தல்
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எந்த படைப்பினங்கள் மீதும் சத்திம் செய்யக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின்வரக் கூடிய ஹதீஸ்களை கவனியுங்கள்.
“சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2679)
மேலும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். (புகாரி 3836)
மேலும் “ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லிமாகிய நீங்களும் இணை கற்ப்பிக்கிறீர்கள் ,கஃபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார்,இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால்(கஃபாவின் மீது என்று கூறாமல்) கஃபாவின் இறைவன் மீது என்று கூற வேண்டும் என்று கூறினார்கள்.( அஹ்மத், நஸாஈ)
மேலும் ”ஒரு மனிதர் கஃபாவின் இறைவன் மீது என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்,உடனே அல்லாஹ்
அல்லாததின் மீது சத்தியம் செய்யக கூடாது என்று கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்கிறாரோ அவா் இணைகற்பித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
எனவே அல்லாஹ் அல்லாத எந்த படைப்பினங்கள் மீதும் எவரும் சத்தியம் செய்யக் கூடாது. குறிப்பாக குர்ஆன் மீது என்று சத்தியம் செய்யக் கூடாது. அப்படி குர்ஆனை முன் நிறுத்தி சத்தியம் செய்ய வேண்டும் என்றால் இந்த குர்ஆனை அருளிய இறைவன் மீது என்று தாராளமாக கூறலாம். அதுவும் குர்ஆன் மீது கை வைத்து தான் கூற வேண்டும் என்று சட்டம் கிடையாது.
அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்திருந்தால் அதன் பரிகாரம்
ஒருவர் தெரியாமல் நேரடியாக படைப்பினங்கள் மீதோ, அல்லது குர்ஆன் மீதோ சத்தியம் செய்து விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது.
” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4860)

அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார்.அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது் எனவே சத்தியம் செய்யும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொய் சத்தியம்
பொய் சத்தியம் செய்வர் முஸ்லிமாக இருக்கமாட்டார். அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்தால் அவர் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் எச்சரிப்பதை கவனியுங்கள்.
” எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.( 58:14)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6675)
மேலும் ” அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ 
(திருக்குர்ஆன் 03:77) 

என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?’ என்று கேட்டார்கள். 

நான், ‘என்னிடம் சாட்சிகள் இல்லை’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையது தான்’ என்று) சத்தியம் செய்யவேண்டும்’ என்றார்கள். நான், ‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே’ என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள்.  (புகாரி 2357)
எனவே வேண்டும் என்று பொய் சத்தியம் செய்தவர் உலகில் தப்பித்து விடலாம் ஆனால் மறுமையில் அல்லாஹ்வால் தண்டிக்கப் படுவார்என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரம்
ஒருவர் சத்தியம் செய்து விட்டு, அதை முறிக்க வேண்டும் என்றால் பின்வரக் கூடிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.
”அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.( அல் குர்ஆன் 66- 2)
மேலும் ” உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.

அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.(அல்குர்ஆன் 5- 89)
எனவே இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறைகளைப் பேணி சத்தியம் செய்யும் விடயங்களில் நிதானமாக இருப்போமாக!

                                                                        மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget