கவலைகளும் கஷ்டங்களும் நலவுக்கே.!

ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய 6 பிரதான அம்சங்களில் ஒன்று தான் விதியை நம்புவதாகும். அதாவது ஒரு மனிதன் அவன் விடயத்தில் நடந்த அல்லது நடக்கவிருக்கும் அனைத்தையும் அல்லாஹ் அறிந்து அதை லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதிவைத்திருக்கிறான் என்பதை உறுதியாக நம்புவதாகும்.

எனவே, ஒரு அடியான் இந்த கழாகத்ரை உரிய முறையில் நம்பிக்கை கொள்ளாமல் ஏனைய 5 அம்சங்களை முறையாக நம்பிக்கைகொண்டாலும் அவனது ஈமான் பூரணமாகமாட்டாது. ஆனால் எம்மில் பலர் இதை நாவால் ஏற்றுக் கொண்டாலும் சோதனைகளிடத்தில் அதை உள்ளத்தால் ஏற்க மறுக்கிறார்கள். இதுவே, நிதர்சனமான உண்மையாகும்.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்;
قل لن يصيبنا إلا ما كتب ألله لنا هو مولىنا وعلى ألله فليتوكل المؤمنون (التوبة :51)

“எங்களுக்கு அல்லாஹ் எழுதிவைத்ததைத் தவிர வேறெதுவும் எங்களை வந்தடையாது . அவனே எங்கள் பொறுப்புதாரி “ என கூறுவீராக. முஃமீன்கள் அல்லாஹ் மீதே தவக்குல் வைக்கட்டும் .

( தௌபா : 51 )
ஆகையால், அல்லாஹ் நமக்கு எழுதிவைத்ததைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு நிகழாது . . இது இவ்வாறு இருக்க எங்களில் அநேகமானோர் தாம் ஆதரவு வைத்து எதிர்பார்த்த விடயங்கள் நிகழாதவிடத்து நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் தம்மை தாமே மாய்த்துக் கொள்கிறார்கள்.
உதாரணமாக திருமணமாகி பல வருடங்கள் சென்றும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை , பல முயற்சிகள் செய்தும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது , சில நெருங்கிய உறவுகளில் திடீர் மரணம், கல்வித்தகைமையில் தான் எதிபார்த்த குறிக்கோளை அடைய முடியவில்லை அல்லது தான் ஆசைப்பட்ட திருமண வாழ்க்கையை அடைய முடியவில்லை. போன்ற இழப்புக்கள் மூலம் நாங்கள் எங்களையே மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி அதற்கொரு தீர்வாக தற்கொலை புரிதல் அல்லது அதற்கு காரணமானவர்களை பழிதீர்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான முடிவுகளுக்கு வருகிறோம்.

அல்லது அந்த எதிர்பார்ப்பு கிட்ட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தடுத்த காரியங்களை செய்வதற்கு துணிச்சலுடன் செல்கிறோம் .
உண்மையிலே இது ஒரு முஃமினின் பண்பாக இருக்கமாட்டாது.
 ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
قال رسول ألله (صلى) : عجبا لأمر المؤمن إن أمره كله له خير ولي ذالك لأحد إلا المؤمن : إن أصابته سراء شكر فكان خيرا له وغن أصابته ضراء صبر فكان خيرا له (رواه مسلم )
இறை தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஃமினின் விடயம் ஆச்சரியத்துக்குரியது . அவனுடைய விடயம் எல்லாமே நலவாக இருக்கிறது . அது முஃமினுக்கே தவிர வேறு யாருக்கும் நிகழாது : அவனுக்கு சந்தோசமான நிகழ்வு தொட்டு விட்டால் நன்றி செலுத்துகிறான் ; அது அவனுக்கு நலவாக இருக்கிறது . அவனுக்கு கெடுதி தீண்டி விட்டால் பொறுமை கொள்கிறான் . அதுவும் அவனுக்கு நலவாக இருக்கிறது .  ( முஸ்லிம் )

ஆகவே ஒரு முஃமின் அல்லாஹ்வின் நாட்டத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் எமக்கு தெளிவு படுத்துகிறது. விதியை ஈமான் கொள்வதிலிருந்துமுள்ளது தான் ஒரு அடியான் தனக்கு தவறிப்போன ஒரு விடயம் அது நலவுக்கே . அது தனக்குரியதல்ல என உறுதி பூணுவதகும்.
இந்த விடயத்தில் அவன் தெளிவுபெற்றவனாக இருந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி அவன் கவலைப் படவோ, தைரியம் இழக்கவோ மாட்டான். மாறாக அவன் அதற்காக அல்லாஹ்விடம் பிராத்தனை செய்து பொறுமையாக அதற்குரிய கூலியையும் ஆதரவு வைப்பான்.

அன்பிற்குரிய ஈமானிய உறவுகளே!
நாம் வெறுக்கும் விடயம் ஒன்று நம்மை அடைந்ததென்றால் அல்லது நாம் ஆதரவு வைத்த ஒன்று நம்மை அடையவில்லை என்றால் அது லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எம் பிறப்புக்கு முன்னரே எழுதப்பட்டு விட்டது என்றும் அதிலே எந்தவொரு மாற்றமும் நிகழாது என்றும் இவ்வாறு அல்லாஹ்வால் எழுதப்பட்ட ஒன்று நிச்சயமாக நடந்தேறியேதீரும் என எண்ணி நாம் மன அமைதி அடைய வேண்டும்.
உதாரணமாக ஒருவர் தன் திருமண வாழ்க்கையில் அல்லது தன் வியாபாரத்தில் அல்லது தன் கல்விப்பாதையில் ஒரு குறிக்கோளை முன்னிறுத்தி அதை அடைந்து கொள்வதற்காக தன்னை முழுக்க முழுக்க அர்பணித்து கொள்கிறார். அல்லாஹ்விடம் தவக்குல் வைத்தவராக பிரார்த்தனையும் செய்கிறார். தன்னால் முடிந்த அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொள்கிறார் ஆனால் அவரால் அந்த குறிப்பிட்ட குறிக்கோளை அடைய முடியவில்லை இந்த இடத்தில் தான் அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் நல்லெண்ணம் கொள்ள வேண்டும். ஏனெனில் அது நடந்தால் அது அவருக்கு இம்மையிலோ மறுமையிலோ தீங்காக அமையலாம் .
ஏனெனில் நமக்கு தனக்கு எது நலவு? எது கெடுதி? என்பதை திட்டமாக நாம் அறிய மாட்டோம் .. எனவே நமது கையில் இருப்பதெல்லாம் பிராத்தனையும் , முயற்ச்சியும்,தவக்குலும் தான். அதற்குரிய பெறுபேறு அல்லாஹ் இடத்தில் இருந்துதான் கிடைக்கிறது.
இன்னும் என்னைப் படைத்து என் சகல காரியங்களையும் சீராக்கி வைத்த என் ரப்பு என் விடயத்தில் நான் ஆதரவு வைத்த ஒன்றை நாடவில்லை என்றால் அதில் எனக்கு முழுக்க முழுக்க நலவையே நாடியிருப்பான் என்பது தான் உண்மை.  காரணம், நான் அடைய முயற்சிக்கும் ஒரு விடயம் அதை நான் அடைந்ததன் பின் எனக்கு தீங்கையும் கவலையையும் கஸ்டங்களையும் கொண்டு வரும் என்பதை அந்த ரப்பு அறிந்ததுதான்.
அல்லாஹ் கூறுகிறான்
وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم وألله يعلم وأنتم لا تعلمون 
(سورة البقرة : 216) 
 நீங்கள் ஒருவிடயத்தை வெறுப்பீர்கள் ; அதுவோ உங்களுக்கு நலவாக இருக்கலாம் . நீங்கள் ஒரு விடயத்தை விரும்புவீர்கள் ; அதுவோ உங்களுக்கு கெடுதியாக இருக்கலாம் . அல்லாஹ் அறிகின்றான் . நீங்களோ அறிய மாட்டீர்கள் . ( அல் பகரா : 216 )
எனவே உன் விடயத்தில் எது நலவு? எது கெடுதி? என்பதை அறிவது நீ அல்ல. மாறாக உன் ரப்பு மட்டுமே! ஆகவே அவனுடைய நாட்டத்தையும் , தீர்ப்பையும் பொருந்திக் கொள்வது உனக்கு கடமையாகும். தன் இலக்கை அடையாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈமானிய உள்ளமே!

அல்லாஹ் நலவுக்காகவே தவிர ஒரு விடயத்தை உனக்கு பிற்படுத்த மாட்டான் மேலும் நலவுக்காகவே தவிர ஒரு விடயத்தை உனக்கு தடுத்து வைக்கவும் மாட்டான். மேலும் நலவுக்காகவே தவிர உன் மீது கஸ்டத்தையும் சோதனையையும் இறக்கவும் மாட்டான்
எனவே! நீ கவலைப்படதே! நலவின் இரட்சகன் இருக்கிறான் அல்லவா! அவன் நலவையே தவிர உனக்கு நாடமாட்டான்!

மௌலவியா உம்மு யும்னா ஆயிஷா
தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபுக் கல்லூரி
 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget